சனி, டிசம்பர் 05, 2009

ஆயுர்வேதம் தயிர் & நெய்!

பால், உடலுக்கு ஊட்டம் தருகின்ற அமுதம் என்றால் அதிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொருவிதமான பலனைத் தருகின்றன. இதில் நிறைய பேருக்குப் பிடித்தமான உணவு தயிர்.


பலர், தயிர் இல்லாமல் சாப்பிடுவதே இல்லை. ஓட்டல்களில் தயிர், சாப்பாட்டோ டு சேர்த்து தரப்படாமல், தனிவிலை கொடுத்து வாங்கிச் சாப்பிடும் பொருளாக வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் தயிர் சாப்பிடுவது என்பது கௌரவமான விஷயமாகிவிட்டது.


பெருநகரங்களில் அதன் தேவையைச் சமாளிக் கும் அளவுக்குத் தயிர் உற்பத்தி இல்லை. இதனால் வெளியூர்களிலிருந்து கேன்களில் பார்சல் செய்யப்பட்ட தயிர் ரயில்களில் வந்து சேர்கிறது. நிறையப் பேர் தயிரை மொத்தமாக ஃபிரிஜ்ஜில் வைத்து, தேவைப்படும்போது எடுத்து அதே குளிர்ச்சியோடு சாதத்தில் கலந்து சாப்பிடுகிறார்கள். ஓட்டல்களிலும் தயிர், தயிர்சாதமெல்லாம் ஃபரிஜ்ஜில் வைத்துதான் சப்ளை செய்யப்படுகின்றன.


தயிர், இந்தியர்களின் பாரம்பரிய உணவு கிடையாது. மோர்தான் நம் முன்னோர்களால் விரும்பிப் பருகப்பட்டது. சமீபகாலமாகத்தான் தயிர் பாப்புலர் உணவாகிவிட்டது.


இயல்பாகவே ஜில்லென்று இருக்கும் தயிரை ஃபிரிஜ்ஜில் வைத்து இன்னும் குளுமையாக்கிச் சாப்பிடுவது வெயிலுக்கு ரொம்ப இதமானது என நிறையப் பேர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அது இல்லை... தொட்டுப் பார்க்கும்போது ஜில்லென்று இருந்தாலும் தயிர் நிஜமாகவே உடல் சூட்டைக் கிளப்பிவிடும். கெட்டியான தயிரைப் பார்த்தாலே பசி கிளர்ந்தெழும். யாரையும் சாப்பிடவைக்கும் இனிமையான சுவை கொண்டது அது. இந்த இரண்டு விஷயங்களைத் தவிர, தயிரில் நல்ல குணங்கள் எதுவும் கிடையாது. அதனால்தான் நான் என்னைச் சந்திப்பவர்களிடம் தயிரைத் தவிர்க்குமாறு அட்வைஸ் செய்கிறேன்!


தயிர் சாப்பிட்டால் மலச்சிக்கல் வரும். உடலில் கொழுப்பைக் கூட்டி ஏகப்பட்ட உபாதைகளைக் கொடுக்கும். உடலின் எல்லா சுரப்பிகளையும் தாறுமாறாகச் செயல்பட வைத்து ஹார்மோன்களின் சுரப்பை அதிகமாக்கும்.


உடலில் ஏற்கெனவே எங்காவது அடிபட்டதாலோ, வேறு காரணங்களாலோ வீங்கியிருந்தால் அந்த வீக்கத்தை அதிகமாக்கும். ரத்தக்கசிவு நோய் வர வாய்ப்புண்டு. தூக்கத் தையும் கெடுக்கும். நேரங்கெட்ட நேரத்தில் தூக்கம் வரும்... வரவேண்டிய நேரத்தில் வராது! சிலருக்கு ஜுரத்தையும்கூடத் தயிர் பரிசாகத் தரும்!


வாதத்தைக் குறைக்கும் அதே நேரத்தில் தயிர், பித்தத்தையும் கபத்தையும் அதிகமாக்கும்.


ஆயுர்வேதம் தயிரை எப்போதெல்லாம் சாப்பிடக் கூடாது என்று பெரிய பட்டியலே போட்டுக் கொடுத் திருக்கிறது. கண்டிப்பாகத் தயிரை இரவில் சாப்பிடக்கூடாது. பனி கொட்டும் புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாதங்களிலும், கோடை துவங்கும் தை, மாசி, பங்குனி, சித்திரை மாதங்களிலும் சாப்பிடக்கூடாது. ரொம்ப ஜில்லென்றும் சாப்பாட்டில் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. சரியாக உறையாத அல்லது புளித்துப்போன தயிரையும் சாப்பிடக்கூடாது. கரண்டியால் வில்லை வில்லையாக வெட்டி எடுக்க முடியாதபடி இருக்கும் கொழ கொழ தயிரையும் சாப்பிடக்கூடாது.


நல்ல தயிரைக்கூட வெறுமனே சாப்பிடக்கூடாது. ஒரு கப் தயிரில் சில துளிகள் தேன், ஒரு சிட்டிகை நெய், அரை ஸ்பூன் சர்க்கரை, கொஞ்சம் நெல்லிக்காய் துண்டு, கொஞ்சமாக வேக வைத்த பாசிப்பயிறு இவற்றில் ஏதாவது ஒன்றைக் கலந்து சில நிமிடங்கள் வைத்திருந்து சாப்பிட்டால் பரவாயில்லை. தயிரின் மோசமான குணங்களை இவை ஓரளவுக்கு வடிகட்டிவிடும்.


இப்படி ஏதாவது ஒன்றைச் சேர்த்துச் சாப்பிட்டாலும்கூட தயிரைத் தினமும் சாப்பிடக்கூடாது என்கிறது ஆயுர்வேதம். இவ்வளவு குழப்பிக்கொண்டு அதைச் சாப்பிடுவதைவிடப் பேசாமல் சாப்பிடாமலே இருந்துவிடலாம்!


தயிரோடு ஒப்பிடும்போது மோர் அமுதம். 'இந்திரனுக்குக்கூடக் கிடைக்காத அற்புதம்' என இதை வர்ணிக்கிறது ஆயுர்வேதம். வெறுமனே தயிரில் தண்ணீர் ஊற்றிவிட்டால் அது மோர் இல்லை. தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்துவிட்டு, எஞ்சியிருக்கும் தயிரில் சரிபங்கு தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.


மோர் எளிதாக ஜீரணமாகிற உணவு. சாப்பிட்ட பிறகு மோர் குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மூல நோய்க்கு மோர் பிரமாதமான மருந்து. வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறு களுக்கெல்லாம் மோர் சிறந்த மருந்து.


மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும். வெயிலால் உடம்பு சூடாகி சிறுநீர் பாதை யில் எரிச்சல் உண்டானால் அதற்கும் மருந்து இதுதான். ரத்தசோகைக்கும் மோர் நல்லது! நம்மை அறியாமல் சாப்பிடும் மோசமான உணவுப் பொருட் கள் மூலம் உடலில் சேரும் விஷத்தை அகற்றும் வல்லமைகூட மோருக்கு உண்டு!


ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும்போது மோர் சாப்பிடக்கூடாது. மோர் சாதமும் கூடாது! அந்த மாதிரி சமயத்தில் 'ஸ்பெஷல் மோர்' குடிக்கலாம். ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டுத் தாளித்து, அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, சீரகப் பொடியும் மஞ்சள் தூளும் சேர்த்து கொதிக்க விடவேண்டும். இந்தத் தண்ணீர் ஆறியதும் இதில் மோரைக் கலந்து குடிக்கலாம். (ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... மோரை நேரடியாகச் சூடு பண்ணக்கூடாது!)


அடுத்தது வெண்ணெய்... பகவான் கிருஷ்ணரின் லீலைகளில் பிரதான மானது வெண்ணெய் திருடல்தானே! பகவானே ஆசைப்பட்டுத் திருடித் தின்றிருக்கிறார் என்றால் வெண்ணெய் எவ்வளவு விசேஷமான உணவு என்று தெரிந்து கொள்ளுங்கள்!


வெண்ணெய், அதைச் சாப்பிடும் ஆண், பெண் இருபாலருக்குமே செக்ஸ் உணர்வைத் தூண்டிவிடும். பெண்களுக்குக் குழந்தைப்பேறு சக்தியை இது அதிகரிக்கிறது. வெண்ணெய் சாப்பிட்டால் உடல் மெருகேறும்... நல்ல கோதுமை நிறமும் தோலுக்கு வரும் வாய்ப்பு உண்டு.


மலச்சிக்கலுக்கு வெண்ணெய் அருமையான இயற்கை மருந்து. தினந்தோறும் சாப்பாட்டுக்குமுன் வெண்ணெயை வெறுமனே கொஞ்சம் சாப்பிட்டால் அது பசியைத் தூண்டிவிடும்!


கடைசியாக நெய்!


குழந்தை முதல் முதியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் இது ஏற்றது. குறிப்பாகக் குழந்தைகள், நல்ல நிறம் பெறுவதற்கும் குரல் வளத்துக்கும் நுண்ணறிவு வளர்வதற் கும் நெய் தருகிறார்கள்.


கிட்டத்தட்ட ஒரு கம்ப்யூட்டரைப் போல மனிதர்களை மாற்றும் சக்தி நெய்க்கு உண்டு. புத்திசாலித் தனத்துக்கான உணவென்றே இதைச் சொல்லாம். பாடங்கள், கஷ்டமான சூத்திரங்களைப் புரிந்துகொள்ளும் சக்தி, புரிந்துகொண்டதை மறக்காமல் ஞாபகத்தில் சேர்த்துவைக்கும் சக்தி, ஞாபகத்தில் இருப்பதைத் தேவையான நேரத்தில் வரவழைத்துப் பயன்படுத்தும் சக்தி... இவை மூன்றையும் ஒருசேரத் தருவது நெய் மட்டும்தான். செரிமானத்தைத் தூண்டிவிடும் மருந்தாகவும் நெய் இருக்கிறது. கண் பார்வைக்கும் இது நல்லது!


குடலில் அதிக அளவு அமிலம் சுரந்துவிட்டால் அதைச் சரிசெய்யும் மருந்தாக நெய் இருக்கிறது. இதனால் குடற்புண்கள் வராமல் தடுக்கிறது. நெய் சுலபத்தில் உடலில் கலந்து கரையக்கூடியது என்பதால் நிறைய மருந்துகளை நெய்யில் கலந்துதான் ஆயுர்வேத டாக்டர்கள் தருகிறார்கள்!


'எல்லோருக்கும் நெய் தரலாமா? ஏற்கெனவே உடலில் அதிகக் கொழுப்பு சேர்ந்து அவதிப்படுகிறவர்களுக்கு நெய் மேலும் துன்பத்தை அல்லவா தரும்..?' என்ற கேள்வி எழக்கூடும்!


ஆனால், இரண்டு விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்! உடலின் இயல்பான செயல்பாட்டுக்குக் கொஞ்சமாவது கொழுப்புச் சக்தி தேவை. சுத்தமாக, கொழுப்பே இல்லாத உணவு சாப்பிட்டால் சீக்கிரமே வயதான தோற்றம் வந்துவிடும். தோல் வறண்டு போய், நரம்புகள் தளர்ந்து இளம் கிழவர்கள் ஆகும் நிலை ஏற்பட்டுவிடும்!


ஆயுர்வேதத்தில் எந்தெந்த நிலைமை யில் நெய் சாப்பிடக்கூடாது என்று இருக்கிறது. அதன்படி பார்த்தால் கொழுப்பு ஏற்கெனவே ஏகமாகச் சேர்ந்து, அதனால் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு நெய் சாப்பிடச் சொல்லி எந்த ஆயுர்வேத டாக்டரும் ஆலோசனை தரமாட்டார்கள். ஜீரண சக்தி நன்றாக இருக்கும்போதும் சளி போன்ற கபம் சம்பந்தமான நோய்கள் இல்லாதபோதும் மட்டுமே நெய் சாப்பிடுவது நல்லது.


ஆயுர்வேத முறையில் தயாரிக்கப் பட்ட மூலிகை நெய்களும்கூட இப்போது விற்பனைக்கு வந்துவிட்டன. சாரஸ்வத கிருதம், பிரம்மி கிருதம் போன்றவை பள்ளிக் குழந்தைகளின் கல்வியைத் தூண்டவல்லது! (கிருதம் என்றால் மூலிகை நெய் என்று பொருள்.)


நெய்யில்கூட பசுவின் நெய்யையும் எருமைப்பால் நெய்யையும் கலப்படம் செய்யக்கூடாது. கலப்பட நெய் பொதுவாக முழுமையாகப் பலன் தராது!

Post Comment

0 comments:

கருத்துரையிடுக