ஞாயிறு, டிசம்பர் 06, 2009

சேற்றுப்புண்

சேற்றுப்புண் வருவதற்கு முக்கியக் காரணமாக ஈரத்தரை, சேறு, சகதி, குழாயடி, கிணற்றடியிலோ எந்நேரமும் இருந்து வேலை செய்பவர்களுக்கு அங்குள்ள அழுக்கும் கிருமிகளும் காலின் விரல்களின் இடுக்கில் நுழைந்து புண் ஏற்படுத்துவதைக் குறிப்பிடலாம். கால்விரல்கள் அதிக இடைவெளியில்லாமல் மிக நெருக்கமாக இருப்பவர்களுக்குச் சேற்றுப் புண் எளிதில் ஏற்படுகிறது. இந்தப் புண் பார்ப்பதற்கு வெள்ளை நிறமாகவும் ஒருவித நாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அதில் ஏற்படும் அரிப்பைப் போக்க கைவிரல்களை, கால்விரல்களின் இடுக்கில் செருகி “வரட், வரட்’ என்று தேய்க்க அதனால் ஏற்படும் சுகத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. ஆனால் அதன் பிறகு ஏற்படும் எரிச்சல், தீப்புண் போல பற்றி எரியும் தன்மை கொண்டதாக இருப்பதால், அப்போது ஏற்படும் வேதனையும் வார்த்தைகளால் கூற இயலாது.

சொறியச் சொறிய புண் வளர்ந்து கொண்டே போய் ஆழமான புண்ணாகப் பரவிவிடும். நொதநொதப்பான நிலையில் சுகம் தரும் இப் புண் காய்ந்த நிலையில் கடுமையான வலியை ஏற்படுத்தும், அலசம் என்று இந்த உபாதையை வர்ணனை செய்யும் ஆயுர்வேதம், கப-பித்தங்கள் கெடுவதால் அரிப்பையும் சவர்தண்ணீர் கசிவையும் ஏற்படுத்தவதாகக் கூறுகிறது. இந்த உபாதை மாற-

கடுக்காய்த் தோடு சிறிது எடுத்து விழுதாக அரைத்து இரவில் புண்களின் மீது பூசி, மறுநாள் காலையில் கழுவிவிட புண் விரைவில் ஆறிவிடும். கடுக்காய்க்கு அகத்தே நஞ்சு, இஞ்சிக்கு புறத்தே நஞ்சு என்பது பழமொழி. அதனால் கடுக்காய் விதையை உபயோகிக்கக் கூடாது. அதுபோல சமையலில் இஞ்சியின் தோலை நீக்கிய பிறகே சேர்க்க வேண்டும்.

கடுக்காய் தோலுடன் சிறிது மஞ்சளும் சேர்த்து அரைத்தும் பூசலாம்.

மருதாணி இலையை அரைத்தும் பூசலாம். சிந்தூராதிலேபம் எனும் ஆயிண்ட்மெண்ட் பூச, புண் விரைவில் ஆறிவிடும்.

மதுஸ்னுஹீ எனும் பறங்கிச் சக்கை உள்ளே சாப்பிடுவதற்கு நல்ல மருந்தாகும். மதுஸ்னுஹீ சூரணம் எனும் இம் மருந்தை 1/2 ஸ்பூன் (2.5 கிராம்) அளவில் எடுத்து 1 சொட்டுத் தேனும், 1 ஸ்பூன் (5மிலி) மஹாதிக்தகம் எனும் உருக்கி சூடு ஆறிய நெய்யையும் குழைத்து காலை, இரவு உணவுக்கு 1 மணி நேரம் முன்பாகத் தொடர்ந்து 2 வாரங்கள் சாப்பிட மிகவும் நல்லது. சேற்றுப்புண் மட்டுமல்ல, வேறு சிரங்கு சொறிகளும், கிருமி நோய்களும் எளிதில் குணமாக்கும் மருந்து இது.

விரல்களுக்கு இடையிலுள்ள புண்ணை திரிபலாசூரணம் 5 கிராம், கருங்காலிக் கட்டை 5 கிராம் போட்டுக் காய்ச்சிய 1 கிளாஸ் தண்ணீரால் கழுவி, கால்விரல் இடுக்குகளைப் பஞ்சால் துடைத்துச் சுத்தப்படுத்திய பிறகு, வேப்பிலை, எள்ளு அரைத்துப் பூசிவர, புண் விரைவில் குணமாகிவிடும்.

நகத்தின் சதை இணைப்புப் பகுதிகளிலும், கால்விரல் இடுக்குகளிலும் தொடர்ந்து நால்பாமராதி தைலம், தினேச வில்லாதி தைலம் போன்றவற்றில் ஒன்றைப் பூசிவர சேற்றுப்புண் நம்மை அணுகாது பாதுகாத்துக் கொள்ளலாம். சேற்றுப்புண் உள்ளவர்கள் மீன், தயிர், கத்திரிக்காய், நல்லெண்ணெய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. அடிக்கடி தண்ணீரில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக