சித்த மருத்துவம் |
கோட்பாடு விளக்கம் சித்த மருத்துவக் கோட்பாடு என்பது, அம்மருத்துவம் எந்தக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு மருத்துவம் செய்யப் படுகின்றதோ அக்கொள்கையின் அடிப்படையைக் குறிப்பிடுவதாகும். மருத்துவக் கோட்பாடு உடலைப் பற்றி அறிவது; உடலில் தோன்றும் நோய்களைக் கண்டறியும் கருவிகளை உருவாக்குதல்; நோய்களுக்கான காரணங் களைக் கூறல்; நோய்களுக்குரிய மருந்துகளை உடலியலுக்கு ஏற்றவாறு அமைத்தல்; மருந்துகளால் நோய்களைத் தீர்க்கும் முறைகளை வகுத்தல்; நோயிலிருந்து விடுபடல்; தடுத்தல்; பாது காத்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மருத்துவக் கோட்பாடு உருவாக்கப்படும். சித்த மருத்துவக் கோட்பாடு சித்த மருத்துவக் கோட்பாடு ஐம்பூதக் கொள்கையை அடிப் படையாகக் கொண்டது. இந்த உலகம் ஐம்பூத மயமானது; இந்த உலகத்திலுள்ள உயிர்கள் அனைத்தும் அவற்றால் உருவானவையே; மனித உடலும், உடல் உறுப்புகளும் ஐம்பூதங்களை ஆதாரமாகக் கொண்டு உருவானவை; உடலில் தோன்றும் நோய்களுக்குக் காரணமாக அமைவதும், அந்நோய்களைத் தீர்க்கும் மருந்துப் பொருள்களும், மருந்தும் பஞ்சபூதச் சேர்க்கையினாலேயே உருவா கின்றன. இயற்கையாகத் தோன்றிய பஞ்சபூத முறைக்கு மாறாக அமையும் மருந்துகள், பயன் தர மாட்டா என்னும் கருத்துகளின் அடிப்படையில் வகுக்கப் பெற்றதாகும். பஞ்சபூதம் பஞ்சபூதம் என்பது, நிலம், தீ, நீர், காற்று, ஆகாயம் என்னும் ஐந்தாகும். இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லா விட்டாலோ, குறைந்தாலோ உயிர்கள் தோன்றவும் வாழவும் வழியில்லை. உயிர்கள் தோன்றவும் உய்யவும் காரணமாக அமைவது பஞ்ச பூதமாகும். "" நிலம், தீ, நீர், வளி, விசும் பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்'' இந்த உலகம், பஞ்சபூதங்களின் கலவையால் உருவானதே என்று, தொல்காப்பியம் உரைக்கிறது. உலகமும் பஞ்சபூதமும் உலகம் பஞ்சபூதங்களின் கலவையினால் உருவாகியிருப்பதைப் போல, நிலவுலகில் உருவாகி யிருக்கும் பொருள்களும் பஞ்சபூதங் களின் கலவையால் அல்லது சேர்க்கையால் உருவானவை.பஞ்ச பூதங்களின் தொகுதியே உயிரினங்களை உருவாக்கின என்பதால், உயிர்த் தோற்றத்திற்குப் பஞ்சபூதங்களே ஆதியாக அமைவது தெரிய வருகிறது. “ வாறான சனங்களுக்கும் ஐந்து பூதம் மருவியதோர் தேவதைக்கும் ஐந்து பூதம் தாறான அண்டமெலாம் ஐந்து பூதம் சதாசிவமாய் நின்றதுவும் ஐந்து பூதம் கூறான யோனியெல்லாம் ஐந்து பூதம் குரும்பனே ஐந்தினால் எல்லாம் ஆச்சு'' என்று, சட்டைமுனி உரைக்கின்றார். ஐம்பூதங்களால் உருவானவை மனிதர் மட்டுமல்ல, தேவதைக்கும் அவைதாம். சதாசிவமாய் நின்ற தெய்வத்துக்கும் அவைதாம். உயிரினங்கள் அனைத்துக்கும் அவைதாம். அவற்றால்தான் அனைத்துமே உருவாயிற்று என்று தெளிவுபடுத்துவர். உயிரினங்கள் பஞ்சபூதங்கள் அல்லாமல் வேறு முறையில் உருவானவை அல்ல என்பதே இதன் அடிப்படைக் கருத்து. ஒரு பொருளின் மூலத்தைக் கண்டுரைப்பதைப் போல, உயிரினங்கள் அனைத்திற்கும் மூலமாய் நிற்பது பஞ்சபூதங்கள் என எண்ணினர். பஞ்ச பூதங்களால் பிறப்பு பஞ்சபூதங்கள் எங்கு உள, எங்கு இல என்றில்லாமல், எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும் நிறைந்திருக்கின்றன. எந்த இடத்தில் பூதங்கள் அனைத்தும் இல்லையோ, அந்த இடத்தில் உயிரினங்களும் அவற்றின் பிறப்பும் இல்லை என்ற கருத்து உறுதிப் படுவதற்கு, ஒளவைக் குறள் கூறும் கருத்து சான்றாகும் பூதங்கள் எல்லாம் ஒரே அளவில் இருந்தால், அங்கும் பிறப்பில்லை.