ஞாயிறு, டிசம்பர் 06, 2009

மன நோய்கள்

உணவும் பானங்களும் உடலிலுள்ள வாயு, பித்தம், கபம், ரத்தம் இவற்றைத் தனித்தும் சேர்த்தும் கெடுத்து உடல் நோய்களை ஏற்படுத்துகின்றன. விருப்பும், வெறுப்பும் பல்வேறுவிதமாக உருப்பெற்று கோபம், சோகம், பயம், மகிழ்ச்சி, துயரம், பொறாமை, அசூயை, ஏக்கம், அழுக்காறு, வேட்கை, பேராசை முதலியவை மனக் கிளர்ச்சிகளை ஏற்படுத்தி மன நோய்களை ஏற்படுத்துகின்றன என்று ஸýச்ருதர், தான் இயற்றிய ஸýஸ்ருத சம்ஹிதை எனும் ஆயுள்வேத நூலில் கூறுகிறார்.
ஆபஸ்தம்பர் எனும் முனிவர் மனதின் சில குணங்கள் வாழ்க்கையைச் சுட்டெரிக்கும் தன்மை படைத்தவையாக இருக்கின்றன என்று கூறுகிறார். அந்த வகையில்,
கோபம்: ஆசை தடைபடுவதால் ஏற்படும் வெறி, உள்ளக் குமுறலையும், உடலில் நடுக்கத்தையும் வியர்வையையும் ஏற்படுத்தும்.
மன்யு: கோபத்தை அடக்குதல், வெளியே காட்டாமல் உதட்டளவில் சிரித்து உள்ளத்தளவில் சினத்தால் பொங்கி நிற்பது. சினம் மனதில் கொழுந்துவிட்டு எரிவதால் ஏற்படும் பரபரப்பும் நிதானமின்மையும், மனக்குழப்பமும் நேர்வதைப் பொருட்படுத்தாதிருத்தல்.
அசூயை: தான் பெறாதிருப்பதைப் பிறரும் பெறக்கூடாது என்ற மனப்பான்மை. தனக்குக் கிடைக்காதது மற்றவருக்குக் கிடைத்துவிட்டால் அவற்றை அவர் இழக்கச் செய்வதில் மகிழ்ச்சி.
துரோகம்: தான் பெற்றுள்ள சிறப்பைப் பிறரடைவதைக் கண்டு பொறுக்காமல் அவர்களை அதனை அடையவிடாமல் தடுப்பதற்கான ஹிம்சை வழி.
மோஹம்: தன் விருப்பம் நிறைவேறச் செய்யத் தகாததைத் தகுந்ததெனவும், தகுந்ததைத் தகாதெனவும் காணுதல். பகுத்தறிவின்மை.
பொய்: உண்மை நிலை அறியாதபடி பொய்யால் மறைப்பது. ஒரு பொய்யை மற்றொரு பொய் முட்டுக் கொடுக்க வருகையில் பொய்யை மேலும் பயன்படுத்துவது.
தம்பம்: தான் விரும்பியது கிடைத்தவுடன் அதை பலரறியத் தம்பட்டம் அடித்துக் கொள்ளுதல். தன்னால் மட்டுமே அது செய்ய முடிந்தது என்ற இறுமாப்பு அடைதல்.
பரிவாதம்: பிறரிடம் உள்ள நல்ல குணத்தையும் குற்றமாகக் கண்டு மனம் நோகப் பேசுதல்.
காமம்:அளவிற்கு மீறி விரும்பிப் பெற்றதை அனுபவித்தல், உடல்தளர்ச்சியையும் மன இறுக்கத்தையும் கருதாதிருத்தல்.
அதிபோகம்: அதிக அளவில் உண்பது. தனக்கெனக் கிட்டியவற்றை வரம்பின்றி முறையின்றிப் பிறர் கண்கூச உபயோகித்தல்.
ஹர்ஷம்:தான் விரும்பியது கிடைத்துவிட்டால் ஏற்படும் அகங்காரத்தின் மகிழ்ச்சி. உயர்ந்த தொனியில் எக்காளத்துடன் பேச்சு.
லோபம்:விரும்பிக் கிடைத்ததை மேன்மேலும் சேர்க்க ஆசைப்படுதல். தனக்கெனப் பெற்ற பொருளைத் தனக்காகக் கூடப் பயன்படுத்தாத கஞ்சத்தனம்.
ரோஷம்:தான் விரும்பியதற்கு மாறாக மற்றவர் செய்தால் ஏற்படும் வெறி. படபடப்பு, முணுமுணுப்பு, நிலைகொள்ளாமை போன்ற உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு இடம் தருவது.
உங்களுடைய மனக் குமுறல்களை நீக்க வாக்பட முனிவர் கூறும் விஷயங்களை மனதில் பதிய வைத்து அதன்படி நடக்கக் கடும் முயற்சி செய்யலாம். அவை,
ஆர்த்ர சந்தானதா - தொடர்ந்து ஈரமுள்ள நெஞ்சுடன் (மனவிரக்கம்) இருத்தல்.
த்யாக - தனக்கெனப் பொருள்கொள்ளாமை
காயவாக்சேதஸôம் தம: உடல், பேச்சு, மனம் இவற்றின் அடக்கம்.
ஸ்வார்த்த புத்தி: பரார்த்ததேஷு - பிறர் நலனில் தன்னலம் என்ற எண்ணத்துடன் செயல்படுதல்.
இவை சற்றுக் கடினமானதுதான். இருந்தாலும் ஒரு விரதமாகத் தொடர்ந்து கடைப்பிடிக்க அதுவே உங்களுக்கு நிலைத்த வாழ்வைத் தரவல்லது.
ஆயுர்வேத மருந்துகளில் மஹாகல்யாணகிருதம், சாரஸ்வதாரிஷ்டம், மானஸமித்ரம் குடிகா, பிரம்ஹீ தைலம் போன்றவை மனதிற்குச் சாந்தமான குணத்தைத் தரும் நல்ல மருந்துகளாகும்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக