க்ஷாரம் -உப்பு செய்வது எப்படி ? Ksharam preperation
லவண க்ஷாரம்-உப்புக்கள்
மருந்துச் சரக்குகளின் சாம்பலைத் தண்ணீரில்
கரைத்து வடிகட்டி அதன் தெளிவைச் சுண்டக் காய்ச்சி பெரும்பாலும் க்ஷாரங்கள்
தயாரிக்கப் படுகின்றன. இவைகள் காரச் சரக்குகள் (Alkaline Compounds) ஆகும்.
முதலில் சரக்குகள் நன்கு காயவைக்கப்படுகின்றன.
பின்னர் அவைகள் அதிகம் காற்று புகாத இடத்தில் கொளுத்தப்பட்டு நன்கு
சாம்பலாக்கப்படுகின்றன. அந்தச் சாம்பலானது நான்கு பங்கு தண்ணீரில் கரைக்கப்பட்டு
கலவை நன்கு தெளிவடைவதற்காக ஒரு நாள் முழுவதும் கலங்காமல் பாத்திரத்தில்
வைக்கப்படுகிறது. நன்கு தெளிந்த பின்னர் கலவை கலங்காதவாறு அதன் தெளிவு மட்டும்
நன்றாக இறுத்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிறகு அந்தத் தெளிவு கொதிக்க
வைக்கப்பட்டுக் குறுக்கப்படுகிறது. க்ஷாரத்தின் வெண்மை நிறம் பெரிதும் தெளிவின்
தரத்தையே பெரிதும் பொருத்தது. ஆதலால் கலவையின் வண்டல் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட
வேண்டும்.
நீர்மப் பகுதி முற்றிலுமாக வற்றி வெண்ணிறமான
கட்டிகளும் பொடிகளுமாகத் தங்கிய க்ஷாரம் நன்கு ஆறிய பின்னர் பொடித்துச் சலித்து
பத்திரப்படுத்தப்படுகிறது. க்ஷாரங்கள் கசியும் தன்மையுள்ளவையாகையால் காற்றுப்
புகாத கலங்களில் இவைகளைப் பத்திரப்படுத்த வேண்டும். இவைகள் உப்புச் சுவை உடையன.
க்ஷாரங்கள், கசிந்து நீர்த்துப் போய்விட்டால் அதில்
சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடிக்கட்டிக் கொதிக்க வைத்துத் தண்ணீர் வற்றியவுடன்
மேலே கூறிய முறைப்படியே பொடித்துச்
சலித்து பத்திரப்படுத்தவும்.
உட்கொள்ளுவதற்கு திரவமாகவும், வெளியே பூசுவதற்குச் சிறிது தடித்தும் இவற்றை
தயாரிப்பது உண்டு. ஆனால் நடைமுறையில் பெரும்பாலும் மேலே கூறிய முறையே (பொடி
வடிவம்) பின்பற்றப்படுகிறது.
மருந்துச் சரக்குகளைச் சிறு சிறு துண்டுகளாக்கி
நெய், பசுவின் மூத்திரம் போன்ற
திரவங்களுடன் கலந்தோ, அவை அல்லாமலோ
மண்சட்டியிலிட்டுச் சட்டியின் வாயை அகலால் மூடி நன்கு சீலை மண் செய்து காய்ந்த
பின்னர் சரக்குகள் கருகும்வரை நன்கு எரிக்கவும். ஆறிய பின்னர் அதைப் பொடித்துச்
சலிக்கவும்.
கருகாத பாகங்களைப் பிரித்தெடுத்து மறுபடியும்
முறைப்படி எரித்தும் தயாரிக்கலாம்.
சாம்பலைத் தண்ணீரில் கரைத்து க்ஷாரம்
தயாரிக்கும் போது சாம்பல் கலவை ருசியற்றுப் போகும்வரை தண்ணீர் சேர்த்துக் கலக்கி
கலக்கித் தெளிவை எடுத்து வற்ற வைக்கலாம்.
சில க்ஷாரங்களும்
அவற்றின் உபயோகங்களும்:
அபமார்க க்ஷாரம் எனப்படும் நாயுருவிச்
சாரத்தினை 125 – 500 மி.கிராம்
அளவிலே நீருடன் உட்கொள்ள குன்மம் (குல்ம), வயிற்றுவலி (உதர சூல), இரைப்பு (ஸ்வாஸ)
ஆகியன நீங்கும்.
கதலி க்ஷாரம் எனப்படும் வாழைச் சாரத்தினை 125
– 250 மி.கிராம் அளவிலே
நீருடன் கொள்ள குன்மம் (குல்ம), மண்ணீரல் வீக்கம்
(ப்லீஹோதர), நாட்பட்ட
காய்ச்சல் (ஜீர்ண ஜ்வர), வீக்கம் (ஷோப)
ஆகியன தீரும்.
பலாச க்ஷாரம் எனப்படும் புரச சாரத்தினை அரை
முதல் ஒரு கிராம் அளவிலே வெந்நீர் அல்லது பாலுடன் உட்கொள்ள பசியின்மை (அக்னி
மாந்த்ய), குன்மம் (குல்ம),
கல்லீரல் மண்ணீரல்
வீக்கம் (ப்லீஹயக்ருத்வ்ருத்தி), எரிச்சலுடன் சிறு
நீர் கழிதல் (மூத்ரக்ரிச்சர), கல்லடைப்பு
(அஷ்மரீ) ஆகிய நோய்கள் தீரும்.
மூலக க்ஷாரம் எனப்படும் முள்ளங்கிச் சாரத்தினை
ஒரு கிராம் அளவில் நீருடன் உட்கொள்ள சிரமத்துடன் சிறுநீர் கழிதல் (மூத்ரக்ரிச்சர),
கல்லடைப்பு (அஷ்மரீ)
ஆகியன தீரும்.
யவக்ஷாரம் எனப்படும் பார்லிச் செடியின்
சாரத்தினை அரை முதல் ஒரு கிராம் வரை வெந்நீர் அல்லது நெய்யுடன் உட்கொள்ள
வயிற்றுப்புசம் எனும் அகட்டு வாய்வு (ஆத்மான), மலச்சிக்கல் (ஆனாஹ), சூலை (சூல), பெருவயிறு (உதர), குன்மம் (குல்ம), சிரமத்துடன் சிறுநீர் கழிதல் (மூத்ரக்ரிச்சர),
மண்ணீரல் கோளாறினால்
ஏற்படும் செரியாமை தோஷம் எனும் ஆமதோஷம் (ப்லீஹாமய) ஆகியன தீரும்.
வாஸாக்ஷாரம் எனும் ஆடாதோடைச் சாரத்தினை அரை
கிராம் அளவிலே நீருடன் கொடுக்க குன்மம் (குல்ம), இருமல் (காஸ), இரைப்பு (ஸ்வாஸ) ஆகிய நோய்கள் தீரும்.
எருக்க இலையையும், சோற்றுப்பையும் சம அளவிலே எடுத்துக் கொண்டு
நாரிகேள லவணம் செய்யப்படும் அதே செய்முறைக்குட்படுத்தி தயாரிக்கப்படும்
அர்க்கலவணத்தை ஒரு கிராம் அளவில் நீர் அல்லது மோருடன் கொடுக்க குன்மம் (குல்ம),
வயிற்றுக் கோளாறுகள் (உதர
ரோக), மண்ணீரல் பெருக்கம்
(ப்லீஹோதர) ஆகியன தீரும்.
இவைகள் தவிர கோகிலாக்ஷார (நீர்முள்ளிச்சாரம்), ஸ்னுஹீக்ஷாரம் (சதுரக்கள்ளிசாரம்), கூஷ்மாண்டக்ஷாரம் (பூசணிச்சாரம்), அஸ்வத்தக்ஷாரம் (அரசமரசாரம்) ஆகியனவும்
மருந்தாகவும், மருந்துச் சரக்காகவும்
பயன்படுத்தப் படுகின்றன.
க்ஷாரங்கள் வெண்ணிறமுடையன. காற்று பட்டவுடன்
இவைகள் பிசுபிசுப்படைவதால் இவற்றை காற்றுப் புகாத கொள்கலன்களில் பத்திரப்படுத்தி
வைக்க வேண்டும். க்ஷாரங்களும், லவணங்களும்
நீண்டநாட்கள் வரை கெடாமல் இருக்கவல்லவை இவைகள் உப்புச்சுவை உடையன.
2 comments:
அசத்தலான தகவல்கள் டாக்டர் ஐயா
நட்புடன் ,
கோவை சக்தி
thalai namaichchal medicine ?
utchanthalai oorkirathu medicine sollavum
கருத்துரையிடுக