செவ்வாய், ஜனவரி 12, 2010

காச ரோகத்திற்கு( இருமல் & சளி ) சிகிச்சைகள்


காசரோகசிகிச்சை

வாதகாசங்களுக்கு தசமூலகியாழம் :- தசமூலங்களாகிய வில்வவேர், முன்னைவேர், ஈச்சுரமூலி, பாதிரி, பெருமரவேர்பட்டை கண்டங்கத்திரி, முள்ளங்கத்திரி, ஈரிலைத்தாமரை, மூவிலைத்தாமரை நெரிஞ்சில் இவைகளுடன் சுக்கும் சேர்த்து சமஎடையாகத் தூக்கிமுறைப்படி கியாழம் வைத்து அதில் தேன் கூட்டிச் சாப்பிட்டால் காசம் விக்கல் இவைகள் நீங்கும்.

பஞ்சமூல கியாழம் :- ஈரிலைத்தாமரை, மூவிலைத்தாமரை கண்டங்கத்திரி, முள்ளங்கத்திரி, நெரிஞ்சில் இவைகளின் வேர் களை சமஎடை கியாழம் போட்டு அதில் திப்பிலிச் சூரணம் கலந்து
சாப்பிட்டுவர வாதகபகாசம் நிவர்த்தியாகும்.

பித்தகாசங்களுக்கு வாசாதிகியாழம் :- ஆடாதோடை, சீந்தில் கொடி, கண்டங்கத்திரி இவைகளை கியாழம் போட்டு தேன் கூட்டிச்சாப்பிட்டால் பித்தகபகாசம், சுரம், இரைப்பு முதலியன நீங்கும்.

பலாதி கியாழம் :- சிற்றாமுட்டிவேர், கண்டங்கத்திரி, முள்ளங்கத்திரி, திரா¨க்ஷ, ஆடாதோடை, இவைகளில் சமஎடை கியாழம் போட்டு தேன் கூட்டிச் சாப்பிட்டால் பித்தகாசம் நிவர்த்தியாகும்.

சட்யாதி கியாழம் :- கிச்சிலிக்கிழங்கு, குருவேர், கண்டங்கத்திரி, சுக்கு இவைகள் சமஎடை கியாழம் போட்டு அதில் நெய் சர்க்கரை கலந்து சாப்பிட்டுவர பித்தகாசம் நிவர்த்தியாகும்.

வேறு முறை :- கோரைக்கிழங்கு, தசமூலங்கள், திப்பிலி,திரா¨க்ஷ இவைகள் சமஎடை கியாழம் போட்டு அதில் பால், தேன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் காசங்கள் நிவர்த்தியாகும்.

கண்டகாரியாதி கியாழம் :- கண்டங்கத்திரி, முள்ளங்கத்திரி, திரா¨க்ஷ, ஆடாதோடை, கிச்சிலிக்கிழங்கு, குறுவேர், சுக்கு, திப்பிலி, இவைகளை கியாழம் வைத்து அதில் சர்க்கரை, தேன் கலந்து சாப்பிட்டால் பித்தகாசம் நிவர்த்தியாகும்.

பிப்பல்யாதி கியாழம் :- திப்பிலி, சாதிக்காய், சுக்கு, அதிவிடயம், கண்டுபாரங்கி, மிளகு, ஓமம், கண்டங்கத்திரி, நொச்சி, குரோ சானியோமம், சித்திரமூலம், ஆடாதோடை இவைகள் சமஎடை கியாழம் வைத்து திப்பிலிசூரணத்தை கலந்து சாப்பிட்டால் கபகாசம் நிவர்த்தியாகும்.

கபகாசத்திற்கு சிறுதேக்காதி கியாழம் :- கண்டுபாரங்கி,சுக்கு, கண்டங்கத்திரி, கொள்ளுவேர் இவைகளை கியாழம் வைத்து திப்பிலிசூரணத்தை கலந்து சாப்பிட்டால் கபகாசம், காசசுவாசங்கள் நிவர்த்தியாகும்.

