செவ்வாய், டிசம்பர் 07, 2010

அர்க்கங்கள் - ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பு முறை

நண்பர்களே ..உங்களின் நலம் கருதி ..மக்களை ஆயுர்வேதம் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்திலே ..ஏக இறைவன் பெயரால் ஆரம்பம் செய்கிறேன் ..

ஆயுர்வேத மருந்துகளில் பல வகைகள் உண்டு ..
எல்லாவற்றையும் தெரிந்து கொள்வது என்பது பெரிய விஷயம் ..
தொடரின் வரவேற்ப்பை பொருத்து தொடரின் நீள அகலங்களை சுருக்கவோ ..விரிக்கவோ செய்யமுடியும் ..

மறக்காமல் பின்னூட்டம் எழுதுங்கள் ..உங்களிடம் எதிர் பார்ப்பது இது ஒன்றை தான் ...எனக்காக எனது கனவு மருத்துவமனைக்காக ஏக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதையும் நான் விரும்புவேன் ..

முதலில் அர்க்கங்கள் என்னும் ஆயுர்வேத மருந்து தயாரிப்பு ..


அர்க்கயந்திரம்என்னும் ஒருவகை வாலையின் உதவியால் மருந்துச்சரக்குகளின் சத்துப்பொருட்கள் கலந்த நீராவி குளிர்ச்சியாகப்பட்டு அர்க்கங்கள் தயாரிக்கப்படுகின்றன. திரவ பதார்த்தங்களுடன் மருந்துச்சரக்குகள் கொதிக்கும் பொழுது உண்டாகும் சத்துப் பொருட்கள் கலந்த நீராவி பிணிகளைத் தீர்க்கவல்லது. அந்த நீராவியை முறைப்படி குளிரச் செய்து தீராக்குவதால் அவைகளை உட்கொள்வதும் சுலபமாகிறது. 



மேலும் அப்பட்டமான சரக்கிலுள்ள மனதிற்கு ஒவ்வாத மணம், ருசி முதலியவைகள் அந்தச் சரக்குகளைக் கொண்டு உண்டாக்கிய அர்க்கத்தில் பெரும்பாலும் இருப்பதில்லை. ஓமம், சோம்பு, ஜீரகம், சந்தனம், நன்னாரி போன்ற வாசனைச் சரக்குகளில் இருந்தும், ரோஜா போன்ற புஷ்பங்களில் இருந்தும் கொதிக்கும்போது நஷ்டமாகும் முக்கியமான மருத்துவ குணம் நிறைந்த எண்ணெய்ச் சத்துக்களை அர்க்க முறையால் எளிதில் சேகரிக்கலாம். இம்முறையால் ஆஸவம், அரிஷ்டம் இவைகளைக் கொதிக்கவைத்தும் மத்யாம்சத்தைத் தனித்துப் பெறலாம்.



            இம்முறையால் தண்ணீரை தீநீராக்கி உட்கொள்ளவும், கண் மருந்துகள் செய்யவும் உபயோகிப்பதுண்டு. மேலும் மருந்துச் சரக்குகளின் பிணி தீர்க்கும் மருத்துவ குணங்களை திரவ ரூபத்தில் வடித்து வெகு நாட்கள் வரை சேமித்துப் பாதுகாத்து வைக்க. இந்தமுறை மிகவும் உபயோகமானதும் கூட.




செய்முறை:



            செய்முறையில் குறிப்பிட்டுள்ள சரக்குகளை சுத்தம் செய்து ஒன்றிரண்டாகத் தூளாக்கி வேண்டுமளவு தண்ணீர் விட்டு ஓர் இரவு முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள் காலை அந்தக் கலவையை வாலையிலிட்டுக் கொதிக்க வைத்து மருந்துச் சத்துக்கள் கலந்த நீராவியைக் குளிரச் செய்து அர்க்கத்தைச் சேகரிக்கவும். ஆரம்பத்தில் இறங்கும் அர்க்கம் பின்னர் இறங்கும் அர்க்கத்தைவிட தரத்திலும், குணத்திலும் மாறுபட்டது. ஆகையால், எல்லாவற்றையும் ஒரே பாத்திரத்தில் இட்டு நன்கு கலந்து குப்பியிலடைக்கவும்.



            நீராவியைக் குளிரச் செய்யும் கருவியை அர்க்கயந்திரம்என்று கூறுவர். இது மூன்று பாகங்களைக் கொண்டது அவையாவன:-


1.            கலவையைத் தாங்கி நிற்கும் அடிபாதம்.


2.            மருந்துச்சத்து கலந்த நீராவியைக் குளிர வைக்க அவற்றைக் கொண்டு செல்லும் குழாயுடன் கூடிய பொருத்தமான அடிபாகத்தின் மூடி,


3.            மருந்துச்சத்து கலந்த நீராவியைக் குளிரச் செய்யும் குளிர்ந்த தண்ணீர் நிறைந்த பகுதி.


