புதன், டிசம்பர் 02, 2009

சரகர்-“வாஜீ கர்ணா” (வீரியமூட்டும் முறை)

சரகர் ஒரு மாபெரும் ஆயுர்வேத ஆசான். அவருடைய நூல் “சரக சம்ஹிதை” தான் ஆயுர்வேதத்தின் வேதம். பாலியல் உணர்வு பற்றிய அவரின் கருத்துக்கள் இன்றும் ஏற்றுக் கொள்ளக் கூடியவை. அவருடைய ஸம்ஹிதையில் இரண்டு அத்யாயங்களில் “ரசாயனா” (மீண்டும் சக்தியளித்து இளமையாக்குதல்) மற்றும் “வாஜீ கர்ணா” (வீரியமூட்டும் முறை) சிகிச்சை முறைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த காலத்திய ஐ.சி.யு. மாதிரி, இந்த சிகிச்சைகளுக்கு, “குடிப்ரவேஸிதா” என்ற முறையில் நோயாளி தனியே வைக்கப்பட்டு, பலவித மூலிகைகள், அயச்சத்து இவற்றால் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவார். இன்னொரு முறையில் – “வாதாதபிகா” – திறந்த வெளியில் நோயாளி வைக்கப்பட்டு சிகிச்சை செய்யப்படுவார். கடுக்காய், நெல்லிக்கனி இவை வெகுவாக பயன்படுத்தப்பட்டன. 100 வருடங்கள் வரை மனிதன் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த காலத்திலேயே இத்தகைய சிகிச்சைகள் பிரபலமாக இருந்தன. காரணம் மனிதனின் நீண்ட காலம் வாழ வேண்டுமென்ற அவா தான்! பாலியலை பற்றி சரகர் எழுதும் போது வெளிப்படையாக, மறைவின்றி சரகர் விவரிக்கிறார்! வாஜீகர்ணத்தைப் பற்றியும் சரகரின் சில கருத்துக்களையும், தனி அத்யாயத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அவரது மற்றும் சில கருத்துகள்
• நல்ல ஆகிருதியுடன் உடல் பலமாக காணப்படுகிறவர்கள், பாலியலில் வலிமையாக இருப்பார்கள் என்று கூற முடியாது. ஒல்லியானவர்கள் பாலியலில் வலிமையாக இருப்பதும் சாத்யம்.
• சிலர் சிட்டுக்குருவி போல் அடிக்கடி உறவு கொள்ளுவார்கள். சிலர் யானையை போல் அடிக்கடி இல்லாமல், நீண்ட நாட்களுக்கு ஒரு முறை, நீடித்த உடலுறவு கொள்ளுவார்கள்.
• ஆண்மைபெருக்கி, பாலியலை தூண்டும் மருந்துகள், உணவுகளை உபயோகிப்பது தேவையானது.
• காதல் செய்ய குளிர்காலம் ஏற்றது. வெய்யில் காலமும், மழைக்காலமும் மனிதரில் பலத்தை குறைப்பதால் இருவாரங்களுக்கு ஒரு முறை போதுமானது.
• கீழ்க்கண்டவற்றால் பெண்களின் ஆசையை தூண்டலாம்
ஸ்பரிசம் (தொடுதல்):- இதற்கு எண்ணை குளியல், மசாஜ் இவற்றை (உடலை தொடும்போது குளிர்ச்சியாக இருக்க) செய்து கொள்ளவும். உபயோகிக்க வேண்டிய எண்ணைகள் நல்லெண்ணை, பாதாம் எண்ணை, தேங்காய் எண்ணை, கடுகெண்ணை, தொடு உணர்ச்சியில் வாயு அதிகமாக இருக்கும். தொடு உணர்ச்சிக்கு தோல் இருப்பிடமாகும். உடலுக்கு எண்ணை தேய்த்து குளிப்பதால் தோல் மிருதுவாகிறது.
• பார்வை: அழகான பொருட்கள், இயற்கை அழகு, மலர்கள் இவற்றை காண பாலுணர்ச்சி ஏற்படும்.
• வாசனை:- துர்நாற்றம் உடலுறவுக்கு எதிரி. வாசனை திரவயங்களை பயன்படுத்த வேண்டும்.
• நீராடுவது:- நீராடுவதால் உடல் தூய்மை, ஆண்மை, நீண்ட ஆயுள் இவை ஏற்படுகின்றன. களைப்பு, அழுக்கு, வியர்வை இவை நீங்குகின்றன, உடல் வலிமை, ஓஜஸ் (ஒளி) இவை வளர்கின்றன.
• நறுமணம் வீசும் பொருட்களை அணிவது:- நீராடியபின் குங்குமப்பூ போன்ற மணம் வீசும் பொருட்களுடன் சேர்த்து அரைத்த சந்தனம் பூசிக் கொள்வதாலும், மலர் மாலை அணிவதாலும், ஆண்மை வளர்கிறது. அதாவது பெண்களிடம் ஆசையைத் தூண்டிவிடுகிறது. மணம் அதிகரிக்கிறது. ஆயுள் வளர்கிறது. அழகான தோற்றம் ஏற்படுகின்றது. உடலுக்கு புஷ்டியையும், வளர்ச்சியையும் தருகின்றது. மனம் தெளிவடைகிறது. வறுமை அகலுகிறது.
• சுவை:- சில உணவுகள் குறிப்பாக இனிப்புகள் பாலுணர்வை தூண்டும் எந்த உணவு மனைவி அல்லது கணவனுக்கு பிடிக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். (சரகர் காலத்தில் கொலஸ்ட்ராலை பற்றிய கவலைகள் இல்லை!) சரகர் பாலும், நெய்யும் உண்டு, உடலுறவில் அடிக்கடி ஈடுபடும் மனிதர்கள், இனிமையாக வாழ்வார்கள் என்கிறார்.
• சப்தம்: மென்மையான இசை, மந்திரங்கள், வளையோசை, கொலுசுகளின் நாதம், தென்றல், பறைவைகளின் குரல் இவைகள் இரு பாலருக்கும் உணர்வை தூண்டும்.
• வாஜீகர்ணத்தில் சொல்லியபடி, சிறந்த பாலுணர்வு ஊக்கி, ஆசை நிறைந்த பெண்தான் என்கிறார் சரகர். ஒத்த குணங்கள் உள்ள தம்பதிகள் உடலுறவில் மிகுந்த களிப்படைவார்கள்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக