ஞாயிறு, டிசம்பர் 06, 2009

உணவையே மருந்தாகப் பரிந்துரைக்கின்றது ஆயுர்வேதம்

உடலில் வாதம், பித்தம், கபம் என்னும் பெயரில் பஞ்ச பூதங்கள் செயல்படுகின்றன. வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் உடலில் மிகுந்தாலும் குறைந்தாலும் நோயை ஏற்படுத்தும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் குறிப்பிடுவதாகப் பரிமேலழகர் திருக்குறள் உரையில் கூறுகிறார்.

காலையில் விழிக்கும் நேரம், காலைக் கடன்களை முடிக்கும் நேரம், உணவருந்தும் நேரம், தூங்கும் நேரம் ஆகியவை தினமும் ஒரே மாதிரியாக இருக்கும்போது உடல் இயக்கமும் சீராக இருக்கும். மதியம் உணவருந்திய உடன் தூங்குவது கூடாது, சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம். நாம் உணவை விழுங்குகிறோம். மென்று உண்பதில்லை. உணவில் சாதத்தின் அளவைக் குறைக்கலாம். இரவு 7 மணிக்கு மேல் உணவருந்துவது நல்லதல்ல. இரவு குறைவான உணவு உண்பதே நல்லது. தினசரி சுமார் 20 நிமிடங்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். டீ அருந்தலாம். காபி வேண்டாம். நான்குபேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு அரை லிட்டர் எண்ணெய் போதுமானது என நாங்கள் பரிந்துரைக்கிறோம். நல்லெண்ணெய் இதயத்திற்கு நல்லது. ஆவியில் அவித்த உணவை உட்கொள்ளலாம். எண்ணெயில் பொரித்த உணவை அதிகம் உண்ண வேண்டாம்.

உணவையே மருந்தாகப் பரிந்துரைக்கின்றது ஆயுர்வேதம். உண்ணும்போது வயிறு நிரம்பும்வரை உண்பது வேறு, பசி அடங்க உண்பது வேறு. பசி அடங்கும்வரை உண்பதே போதுமானது. முதலில் சிரமமாக இருந்தாலும் சில நாள்களில் வயிறும் அதற்குப் பழகிவிடும். பொதுவாக முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் இப்பழக்கத்தைக் கையாள்வது சிறந்தது. உணவிற்குப் பின் நீரருந்துவதே நல்லது. ஆறிய உணவை மீண்டும் சூடாக்கி உண்பது ஒரு தவறான பழக்கம். உணவுப் பழக்கத்தில் விரதம், விருந்து இரண்டையும் தவிர்ப்பதே நல்லது. ஆயுர்வேதத்தில் சைவ உணவு வற்புறுத்தப்படவில்லை. காகம், ஆடு போன்றவற்றின் மாமிசம்கூட மருந்தாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சைவ உணவு என்பது பிற்காலத்திய இடைச்செருகல் என்றே நினைக்கிறேன். சைவ உணவோ அசைவ உணவோ உண்பது அவரவர் விருப்பம். இரண்டிலுமே நன்மை தீமைகள் உண்டு. அசைவ உணவினால் குடல்பைப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும், யூரிக் ஆசிட் படிமம் மூட்டுக்களில் படிந்து மூட்டுவலி ஏற்படவும் வாய்ப்புண்டு. அதே சமயம் மீனில் 'ஒமேகா 3' இருப்பதால் அது இதயத்தைப் பாதுகாக்கின்றது. உணவில் மீனை அதிகம் சேர்த்துக்கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு. சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு இரத்த சோகை நோய் வரும் வாய்ப்பு உண்டு.

நெய், வல்லாரைக் கீரை இரண்டுக்குமே நினைவாற்றலை அதிகரிக்கும் குணம் உண்டு. நெய், தேங்காய் உட்கொண்டால் அதிக அளவு உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும். பொதுவாக அதிக உடல் உழைப்பு மேற்கொள்பவர்களும் நல்ல செரிக்கும் தன்மையுடையவர்களும் அதிக அளவில் கலோரி கொண்ட உணவை எடுத்துக்கொள்வதில் தவறில்லை. அதே சமயம் உடலுழைப்பற்றவர்களுக்குக் குறைந்த அளவு கலோரி கொண்ட உணவே நல்லது.

பொதுவாக இன்றைய இயந்திர உலகில் மக்கள் ஆயுர்வேதத்தை நாடாமல் இருப்பதற்குக் காரணம் அதன் மூலம் உடனடித் தீர்வு கிடைக்காது, நோய் குணமடைய அதிக நாள் பிடிக்கும் என்று நினைப்பதே. இது தவறான கருத்து. அலோபதி மருத்துவத்தில் உடனடித் தீர்வு ஏற்படலாம். ஆனால், பல நேரங்களில் ஒவ்வாமை போன்ற பக்க விளைவுகள் ஏற்படச் சாத்தியம் உண்டு. சோதனைக்கூடங்களின் தவறான முடிவுகளால் இன்று பெரும்பான்மையான மக்களுக்கு நோயைப் பற்றிய பீதி ஏற்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட நோயைக் குணமாக்க முடியாது என்றாலும் அதைக் குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட்டால் அதிக பாதிப்பின்றி வாழலாம்.

ஆங்கில மருத்துவத்திற்கு வழங்கப்படுவது போன்று ஆயுள் காப்பீடு ஏனோ ஆயுர்வேதத்திற்குத் தரப்படுவதில்லை. இது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.


Post Comment

0 comments:

கருத்துரையிடுக