1.            அடிபாகத்தில் விசேஷமான சிக்கல்கள் ஏதும் கிடையாது. மூடியாக அமையும் பகுதி அத்துடன் நன்கு பொருந்த வேண்டும். கலவையை ஊற்றியபின் இவையிரண்டும் சேரும் இடத்தை மாவு போன்றைகளைக் கொண்டோ அல்லது சிலை மண்கொண்டோ பூசிப்பிணைந்து நீராவியை வெளியேற விடாது செய்தல் வேண்டும். அடிபாகத்திலேயே விளிம்பைச் சுற்றி சிறிய பாத்திபோல் அமைந்து மூடியை அதனுள் பொருந்திப் பாத்தியைச் சுற்றிலும் தண்ணீர் நிரப்பி வருவதாலும் நீராவியை வெளியேற விடாது தடுக்கலாம்.



2.            மூடியின் நடுமையத்தில் இருந்து ஆரம்பிக்கும் இடத்திலிருந்து சிறிது அகன்றும் மேலே செல்லச் செல்லக் குறுகும் அமைப்புள்ள குழாயைக் குறுக்காகவோ கவிழ்ந்த போன்றோ அமைக்க வேண்டும். அது முடியும் இடம் குளிரச் செய்யும் பாகத்தில் நீராவியைக் கொண்டு செல்ல அமைத்த குழாயுடன் நன்கு பொருந்தும்படி அமைத்து மறை ஆணியால் பிணைக்கப்பட வேண்டும்.



3.            குளிரச் செய்யும் பாகம், அடிபாகத்தில் உயர அளவில் வட்டமானதோர் நீண்ட பாத்திரத்தால் ஆனது. அதனுள் நீராவியைக் குளிரச் செய்யக் கொண்டு செல்லும் குழாய் சுருள் சுருளாக அமைந்து அடிப்புறமாகப் பக்கவாட்டில் வெளியேறுகிறது. இதன்வழியேதான் குளிர்ந்த நீராவி அர்க்கமாகச் சேகரிக்கப்படுகிறது.


            இந்தச்சுருண்ட குழாயை எப்பொழுதும் குளிர்ந்த தண்ணீரில் மூழ்கி இருக்கும்படிச் செய்ய அந்தப் பாத்திரத்தின் அடிப்புறத்தில் பக்கவாட்டில் துளையிட்டுக் குளிர்ந்த தண்ணீரை உட்செலுத்த ஓர் குழாயும், மேல் புறத்தில் துளையிட்டு நீராவியின் உஷ்ணத்தால் சூடான தண்ணீரை வெளியேற்ற ஓர் குழாயும் அமைக்கப்பட வேண்டும். நீர் மட்டம் உயரமாக இருக்கும் இடங்களில் அடிபாகத்தில் குழாயுடன் தண்ணீர் வழங்கும் குழாய்களைப் பிணைத்து அமைக்கத் தண்ணீரின் அழுத்தம் காரணமாகக்குளிர்ந்த நீர் உட்சென்று சுடான தண்ணீரை வெளியேற்றி நீராவியை நல்ல முறையில் குளிரச் செய்கிறது.



இந்தப் பாத்திரத்தின் அடிபாகமும், கலவையைத் தாங்கும் பாத்திரத்தின் உடல் நடுமையமும் ஒரே மட்டத்தில் இருக்கும்படியாக அமைந்து முக்காலிகளின் மேல் நிலைகொண்டிருக்கும்.


நீர் மட்டம் உயரமில்லாத இடங்களில் மூடியிலேயே நீராவியைக் குளிரச் செய்ய மேல் புறத்தில் பாத்தியை அமைத்தும் தயாரிக்கலாம். பாத்தியினின்றும் சூடான தண்ணீரை வெளியேற்ற ஓர் குழாயும், குளிர்ந்த நீராவியை சேகரிக்க ஓர் குழாயும் அமைத்தல் வேண்டும். இவை முறையே மூடியின் வெளிப்புறமும், உட்புறமும் அமையவேண்டும். மூடியின் உட்புற மேல்பாகம் கூண்டு போல் அமைந்து குளிர்ந்த நீராவித்திவிலைகளைக் கலவை தாங்கும் பாத்திரத்தில் ஓடிச் சேரவிடாது தடுத்த நிறுத்தச் சுற்றிலும் சிறியதோர் வாய்க்காலைப் பெற்றிருக்க வேண்டும். இந்த வாய்க்காலில் இருந்து குழாய் அமைத்து குளிர்ந்த நீராவித்திவிலைகளை (அர்க்கங்களை) வெளியேற்றிச் சேகரிக்க வேண்டும்.



கூண்டின் வெளிப்புறத்தில் ஓர் குழாயுடன் பாத்தி அமைத்துக் குளிர்ந்த தண்ணீர் ஊற்றி வரவும். தண்ணீர் சூடானவுடன் அதைக் குழாய் வழியே வெளியேற்றிக் குழாயை மூடிக் குளிர்ந்த தண்ணீர் நிரப்பி வரவும்.


