வெள்ளி, பிப்ரவரி 12, 2010

அகத்தியரின் வைத்திய கும்மி பாட்டு(மிக எளிதான வைத்திய முறைகளில் )


ஆணித்தரமான ,எளிதான,அனுபவமிக்க ,பலன் தரக்கூடிய ,புரிந்துகொள்ளகூடிய -நச்சுன்னு ஒரு மருத்துவ பாட்டு




சுரம்:
          சுக்கு மிளகு சிறுதேக்கு புடல்
              தூதுவேளை சித்ர மூலமுடன்
          ஒக்க நறுக்கிக் கியாழமிடச் சுரம்
              ஓடும் என்றே யடியுங் கடி!          -5
          பேராமுட்டி சிறுதேக்கு மூலம்
              பேருள திப்பிலி மிளகுடனே
          வீரமாகிக் கியாழமிடச் சுரம்
              விட்டுப்போ மென்றடி யுங்கடி!        -6
          சீந்தில் விலாமிச்சு பற்பாடகந் தோடை
              சிறுதேக்கு சந்தன மிருவேலி
          காந்தி கிண்டிக் கியாழமிடச் சுரம்
              கதறிப்போ மென்றடி யுங்கடி!         -7
          ஓமம் பஞ்ச லவண முள்ளி யதற்
              குரிய நாயுருவி கடுக்காய்
          சாம நிம்பளச் சாற்றரைத் துப்புட மிடச்
              சாகும் குன்மமென் றடியுங்கடி!        -8
மாந்தம்:
          ஓமமஞ்சு லவண முள்ளி யுடன்
              ஒக்க நறுக்கிய நாயுருவி
          காயமான பழத்தரைத் துக்குடித் திட
              கரக்கு மாந்த மென்றடியுங்கடி!        -9
வாதம்:
          மஞ்சள் வசம்பு வெள்ளுள்ளி கடுகு
              வளருந் தான்றி சதுரக் கள்ளி
          செஞ்சாற்றில் வாதம் போமென்று நிதம்
              செப்பிக் கும்மி யடியுங்கடி!          -10
பித்தம்:
          சீரகம் சுக்கு பேய்ப் பீர்க்கு
              சீந்தில் பற்பாடகம் கொத்துமல்லி
          சேரநீர் விட்டுக் காய்ச்சி யுண்ணப் பித்தஞ்
              சேரா தென்றே யடியுங்கடி!           -11
மேகம்:
          பரங்கிப் பட்டை யருந்திடவே மேகம்
              பாண்டு சூலை கிரந்தி குட்டம்
          திறங்கிப் போன மனிதர் யா வருந்
              திறமா மென்றே யடியுங்கடி!         -12
மூலம்:
          காட்டுக் கரணை கறிக்கரணை நல்ல
              காராக் கரணை புளிக்கரணை
          ஆட்டு மோரில் கலந்துண்ண மூலம்
              அற்றுப் போமென்றே யடியுங்கடி!     -13
பித்தம்:
          ஆற்று மணலைத் தான்வறுத்து அதின்
              மேலே முசுக்கையின் சாறுவிட்டுப்
          பார்த்துப் பதமாய்க் காய்ச்சி யுண்ணப்
              பறந்து போமென் றடியுங்கடி!         -14
வீக்கம்:
          சங்கம் வேருடன் பச்சரிசி மோரில்
              தானிடித்துக் கூழாய்க் குடிக்கப்
          பொங்கி வருமெந்த வீக்கங்க ளானாலும்
              போகுமென்றே கும்மி யடியுங்கடி!      -15
நீர்க்கட்டு:
          பூனை நெருஞ்சில் சிறுபீளை வெள்ளரி
              போத நீர்காய்ச்சி யுழக்காக்கி
          வேளை யறிந்து வெண்கார மிட்டுண்ண நீர்
              விட்டு வுடுமென்றே யடியுங்கடி        -16
நீரிழிவு:
          ஆவாரந் தூளும் கல்மதமும் நல்ல
              அழகு கொன்றைப் பட்டையுடன் மிளகு
          வாகாய் காய்ச்சிக் குடித்திடவே யிழிவு
              வாங்கு மென்றே யடியுங்கடி!         -17
மேக சுரம்:
          பனைவெல் லம்சுக்கு நிலக்குமி ழம்வேர்
              பதமாய் காய்ச்சிக் குடித்திடவே
          அனந்த நாள்களாய் வந்த மேக சுரம்
              அகன்று போமென் றடியுங்கடி!       -18
