ஸ்நேஹ பாகம் [தைலம், க்ருதம் (நெய்)] பற்றிய பொதுவான குறிப்புகள்
நெய், எண்ணெய், கொழுப்பு, மஜ்ஜை (எலும்பினுள் இருக்கும் ஜவ்வு போன்ற பொருள்) ஆகியன “ஸ்நேஹம்” என்று கூறப்படுகின்றன. இவற்றுள் நெய்யும், எண்ணெயும் பெரும்பாலும் மருந்துச் சரக்குகளுடன் பக்குவப்படுத்தப்பட்டு வியாதிகளைக் கண்டிக்க உபயோகிக்கப்படுகின்றன. இவ்விதம் அவைகளை பக்குவப்படுத்த
(1) கல்கம்
(2) திரவம்
(3) ஸ்நேஹம் எனப்படும் இம்மூன்றும் இன்றியமையாததாகின்றன.
கல்கம்:
செய்முறையில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துச் சரக்குகள் நன்கு அரைத்து விழுதாக்கப்பட்ட நிலையில் எண்ணெய்யுடன் கலக்கப்படுகின்றன. இந்த விழுது (அ) பசை போன்ற பொருளே “கல்கம்” எனப்படும்.
திரவம்:
மேலே கூறியுள்ளபடி சேர்க்கப்பட்ட கல்கம் நன்கு பாகமடையவும், ஸ்நேஹங்களின் நோய் நீக்கும் குணம் உச்ச வரம்பை அடையவும். கஷாயம், சாறு, மாம்ஸரஸம், தண்ணீர், பால், தயிர், மோர் முதலியன அவற்றுடன் கலக்கப்படுகின்றன. இந்த நீர்மங்களுக்கு “திரவம்” என்று பெயர்.
ஸ்நேகம்:
முதலில் குறிப்பிட்ட நெய், எண்ணெய், கொழுப்பு, மஜ்ஜை ஆகியன “ஸ்நேகம்” என்று அழைக்கப்படுகின்றன.
இவ்விதம் இம்மூன்றையும் ஒன்று சேர்த்து ஜலாம்சம் குறிப்பிட்ட அளவாக வற்றும்வரை காய்ச்சி வடிகட்டி இந்த “ஸ்நேஹங்கள்” தயாரிக்கப்படுகின்றன.
பொது விதி
பெரும்பாலும் கல்கம் ஒரு பங்கு, ஸ்நேஹம் நான்கு பங்கு, திரவம் பதினாறு பங்கு என்ற விகிதத்தில் சேர்த்துத்தான் இவைகள் காய்ச்சப்படுகின்றன. உபயோகிக்கும் திரவம் கஷாயமாயின், அது சரக்குகளின் அளவுக்கு நான்கு மடங்கு தண்ணீரில் கொதிக்க வைக்கப்பட்டு நாலில் ஒன்றாகக் குறுக்கித் தயாரிக்கப்படுகிறது.
செய்முறைகளில் கஷாயத்திற்குச் சேர்க்க வேண்டிய தண்ணீர், அதைக் குறுக்க வேண்டிய அளவு, கல்கமாகச் சேர்க்கப்படும் சரக்குகளின் அளவு முதலியன ஆங்காங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
சில இடங்களில் அளவுகள் குறிப்பிடப்படாமல் சேரும் சரக்குகள் மாத்திரம் கூறப்படுவதும் உண்டு. அந்த இடங்களில் மட்டும் கல்கம், திரவம் இவைகளைப் பற்றிய சில பொது விதிகள் அனுசரிக்கப்பட வேண்டியதாகின்றன.
அவைகள் பின் வருமாறு:-
திரவம்
கஷாயம்:
இவைகள் க்வாதசூர்ணம் பகுதியில் குறிப்பிட்டுள்ள முறைப்படியே தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இங்கு பங்கு கொள்ளும் சரக்குகளின் தரத்திற்கேற்ப சிற்சில மாறுதல்கள் கூறப்படுகின்றன.
“மிருது திரவ்யம்” -
சீந்தில்பொடி, நெருஞ்சில், கண்டங்கத்திரி, ஓரிலை, மூவிலை போன்ற சில சரக்குகளில் இருந்து அவைகளின் நோய் நீக்கும் குணங்களைப் பிரித்துப் பெற சிறிதளவு தண்ணீரே போதுமானதாகின்றது. இவைகள் “மிருது திரவ்யம்” என்ற பெயரால் பிரிக்கப்படுகின்றன.
“கடின திரவ்யம்”-ஆனால் வில்வமூலம், முன்னை, பெருவாகை, குமிழ், பாதிரி போன்ற சரக்குகளைக் கஷாயமாக்கும்போது அதிக அளவில் தண்ணீரிலிட்டுக் குறுக்கியே அவைகளின் நோய் நீக்கும் குணங்களைக் கிரகிக்க வேண்டியிருக்கிறது. இவைகள் “கடின திரவ்யம்” எனப்படுகின்றன.