குலித்தாதி கியாழம் :- புஷ்க்கரமூலம், இஞ்சி, கண்டுபாரங்கி, சுக்கு, திப்பிலி இவைகளை கியாழம் வைத்து சாப்பிட்டால் கபகாசங்கள், சுவாசங்கள், ஹிருதயரோகம் இவைகள் நீங்கும்.

சர்வகாசங்கட்கும் வாசாதி கியாழம் :- ஆடாதோடை, மர மஞ்சள், கொத்தமல்லி, சீந்தில்கொடி, கண்டுபாரங்கி, திப்பிலி, கோஷ்டம், கண்டங்கத்திரி இவைகள் சமஎடை கியாழம் வைத்து மிளகு சூரணங் கலந்து சாப்பிட்டுவர காசங்கள் யாவுங் நீங்கும்.

காசங்களுக்கு ருத்திர பர்ப்படீ ரசம் :- சுத்திசெய்த பாதரசம் 1-பாகம், கெந்தி 2-பாகம், இவைகளைக் கல்வத்திலிட்டு ஆமணக்கு வேர், இஞ்சி, கடுக்காய்ப்பூ, மணத்தக்காளி, முன்னை இவைகளின் சாறுகளினால் தனித்தனி ஒவ்வொருநாளரைத்து ரசகெந்திகளுக்குநாலில் ஒருபாகம் தாம்பிரபஸ்பம் கலந்து மந்தாக்கினியால் எரிக்கும் போது சிகப்புவர்ணமாக தோன்றின வுடனே சாணிமீது வாழை இலை பரப்பி அதன்மீது அவிழ்தத்தைப்போட்டு பரப்பி, அதன்மீதுமறுபடியும் ஒரு வாழைஇலை போட்டு அதன்மீது சாணியால்மூடி, ஆறியபிறகு அவிழ்தத்தை யெடுத்துச் சூரணித்து இதற்கு நாலில் ஒரு பாகம் சுத்திசெய்த நாபியைக் கலந்து அரைத்து குன்றிஎடை
அனுபானயுக்தமாக சேவித்து பிறகு நொச்சி இலைச் சூரணத்தை 1/2 தோலா வீதமாவது அல்லது கரிசனாங்கண்ணி ரசத்தில் தேன் கலந்தாவது சேவித்தால் சகலவாத காசங்கள் நிவர்த்தியாகும்.

பூதாங்கு ரசம் :- சுத்திசெய்தரசம் 1 பாகம், சுத்திசெய்தகெந்தி 2 பாகம், தாம்பிரபஸ்பம் 3 பாகம், மிளகு 10 பாகம், அப்பி ரகபற்பம் 4 பாகம், நாபி 1 பாகம், இவைகளை கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழ ரசத்தில் 4 சாமம் நன்கு அரைத்து சிமிழியில் வைத்து குன்றி எடை ஒளஷதத்தை தானிகாய்சூரணம் தேன் இந்த அனுபானத்தில் ஒரு மாதம் சாப்பிட்டால் வாதகாசம் நிவர்த்தியாகும்.

பித்தகாச ரசம் :- தாம்பிரபற்பம், அப்பிரகபற்பம் இவைகளை சமஎடை கல்வத்திலிட்டு போயாவரை, தண்ணீர்விட்டன் கிழங்கு புளிப்புமோர், நெல்லிக்கனிரசம் இவைகளை தனித்தனி ஒவ்வொருநாள் அரைத்து குன்றி எடை இரண்டு மாதம் சாப்பிட்டால் பித்தகாசம் நிவர்த்தியாகும்.

தாரேசுரம் :- சுத்திசெய்தபாதரசம் 1 பாகம், வெள்ளிபற்பம் 1/4 பாகம், மனோசிலை 1/4 பாகம், ஆடாதோடை கரும்பு இவைகளினால் இரண்டு சாமங்கள் அரைத்து பிறகு காசிக்குப்பியில் வைத்து வாலுகாயந்திரத்தில் இரண்டு சாமங்கள் எரித்து ஆறிய பிறகு எடுத்து மறுபடியுஞ் சூரணித்து மாதுழை, திரிபலை, திரிகடுகு இவைகளை சமஎடை சூரணித்து சூரணத்திற்கு சமமாக சர்க்கரையை கலந்து 1 தோலா சூரணத்தில் 2 குன்றி எடை சிந்தூரத்தைக் கலந்து சாப்பிட்டால் க்ஷதகாசங்கள் நீங்கும்.

சூரிய ரசம் :- சுத்திசெய்தபாதரசம் 1 தோலா, கெந்தி 2 தோலா, சுவர்ணமாஷிகம் 3 தோலா, தாளகம் 5தோலா, அப்பிரக பற்பம் 4 தோலா, வசம்பு, கோஷ்டம், இந்துப்பு, வசநாபி, சுக்கு, மிளகு திப்பிலி, சுட்டவெண்காரம் இவைகள் வகைக்கு 1/4 பாகம், இவைகள் யாவும் கரிசனாங்கண்ணி சாற்றினால் ஒரு நாள் அரைத்து சிமிழியில் வைத்து குன்றி எடை பிரமாணம் ஒரு மாதம் சாப்பிட்டால் விக்கல், குரற்கம்மல், காசம் இவைகள் நீக்கும். ஆட்டுப்பால் அதற்கு சமமாக சலத்தை கலந்து நெரிஞ்சல் வேர், சுக்கு இவைகளை போட்டு நீர்சுண்டி பால் அளவிற்கு வரும் வரையில் காய்ச்சி வடிகட்டி திப்பிலிச் சூரணங்கலந்து குன்றி எடை பிரமாணம் மருந்தைக்கலந்து இரவில் சாப்பிட்டால் க்ஷதகாசங்கள் நீங்கும்.

காசவிதூனன ரசம் :- சுத்திசெய்தரசம் 1 பாகம், கெந்தி 2 பாகம், யவக்ஷ¡ரம் 3 பாகம், பாதரிலவணம் 4 பாகம், மிளகு 5 பாகம் இவைகளை கல்வத்திலிட்டு இஞ்சி ரசத்தால் அரைத்து சாப்பிட்டால் பஞ்சவிதகாச ரோகங்கள், பஞ்சவித சுவாச ரோகங்கள் தீரும்.

பர்ப்படீ ரசம் :- பாதரசம் 12-பாகம், லோஹபஸ்பம் 12-பாகம், இவைகளை சிறிதுநேரம் மந்தாக்கினியால் வேகவைத்து சாணி மீது வாழைஇலை பரப்பி அதன்மீது மருந்தை பரப்பி, மேலே வாழைஇலை மூடி அதன்மீது சாணிபோட்டு ஆறியபிறகு எடுத்து அத்துடன் கண்டுபாரங்கி, சுக்கு, கடுக்காய், நொச்சி, மிளகு,திப்பிலி, ஆடாதோடை, கற்றாழை, இஞ்சி இவைகளின் கியாழத்தினால் அரைத்து உலர்த்தி லகுடபுடமிட்டால் இதை அகந்த கர்ப்பா நாமரசமென்றும், பர்ப்படீ ரசமென்றுஞ் சொல்லுவார்கள். இதில்
வேளைக்கு 2-குன்றிஎடை பிரமாணம் அனுபானத்துடன் கொடுத் தால் சகல ரோகங்கள் நீங்கும். வெற்றிலை ரசத்திலாவது அல்லது துளசி கியாழத்தில் திப்பிலி சூரணம் போட்டாவது அல்லது கோமூத்திரத்துடனாவது சாப்பிட்டால், காசங்கள், சுவாசங்கள் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

காசகேசரீ ரசம் :- சுத்திசெய்த லிங்கம், மிளகு, கோரைக்கிழங்கு, பொரித்த வெங்காரம், சுத்திசெய்த நாபி இவைகளை சம எடையாக எலுமிச்சம் பழச்சாற்றினால் ஒரு சாமம் அரைத்து உளுந்து அளவு மாத்திரைசெய்து இஞ்சி ரசத்தில் கொடுத்தால் காசங்கள், சுவாசங்கள் இவைகள் நிவர்த்தியாகும்.