அர்க்கம் வெளியேறும் பக்கத்தைச் சிறிது சாய்த்து அமைத்துக் கலவை தாங்கும் பாத்திரத்தின் அடியில் எரிக்க வேண்டும். அர்க்கம் வெளியேறும் குழாயுடன் ஓர் தென்னை ஓலையைப் பொருத்தி வாய்க்கால் போல் அமைத்தும் அர்க்கத்தைச் சேகரிக்கலாம்.

இந்த உபகரணத்தை உலோகங்களினாலோ அல்லது மண்கொண்டோ தயாரிக்கலாம்.

புஷ்பங்கள், பழவகைகள், மாம்ஸம் முதலியவற்றை உபயோகித்து அர்க்கம் தயாரிக்க மற்றோர் முறையும் உபயோகப்படுத்தப்படுகிறது. இம்முறையில் உபயோகிக்கும் சரக்குகள், கருகிவிடுமோ என்ற சந்தேகம் கூட எழ வாய்ப்பில்லை.



உபயோகிக்க வேண்டிய சரக்குகளை நன்கு இடித்து கலவையைத் தாங்கும் பாத்திரத்திலிட்டு அதைப் பாதிவரை தண்ணீரில் மூழ்கும்படியாகத் தண்ணீர் நிரப்பிய இரும்புச் சட்டி போன்றவற்றில் வைத்துப் பின்னரதனை முக்காலி அல்லது செங்கல் இவற்றின் மேல் அமைத்து அதன் கீழே எரிக்க வேண்டும். நீராவியைப் பயன்படுத்தி அதற்கென அமைந்த கலங்களை உபயோகித்தும் கொதிக்க வைக்கலாம். கொதிக்கும் தண்ணீரில் பக்குவமாகி அர்க்கம் வெளியேறுவதால் தண்ணீரின் கலப்பற்ற அர்க்கத்தைச் சேகரிக்க முடிகிறது.


இரும்புப் பாத்திரத்தில் தண்ணீர் வற்ற, வற்ற மேலும், மேலும் ஊற்றி எரித்து அர்க்கம் வெளி வருவது நிற்கும் வரை சேகரிக்கவும்.


100 -150 கிராம் மருந்துச் சரக்குகளை உபயோகித்து 800 மில்லி லிட்டர் வரை அர்க்கம் தயாரிக்கலாம். முதல் நாளே 1,600 மில்லி லிட்டர் தண்ணீரில் இவற்றை ஊற வைக்க 800 மில்லி லிட்டர் அளவுக்கு அர்க்கம் கிடைக்கும்.


மருந்துச் சரக்குகளில் ஒன்றாக, பாலானது இடம்பெறும் முறைகளில் அதனை எரிக்கும் முன்னரே சேர்க்க வேண்டும்.


பருப்பு வகைகளைச் சேர்க்க வேண்டி வருமிடங்களில் அவற்றைச் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துச் சேர்க்கவும்.


கஸ்தூரி, அம்பர், குங்குமப்பூ, கற்பூரம் போன்ற வாசனைச் சரக்குகளை மஸ்லின் போன்ற மெல்லிய துணியில் வைத்து முடிச்சு போன்று செய்து அர்க்கயந்திரத்தின் வடிமுனையில் கட்டிச் சூடாக வெளியேறும் அர்க்கத்தின் திவிலைகளால் அவை நனையுமாறு தொங்கவிடவும். இதனால் அர்க்கம் அவற்றுடன் ஊறி அவற்றின் மருத்துவ குணங்களுடன் சொட்டுகளாகப் பாத்திரத்தில் சேரும்.

விரைவில் அர்க்க முறையில் தயாரிக்கப்படும் மருந்துகள் ..


Post Comment

7 comments:

Chitra சொன்னது…

நிறைய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

மச்சவல்லவன் சொன்னது…

நுனுக்கமான மருந்து தயாரிக்கும் முரைகளை பதிவிட்டமைக்கு மிக்க நன்றிசார்.
வாழ்த்துக்கள்...

செந்தில் சொன்னது…

நான் நிறைய நாள் எதிர் பார்த்த பல விஷயங்கள் கிடைத்து விட்டது ..பாராட்டுக்கள் ..

curesure Mohamad சொன்னது…

@Chitraசித்ரா மேடம் மிக்க நன்றி

curesure Mohamad சொன்னது…

@மச்சவல்லவன்மச்ச வல்லபன் சார் ..இந்த முறையில் வாசனை திரவியங்கள் -சென்ட் கூட தயாரிக்கலாம்

Vijai சொன்னது…

Ungalin theevira muyarchi vtreuyadaiyabum .....pala eliya.... nalla makkalum payan peravum enathu vaazhthukkal

Unknown சொன்னது…

A true chemical process.
MY best wishes for ur contribution to our Ayurveda.
GOD blessing always with u.
Barathan.

கருத்துரையிடுக