வீரிய விருத்தி:
          கற்கண்டு பேரீச்சம் பழமுமொன்றாய்க்
              கலந்து தேனிலரைத் துண்ணவே
          மற்கட்டு கட்டவே வீரிய விருத்தி
              வளரு மென்றே யடியுங்கடி!          -19
மேகம்:
          வன்னி யிலையைத் தான் பரித்து
              வலிமை யெருமை தயிரிலுண்ண
          பன்னி வருமந்த மேகங்க ளெல்லாம்
              பறந்து போமென் றடியுங்கடி!          -20
மதுமேகம்:
          தேங்காய்ப் பாலும் சிறுகுறிஞ் சாவேர்
              தினமு மூன்று நாள் குடிக்க
          வாங்கா மேகங் களிருபத் தொன்றும்
              வாங்கிப் போமென் றடியுங்கடி!        -21
மேகப்படை:
          பரங்கிப் பட்டையைத் தூளாக்கி யாவின்
              பாலுபனி ரண்டுகாசிடை போட்டு
          இறுகக் காய்ச்சிக் குடித்திடவே மேகம்
              ஏகுமென்றே கும்மி யடியுங்கடி!       -22
சன்னி:
          முருங்கை மாவிலங் கையுட நொச்சி
              முதிரும்பசு பத்திரியீச் சுரவேர்
          சிரங்காய் காய்ச்சிக் குடித்திடவே சன்னி
              சிதறிப் போமென் றடியுங்கடி!         -23
சன்னி சுரம்:
          ஆவின் மோரில் புளியரணை யதை
              அவித்துப் பறித்துப் பொடியாக்கி
          தாவித் தேனிலருந் திடவே சுரம்
               தரியா தென்றே யடியுங்கடி!                  -24
கண்வலி:
          தென்னங் காயைத் திருகி விட்டு
              சிறுபயற் றைப்பருப் பாக்கி
          தின்னக் கண்வலி தீருமென்று சொல்லி
              சித்திரப் பெண்களா யடியுங்கடி!       -25
பக்கவாதம்:
          சுக்கொன்று முக்கா வேளைரண்டு மாகச்
              சுகமாய்க் காய்ச்சிக் குடித்திடவே
          பக்க வாய்வு குன்மங்க ளெல்லாம்
              பறக்கு மென்றே யடியுங்கடி!         -26
இருமல் சுவாசம்:
          பன்னு தூதுவேளை சங்குப் பியுடன்
              பண்பாய்க் காய்ச்சிக் குடித்திடவே
          பகரு மிருமல் சுவாச காசமும்
              பறக்கு மென்றே யடியுங்கடி!         -27
காசம்:
          ஆவின் வெண்ணெயில் பூனைகாலி யிலை
              அரைத்தடுப் பிற்றான் கிளறி
          பாவனை யாகவே அருந்திடவே காசம்
              பறக்கு மென்றே யடியுங்கடி!         -28
மேகம்:
          கருங்குங் கிலியங் கருஞ்சீ ரகங்
              காட்டெருமைச் சாணி யிருள் சாற்றில்
          பொருந்த வரைத்துக் குடித்திடவே மேகம்
              போகு மென்றே யடியுங்கடி!          -29
இருமல் காசம்:
          இஞ்சி வெள்ளெருக் கம்பூ மிளகு
              இயல்பாய்க் காய்ச்சிக் குடித்திடவே
          பஞ்சை யிருமல் காசங்க ளெல்லாம்
              பறக்கு மென்றே யடியுங்கடி!          -30
வீரிய விருத்தி:
          வெண்காரம் லிங்கம் அபினுஞ்சாதிக் காய்
              வேரருடனே யெட்டி விரைமுள்ளி
          அக்கிரா கால மூலந் தேனீலரைத் துண்ண
              ஆளும் வீரியமென் யடியுங்கடி!        -31
பித்தம்:
          நெற்பொரி யேலம் திப்பிலி சீரகம்
              நெய்யுடன் கூடி பருத்தி விரை
          சர்க்கரை தேனில் கலந்துண்ண பித்தம்
              தரியா தென்றே யடியுங்கடி!          -32
குன்மம்:
          பொன்மு சுட்டை ஈசுரவேர் மூலம்
              போத்துணாப் பாளை இந்துப்பு