“மத்யம திரவ்யம்” -எனவே சில இடங்களில் மிருது திரவ்யத்தைக் கொண்டும், சில இடங்களில் கடின திரவ்யத்தைக் கொண்டும், சில இடங்களில் “மத்யம திரவ்யம்” என்ற இவ்விரண்டின் கலப்பைக்கொண்டும், மற்றும் சில இடங்களில் கதிரம், வேங்கை, தேவதாரு, சிம்சிபா, தேக்கு போன்ற மிகக் கடினமான திரவ்யங்களைக் கொண்டும் கஷாயங்கள் தயாரிக்க வேண்டியிருக்கும். அவ்விடங்களில் கீழ்க்கண்டவாறு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குறுக்கி ஸ்நேஹங்களின் பங்குக்கு நான்கு மடங்கு கஷாயம் சேகரிக்க வேண்டும்.
1. மிருது திரவ்யம் ஒரு பங்கு, தண்ணீர் நான்கு பங்கு சேர்த்துக் கொதிக்கவைத்து குறுக்கி ஒரு பங்காக வடிக்கட்ட வேண்டும்.
2. கடின திரவ்யம் ஒரு பங்கு, தண்ணீர் எட்டு பங்கு சேர்த்துக் கொதிக்கவைத்து குறுக்கி இரண்டு பங்காக வடிக்கட்ட வேண்டும்.
3. மத்யம திரவ்யம் ஒரு பங்கு, தண்ணீர் எட்டு பங்கு சேர்த்துக் கொதிக்கவைத்து குறுக்கி இரண்டு பங்காக வடிக்கட்ட வேண்டும்.
4. மிகக் கடினமான சரக்கு ஒரு பங்கு, தண்ணீர் பதினாறு பங்கு சேர்த்துக் கொதிக்கவைத்து குறுக்கி நான்கு பங்காக வடிக்கட்ட வேண்டும்.
உபயோகிக்கும் சரக்குகளின் அளவைக் கொண்டும் தண்ணீரின் விகிதத்தைத் தீர்மானிப்பதும் உண்டு.
1. சரக்குகள் 12.500 கிராம் முதல் 50 கிராம் வரை இருப்பின், தண்ணீர் பதினாறு பங்கு.
2. சரக்குகள் 50 முதல் 100 கிராம் வரை இருப்பின் தண்ணீர் எட்டு பங்கு.
3. சரக்குகள் 100 கிராம் முதல் 204.800 கிலோ கிராம் வரை இருப்பின், தண்ணீர் நான்கு பங்கு.
இவ்விதம் குறிப்பிட்டுள்ளபடி சரக்குகளை சேர்த்துக் காய்ச்சி இவைகளை நான்கில் ஒன்றாகக் குறுக்கலாம்.
கஷாயமில்லாமல் பால், தயிர், மாம்ஸரஸம், சாறு, மோர் இவைகளைத் திரவத்வர்யமாக்க் குறிப்பிட்டிருந்தால் ஒன்றாயினும், பலவாயினும் அவைகளை ஸ்நேஹத்திற்கு நான்கு பங்கு என்ற விகிதத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். மேற்கூறிய திரவங்கள் ஒரு மருந்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டதான எண்ணிக்கையில் இருப்பின் அவைகளை ஒவ்வொன்றும் ஸ்நேஹத்தின் அளவுக்குச் சமமாக இருத்தல் வேண்டும். இதைத் தவிர கல்கம் நன்கு பாகம் அடைவதற்காக தண்ணீரையும் நான்கு பங்கு சேர்த்தாக வேண்டும்.
கல்கம்
தண்ணீர், கஷாயம், சாறு அல்லது மாம்ஸரஸம் இவைகளைக் கொண்டு ஸ்நேஹம் தயாரித்தால் அங்கு கல்கத்தின் விகிதம் முறையே ஸ்நேஹத்தின் விகிதத்தில் நாலில் ஒன்று, ஆறில் ஒன்று, எட்டில் ஒன்று என்ற விகிதத்தில் அமைதல் வேண்டும்.
பால், தயிர், மோர் இவைகளை திரவமாக உபயோகிக்குமிடத்து கல்கம், ஸ்நேஹத்தின் விகிதத்தில் எட்டில் ஒன்றாக இருத்தல் வேண்டும். பூக்களைக் கல்கமாக உபயோகிக்கும் போதும் அவ்விதமே அவைகள் எட்டில் ஒன்றாக இருக்கும்படிச் சேர்க்கவும்.
கஷாயச்சரக்குகள் மாத்திரம் குறிப்பிடப்பட்டுக் கல்கம் குறிப்பிடப்படாமலிருந்தால் அந்தக் கஷாயச் சரக்குகளையே முறைப்படி கல்கமாக உபயோகிக்கவும்.