அவை, பங்கு பெரும் அளவு மாறினால் உயிர் உண்டாகும் என்பது ஒளவையின் கருத்தாகும். பூமி போன்ற கோள்களும், விண்மீன், சூரியன் போன்ற ஒளியன் களும், சுழன்று கொண்டிருக்கும் அண்ட கோளம் என்னும் வான்வெளி ஆகிய எங்கும் நிறைந்திருப்பது பஞ்ச பூதங்கள் என்பதே அடிப்படைக் கருத்தாகக் கூறக் காணலாம். பஞ்சபூதமும் உடம்பும் உடம்பை ஆட்சி செய்வது பஞ்ச பூதமாகும். பஞ்சபூதம் அளவில் ஒன்று மாறினாலும் உயிர்க்குக் கேடு வந்து நேரும் என்பது சித்த மருத்துவக் கோட்பாடு அண்டத்தில் இயங்குகின்ற ஆற்றல்கள் அனைத்துக்கும் இதே நிலைமைதான் என்றும் பொதுவிதி கூறப்படுகிறது. அண்டத்துக்கு வேறு, பிண்டத்துக்கு வேறு என்னும் பாகுபாடு இயற்கை நியதியில் இல்லை என்பதை உணர்த்துவது சித்த மருத்துவக் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்து என்பதை, "" அண்டத்தி லுள்ளதே பிண்டம் பிண்டத்தி லுள்ளதே அண்டம் அண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்துதான் பார்க்கும் போதே'' சட்டமுனிஞானம் உரைக்கக் காணலாம். பஞ்சபூதமும் உடல் உறுப்பும் பஞ்சபூதம் உடலை உருவாக்குகிறது என்பது பொதுவாகக் கூறப்படும். பஞ்சபூதங்கள் உடம்பின் உறுப்புகளாக அமைந்துள்ளன என்பதை விளக்குவது, சித்த மருத்துவக் கோட்பாட்டியலின் உடலியல் கொள்கை. மருத்துவ நூலார் உடல் உறுப்புகளை நுண்ணிதின் உணர்ந்ததன் பயனாலேயே இவ்வாறான கொள்கையும், கோட்பாடும் உருவாகியிருக்கின்றன. உடல் உறுப்புகளில் பஞ்சபூதங்களின் கூறுகள் வருமாறு: மண் : எலும்பு, தோல், இறைச்சி, நரம்பு, மயிர். நீர் : உதிரம், மஞ்சை, உமிழ் நீர், நிணம், விந்து. தீ : பயம், கோபம், அகங்காரம், சோம்பல், உறக்கம். காற்று : போதல், வருதல், நோய்ப்படுதல், ஒடுங்குதல், தொடுதல். ஆகாயம்: ஆசை, உட்பகை, மோகம், மதம், வஞ்சனை. என்னும் இருபத்தைந்தும் பஞ்சபூதத்தின் கூறுகளால் உடம்பில் அமைந்திருக்கின்றன என்பர். இதனோடு ஒத்தகருத்தைச் சங்ககால இசை நூலான பஞ்சமரபு உரைக்கின்றது. உடம்பின் அகக் கூறுகள் பஞ்ச பூதங்களால் உடம்பில் அமையப் பெற்ற இருபத்தைந்தை, உடம்பின் அகக் கூறுகள் என்று குறிப்பிடப்படும். இவையல்லாமல் மேலும் பல அகக் கூறுகள் உடம்பிலுள்ளதாகத் திருமந்திரம் உரைக்கிறது. உடம்பில் அமைந்த அகக் கூறுகள் இருபத்தைந்து 4,00,48,500 அகக்கூறுகள் என்று விரித்து உரைக்கப்படும். அவை அனைத்தும் 96 என்று கூறப்படும் (96உடல் தத்துவம்) அகக் கூறுகளில் அடங்கும். அந்த 96 ஐயும் அடக்கிக் கூறினால் இருபத்தைந்தாகும் என்று, அகக் கூறுகள் தொகுத்தும் விரித்தும், சுருக்கியும் ஆராயப்பட்டிருக்கின்றன. உடம்பில் அமைந்த பஞ்சபூதங்களின் கூறுகளைக் கருத்தில் கொண்டு சைவம், வைணவம், வேதாந்தம், சித்தாந்தம், ஆகிய கொள்கையினை உடையோர் கோட்பாட்டினை வகுத்துக் கொண்டனர். பொதுவாக, பஞ்சபூத மெய்க் கூறுகள் என 96ஐக் குறிப்பிடலாம். அந்தத் தொண்ணூ<ற்றாறு கூறுகளையே தத்துவம் என்பர். அந்தத் தத்துவங்களில் சைவ சமயம் முப்பத்தாறு தத்துவங்களையும், வேதாந்திகள் முப்பத்திரண்டு தத்துவங்களையும், வைணவ சமயம் இருபத்து நான்கு தத்துவங்களையும், மாயாவாதிகள் எனக்கூறப் படுகின்ற சித்தாந்திகளான மருத்துவ நூலார் இருபத்தைந்து தத்துவங் களையும் தங்கள் கொள்கைகளாகக் கொண்டிருக்கின்றனர் என்பர். பஞ்சபூதங்களின் தன்மைகள் பஞ்சபூதங்கள் அதன் அதன் இயல்புக்கு ஏற்ப அமைந்திருக்கும் தன்மையைக் குணங்களாகக் குறிப்பிடுவர். மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் முறையே ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று, என்னும் தன்மைகளைக் கொண்டவையாகக் குறிப்பிடுவர். மண்ணின் குணம் நிறை, இடம், வெம்மை, தண்மை, வடிவம் என்பன. நீரின் குணம் நிறை, இடம், வெம்மை, தண்மை என்பன. தீயின் குணம் இடம், வெம்மை, வடிவம் என்பன. காற்றின் குணம் இடம், தட்பம் வெப்பம் என்பன. ஆகாயத்தின் குணம் இடம் என்பது, என்று குறிப்பிடப்படுகிறது. இதனையே பரிபாடலும் , குறிப்பிடும். பஞ்சபூதங்களின் தன்மையும் மருந்தும் பஞ்ச பூதங்களின் இயல்பான தன்மைகளை எண்ணியே உலகப் பொருள்களில் பஞ்சபூதங்கள் இடம் பெற்றிருக்கும் அளவைக் குறிப்பதாகச் சித்த மருத்துவம் கருதுகிறது. பஞ்சபூத அளவின்படி மருந்துகள் கலந்திருந்தால், அம்மருந்து இயற்கையான ஆற்றலுடைய பண்பினைப் பெறும் என்னும் கருத்து சித்த மருத்துவத்தில் காணப்படுகிறது. பஞ்சபூதத்தின் குணம் அறியாமல் மருந்து செய்தால் அதனால் பயனில்லை என்றும் கூறப்படுகிறது. "" அஞ்சு பஞ்சபூத மறிந்தா லனித்தி யம்போம்'' என்று, திருவள்ளுவ ஞானம் உரைக்கிறது. பஞ்சபூதத் தன்மையைப் போல மருந்துகள் கூட்டப்பட்டால், அம்மருந்துகள், மரணத்தை வெல்லச் செய்யும். பஞ்சபூதங்கள் நிலைத்திருப்பதைப் போல மனித உடலையும் நிலைத்திருக்கச் செய்யும் என்பது இதன் கருத்தாகக் கொள்ளலாம். “ பஞ்சபூத மொன்று கூடில் பளிங்கு போல தீதமாம் விஞ்சையுப் பென்றே வழங்கி விளையும் பூமி நாதமே நஞ்சதாகும் நாதநீரில் நாட்டுதோஷம் காற்றினில் பஞ்சுபோல பறந்துபோகும் பாட்டை சொன்னேனாண்டையே'' என்றும் கூறுவர். "" பூ நெல்லி நீர்மிளகு பொற்கடுக்காய் வான் மஞ்சள் கானகத்து வேம்பரிசி காரிகையே மானங்கேள் ஒன்றரை ஒன்றேகால் ஒன்று உறுதிமுக்கால் கன்றரைக்கை யான்நீரில் தேய்'' என்னும் மருத்துவப்பாடல், நெல்லிக்காய், மிளகு, கடுக்காய், மஞ்சள், வேம்பரிசி என்னும் மருந்துப் பொருள்கள் முறையே, மண், நீர், தீ, காற்று, ஆகாயம் எனக் கூறுவதுடன் 6,5,4,3,2 என்னும் அளவுகளைக் குறிப்பிடுகிறது. பஞ்சபூதங்களின் குணங்கள் 5மண், 4நீர், 3தீ, 2காற்று, 1ஆகாயம் என்ற விகிதத்தில் இருக்கின்றனவென்று மேலே குறிப்பிடப் பட்டது. இதன் அடிப்படையில் மருந்துப் பொருள்கள் கூட்டப் படுகின்றன என்பது கருதத்தக்கது. 1. இனிப்பு = மண் + நீர் 2. புளிப்பு = மண் + தீ 3. உவர்ப்பு = நீர் + தீ 4. கைப்பு = காற்று + ஆகாயம் 5. கார்ப்பு = தீ + காற்று 6. துவர்ப்பு = மண் + காற்று என, சுவைகளில் ஐம்பூதங்கள் கலந்திருக்கின்றன. பஞ்சபூதமும் நாடியும் மனித உடலில் அமைந்திருக்கும் வாதம், பித்தம், ஐயம் நாடிகள் சிறப்பானவை. இந்த மூன்று நாடிகளைக் கொண்டு உடம்பில் உருவாகியிருக்கும் அல்லது பிணித்திருக்கும் நோய்கள் கண்டறியப் படுகின்றன. இந்த மூன்று நாடிகளும் மூன்று பூதங்களின் கூறுகளாகச் செயல்படுகின்றன. வாதம் காற்றின் கூறாகவும், பித்தம் தீயின் கூறாகவும், ஐயம் நீரின் கூறாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன17. பித்தம் நீங்கலாக, வாதம் காற்று + ஆகாயம், ஐயம் நீர்+மண் என்று இரண்டு பூதச் சேர்க்கையும் கூறுவர். நாடியும் சுவையும் சித்த மருத்துவ முறைகளில் சிறந்த முறையாகக் காணப் படுகின்றவற்றுள் சுவையைக் கொண்டே நோயை அறிந்திடும் முறை சிறப்பிடம் பெறுகிறது. நோயாளியின் நாவில் எவ்வகையான சுவை தோன்றுகிறதோ அச்சுவையைக் கொண்டு நோயின் வகையை அறிந்து, அதற்குரிய மருத்துவ முறையை மருந்தாகக் கொள்கின்றனர். நாவில் இனிப்புச்சுவை தோன்றினால் ஐயம் மிகுந்த தென்றும், கசப்புச்சுவை தோன்றினால் பித்தம் மிகுந்ததொன்றும், புளிப்புச் சுவை தோன்றினால் வாதம் மிகுந்த தென்றும், துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு ஆகிய சுவை தோன்றினால் வாதபித்த ஐயம் கலந்த தென்றும் தெரிகிறது பஞ்சபூதமும் நோய்த்தீர்வும் சுவைகள், ஒவ்வொன்றிலும் இரண்டு பூதங்கள் சேர்ந்து இருக்கின்றன. நாடிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பூதம் இருக்கிறது. இதனை அறிந்து கொண்டால், நோயின் சுவையை அறிந்து, அதனால் எந்த பூதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை அறிய முடியும். அதற்கு எந்தச் சுவையுள்ள பொருளை வழங்கினால் வளர்ந்த பூதத்தின் வளர்ச்சி கட்டுப்படும் அல்லது குறையும் என்பதை எளிதில் அறியக்கூடும். இனிப்புச் சுவை மண்+நீர் பூதங்கள் கலந்து (உருவானது) தோன்றியது. ஐயமும் அதே பூதங்களின் கலவையால் தோன்றியது தான் என்பதனால், இனிப்புச்சுவை ஐயம் வளர பயன்படும். அல்லது ஐய நோய்க்குக் காரணமாகும். அதற்கு மாற்றுச் சுவையாக உவர்ப்புச் சுவை (உப்பு)யைப் பயன்படுத்தினால் ஐயம் கட்டுப்படும் அல்லது குறையும். உப்புச்சுவை தீப்பூதம் சேர்ந்தது என்பதால் நீர்ச்சுவையான ஐயம் கட்டுப்படும். அதுபோல், புளிப்புச் சுவை, தீச்சுவை (உப்பு)யால் வந்த நோய்க்கு வழங்கினால் அந்நோய் மிகுந்து வளரும். இதற்கு தீயின் எதிர்மாறான (நீர்+ மண் அல்லது மண் + காற்று) சுவையுடைய பொருள்களைப் பயன்படுத்தினால், தீயால் வந்த நோய் கட்டுப்படும் எனலாம். இனிப்பு, புளிப்பு, உப்பு இம்மூன்று சுவைகளும் வாதத்தால் வந்த நோயைக் கட்டுப்படுத்தும் (அ) தீர்க்கும். கார்ப்பு, துவர்ப்பு, கைப்பு இம்மூன்று சுவைகளும் ஐயத்தால் வந்த நோயைக் கட்டுப்படுத்தும். துவர்ப்பு, இனிப்பு, கைப்பு இம்மூன்று சுவைகளும் பித்தத்தால் வந்த நோயைக் கட்டுப்படுத்தும்19 என்றறியலாம். அதேபோல, கார்ப்பு, கைப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் வாத நோயை வளர்க்கவும், வருவிக்கவும் காரணமாகும். புளிப்பு, கார்ப்பு, உப்பு ஆகிய சுவைகள் பித்த நோயை வளர்க்கவும், வருவிக்கவும் காரணமாகும். இனிப்பு, புளிப்பு, உப்பு ஆகிய சுவைகள் ஐய நோயை வளர்க்கவும் வருவிக்கவும் காரணமாகும். இச்சுவையின் அடிப்படையைக் கொண்டு நோயை அறியவும், நோயைத் தணிக்கவும் சித்த மருத்துவக் கோட்பாட்டு முறையால் கண்டறியப் பட்டுள்ளது. பஞ்சபூதமும் மருந்துப் பொருளும் சித்த மருத்துவம், உடம்பையும் உடம்பின் உறுப்புகளையும், உடல் உறுப்புகளில் உருவாகும் நோய்களையும், பஞ்சபூதத்துடன் தொடர்புடையவை என்கிறது. அதேபோல, நோய்களைத் தீர்க்கப் பயன்படுகின்ற மருந்துப் பொருள்களான உப்பு, உலோகம், பாடாணம், மூலிகை, மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுகின்ற ‘குகை’ போன்ற கருவிகளும் பஞ்சபூத முறையோடு தொடர்புடையன என்பது இப்பகுதியில் ஆராயப்படுகிறது. உடம்பின் உறுப்புகளான கால் நிலமாகவும், வயிறு நீராகவும், நெஞ்சு தீயாகவும், கழுத்து காற்றாகவும், நாதவிந்து ஆகாயமாகவும் கொள்ளப்படுகிறது. உலோகங்களில், தங்கம் நிலமாகவும், நாகம் நீராகவும், செம்பு தீயாகவும், இரும்பு காற்றாகவும், துத்தநாகம் ஆகாயமாகவும் கருதப்படுகிறது. உடம்பில், கால் நோயுற்றுத் துன்புற்றால், நிலப்பகுதி பழுதடைந்ததாகக் கருதலாம். அவ்வாறு பழுதடைந்த பகுதிக்குத் தங்கம் மருந்தாகப் பயன்படுகிறது. வயிறு பாதிக்கப்பட்டால் நாகம் மருந்தாகிறது. நெஞ்சு பழுதடைந்தால், செம்பு மருந்தாகிறது. கழுத்து பழுதடைந்தால் இரும்பு மருந்தாகிறது. நாதவிந்து பழுதடைந்தால் துத்தநாகம் மருந்தாகிறது. (ஐ) மருந்துப் பொருள்களில் இந்துப்பு, கறியுப்பு, கல்லுப்பு, மிருதார்சிங்கி, சிலாசித்து போல்வன நிலப்பண்பு உடையவை என்பதால் மண்பூதமாகிறது. (ஐஐ) சங்கு, வெடியுப்பு, நவச்சாரம், வெள்ளைப் பாடாணம், முட்டைத் தோடு, நத்தையோடு, முத்துச்சிப்பி முதலியன நீர்ப் பண்பினை யுடையவை என்பதால் நீர்ப்பூதமாகிறது. (ஐஐஐ) மனோசிலை, தாளகம், பூரம், வெண்காரம், எலும்பு, கற்பூரம், லிங்கம் போல்வன தீயின் பண்பு கொண்டவை என்பதால் தீப் பூதமாகிறது. (ஐங) அன்னபேதி, துருசு போல்வன காற்றின் இயல்பு கொண்டவை என்பதால் காற்றுப் பூதமாகிறது. (ங) துத்தநாகம் (த்டிணஞி), அயக்காந்தம், பாதரசம், பல் துத்தம் (த்டிணஞி ண்தடூணீடச்tஞு) போல்வன ஆகாயத்தின் பண்பு கொண்டவை என்பதால் ஆகாயப் பூதமாகிறது. மேற்கண்டவாறு மருந்துகளில் அமைந்துள்ள பண்புகளையும், பஞ்சபூதங்களின் பண்புகளையும் நன்கு ஆராய்ந்து மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு மருந்துப் பொருள் களைச் சேர்க்கும் போது, 6+5+4+3+2=5/4 என்னும் விகிதத்தில் சேர்க்கப்படும். அவ்வாறு சேர்க்கப்படும் மருந்துகள் 6 முதல் 2 வரை முறையே, மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பூதங்களின் அளவாகக் கருதப்படும் பஞ்சபூத மூலிகைகள் செம்பாலை, புளிநாரை – மண்; கவுதும்பை, காசானி – காற்று; துரா, பீநாறி – நீர்; கரந்தை, குமரி – தீ; காஞ்சோரி, சங்கரன் – ஆகாயம் என்று பஞ்சபூதக் குணங்களைக் கொண்ட மூலிகைகள் குறிப்பிடப் படுகின்றன. இவ்வாறு கண்டறியப்படுகின்ற மூலிகைகளைப் பஞ்சபூத முறைப்படி ஒன்று சேர்த்தால் அதுவே சித்த மருந்துவத்தின் மூலமருந்தாகப் பயன்படும். பஞ்சபூத முறையில் கூட்டப்படும் மருந்துகள் பல, நாட்டு வழக்கத்தில் காணப்படுகின்றன. அவற்றில் குறிப்பிடத் தக்கதாக இருப்பது, ‘சிறுபஞ்சமூலம்’ ஆகும். இப்பெயர் சிற்றிலக்கியம் ஒன்றின் பெயராகவே இருப்பதனால் இதன் சிறப்பினை உணரலாம். பஞ்சபூதக் கருவி மருந்துகளைத் தீக்குள் வைத்து எரிக்கவும், காய்ச்சவும் குகை என்னும் கருவி பயன்படுத்தப்படுகிறது. குகை பெரும்பாலும் பொற்கொல்லர்கள், உருக்கினால் உருவானதைப் பயன்படுத்துவர். சித்த மருத்துவக் கோட்பாட்டின் படி குகை பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உருவாக்கப்பட வேண்டு மென்று கூறப்படுகிறது. பஞ்சபூதக் குகை உருவாக்கக் கடல் நுரை, கல்லுப்பு, வெடியுப்பு, சீனம், சூடன் ஆகிய ஐந்து பொருள்களைக் கொண்டு தயாரிக்கப் படுகின்றது. அவ்வாறு தயாரிக்கப்படும் குகையில் வைத்து ஊதப்படும் சூதம், ஐந்துவகை நாதம், உபரசங்கள், நாத விந்தாகிய மூலப் பொருள்கள், சாரம், துரிசு, உப்பு, காரம் முதலிய எல்லாப் பொருளும் நீறாகும். இவ்வாறு தயாரிக்கப்படும் குகைக்கு ஈடாக வேறு ஒன்றுமில்லை என்று மருத்துவக் கருவியைப் பற்றிக் கூறக் காணலாம். பஞ்சபூதமும் வைத்திய வாதயோகமும் வைத்தியம், வாதம், யோகம், ஞானம் ஆகிய நான்கும் சித்தர் முறையாகும். இந்த நான்கையும் கொண்டதே சித்தமருத்துவம். மரணமில்லாப் பெருவாழ்வு வாழ யோகம் வேண்டும். யோகம் செய்ய உடல் சுத்தி வேண்டும். உடல் சுத்தியடைய கற்பம் போன்ற வாதமுறையில் தயாரிக்கப்படுகின்ற மருந்து வேண்டும். அந்த மருந்தினால் உடலிலுள்ள குற்றங்களைப் போக்கும் மருத்துவம் வேண்டும். இவ்வாறான நான்கு முறைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக உள்ளன. இந்த நான்கு செயல்களைச் செய்வ தற்கும், சித்த மருத்துவக் கோட்பாட்டில் பஞ்சபூதம் அடிப்படையாக விளங்குகிறது. பஞ்சபூத முறையே சித்த மருத்துவ முறை என்பதற்குச் சான்று கூறும் விதத்தில் யூகி பிடிவாதம் என்னும் நூலில், பஞ்சபூதத்தைக் கவனத்துடன் புரிந்து அதனால் அறியப்படும் உண்மைகளைக் கொண்டு செயல்பட்டால்தான், மருத்துவம் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. தங்கம், காரீயம், செம்பு, இரும்பு, நாகம் ஆகிய உலோகங்கள் முறையே மண், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியன பூதங்கள். இந்த ஐந்து உலோகமும் கூடும்போது, வாத மருத்துவத்துக்குக் குரு மருந்தாக அமையும். குரு மருந்து என்பது சித்த மருத்துவத்தில் மூல மருந்தாகக் கருதப்படும். எந்த மருந்தைச் செய்தாலும் அந்த மருந்துடன் குரு மருந்தைச் சிறிதளவு சேர்த்தால், மருந்து சிறந்த மருந்தாக மாறும் என்பர். பஞ்ச பூதத்தினால் மருத்துவப் பயன் உண்டாகும். பஞ்சபூதத்தில் ஏதேனும் ஒன்றை மட்டும் கொண்டு எதையும் செய்ய முடியாது வீண் பேச்சு வேண்டாம். எல்லாமும் வெற்றிபெற வேண்டுமென்றால் பஞ்சபூதம் ஐந்தும் ஒன்று சேர வேண்டும் என்பது கண்டறியப் படுகிறது. பஞ்சபூத சித்தி பஞ்சபூதத்தினால் அடைக்கூடிய வெற்றியைச் சித்தி என்று கூறுவர். பஞ்சபூத உலோகங்களின் கூட்டினால் செய்யப்படுகின்ற குரு மருந்து ஒன்பது வகையான உலோகங்களையும் பொன்னாக மாற்றும். தரத்தில் குறைவான உலோகங்களைப் பொன்னாக மாற்றும் குருமருந்து, குற்றமுடைய உடம்பையும் பொன்னாக மாற்றும் என்பதே சித்தமருத்துவத்தின் வாதமுறை மருத்துவமாகும்25. ‘பஞ்சலோகச் செந்தூரம்‘ என்னும் மருந்தை நோயாளிக்குக் கொடுத்தால், வாதம் என்னும் காற்றுப் பூத நோய்84, பித்தம் என்னும் தீப்பூத நோய்48, ஐயம் என்னும் நீர்ப்பூத நோய்96 ஆக 228 நோய்கள் தீரும் என்று கூறப்படுகிறது26. ஒரு மருந்து இத்தனை நோய்களைப் போக்கக் கூடியதாக அமைகின்றதென்றால், அது பஞ்ச பூதத்தின் சேர்க்கை முறையினால் மட்டுமே கூடும் என்பதைச் சித்த மருத்து வத்தின் கோட்பாடு உணர்த்துகிறது. பஞ்சபூதத்தால் யோக சித்தி பஞ்சலோகச் செந்தூரம் என்னும் குரு மருந்தைக் களங்கு என்னும் மருந்தாக மாற்றி உண்டு வந்த பின் யோகம் செய்தால் உடனே சித்தி அடையலாம் என்பர். யோக சித்தி பெறவும், சிவயோக நெறியில் சித்தி பெறவும் பஞ்சலோக முறையில் தயாரிக்கப்படுகின்ற வாதமுறை மருந்தான குருமருந்து வேண்டும் என்பதை உணர்த்துவதுடன், பஞ்சபூதத்தினால் கிடைக்கக் கூடிய வெற்றிகள் அனைத்தும் கூறப்பட்டிருக்கிறது. பஞ்சபூத மரபு இன்றைய உலகில் சிறந்த தொன்மையான மருத்துவங்களில் ஒன்றாக விளங்குவது சித்த மருத்துவம். இந்த மருத்துவத்தைத் தோற்றுவித்தவர்கள் சித்தர்கள். சித்த மருத்துவம் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது பஞ்சபூதம். பஞ்சபூதத்தின் தன்மையை அறிந்த பின்பே, சித்த மருத்துவம் கோட்பாட்டு முறையில் அமைந் திருக்க வேண்டும். பஞ்சபூதம் ஒன்றுடன் ஒன்று கலந்தே உயிர்கள், உலகிலுள்ள பொருள்கள் அனைத்தும் தோன்றின. அவ்வாறு தோன்றிய உயிரும், பொருளும் பஞ்சபூதங்களின் கூறுகளாகும். உயிரும், பொருளும் தோன்றவும்,காக்கவும், நிலைக்கவும், அழிக்கவும், செய்வது பஞ்சபூதமாகும். இதுவே, பஞ்சபூதக் கோட்பாடு. இக்கோட் பாட்டினைப் பின்பற்றித் தொடர்ந்து மேற்கொண்டு வரும் இனத்த வரைப் பஞ்சபூத மரபினர் எனலாம். அத்தகைய மரபினராகக் கருதத்தக்கவர்கள் சித்தர்கள். பஞ்சபூதக் கோட்பாடு உருவாகிய காலத்தைச் சித்தர் காலமெனவும், சித்த மருத்துவத்தின் தொடக்கக் காலம் எனவும் கொள்ளத் தோன்றுகிறது. பஞ்சபூதங்களைப் பற்றிய சிந்தனை தொல்காப்பியக் காலத்துக்கும் முந்தியது. கடல்கோளால் அழிந்துபட்ட இரண்டாம் தமிழ்ச்சங்க நூல்களில் ஒன்று பஞ்சபூதக் கோட்பாட்டை விவரிப்பதாக இருந்திருக் கிறது. ‘பூத புராணம்’30 என்னும் அந்நூல் தொல்காப்பியக் காலத்துக்கும் முந்தைய நூலாக இருக்கலாம். அல்லது பூதக் கோட்பாட்டறிவு தொல்காப்பியக் காலத்துக்கு முந்தையதாக இருக்கலாம். அதனால் தான், தொல்காப்பியம் பஞ்ச பூதங்களால் உலகம் உருவானதென உரைக்கிறது. தொல்காப்பியர் காலத்துத் தமிழர், உயிர் அழியாது; என்றும் நிலைத்திருக்கக் கூடியது என்னும் கருத்துடையவர்களாக இருந்திருக் கின்றனர். “உயிர்கள் என்றும் அழிவில்லன என்பது