சனி, டிசம்பர் 05, 2009

யானைக்கால் நோய்

யானைக்கால் நோய் வருவதற்கான காரணங்களையும் சிகிச்சை முறைகளையும் ஆயுர்வேதமும் நவீன வைத்திய சிகிச்சையாளர்களும் தெரிவிக்கின்றனர். யானைக்கால் பற்றிய விவரத்தை கீழ்காணும் வகையில் ஆயுர்வேதம் கூறுகிறது.

“துடையிடுக்கில் அதிக வலியை உண்டு பண்ணிக்கொண்டு காய்ச்சலுடன் தோன்றும் வீக்கம், மெதுவாக கால் பாதத்தை நோக்கிச் செல்லும். அது “ச்லீபதம்’ (யானைக்கால்) எனப்படுகிறது.’

வீக்கம் கறுத்தும், வறண்டும், வெடிப்புள்ளதாகவும், திடீர் திடீரென்று வலியும், கடும் காய்ச்சலும் காணப்பட்டால் அது வாத தோஷத்தால் ஏற்பட்ட யானைக்கால் நோயாகும். இதைக் குணப்படுத்த விளக்கெண்ணெய்யில் தயாரிக்கப்படும் நொங்கனாதி தைலத்தைக் குடிக்கச் செய்து, வியர்வையை வரவழைக்கும் சிகிச்சை முறைகளைச் செய்து, கணுக்கால் பகுதியிலிருந்து 4 அங்குலம் மேல் பகுதியில் காணப்படும் ரத்தக் குழாயைக் கீறி கெட்டுள்ள ரத்தத்தை வெளிப்படுத்த வேண்டும். உடல் பலம் தேறியதும், விளக்கெண்ணெய்யை பசுமூத்திரத்தில் கலந்து ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இந்த ஒரு மாதம், பாலில் சுக்கு போட்டு கொதிக்க விட்டு, அதை முக்கிய உணவாகக் கொள்ளவேண்டும்.

வீக்கம் பசுமையாகவும், மிருதுவாகவும், காய்ச்சலும் காணப்பட்டால் அது பித்த தோஷத்தால் ஏற்பட்டது என அறியலாம். இதில் கணுக்கால் கீழேயுள்ள ரத்தக் குழாயைக் கீறி ரத்தத்தை வெளிப்படுத்த வேண்டும். பித்தத்தின் சீற்றத்தை அடக்கும் மருந்துகளைச் சாப்பிட வேண்டும்.

வீக்கம் பளபளப்புடன் வெண்ணிறமாகவும், கனமாகவும், கடினமாகவும், புற்று போல் கிளம்பி, முட்கள் போன்ற முனைகள் அடர்ந்ததாகவும், மிகப் பெரியதாகவும் இருந்தால் அது கப தோஷத்தினால் ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கால் பெருவிரல் ரத்தக்குழாயைக் கீறி ரத்தத்தை வெளியேற்ற வேண்டும். வரணாதி கஷாயம் தேனுடன் தொடர்ந்து பருகலாம். பார்லியை வேகவைத்து முக்கிய உணவாகக் கொள்ளவேண்டும். கடுகெண்ணெய்யை சமையலில் தாளிப்பதற்குப் பயன்படுத்த வேண்டும். கல்யாண க்ஷôரம் எனும் பொடி மருந்தை சிட்டி அளவு எடுத்து பசு மூத்திரத்துடன் சாப்பிட உகந்தது.

Culex Fatigans எனும் வகையைச் சார்ந்த கொசுக்கள் Wuchereria Bancrofti எனும் கிருமிகளை, கடிக்கும்போது தோல் பகுதியில் விட்டுச் செல்கின்றன. இரத்தத்தில் நுழையும் அவை, நிண நீரைக் கொண்டு செல்லும் குழாயின் உட்பகுதிகளில் நுழைந்து, நிணநீர் கிரந்திகளை அடைந்து 6-18 மாதங்களுக்குள் புழுக்களை உற்பத்தி செய்கின்றன. நிணநீர் ஓட்டத்திற்கு ஏற்படும் தடை காரணமாக நிணநீர்கிரந்தி வீக்கம், தொட்டால் வலி, துடையிடுக்கில் வலியுடன் வீக்கம் போன்ற உபாதைகளை ஏற்படுத்துகின்றன. திடீரென்று காய்ச்சல் விட்டுவிடும். மறுபடியும் சில நாட்களில் தலை தூக்கும். நிணநீர்க் குழாய்களின் தொடர் அடைப்பை ஏற்படுத்தும் புழுக்கள் இறந்து போனாலும், அடைப்பு தொடர்வதால் குழாய்களின் சிதைவால்Cellulitis, Fibrosis போன்ற உபாதைகள் காணும், யானைக்காலையும் ஏற்படுத்துகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கு யானைக்கால் நோயை ஏற்படுத்தும் Micro Filaria ரத்தத்தில் இருந்து சுமார் 1 வருடத்திற்குப் பிறகு நோயின் சீற்றத்தைக் காண்பிக்கத் தொடங்கும். இவை அனைத்தும் நவீன ஆராய்ச்சியாளர்களின் கூற்று.

இந்நோய் நீங்க மஞ்சிஷ்டாதி (ப்ருகத் கஷாயம்) 15 மிலி, 60 மிலி சூடான தண்ணீருடன் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். சுதர்ஸனம் சூர்ணம் 5 கிராம் காலை, இரவு உணவிற்கு 1 மணிநேரம் முன்பாகச் சாப்பிடவும். ஊமத்தை, ஆமணக்கு, கருநொச்சி, சாறடை, முருங்கை இவற்றின் இலைகளையும் கடுகையும் சேர்த்து அரைத்து (இம் மருந்திற்கு தத்தூராதி லேபம் என்று பெயர்) யானைக்கால் மீது பூச, நாட்பட்ட கடுமையான யானைக்கால் நோயைப் போக்கும் என்று சார்ங்கதர ஸம்ஹிதையில் காணப்படுகிறது.


Post Comment

0 comments:

கருத்துரையிடுக