மேற்கூறிய முறைப்படி ஸ்நேஹம், கல்கம், திரவம் இவைகளை ஒன்று சேர்த்துக் காய்ச்சி ஜலாம்சம் வற்றிய நிலையில் இறக்கி, வடிக்கட்டி, “கிருதம்” “தைலம்” முதலியன தயாரிக்கப்படுகின்றன.
தைலம், கிருதம் ஆகியன நன்கு பாகமடைந்த நிலைக்கு அறிகுறியாக அக்கலவைகளில் சில மாறுதல்கள் காணப்படுன்றன. சிறிது கல்கத்தை எடுத்த விரல்களால் உருட்ட அது ’திரி’ போன்று ஆவதுடன் விரல்களைப் பற்றாது நிற்கும். மேலும் அந்தக் கல்கத்தைச் சிறிதளவு நெருப்பில் இட்டால் சடசடப்பு போன்ற சப்தங்கள் உண்டாகாது.
முடிந்த நிலையில் நெய் நுரை அடங்கி மணம், நிறம், சுவை உள்ளதாகிறது. எண்ணெய் நுரைத்து, மணம், நிறம், சுவை இவைகளைப் பெறுகிறது.
பொதுவான அறிகுறிகள் இவ்விதமாக இருப்பினும், சில குறிப்பிட்ட மருத்துவ உபயோகங்களைக் கருத்தில் கொண்டு கல்கத்தின் பாகத்திற்கேற்ப மிருது, மத்யமம், கரம் என மூன்று விதமான பாகங்களில் ஸ்நேஹங்கள் தயாரிக்கப்படுகின்றன.
பொதுவாக
மிருது பாகத்தில் தயாரித்த ஸ்நேஹம், “நஸ்யம்” என்ற முறைக்கும்,
மத்யம பாகத்தில் தயாரித்த ஸ்நேஹம்; “நஸ்யம்”; “பஸ்தி” ,
“உட்கொள்ளுதல்”, “வெளியே உபயோகித்தல்” போன்ற எல்லாவிதமான உபயோகங்களிலும் பயன் படுவதற்கும்,
கர பாகத்தில் தயாரித்த ஸ்நேஹம் “வெளி உபயோகத்திற்கெனவும்” தயாரிக்கப்படுகின்றன. மிருது பாகத்திற்குக் குறைந்தும், கர பாகத்திற்கு அதிகமாயும் ஸ்நேஹங்கள் காய்ச்சப்பட்டால் இவைகள் பயனற்றதாகின்றன.
மிருது பாகம்:
கல்கத்தில் சிறிது ஜலாம்சம் இருக்கும் போதே ஸ்நேஹங்களை இறக்கி வடிக்கட்டுவது “மிருது பாகம்” எனப்படும். இந்தக் கல்கத்தை சிறிது தீயிலிட தண்ணீர் இருப்பதைக் குறிக்கும் அடையாளமான “சட சட” என்ற சப்தம் உண்டாகும். மேலும் விரலால் தொடும்போதே ஜலம் இருப்பது நன்கு புலப்படும். இதைச் “சளிபரகம்”, “க்ரிதம (சேறு) பாகம்” எனவும் கூறுவதுண்டு.
மத்யம பாகம்:
மிருது பாகத்தைக் கடந்த நிலையில் கல்கத்திலுள்ள ஜலாம்சம் முற்றிலும் வற்றிவிடுகிறது. ஆயினும் அதில் ஒரு நைப்புத் தன்மை காணப்படும். மேலும் கல்கத்தை விரல்களிலெடுத்து உருட்ட அது திரி போன்று ஆகும். அதே கல்கத்தைச் சிறிது நெருப்பிலிடச் “சட சட” என்ற சப்தம் உண்டாகாது. இது “மத்யம பாகம்” எனப்படும்.
இதையே “மெழுகு பாகம்” எனவும் கூறுவதுண்டு.
கரபாகம்:
மத்யமபாக நிலையையும் கடந்த நிலையில் கல்கம்ம் முன்கூறிய நைப்புத்தன்மையுற்று மணல் போன்று சிறிது கடினமான நிலையை அடைகிறது. இதைக் “கரபாகம்” என்பர். இதை “மணல் பாகம்” என்றும் சொல்வதுண்டு.
பொதுவாக ஸ்நேஹங்களை ஒரே நாளில் முடித்து இறக்குவதைக் காட்டிலும், சிறிது தாமதித்துச் செய்வது விசேஷமான பலனைத் தருகிறது. அவைகளை தயாரிக்கும் செய்முறை முடிவடையும் வரையில் தினமும் அவற்றைச் சிறிது சூடாக்குவது நல்லது.