நீலகண்ட ரசம் :- ரசம், கெந்தி, லோஹபஸ்பம், நாபி, சித்திரமூலம், இலவங்கம், இலவங்கபத்திரி, காட்டுமிளகு, கோரைக் கிழங்கு, மோடி, சிறுநாகப்பூ, திரிபலை, திரிகடுகு, தாம்பிரபஸ்பம் இவைகள் யாவும் சமஎடை, இவைகளுக்கு இரண்டுபாகம் வெல்லத்தை கலந்து அரைத்து கடலை அளவு மாத்திரைசெய்து சாப்பிட்டால் காசங்கள், சுவாசங்கள், குன்மங்கள், பிரமேகங்கள், விஷசுரம்,மூத்திரகிருச்சரம், மூட்கர்ப்பம், சூதகட்டி, வாதரோகங்கள் இவையாவும் நிவர்த்தியாகும்.

லோகநாத போடலீ ரசம் :- சுத்திசெய்த கெந்தி, பாதரசம்இவைகள் சமஎடை, எலுமிச்சம்பழச்சாற்றினால் அரைத்து குழம்பு போலாக்கி இதற்குச் சமஎடை தாம்பிரத்தினால் டப்பிசெய்து அதில் ஔஷதத்தை போட்டு மேல்மூடி பிறகு ஒரு பானையில் பேர்பாதி உப்பு போட்டு அதின்மீது டப்பியை வைத்து மறுபடியும் பானை நிறையும்படி உப்பு போட்டு பானை வாயைமூடி சிலைமண் செய்து 8-ஜாமங்கள் அக்கினியில் எரித்து ஆறியபிறகு எடுத்து அந்த டப்பியுடன் ஔஷதத்தையும் அதற்கு சமஎடை பலகறை பற்பமும் கலந்து சித்திரமூல ரசத்தில் அரைத்து புடமிட்டு, ஆறியபிறகு எடுத்து அத்துடன் நாபி, மிளகு சூரணஞ்சேர்த்து யாவும்மைப்போல் அரைத்து சூரணித்தால் இதை லோகநாத போடலீ ரசமெனப்படும். இதை அனுபான விசேஷத்துடன் கொடுத்தால் துர்ப்பலம், தேகமெலிவு, வீக்கம், ஆமவாதம், குன்மம், சூலை, காசங்கள், இரைப்பு, கிரகணி, மூலவியாதி, க்ஷயங்கள், பாண்டுரோகம், அக்கினிமாந்தம் அரிசி இவைகள் நிவர்த்தியாகும்.

அமிருதாரணவ ரசம் :- ரசம், கெந்தி, லோஹபஸ்பம், வெண் காரம், சித்தரத்தை, வாய்விளக்கம், திரிபலை, தேவதாரு, திரிகடுகு சீந்தில்கொடி, தாமரைத்தண்டு, நாபி, இவைகள் யாவையும் சமஎடையாக கலந்து சூரணித்து 5 முதல் 10 குன்றி எடை தேனுடன் கொடுத்தால் சகலகாசங்கள் நிவர்த்தியாகும்.

அக்கினி ரசம் :- இரசம், கெந்தி, திப்பிலி, கடுக்காய்ஆடாதோடை, அதிமதூரம் இவைகள் யாவையும் சமஎடையாகச் சூரணித்து வெல்லத்தைப் போட்டு அரைத்து கருவேலம் கியாழத்தினால் 21 நாள் பாவணை செய்து மாத்திரைகள் செய்து உலர்த்தி தேனுடன் சாப்பிட்டால் காசங்கள் நீங்கும்.


ரசயோகாக்கினி குமாரரசம் :- சுத்திசெய்தரசம், சுத்திசெய்த கெந்தி இவைகள் சமஎடை இதற்கு பேர்பாதிவசநாபி, ரசத்திற்குச்சமம் தாம்பிரபஸ்பம், இவைகளை கல்வத்திலிட்டு செருப்படை ரசத்தினால் அரைத்து மாத்திரை செய்து வாலுகாயந்திரத்தில் 13 சாமங்கள் எரித்து ஆறிய பிறகுஎடுத்து ஓளஷதத்திற்கு சமஎடை சித்திரமூலம், திரிகடுகுச்சூரணம், கருவூமத்தன் விரை, சூரணத்தை கலந்து மறுபடியும் அரைத்து
குன்றி எடை இஞ்சிரசத்தில் கொடுத்தால் மந்தாக்கினி சந்நிபாதங்கள், காசங்கள், சுவாசங்கள், குன்மங்கள், தனூர்வாதம் அஜீரணம், சூலைகள், க்ஷயங்கள் இவைகள் யாவையும்  நிவர்த்தியாகும்.