          தின்னுங் கல்லுப்பு நார்த்தங் கா யதில்
              செர்த்தடை யென்ற டிப்ங்கடி!         -33
          அடைத்த மருந்தைப் பூமியுடன் வைத்தே
              அந்திசந்தி மண்டலந் தின்ன
          புடைத்த வலியுங் குன்மமெல்லா மப்போ
              போகுமென்றே கும்மி யடியுங்கடி!      -34
விக்கல்:
          சடாமஞ்சி லெலு மிச்சம் ரசத்தி லரைத்து
              சதுராய்த் தேனில் மத்தித் தளிக்க
          சாடும் விக்கலை யென்றே தினம்
              சார்ந்து கும்மி யடியுங்கடி!            -35
வாத பித்தம்:
          கருப்பஞ் சாற்றில் துருசு சுத்தி செய்து
              கதித்த பொடுதலையைக் கவசம்
          விருப்பாய்ச் செய்து குக்கிட மிடவே
              மேவு பற்பமென்றே கும்மி யடியுங்கடி!   -36
நோய்த் தொகை:
          பித்தம் நாற்பத்தி ரண்டாகும் பிற
              மேகம் இருபத் தொன் றாகும்
          எத்து வாதமென் பத்து நாலென்றே
              ஏத்திக் கும்மி யடியுங்கடி!           -37
          மூல மாறு விதமாகும் பின்னு
               முடுக்குங் குன்மங்க ளெட்டாகும்
          சூலை யாறு விதமா மென்றே
              சுகமாய் கும்மி யடியுங்கடி!           -38
          சன்னி பதிமூன்று தானாகும் அதில்
              சனித்த தோஷங்கள் ஏழாகும்
          கன்னி கிராணி ஆறாகு மென்றே
              கலந்து கும்மி யடியுங்கடி!            -39
          குட்டம் பதினைந்து மூன்றாகும் அதில்
              குன்மம் விபரமென்றே தெரிந்து
          திட்ட சுரமறு பத்து நாலென்றே
              தேர்ந்து கும்மி யடியுங்கடி!            -40
விக்கல்:
          தோகை மயிலிறகின் சாம்ப லுடன்
              தேனுமொரு துளிதானும் விட்டு
          வாகாய் நாக்கில் தடவிடவே விக்கல்
              வாங்கிப் போமென் றடியுங்கடி!           -41
வாந்தி:
          நெல்லி திப்பிலி சீரகம் அதில்
              நேராக நெற்பொரி தான்கூட்டி
          வல்லிய மாகக் கியாழமிட்டுண்ண
              வாந்திகள் போமென்று கும்மியடி!         -42
கழிச்சல்:
          மாதளம் பிஞ்சு தென்னம் பிஞ்சு நல்ல
              மாவிலைக் கொழுந்துடன் தானரைத்தே
          ஆதுலைப் பிள்ளைக் கருத்தக் கழிச்சல்
              அகலுமென்றே கும்மி யடியுங்கடி!        -43
சோகை:
          அரப்பொடி சிட்டம் பழச்சாற்றி லாட்டி
              அரைப்புட மிட்டுத் தானெடுத்து
          முறைப்படி சோகைக்குத் தான் கொடுத்திடப்
              போகுமென்றே கும்மி யடியுங்கடி!         -44
பாண்டு:
          கரிசலாங் கண்ணி மிளகுடனே யதைக்
              கடுக்காய் யளவாய்த் தானரைத்து
          உரிசையா யுள்ளுக்குக் கொடுத்திடப் பாண்டு
              ஓடுமென்றே கும்மி யடியுங்கடி!          -45
பல்:
          வெள்வேலம் பட்டை குமிழம்பட்டை நல்ல
              மேலான ஆலின் பட்டையுடன்
          உள்ளிக் கியாழங் கொப்பளிக்க பல்லுக்
              குறுதியென்றே கும்மி யடியுங்கடி!        -46
பிடிப்பு:
          வாதமடக்கி நொச்சி யிலையுடன்
              மருவு பாவட்டை தான் கூட்டி
          சாதகமாய் காய்ச்சிப் பிடிப்புக்குத் தான்விட
              சருகுமென்றே கும்மி யடியுங்கடி!         -47
