ஞாயிறு, மே 15, 2011

லேஹ்யம் செய்வது எப்படி ? -How to prepare Lehaym


லேஹியம் செய்வது பற்றி மட்டும் அல்லாது அதை போன்ற தயாரிக்கப்படும் மருந்துகளான -ரஸக்கிரியை, பானகம், லேஹ்யம், குடிகைகள், வடகங்களின் செய்முறை விதி குறித்த சில குறிப்புகள்:






                கஷாயம் போன்ற திரவ பதார்த்தங்களைக் கொதிக்க வைத்து அவற்றிலுள்ள தண்ணீரின் பகுதியை ஓரளவு வற்ற வைத்தால் அக்கலவை தடித்துப் பிசுபிசுப்புள்ளதாக ஆகிறது. பூரணமாகத் தண்ணீர் வற்றிவிடும்போது அது முற்றிலும் கெட்டியான பொருளாகவே மாறிவிடுகின்றது. இவைகளை ரஸக்ரியை என்று கூறுவது வழக்கம்.

                பெரும்பாலும் முறைப்படி சரக்குகளை நன்கு வேக விட்டுப் பிழிந்தெடுத்துத் தயாரித்த கஷாயத்தை வடிகட்டிய பின்னர் அவைகளை மேலும் சூடாக்கி வற்ற வைத்துத் தடித்துக் கறுத்த சாந்து போல் செய்து பிசுபிசுப்புத் தட்டியவுடன் எடுத்தோ அல்லது அச்சமயம் செய்முறையில் குறிப்பிட்டுள்ள சரக்குகளைப் பொடித்துச் சலித்துச் சேர்த்துக் கிளறியோ இவைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த முறையில் விசேஷமான சிக்கல்கள் ஏதும் கிடையாது.

                “கலவையின் தண்ணீர் பகுதியை குறுக்கி அதைத் தடிக்கச் செய்து தயாரிப்பதுஎன்னும் ஒரே செய்முறை ஒற்றுமையைக் கொண்டு பானகம், லேஹ்யம், வடகங்கள் முதலியவைகளின் பொதுவான செய்முறையை இங்கேயே குறிப்பிட வேண்டியிருக்கிறது.

                கற்கண்டு, சர்க்கரை, வெல்லம், நாட்டுச் சர்க்கரை, பனைவெல்லம் முதலிய இனிப்புச் சரக்குகளைக் கஷாயம், சாறு வகைகள் அல்லது தண்ணீர் இவற்றுடன் கலந்து நன்கு கரைத்து வடிக்கட்டிக் கொதிக்க வைத்துக் குறிப்பிட்ட அளவு வரை அக்கலவைகளைத் தடிக்கச் செய்து பானகங்களும், அவ்விதமே மேலும் சிறிது தடிக்கச் செய்த பின்னர் அதில் நெய், பொடித்துச் சலித்த மேம்பொடிகள் முதலியவற்றையும் சேர்த்து ஒன்றுபட நன்கு கலந்து ஆறிய பின்னர் தேனையும் சேர்த்து லேஹ்யங்களும் தயாரிக்கப்படுகின்றன.

                யுனானி முறைகளில் தேன் பாகும் உபயோகிக்கப்படுகிறது. 

                லேஹ்யங்களில் சேர்க்கப்படும் மேம்பொடிகளின் அளவிற்கேற்ப சில வகைகள் கெட்டியாகவும், சில வகைகள் நெகிழ்தலாகவும் அமைகின்றன. நெகிழ்தலானவைகளை அவலேஹம் என்று குறிப்பிடுவதும் உண்டு. லேஹ்யங்களில் சேர்க்கப்படும் சூர்ணம் நன்கு வஸ்திர காளனம் செய்யப்பட்டோ அல்லது 80 ஆம் நெம். சல்லடை வலைகொண்டு சலிக்கப்பட்டோ இருத்தல் வேண்டும்.

