சனி, டிசம்பர் 11, 2010

ஆஸவங்கள் , அரிஷ்டங்கள் தயாரிக்கும் முறை-Asavam Arishtam


ஆஸவங்களும், அரிஷ்டங்களும்-Asava Aristam

                சீதோஷ்ண நிலைகளாலும், காலப் போக்கினாலும் தரத்திலும், குணத்திலும் சீர் குன்றும் இயல்புள்ள மருந்துச் சரக்குகளின் நோய் நீக்கும் சக்தியை பாதுகாத்து சேமித்து வைத்து எக்காலத்திலும் குணம் பயக்கச் செய்யும் முறைகளுள் ஆஸவகல்பமும்”, “அரிஷ்ட கல்பமும்முக்கியமானவை.

                கஷாயம், ஸ்வரஸம் அல்லது சுத்தமான தண்ணீர் இவைகளில் வெல்லம், சர்க்கரை, தேன் போன்ற இனிப்புப் பொருள்களையும் மற்ற மருந்துச் சரக்குகளையும் கலந்து அவற்றைச் சுற்றுப்புற சூழ்நிலையின் சீதோஷ்ணங்கள் தாக்காதவாறு கலங்களிலிட்டு மட்சீலை செய்து குறிப்பிட்ட காலம் வரை வைத்திருந்து பின்னர் அவைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த முறை ஸந்தானம்” (Fermentation) என்று கூறப்படுகிறது. இம்முறையால் அக்கலவையில் தானே உண்டாகும் மத்யம் (Alcohol) என்ற அம்சம் மருந்து செய்ய சேர்க்கப்படும் மருந்துகளிலிருந்து ஆரோக்யம் பயக்கும் மருத்துவ குணங்களை பெருமளவில் அவற்றிலிருந்து கிரகித்துச் சேமித்து வைக்கிறது. நாட்கள் ஆக ஆக இவற்றின் சக்தியும் அதிகரிக்கிறது. மேற்படி தானேயுண்டான மத்யாம்சம் (Alcohol) தயாரித்த மருந்தினை கெடாமலும் பாதுகாக்கின்றது.


                                                                               
ஆஸவம்


                நன்கு கொதித்து ஆறிய தண்ணீரை, போதுமான அளவுக்கு எடுத்துக் கொண்டு அதில் வெல்லம், சர்க்கரை, தேன் ஆகியவைகள் மருந்து செய்முறையில் குறிப்பிட்டுள்ளபடி நன்கு கலக்கப்படுகின்றன. பின்னர் அக்கலவை மண்பானை அல்லது வேறு விதமான கலங்களிலிடப்படுகிறது. செய்முறையில் குறிப்பிடப்பட்டுள்ள மேம் பொடிக்கான சரக்குகள் ஒன்றிரண்டாகப் பொடியாக்கப்பட்டு அவற்றுடன் சேர்க்கப்படுகிறது.பிறகு சுத்தமாக்கப்பட்ட காட்டாத்திப்பூவையும் அவற்றுடன் சேர்த்துக் கலங்கள் மூடியால் மூடப்படுகின்றன. காற்று புகாதவாறு சீலைமண் செய்யப்பட்டு குறிப்பிட்ட காலவரம்பு வரை அப்படியே வைக்கப்படுகின்றன.
                இக்கலங்களை சௌகரியத்தை அனுசரித்து பூமியின் அடியிலோ, சுரங்கங்களிலோ, நெற்குவியலிலோ, இருட்டறையிலோ வைப்பதும் உண்டு.
                குறிப்பிட்ட கால வரம்புக்குப் பின்னர் மேற்கூறிய கலங்கள் பிரிக்கப்பட்டு அவற்றில் தயாரான ஆஸவம் கலங்காத வண்ணம் எடுக்கப்பட்டு வடிகட்டி வைக்கப்படுகிறது. கலங்கிப் பின்தங்கிய வண்டல் தவிர்க்கப்படுகிறது. வடிகட்டிச் சிறிது நாட்கள் ஆன பின்பு மேலும் தெளிந்த ஆஸவம் குப்பியிலிடப்படுகிறது.
                கஸ்தூரி போன்ற வாசனைச் சரக்குகளும், தங்கரேக்கு போன்றவைகளும் கல்வத்திலிடப்பட்டு அதே மருந்தைச் சேர்த்து நன்கு அறைக்கப்பட்டு குப்பியிலடைக்கும் சமயத்தில் சேர்க்கப்படுகின்றன.
                தண்ணீரைப் போலவே சாறுகளை உபயோகித்தும் மேற்கூறியபடி ஆஸவங்கள் தயாரிக்கப்படுகின்றன.


அரிஷ்டம்

                பெரும்பாலும் கஷாயங்களைக் கொண்டு இது தயாரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட சரக்குகளை அப்பட்டமாகவோ, ஒன்றிரண்டாகப் பொடி செய்தோ, சேர்த்து கஷாயமாக்கி உபயோகிப்பதுதான் இம்முரைக்கும் ஆஸவ முறைக்குமுள்ள வேற்றுமை. மற்றவை மேற்கூறிய ஆஸவ கல்பம் போன்றவையே.
                குறிப்பு:    சிறிய அளவில் தயாரிக்கும் பொழுது அந்தந்த மருந்துகளுக்கெனவே பழக்கிய மண் கலங்களை அவற்றுக்காகவே உபயோகிப்பதே சாலச் சிறந்தது. பானை புதியதாயின் அதில் தண்ணீரை கொதிக்க வைத்துப் பின்னர் அடுத்துக் குறிப்பிடுவது போல கலங்களை சுத்தம் செய்து அதற்குப் பிறகு நெய்யும், திப்பிலிச் சூர்ணமும் பூசி உபயோகிக்கவும். பாச்சோத்திப் பட்டை, காட்டாத்திப்பூ ஆகியவற்றை விழுதாக அரைத்துப் பானையின் உட்பகுதியில் பூசி உலர்ந்த பின் மேலும் மூன்று பூச்சுகள் பூசி உலர்த்தி உபயோகிப்பதும் உண்டு.


ஆசவ அரிஷ்டங்களை செய்யும் பொது முறை

                கடுக்காய் கஷாயத்தில் போதுமான அளவு சிமெண்டும், மணலும், சிறிது வெல்லமும் சேர்த்துக் கரைத்துப் புதிய பானையின் வெளிப்புறத்தில் சுற்றிப் பூசி உலர்ந்த பின் ஓரிரு நாள் தண்ணீர் நிரப்பி வைக்கவும். இவ்விதம் செய்வதால் ஆஸவாரிஷ்டங்கள் கசிந்து அதிகமாக வீணாகா. சுற்றுப்புற சூழ்நிலையின் சீதோஷ்ண நிலையும் கலவையைப் பாதிக்காது. ஒவ்வொரு மருந்துக்கும் தனித்தனியே குறிப்பிட்ட சில பானைகளையே உபயோகித்தல் நன்று. திரவங்களை ஊற்றும் முன்னர் கலங்களைக் கொதிக்கும் தண்ணீர் கொண்டு நன்கு கழுவிட் பின்னர் சுண்ணாம்பு கலந்த நீரினாலும் கழுவி உலர வைக்கவும். உலர்ந்தபின் ஜடாமாம்ஸி, மிளகு, அகில், சாம்பிராணி போன்றவைகளை உபயோகித்துப் புகை உண்டாக்கிக் கலங்களில் அப்புகையையேற்றிச் சுத்தமாக்கவும்.
                மேற்கூறிய சுத்தமாக்கும் இம்முறை மட்கலங்கள், பீங்கான் ஜாடிகள், தேக்குமரப் பீப்பாய்கள் இவை அனைத்தும் பொருந்தும்.
                ஆனால் பெருமளவில் மேற்கூறிய ஆஸவங்களையும், அரிஷ்டங்களையும் பானைகளில் மட்டுமே தயார் செய்வது எளிதல்ல. பொருளாதாரம், இடவசதி, பந்தோபஸ்த்து ஆகிய கோணங்களில் நோக்குங்கால் உறுதியான வேறு கலங்களையே இதற்காக நாட வேண்டியிருக்கிறது. தேக்கு மரத்தால் ஆன பீப்பாய்கள் மேற்கூறிய பிரச்சனைகளைத் தீர்ப்பதுடன் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்கவும் செய்கின்றன. அந்தந்த மருந்துக்களுக்கெனத் தனித் தனியே உபயோகிக்கப்படும் பீப்பாய்கள் மருந்துகளின் தரத்தையும் குணத்தையும் பாதுகாக்கின்றன. மாறாக ஒரு அரிஷ்டம் தயாரிப்பதற்காகப் பயன்படுத்திய அதேபீப்பாயை மற்றொரு அரிஷ்டம் தயாரிக்கப் பயன்படுத்தினால் மருந்தின் தரமும் குணமும் பாதிக்கப்படுவதை அனுபவரீதியாக உணரலாம்.
                மேலெழுந்தவாரியாக நோக்கும் போது ஆஸவாரிஷ்டங்களைத் தயாரிப்பது எளிதாகத் தோன்றினாலும், அது சற்றுக் கடினமானதே. சரக்குகளின் தரத்திற்கேற்பவே அவைகள் அமையுமாதலால், சரக்குகளைத் தேர்ந்தெடுப்பது முதல் குப்பியிலடைத்து வினியோகிக்கும் வரை ஒவ்வொன்றிலும் மிகுந்த கவனம் செலுத்துதல் அவசியம்.
                ஆகவே புளிப்பு, உப்பு போன்ற சுவைகளற்ற சுத்தமான திராக்ஷை, வெல்லம், தேன் போன்ற இனிப்புப் பொருள்களையும், மற்றும் பங்கு கொள்ளும் சரக்குகளையும், கவனமாக தேர்ந்தெடுத்தல் வேண்டும் சிலர் நெல்லிக்காய் போன்ற புளிப்புள்ள சரக்குகளை மருந்தில் சேர்க்கும்படி செய்முறையில் கூறப்பட்டிருப்பினும் சேர்ப்பதில்லை. இவைகளைத் தயாரிக்கும் இடத்திலிருந்து புளிப்பான பொருள்களும், , கொசு, மற்றும் பூச்சிகளும், குப்பைக் கூளங்கள் ஆகியனவும் தவிர்க்கப்படல் வேண்டும். ஈரம், அதிகமான குளிர்ச்சி அல்லது உஷ்ணம் ஆகியவையும் தவிர்க்கப்படல் வேண்டும். புளிக்க வைக்கும் சூழ்நிலையே அங்கு இருக்கக்கூடாது.
                கஷாயமாகத் தயாரிக்க உபயோகிக்கப்படும் சரக்குகளில் ஓம்ம், ஜீரகம், ஏலக்காய், நன்னாரி, வசம்பு போன்றவைகளில் முக்கியமான எளிதில் ஆவியாகும் எண்ணெய் சத்து உள்ள மணமான பொருள்கள் கலந்திருக்கலாம். முறைப்படி அவற்றை 16, 8 அல்லது 4 பங்கு தண்ணீரில் கொதிக்கவைக்கும் போது அவற்றிலுள்ள அந்த சத்துக்கள் உஷ்ணம் தாங்காது வெளியேறி வீணாகின்றன என்பது நவீன விஞ்ஞானம் கண்ட தேர்வு. ஆகவே அவைகளை கூடிய மட்டும் வீணாகாது சேகரிக்க இங்கே ஓர் முறை கையாளப்படுகிறது.
                கஷாயச் சரக்குகளை ஒன்றிரண்டாக இடித்து முதல் நாள் இரவே அவைகளை இரண்டு பங்கு கொதிக்கவைத்த நீரில் ஊறவைக்க வேண்டும்.  மறுநாள்காலை அக்கலவையை நன்கு கசக்கி வடிகட்டித் தண்ணீரை எடுத்து பத்திரப் படுத்த வேண்டும். வடிகட்டிய சரக்குகளுடன் மீண்டும் இரண்டு பங்கு தண்ணீரைச் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு பங்காக வற்றியவுடன் கசக்கி வடிகட்டி முன்பு பத்திரப்படுத்திய தண்ணீருடன் கலக்கவும். கஷாயத்தில் பங்கு கொள்ளும் சரக்குகளின் தன்மைக்கேற்ப ஒரு முறை வடிகட்டிய சரக்குடன் தண்ணீரின் பங்கை ஓரிரு மடங்கு அதிகரித்தோ, குறைத்தோ கொதிக்க வைத்து வேண்டிய அளவு வற்றச் செய்தும் தயாரிக்கலாம். தெளிந்த பின்னர் வண்டலை நீக்கித் தெளிவை இறுத்துச் சர்க்கரை முதலியவைகளைக் கரைக்க வேண்டும்.
                இவ்விதம் தயாரித்து, வண்டலை நீக்கிக் கஷாயத்தைச் சேகரித்து அத்துடன் சேர்க்க வேண்டிய அளவில் சர்க்கரை அல்லது வெல்லம் இவைகளைச் சேர்த்துக் கலக்கிக் கரைத்தோ அல்லது சிறிது சூடாக்கிக் கரைத்தோ வடிகட்டிக் கலங்களில் மூன்றில் ஒரு பங்கு காலியாக இருக்கும் படி ஊற்றவும். வெல்லம் முதலியவற்றில் தூசிகளும், அழுக்கும் அதிகமிருக்குமாதலால் வடிகட்டிக் கலங்களில் ஊற்றிய பின்னரும் மறுநாள் வரை கலவையில் வெல்லம் முதலியவற்றின் அழுக்குகள் அடை போன்று மிதக்கும். அவற்றை எச்சரிக்கையாக நீக்கி விடவும். வெல்லம் முதலியவற்றில் தற்காலம் கலப்படம் அதிகமாதலால் செய்முறையில் குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் சிறிது அதிகமாகவே அவற்றைச் சேர்த்தல் நலம்.
                பின்னர் அக்கலவையில் நுண்ணியதாகவோ, ஒன்றிரண்டாகவோ பொடித்த மேம்பொடிகள், “கிண்வம்என்று அழைக்கப்படும் அதே மருந்தின் அடி வண்டல், நன்கு சுத்தம் செய்த காட்டாத்திப்பூ முதலியவற்றைச் சேர்த்துக் கலத்தை மூடித் துணியால் கட்டி வைக்கவும். ஸந்தானம் ஆகும் கலங்களில் இடைவெளியில்லாது போனால் கலவையினால் ஏற்படும் ரஸாயனச் செய்கையால் அது பொங்கி வழியவோ, கலங்கள் உடையவோ ஏதுவாகலாம். இந்த ரஸாயனச் செய்கை தவிர்க்க முடியாதது; இன்றியமையாத்தும் கூட. இந்தச் செய்கையை நல்ல முறையில் உண்டாக்கவே கிண்வம்என்ற அதே மருந்தின் அடி வண்டல் சேர்க்கப்படுகிறது. பால் தயிராக உறைய சிறிது மோர் சேர்க்கிறோமல்லவா? அது போன்றே கிண்வமும் அந்த மருந்து நன்கு முறைப்படி அமைய உதவுகிறது. அதே மருந்தின் அடி வண்டல் கிடைக்காத இடத்தில் திராக்ஷாரிஷ்டத்தின் அடி வண்டலை உலர்த்திப் பொடித்து எல்லா மருந்துகளுக்கும் கிண்வமாக உபயோகிக்கலாம்.
                பெரும்பாலும் இனிப்புக் கலந்த கலவைகளால் தயாரிக்கப்படும் இது போன்ற மருந்து முறைகள் இனிப்பாக அமைவது நன்கு ஸந்தானம் ஆவதைப் பொருத்தது. கிண்வம் சேருவதால் ஸந்தானம் நன்கு நிறைவேறுகிறது. ஸ்ந்தானக் குறைவால் ஏற்படும் புளிப்பும் தவிர்க்கப்படுகிறது. ஆகவேதான் பெருமளவில் இவற்றைத் தயாரிக்குமிடங்களில் மரத்தொட்டி போன்ற கலங்களை அவ்வப்பொழுது கழுவாது அதில் அடியில் தங்கிநிற்கும் முன்பு தயாரித்த மருந்தின் வண்டலுடனேயே புதிதாகத் தயாரித்த கலவையை ஊற்றி மருந்து தயாரிக்கின்றனர். அந்த வண்டலே மருந்து நல்ல முறையில் அமைய உதவுகிறது.
                சில சமயங்களில் சூழ்நிலை காரணமாகவோ, வேறு சில காரணங்களாலோ புளிப்பு ஏற்பட்டால் கலங்களை முன்பு கூறியபடி குறிப்பிட்ட திரவங்களை ஊற்றி ஓரிரு நாள் ஊறவைத்து சுத்தம் செய்து உபயோகிப்பதுண்டு.

                சீலைமண் பூசி ஒரு மாத காலம் வைப்பது பழக்கத்தில் இருப்பினும், ஸந்தானம் ஆகும் காலங்களில் கலவையினின்றும் உண்டாகும் ஒருவித வாயு(கரியமிலவாயு) வெளியேற வகை செய்யுமாறு மூடியை அமைத்தல் வேண்டும். அது வெளியேறாவிடில் மூடிகளில் தடைப்பட்டுத் திரவமாகி கலவையிலேயே விழுந்து தயாராகும் மருந்தைப் புளிப்பாக்கி விடலாம். ஆகவே கலங்களைத் துணி கொண்டோ அல்லது வேறு விதமாகவோ காற்று வெளியேறத்தக்க வண்ணம் மூடி அவ்வப்பொழுது திறந்து, ஸந்தானம் சரிவர நடைபெறுகிறதா எனவும், கலவையில் இனிப்பு போதுமா எனவும் பார்த்து வரலாம். இனிப்பு போதாவிடில் செய்முறையில் கூறியுள்ள இனிப்பு பொருள்களைச் சிறிது அதிகம் சேர்க்கலாம். இனிப்பை மிகவும் அதிகமாகச் சேர்த்தலும், மிகவும் குறைத்தலும் கூடாது. மேலும் கலவைகள் மிகவும் தடித்து அமைந்தால் ஸந்தானம் சரிவர ஏற்படாது. ஆகவே இனிப்புப் பொருள்களை மிதமாகச் சேர்த்தல் வேண்டும்.
                அவ்விதமான கலவையில் தானாகவே உண்டாகும் உஷ்ணம் கிண்வம்என்ற பொருளை நன்கு வளர்க்கிறது. ஸந்தானமும் சரிவர நடைபெறுகிறது. ஆகவே கலவையின் மேற்படி உஷ்ணம் காக்கப்பட வேண்டும். சூழ்நிலை அதிகமாக்க் குளிர்ந்திருப்பின் கலவையின் உஷ்ணமும் குறையும். கிண்வம் நன்கு வளராது. ஸந்தானமும் தாமதித்து ஏற்படும். ஆகவே அதிகமான குளிர் காரணமாக சுற்றுப்புற சூழ்நிலை குளிர்ந்திருப்பின் கலவையைக் கலங்களில் ஊற்றும்போதே சிறு சூட்டுடன் (வெதவெதப்புடன் கூடியதாக) ஊற்ற வேண்டும். அப்பொழுது தான் குளிர் காரணமாக சூடு ஆறும் சமயத்திற்கு முன்னரே ஸந்தானம் நடைபெறத் தொடங்கும். பின்பு ஆறினாலும் ரஸானயச் செய்கை வேண்டிய அளவு வெப்பத்தைக் கலவையில் இருக்கச் செய்யும். சில சமயம் கலவையைச் சிறிது வெய்யிலில் வைத்தோ அல்லது கலங்களைச் சுற்றிலும் கணப்பு சட்டிகளை வைத்தோ ஸந்தானத்தைத் தொடங்கச் செய்வதுண்டு.
                அது போன்றே அதிகமான சூடு காரணமாக கலவையில் கொதிப்பு ஏற்படலாம். கலவை சுழன்று கொண்டே இருக்கும். குப்பியலடைக்கும் போது தப்பிச் சென்ற சிறிதளவு வண்டல் கூட மறுமுறை ஸந்தானத்தை உண்டு பண்ணி கரியமில வாயுவை வெளியேற்றுவதன் மூலம் மூடியைத் நொறுக்கித் தூக்கி எறிந்து விடும். அல்லது குப்பிகளையே உடைத்து விடும். இந்நிலைகளில் அவற்றைச் சூழ்நிலை வெப்பம் அதிகமில்லாத இடங்களில் வைக்க வேண்டும் கலங்களை அடிக்கடி சிறிது அசைத்து விடுவதும், அவற்றைச் சுற்றிப் பனிக்கட்டி முதலியவற்றால் குளிர்ச்சி உண்டு பண்ணுவதும் உண்டு. இது போன்ற தொல்லைகள் தென்னாட்டில் அதிகம் ஏற்படுவதில்லை. ஏனெனில் தென்னாடு ஓரளவு சம சீதோஷ்ணமான பூமி.
                ஸந்தானம் சரிவர நடைபெறச் சூழ்நிலையிலோ, கலங்களிலோ ஈரம் அறவே தவிர்க்கப்பட வேண்டும். குப்பிகளில் நிரப்பும் போது அவைகள் நன்கு உலர்ந்து காய்ந்துள்ளதா என்று பார்த்த பின்னரே அவற்றை உபயோகிக்க வேண்டும். மழைக்காலத்தில் சூழ்நிலை ஓரளவு ஈரமாக இருக்குமாதலால் அதுசமயம் ஆஸவாரிஷ்டங்களைத் தயாரிப்பதைத் தவிர்த்தல் நல்லது.
                இவ்விதமான கட்டுப்பாடுகளுடன் கூடிய சூழ்நிலையில் குளிர் காலத்தில் 6 – 7 தினங்களுக்குள்ளாகவும், கோடை காலத்தில் 5 – 6 தினங்களுக்குள்ளாகவும் ஸந்தானம் என்னும் இந்நிகழ்ச்சி தொடங்கி அமைந்து முடிவடைகிறது. இந்நிலையை, கவனித்துக்கொண்டே வந்து தக்க தருணத்தில் கலவையை வடிகட்டி பத்திரப்படுத்த வேண்டும்.
                ஸந்தானம் நடைபெறுவதன் அறிகுறிகளாவன:- இனிப்புப் பொருள்கள் கலந்த நிலையிலும், பிறகும், கலவைகளில் ஒருவித ஓட்டம் இருப்பது நன்கு கண்களுக்குப் புலப்படும் கலவையும் சிறிது சூடாக இருக்கும். அச்வகந்தாரிஷ்டம், திராக்ஷாரிஷ்டம் போன்றவற்றில் இவைகள் விசேஷமாகக் காணப்படும். மேலும் கலங்களின் வாய்ப்புறத்திலும் காதுகொடுத்துக் கேட்க ஒரு விதமான சப்தம் உண்டாவது புலப்படும். கரியமிலவாயு வெளியேறும் வாசனையையும் உணரலாம். காரியமிலவாயு வெளியேறும் போது எரியும் நெருப்புக் குச்சியையோ, விளக்கையோ அந்த இடத்தில் நீட்ட அவை அணைந்துவிடும். கலவையும் கலக்கமுற்றிருக்கும். இந்த அறிகுறிகளால் ஸந்தானம் நடைபெறுகிறது என அறியலாம். இவற்றிக்கு மாறாக அறிகுறிகள் ஏற்படும் நிலையே ஸந்தானம் முடிந்து விட்ட நிலை. அந்த நிலையில் கலவைகளில் அடியில் மேம்பொடிகள் போன்றவைகள் படிந்துவிடும். காட்டாத்திப் பூ மட்டும் கலவையின் மேல் சிறிது மிதந்து வரும். அவற்றை நீக்கித் தெளிந்த மருந்தை முன் கூறியபடியே சுத்தமாக்கிய மற்றோர் கலத்தில் துணியில் வழியே கலங்காது, மெல்ல வண்டலைத் தவிர்த்து வடிகட்டி மூடிச் சீலைமண் பூசியோ, சந்து இல்லாது ரப்பர் முதலியவை பொருந்தி மூடியோ பத்திரப்படுத்த வேண்டும். கலவை நன்கு தெளியத் தேத்தான் கொட்டையை நன்கு பொடித்துச் சலித்துத் தூவுவதும் உண்டு.