          இப்படி யெட்டு நாளந்தி சந்தியாக
              இதமாக நீரைத் தான் வார்க்க
          சொற்படி கண்டகனா போவது வண்
              டோடுமென்றே கும்மி யடியுங்கடி!        -48
வீரியம்:
          வெங்காரம் லிங்கம் அபினி சாதிக்காய்
              வேருடன் மஞ்சிட்டி அக்கிரகாரம்
          மங்காமல் தேனிலரைத் துண்ணவே வீரியம்
              வளருமென்றே கும்மி யடியுங்கடி!        -48
இரத்த காசம்:
          ஆல்விரை அத்தி நாவ லரசு
              அதிரும் நிலப்பனை மான் கொம்பு
          மால் முருங்கைப் பூ தூதுளைப் பூவுடன்
              பார்த்தரை யென்றே கும்மியடி!           -49
          பார்த்ததை யந்தி சந்திகாலை தேனெய்யில்
              பக்குவமாய்ப் பத்து நாள் தின்ன
          கோர்த் தெடுக்கின்ற ரத்த காசங்கள்
              குதித்துப் போமென்றே கும்மியடி!         -50
கரப்பான்:
          ஏலம் சுக்கு சீரகம் மூன்றையும்
              ஏற்க நல்லெண்ணையில் பொடித்திட்டு
          பால சூரியன் முன்வைத்துப் பூச
              பறக்குங் கரப்பா னென்றடியுங்கடி!         -51
          தடவி யிப்படி நாளொரு மூன்று
              தப்பாமற் சோன்ன விதஞ் செய்தால்
          அடவி தீப்பட்டது போற் கரப்பன்
              அகன்று போமென் றடியுங்கடி!           -52
சிரங்கு:
          கருங்கம் பளியைச் சுட்டுக் கரியாக்கிக்
              காரெள் ளெண்ணெயிற் றான்குழப்பி
          ஒருபிள்ளைச் சிரங்குக்கு மேற்ற டவ
              ஓடுமென்றே கும்மி யடியுங்கடி!          -53
காசம்:
          ஆவின் மோரில் பரங்கிச் சக்கை யதை
              அவித் துலர்த்திப் பொடியாக்கி
          பாவனையாகவே தேனில் கொள்ள காசம்
              பறந்து போமென் றடியுங்கடி!            -54
          பருத்த தேங்காயைத் திருகிப் பிட்டு செய்து
              பற்படாகத்தைப் பருப்பாக்கித்
          திருத்த மாகவே தின்றாலிரு வேளை
              தீருமென்றே கும்மி யடியுங்கடி!          -55
குன்மம்:
          ஆவாரம்பூ திப்பிலி மிளகு சுக்கேலம்
              அதிமதுரஞ் சிறுதேக் குடனே
          வால் மிளகோ டெட்டுங் கியாழமிட்டாற் குன்மம்
              வாங்கு மென்றே கும்மி யடியுங்கடி!       -56
சுவாச காசம்:
          பத்திய மாகக் கருங் கோழிச் சாறு
              பாங்காய் காய்ச்சிக் குடித்திடவே
          சத்திய மாகவே மேல்சுவாச மெல்லாம்
              தரியா தென்றே கும்மி யடியுங்கடி!        -57
                  அதற்கு அப்பால்
          ஆறா தாரத் தொல்லையடி னதற்
              கப்பாலே மொன்று மில்லையடி
          சீராகவே நின்றுன்னிப் பார்த்துப் பெண்கள்
              சிறந்த கும்மி யடியுங்கடி!              -58

Post Comment

3 comments:

Unknown சொன்னது…

Read

MACHAMUNI BLOGSPOT சொன்னது…

தங்கள்வலைப்பூ மிக நன்றாக உள்ளது.நல்லதை சற்றும் பார்க்காத வாசகர்களை நோக்கி தங்களின் வருத்தமும் ஆங்காங்கே தொனிக்கிறது.என் கடன் பணி செய்து கிடப்பதே என்று செய்யுங்கள் ஒரு நாள் அதுவாகவே அதற்கான பலன் கிட்டும்
இப்படிக்கு
என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்

பெயரில்லா சொன்னது…

Its very good blogspot.pl.continue it and connected with www.tamilmanam.net

கருத்துரையிடுக