தமிழர் கொள்கை. உயிர்கள் என்றும் நிலை பேறுடைய வாதலின் அவற்றை மன்னுயிர் என வழங்குதல் தமிழ் வழக்கு. இப்பழைய வழக்கினைத் ‘தொல்லுயிர்’ என்ற தொடரால் தொல்காப்பியரும் உடன்பட்டு வழங்கியுள்ளார்’’ என்னும் கருத்துக்கு உரிமையுள்ளவர்கள் சித்தர்களே. சித்தர்களே மருத்துவ முறையால், உடல் அழியாமல் உயிரைப் பாதுகாக்க முடியும் என்று கூறியவர்கள். “உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே’’ என்றதால் அறியலாம். சித்தர்கள் கூறிய இந்தக் கருத்தை மெய்ப்பிக்கும் அடிப் படையாக இருப்பது சித்த மருத்துவத்தின் பஞ்சபூதக் கொள்கையாகும். பஞ்சபூதம் பற்றிய கருத்து மருத்துவத்தில் மட்டுமல்லாமல் தொல்காப்பியம், புறநானூறு, பரிபாடல், சிறுபஞ்சமூலம் போன்ற சங்ககால நூல்களிலும் காணப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் இடம் பெற்ற ‘பஞ்சமரபு’ என்னும் இசைநூல் பஞ்சபூதத்தை விவரிக்கிறது. தென்னாட்டில் அமைந்திருக்கும் சைவத் திருக்கோயில் லிங்கங்கள்–காஞ்சி, திருவானைக்கா, திருவண்ணாமலை, திருக் காளத்தி, சிதம்பரம் ஆகியவை முறையே மண், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பூதங்கள் எனக் கூறப்படுகின்றன.இவற்றால் பூதங்களின் தாக்கம் கோயில்களிலும் மதங்களிலும் இடம் பெற்றிருப்பது அறியலாம். இக்கோயில்களில் ஒன்றான திருவண்ணாமலையைப் பற்றிய செய்தி அகநானூறு. நற்றிணை ஆகிய இலக்கியங்களில் இடம் பெற்றிருப்பதால் அக்கோயில் பழமை வாய்ந்த சங்ககாலத்தில் ஏற்பட்டதென்று கூறலாம். பஞ்சபூதங்களைப் பற்றிய செய்திகள் தமிழிலக்கியங்களில் சைவத் திருக்கோயில்களில் காணப்படுவதைப் போல வேறிடங்களில் காணப் பெறவில்லை என்பதால், பஞ்சபூதக் கொள்கை தமிழகத்துக்கு மட்டுமே உரியதெனலாம். பஞ்சபூதங்களை அடையாளமாகக் கூறும் சைவக் கோயில்களிலும், வேறு சில சைவக் கோயில்களிலும் சித்தர்கள் சமாதி அடைந்ததாகக் கூறுவர். பழமையான சைவக் கோயில்களில் சித்தர் சமாதி இருப்பதைக் கொண்டு சித்தர்களுக்கும் சைவக் கோயில்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பது தெரியவரும். (சித்தர் சமாதி இணைப்பு 6). சைவ மத மரபு, சித்த மருத்துவ மரபு, சித்தர் மரபு ஆகியவை பஞ்சபூதத்துடன் தொடர்புடையவையாகக் காணப்படுகின்றன. இதனால், மேற்கண்ட மரபுகள், பஞ்சபூத மரபின் விரிவாகவோ தொடர்ச்சியாகவோ கொள்ள முடிகிறது என்பதால், பஞ்சபூத மரபினர் எனக்கருத வேண்டியவர்கள் பழமையான சித்த மரபினர் எனலே பொருத்தமாக இருக்கும். பஞ்சபூத மரபின் தோற்றம், இடைச்சங்க காலத்திலிருந்து தொடங்குவதனால், அது இன்றைக்கு சுமார் 5000 ஆண்டிற்கும் முற்பட்டதெனலாம். அதுவே, சித்தர் காலமாகவும், சித்த மருத்துவக் காலமாகவும் கொள்ள ஏதுவாக அமைகிறது. பஞ்சபூத மரபே சித்தர் மரபு எனவும் சித்த மருத்துவ மரபு (அ) சித்த மருத்துவக் கோட்பாடு என்று கொள்ளும் கருத்தும் இறுதியாகிறது. |
புதன், ஜனவரி 27, 2010
சித்த மருத்துவம் -part 1
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 comments:
Sir, This article is cut, could you please reformat it and put it
கருத்துரையிடுக