                வடிகட்டிய பிறகு கூடத் தயாரான அம்மருந்துகள் சுழன்று சுற்றுகின்றன. அது  மருந்துகளைப் பொருத்து ஓரிரு மாதங்கள் சென்ற பின்னரே நிற்கிறது. தெளிவும் அப்பொழுதுதான் ஏற்படுகிறது. சுழல் கொண்டுள்ள சமயம், குப்பிகளில் அவற்றை அடைக்கக் கூடாது. அமைதியுற்றுத் தெளிந்த பின்னரே அவ்விதம் பத்திரப்படுத்த வேண்டும்.
                வடிகட்டிய ஆஸவாரிஷ்டங்களைக் காற்றுப்படும் படி வைப்பதால் மறுமுறை ஸந்தானம் ஏற்பட்டு அவை சீர் கேடடையும். ஆதலால் முதல் முறை ஸ்ந்தானம் முடிவடைந்த பின் வடிகட்டிக் காற்று புகாத கலங்களில் பத்திரப்படுத்துவதுடன் உபயோகிக்க எடுக்கும் போதும் கூடியவரை சீக்கிரமாக எடுத்துக் கொண்டு தாமதமின்றி கலங்களை மூடிவிட வேண்டும். நாளடைவில் வடிகட்டியமருந்துகளில் கூட அடியில் வண்டல் படியும். ஆகவே ஸைபன் முறையில் குழாய்கள் மூலம் உறிஞ்சி இழுத்துத் குழாயைத் திரவத்தின் மேல் பரப்பிலேயே அமிழ்த்திக் கலவையைக் கலங்காது குப்பிகளில் நிரப்ப வேண்டும். வடிகட்டுவதற்கென அமைத்த யந்திரத்தின் உதவியால் தடிப்பான அட்டை, துணி போன்றவற்றின் வழியே அவற்றைச் செலுத்தி வடிகட்டிக் குப்பிலடைப்பதும் உண்டு. இம்முறையில் திரவம் தெளிந்து வண்டல் முதலியவை அற்றிருக்கும்.
                பீப்பாய்களை உபயோகிக்குமிடத்து அடிபாகத்திலிருந்து 2 – 3 அங்குல உயரத்தில் திருகு குழாய் அமைத்து அதன் வழியே வடிக்கட்டிய ஆஸவாரிஷ்டங்களை குப்பியில் அடைக்க எடுத்துக் கொள்ளலாம். இவ்விதம் சௌகரியமாக எடுக்கவும், துலக்கவும், கழுவவும் பீப்பாய்களைத் தரை மட்டத்தில் இருந்து ஓரிரு அடி உயரக்கட்டைகள் அமைத்து அதன் மேல் வைக்க வேண்டும். பீப்பாய் வாயைச் சுற்றிலும் மூடி பொருத்தும் இடத்தில் ரப்பர் வாஷர் போன்றவைகளை அமைத்து மூடியையும்பீப்பாயையும் திருகு ஆணியால் பிணைத்து காற்றுப் புகாதவாறு அமைக்க வேண்டும். மரம் உலர்ந்தால் சுருங்கும் தன்மை யுள்ளதாகையால் மருந்துகளை நிரப்பியோ அல்லது அவ்வப்பொழுது சுத்தமான கொதித்த தண்ணீரை மாற்றி, மாற்றி ஊற்றியோ கட்டுச் சுருங்கி விடாது பார்த்துக் கொள்ள வேண்டும். கூடியவரை தெளிந்த மருந்துகளை குப்பியில் அடைத்தே பத்திரப்படுத்த வேண்டும்.

பின் குறிப்பு -ஆசவ அரிஷ்டங்கள் தயார் செய்ய உரிய லைசன்சு மிகவும் அவசியம் ..எக்சைஸ் டூட்டி கட்டி -முறையான ஆவணத்தோடு மட்டுமே இவைகள் தயாரிக்கப்பட்ட வேண்டும்
 

Post Comment

1 comments:

puduvaisiva சொன்னது…

மிக தெளிவான விளக்கம்
நன்றி !

கருத்துரையிடுக