சுவயமக்கினி ரசம் :- சுத்தரசம் 1 பாகம், சுத்தி கெந்தி2 பாகம் இவைகளை கல்வத்திலிட்டு அரைத்து இதற்கு சமம் எழுகுபற்பத்தை கலந்து கற்றாழை சாற்றினால் இரண்டு ஜாமங்கள் அரைத்து உருண்டை செய்து செம்பு மடக்கில் வைத்து மூடி அதை 2 நாள் அரைத்து கல்வத்திலிட்டு மைபோல் சூரணித்து வஸ்திரகாயஞ்செய்து ஜலத்
தின் மீது விட்டால் மிதக்கும். இந்தலோகச் சூரணத்திற்கு  சமஎடை திரிகடுகு, திரிபலை, ஏலக்காய், ஜாதிக்காய், இலவங்கம் இவைகள் யாவையும் சூரணித்து கலந்து 2 குன்றி எடை தேனுடன் அருந்த அல்லது 2 குன்றி எடை ஆடுத்தும்மட்டன் வேர், கரிசனாங்கண்ணி, திப்பிலி, எள்ளு இவைகள் அனுபானத்தில் சாப்பிட்டால் க்ஷ்யகாஷங்கள் நிவர்த்தியாகும்.

சர்வாங்க சுந்தரரசம் :- ரசம், நாபி, கெந்தி, தாளகம், ஹேம மாஷிகம் இவைகள் யாவும் சுத்திசெய்து சமஎடை கல்வத்திலிட்டு செருப்படை ரசத்தினால் இரண்டு ஜாமங்கள் அரைத்து காசிக்குப்பியில் வைத்து வாலுகாயந்திரத்தில் இரண்டு ஜாமங்கள் மிருது அக்கினி யால் எரித்து ஆறியபிறகு எடுத்து 10-மிளகு, கடுக்காய்-1 இந்த இரண்டையும் சலத்தில் அரைத்து இந்த அனுபானத்தில் இரண்டு குன்றிஎடை கொடுத்தால் சிப்பிகாகாசம், சகல காசங்கள் க்ஷயரோகம் இவைகள் நிவர்த்தியாகும்.

விஜயபைரவ ரசம் :- சுத்திசெய்த ரசம் 1-பாகம், சுத்தகெந்தி 2-பாகம், திப்பிலி 3-பாகம், கடுக்காய் 4-பாகம், தானிக்காய் தோல் 5-பாகம், ஆடாதோடை ஈர்க்கு 6-பாகம், கண்டுபாரங்கி 7-பாகம், இவைகள் யாவையுஞ் சூரணித்து அரைத்து நொச்சிவேர் கஷாயத்தில் 21-நாள் அரைத்து நெல்லிக்காய் அளவு மாத்திரைசெய்து உலர்த்தி ஒரு மாத்திரை விகிதம் காலையில் தேன் அனுபானத்தில்
கொடுத்தால் சகல காசங்கள், சுவாசங்கள் நிவர்த்தியாகும்.

திரிநேத்திரக ரசம் :- தாம்பிரபஸ்பம், அப்பிரகபஸ்பம், எழுகு பஸ்பம் இவைகளை சமஎடை கல்வத்திலிட்டு பேயாவரை, தண்ணீர் விட்டான்கிழங்கு, அத்தி இலை, புளிவஞ்சி, இவைகள் ரசங்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருநாள் அரைத்து இரண்டு குன்றிஎடை அளவாக மாத்திரைகள் செய்து உலர்த்தி ஒவ்வொரு மாத்திரை விகிதம் கொடுத்தால் பித்தகாசங்கள், சகல காசங்கள் நீங்கும்.