                சர்க்கரை முதலியவைகளை திரவ பதார்த்தங்களில் நன்கு கரைத்து வடிகட்டிய பின்னரே அத்துடன் நெல்லிக்காய் விழுது, கடுக்காய் விழுது, சுக்கு முதலியவைகளை குறிப்பிட்டுள்ளபடி கலக்க வேண்டும். கட்டி முதலியவைகள் நன்கு கரைந்து சீரான திரவமாக ஆன பின்னர் கலவைகளை கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் பொழுது ஓரங்களில் பிடித்தல், கட்டி தட்டுதல் முதலியவைகளை அவ்வப்போதே கிளறுவதன் மூலம் தவிர்க்க வேண்டும்.

                கலவைகள் கொதித்து அவற்றிலுள்ள தண்ணீர்ப்பகுதி ஆவியாக மாறிக் குறையும் போது கலவையின் தடிப்பும் அதிகரிக்கிறது. தண்ணீரின் பகுதி முற்றிலும் வற்றிவிடும் பொழுது சர்க்கரை முதலியன கெட்டியாகவோ, கருகவோ ஏதுவாகிறது. அவ்விதம் ஆகவிடாமல் குறிப்பிட்ட அளவிலேயே அக்கலவைகளின் தடிப்பை நிலை நிறுத்தி நெய் முதலியவற்றைச் சேர்க்க வேண்டும்.

                இது அனுபவத்தைப் பொறுத்து. எனினும் கீழே கொடுக்கப்படும் குறிப்புகள் ஓரளவுக்கு வழிகாட்டியாகும்.

பானக பாகம்:

                சர்க்கரை முதலியவற்றின் நீர் போன்ற கலவையைக் கொதிக்க வைத்துக் குறுக்கி சற்று இறுகியபின் அதைச் சிறிதளவு ஒரு கரண்டியில் எடுத்துச் சுழற்றி சுழற்றி ஆற வைத்தால் து பின்னும் சிறிதளவு இறுகிக் தடித்துத்  தேன் போன்ற தோற்றமளிக்கும். இதுதான் பானகங்களுக் கேற்ற பானக பாகம்எனப்படும்.

லேஹ்ய பாகம்:

                பானக பாகத்தையும் கடக்கப் பாகைக் கொதிக்க வைத்தோமானால் மேலும் ஓரளவுக்குக் குறுகிய பாகு துடுப்பு முதலியவைகளால் தூக்கி ஊற்றப்படும் பொழுது கடைசித் துளிகூட மெல்லிய நூலால் இணைக்கப் பெற்றது போல் ஒரே தொடர்ச்சியுள்ளதாகவே துடுப்பிலிருந்து கீழே விழும். அப்பொழுது விரலினால் அக்கலவையைச் சிறிது எடுத்து சுடாத வண்ணம் தொட்டு இரு விரல்களால் அமிழ்த்திப் பிரிக்க அக்கலவை நூல் போன்று இரு விரல்களையும் பிணைத்து நிற்கும். இவ்விதம் இணைத்து நிற்கும் நூல்களின் எண்ணிக்கைக்கேற்ப ஒரு நூல் பாகு முதல் ஏழு நூல் பாகு வரை ஏழுவிதமான பாகு வகைகளை யுனானி மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

                மேலும் கலவைகளின் பிசுபிசுப்பிற்கும், தடிப்பின் தரத்திற்கும் ஏற்ப விரல்கள் விரைவிலோ, தாமதித்தோ பிரியும். அவ்விதம் பிரிவது அதிகமாகத் தாமதித்தோ, வெகு விரைவிலோ ஏற்படாதவாறு பாகு அமைய வேண்டும். தண்ணீரை ஒரு தட்டில் நிரப்பி அதன் மத்தியில் அந்நிலையில் தடித்த பாகைச் சிறிது கரண்டியால் எடுத்துவிட அது தண்ணீரில் அமிழ்வதுடன் கரையாமலும், சிதறாமலும் விழுந்த நிலையிலேயே சிறிது நேரம் நிற்கும். இவைகள்தான் சரியான லேஹ்ய பாகத்தின் அறிகுறிகள்.