ஆமகாசத்திற்கு சந்திராமிருத ரசம் :- ரசம், நாபி, கெந்தி, நேர்வாளம் இவைகளை சுத்திசெய்து சமஎடையாக கல்வத்திலிட்டு எருக்கன்வேர் கியாழத்தினால் 3-சாமங்கள் அரைத்து பிறகு துலாயந்திரத்தில் ஒருசாமம் எரித்து குன்றிஎடை மாத்திரைசெய்து உலர்த்தி ஒவ்வொரு மாத்திரை விகிதம் கொடுத்தால் ஆமகாசம்
நிவர்த்தியாகும்.

பாண்டுகாசங்களுக்கு காசசம்ஹார பைரவரசம் :- ரசபஸ்பம், அப்பிரகபஸ்பம், சுத்திசெய்த லிங்கம், சுத்திசெய்த நாபி, சுத்தி செய்த தாளகம், இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டு செருப்படை கியாழத்தால் இரண்டு நாள் அரைத்து குக்குடபுடமிட்டு ஆறியபிறகு எடுத்து சூரணித்து உளுந்து அளவு திப்பிலி சூரணம்
தேன்கலந்து சாப்பிட்டால் பாண்டு காசங்கள், சகலமான இருமல் கள் நிவர்த்தியாகும்.

சிலேஷ்ம ஜிம்மககாசங்களுக்கு சிலாதாளரசம் :-சுத்ததாளகம், சுத்த மனோசிலை இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டு ஆடாதோடை ரசத்தால் ஒருநாள் அரைத்து நெரிஞ்சல்வேர் கியாழத்தால் ஒருநாள் அரைத்து காசிகுப்பியில் வைத்து வாலுகா யந்திரத்தில் இரண்டு ஜாமங்கள் எரித்து ஆறியபிறகு எடுத்து சூரணித்து இதற்கு சமம் திரிகடுகு சூரணம் நொச்சிவேர்ப்பட்டை சூரணம் கலந்து அரைத்து 2-குன்றிஎடை ஔஷதத்தை முன்னை, கடுக்காய் இவைகளின் கியா ழத்தில் தேன்போட்டு சாப்பிட்டாலும் அல்லது நெரிஞ்சல்வேர்கியாழத்தில் திரிகடுகு சூரணத்தைப்போட்டு இந்த அனுபானத்துடன் சாப்பிட்டாலும் சிலேஷ்மஜிம்ம காசரோகம் நிவர்த்தி
யாகும்.

சித்திரகாதிலேகியம் :- சித்திரமூலம், மோடி, சுக்கு, திப்பிலி,  மிளகு, கோரைக்கிழங்கு, பூனைக்காஞ்சொரிவேர், கிச்சிலிக்கிழங்கு புஷ்கரமூலம், கடுக்காய், துளசி, வசம்பு, கண்டுபாரங்கி, சீந்தில்கொடி சித்தரத்தை, கடுக்காய்ப்பு இவைகள் வகைக்கு 1/4 பாகம் விகிதம் சேர்த்து அரைத்து கல்கஞ்செய்து 200 பலம் ஜலத்தில் கலக்கி 20 பலம் மீறும்படி கியாழம் காய்ச்சி வடிகட்டி அதில் வெல்லம் 10 பலம் நெய் 4 பலம் சேர்த்து லேகியாபாகமாக கிளறி ஆறிய பிறகு தேன் 4 பலம், திப்பிலிச்சூரணம் 4 பலம், மூங்கிலும்புச் சூரணம் 4 பலம், போட்டு கலந்து வைத்துக்கொண்டு சாப்பிட்டால் காசங்கள், மார்புநோய், சுவாசங்கள், குன்மங்கள் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

ஷீத்திராவ லேகியம் :- கண்டங்கத்திரி 100 பலம், கடுக்காய் 100 பலம் இவைகளை இடித்து 256 பலம் ஜலத்தில் போட்டு நாலில் ஒரு பங்கு கியாழம் மீறும்படி சுண்டக்காய்ச்சி அதில் பழைய வெல்லம் 100 பலம் கலந்து அடுப்பிலேற்றி பாகுபதம் வரும்போது திரிகடுகுசூரணம் 2 பலம், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி ஏலக்காய், அகரு, நாககேசரம்,இவைகள் யாவையும் பிரத்தியே கமாக சூரணித்து ஆறின பின்பு நெய் தேன் கூட்டிப் பிசைந்து வைத்துக்கொண்டு கொடுத்தால் சிலேஷ்மரோகங்கள், கோழை ஐந்து வித இருமல்கள், விக்கல், மார்புநோய், அபஸ்மாரமிவைகளை
நிவர்த்திசெய்து அக்கினி தீபனத்தை உண்டாக்கும்.

மஹாஷீத்திராதி லேகியம் :- கண்டங்கத்திரிவேர் 100 பலம், பஞ்சகோலங்கள் 50 பலம், மோடி 25 பலம், கண்டுபாரங்கி, சித்தரத்தை இவைகளில் தனித்தனி 1 பலம்,கடுக்காய்த்தோல் 100 பலம், இவைகள் யாவையும் 512 பலம் ஜலம் விட்டு நாலில் ஒரு பாகம் மீறும்படியாக சுண்டக்காய்ச்சி அதில் ஆடாதோடைகளீன் ரசம்
வகைக்கு 16 பலம், பழையவெல்லம் 100 பலம் போட்டு  அடுப்பிலேற்றி காய்ச்சி பாகுபதம் வரும்போது அதில் திரிகடுகு திரிபலை, மோடி, சதூர்சாதங்கள், சக்திக்ஷ¡ரம், இந்துப்பு பஞ்சலவணங்கள், பொரித்த வெண்காரம், பொரித்தப் பெருங்காயம் இவைகள் வகைக்கு 1 பலம் சூரணித்து அதில் போட்டு லேகிய பக்குவமாக கிளறி வைத்துக் கொள்ளவும். இதை சாப்பிட்டால்
இருபது வித இருமல்கள் நீங்கும்.

கண்டகாரி சூரணம் :- கண்டகத்திரி, சமூலம், திப்பிலி,மோடி, நாயுருவிவிரை, சீரகம், இந்துப்பு இவைகளை சமஎடை யாகச் சூரணித்து தேன்கலந்து சாப்பிட்டால் காசங்கள், சுவாசங்கள், க்ஷயரோகம், தீவிரமான கபரத்தவாந்திகள் நீங்கும்.

க்ஷதகாசங்களுக்கு இக்ஷ£வாதி லேகியம் :- தாமரைப்பூ, தாமரைத்தண்டு, நீலோற்பலம், சந்தனம், அதிமதுரம், திப்பிலி திரா¨க்ஷ, அரக்கு, கடுக்காய்ப்பூ, தண்ணீர்விட்டான்கிழங்கு இவை களை சமஎடையாக சூரணித்து சூரணத்திற்கு இரண்டுபாகம் தவக்ஷ£ரி கலந்துவைத்துகொள்க. பிறகு இதற்கு நான்கு பங்கு சர்க்க
ரையைக் கரும்புரசத்தில் கரைத்து அடுப்பிலேற்றி பாகுபதம்வரும் போது சூரணத்தைக் கொட்டி தேவையான அளவு நெய் கூட்டி லேகியமாய்க் கிளறி ஆறினபின்பு தேன் கூட்டிக் கலந்து வைத்துக் கொள்க. இதை முறைப்படி அருந்திவர காசரோகங்கள் தீரும்.