                இவ்விதமான அடையாளங்களைக் கொண்டு பதத்தைத் தீர்மானம் செய்து கொண்டு கலவையை உடனே தீயிலிருந்து கீழே இறக்கி நெய், எண்ணெய், சூர்ணம் போன்றவைகளைச் சேர்த்து நன்கு கலந்து ஆறிய பின்னர் பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, கஸ்தூரி போன்ற வாசனை சரக்குகள், தேன் இவைகளையும் சேர்த்து ஒன்றுப் படக் கலந்து பத்திரப்படுத்தவும்.

வடக பாகம்:
                மேலே குறிப்பிட்ட லேஹ்ய பாகத்தையும் கடக்கும்படி பாகைக் கொதிக்க வைத்தால் அது மேலும் இறுகுவதுடன் விரல்களால் தொட்டுப் பிரிக்க மிகுந்த எதிர் விசையால் சிறிது தடுக்கப்பட்டுத் தாமதித்தே விரல்கள் பிரியும். பாகு பிசுபிசுப்புத் தன்மையுடனும், தடித்தும், மிகவும் இறுகியதாகவும் இருக்கும். இந்நிலையில் சூர்ணம் கலந்து சிறிது ஆறிய பின்னர் அதை உருண்டையாகவோ, நீளமாகவோ நிலைநிறுத்தலாம். மேலும் விரல்களின் ரேகைகளும் அவற்றில் பதிந்து காணப்படும்.

                இதை வடக பாகம், குடிகா பாகம், மோதகபாகம், பிண்டீ பாகம், குட பாகம், வர்த்தி பாகம் என்ற பெயர்களால் குறிப்பிடலாம். வாயில் அடக்கிக் கொள்ளத் தக்க வடகங்கள், மலத்துவாரம், யோனி மார்க்கம் இவைகளில் செலுத்தத்தக்க பலவர்த்திகள் ஆகியன இந்தப் பாகத்தில் தான் தயாரிக்கப்படுகின்றன.

                வெல்லம், சர்க்கரை போன்றவற்றைப் போல் சுத்தி செய்த குக்குலுவையும் முன் கூறிய திரவ பதார்த்தங்களில் கொதிக்க வைத்து நன்கு கரைத்துக் கலந்து லேஹ்யம் செய்யும் முறைப்படியே வடகங்கள், குடிகைகள் முதலியன செய்யப்படுகின்றன.

                வெல்லப்பாகைக் காட்டிலும் சர்க்கரைப் பாகு சீக்கிரமாகக் கெட்டியாகும் குணமுள்ளதாகையால் அதைச் சற்று விசேஷமாகக் கவனிக்க வேண்டும். குறிப்பிட்ட சில வடகங்களும், குடிகைகளும் முன் கூறியபடி நெருப்பின் சம்பந்தமின்றியும் தயாரிக்கப்படுகின்றன. பொடித்துச் சலித்த சூரணம், பஸ்மங்கள் இவைகளைக் கல்வத்திலிட்டுக் கஷாயம், சாறு வகைகள், பன்னீர், தீனீர் முதலிய திரவ பதார்த்தங்களைக் கொண்டு விரல்களில் ஒட்டாதவரை நன்கு அரைத்து உருட்டியும் தயாரிக்கப்படுகின்றன.

                பச்சைக் கற்பூரம், புனுகு, கஸ்தூரி, சந்தனத் தைலம் முதலிய வாசனைத் திரவியங்களை மாத்திரைகளாக உருட்டும் போது மட்டுமே சேர்க்க வேண்டும். பொடிக்க வேண்டியவைகளை நன்கு பொடித்துச் சலித்து அரைத்துச் சேர்க்கவும்.

Post Comment

1 comments:

கருத்துரையிடுக