வாசாகூஷ்மாண்ட லேகியம் :- கலியாண பூசினிக்காய் சிறிய துண்டு 50-பலம், 16-பலம் நெய்யில் பக்குவமாக வறுத்து அதில் கற்கண்டு 100-பலம்போட்டு 64-பலம் ஆடாதோடை கியாழத்தைச்சேர்த்து அடுப்பிலேற்றி எரித்து பாகுபதம் வரும்போது அதில் தவக்ஷ£ரி, நெல்லிவற்றல், கோரைக்கிழங்கு, கண்டுபாரங்கி, இலவங்கப்பட்டை, ஏலக்காய், இலவங்கபத்திரி இவைகள் வகைக்கு1/4-பலம், ஏலக்காய், அதிவிடயம், கொத்தமல்லி, மிளகு இவைகள் வகைக்கு 1-பலம், திப்பிலி 4-பலம் இவைகளைச் சூரணித்து அதில் போட்டு 8-பலம் தேன்விட்டுக் கலந்து லேகியபதமாய்க் கிளறிச்சாப்பிட்டால் காசங்கள், சுவாசங்கள், க்ஷயங்கள், விக்கல், ரத்த பித்தம், பிலீகம், ஹிருதயரோகம், ஆமிலபித்தம், பீனசம் இவைகள் நிவர்த்தியாகும்.

பிப்பில்யாதி லேகியம் :- திப்பிலி, அதிமதுரம் இவைகளை இடித்துப்போட்டு கியாழம் காய்ச்சி அதில் சர்க்கரை, பசும்பால், நெய், கரும்புரசம் இவைகள் வகைக்கு 16-பலம், யவைமாவு, கோதுமைமாவு, திரா¨க்ஷ, நெல்லிக்காய்ரசம், நல்லெண்ணெய் இவைகள் வகைக்கு பலம்-2 சேர்த்து மந்தாக்கினியால் லேகிய
பக்குவமாய்க் கிளறி பிறகு நெய், தேன் சேர்த்து சாப்பிட்டால் காசங்கள், சுவாசங்கள், க்ஷயரோகங்கள், ஹிருதயரோகம் இவை கள் நிவர்த்தியாகும்.

கண்டகாரியாதி லேகியம் :- கண்டகத்திரி 100-பலம்,
256-பலம் ஜலத்தில்போட்டு நாலிலொன்றாய் கியாழமிட்டு 20-பலம் சர்க்கரை சேர்த்து பாகுபதமாய்க் காய்ச்சி அதில் சீந்தில்கொடி, செவ்வியம், சித்திரமூலம், கோரைக்கிழங்கு, கடுக்காய்ப்பூ, திரிகடுகு பூனைக்காஞ்சொரி, கண்டுபாரங்கி, சிற்றரத்தை, கிச்சிலிக்கிழங்கு இவைகள் வகைக்கு 1-பலம் சூரணித்து கலந்து நெய், லோகபஸ்பம் இவைகள் வகைக்கு 8 பலம் சேர்த்து பக்குவமாக லேகியபதமாய்ஆறிய பிறகு 8 பலம் தேன், மூங்கிலுப்புச்சூரணம் 4 பலம்,திப்பிலிச்சூரணம் 4 பலம் கலந்து கெட்டியான மட்பாண்டத்தி வைத்து சிலநாள் தானிய புடத்தில் கொடுத்துவர காசங்கள் விக்கல், சுவாசங்கள் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

அகஸ்தியஹரீ தக்யாதி லேகியம் :- தசமூலம், பூனைகாஞ்சொரிசங்கபுஷ்பி, கிச்சிலிக்கிழங்கு, சிற்றாமுட்டி, ஆனைத்திப்பிலி நாயுருவி, மோடி, சித்திரமூலம், கண்டுபாரங்கி, புஷ்கரமூலம் இவைகள் வகைக்கு 2 பலம், யவதானியம் 25 பலம், சலத்தில் விட்டு எட்டில் ஒன்றாக கியாழம்காய்ச்சி யவதானியம் வெந்தபிறகு வடிகட்டி கியாழத்தி லிருக்கும் கடுக்காய் விரையை, நீக்கியும் வெல்லம் 100 பலம் இவைகள் யாவையும் கலந்து லேகியமாகமாய் கிளறி ஆறிய பிறகு4 பலம் தேன் கலந்து பழகிய பானையில் வைத்து தானியபுடமிட்டு தினம் இரண்டு கடுக்காய் பிரமாணம் சாப்பிட்டுவந்தால் ஐந்துவிதகாசங்கள், கஷயங்கள், சுவாசங்கள், விக்கல், விஷமசுரம், சங்கிர ஹணி, மூலவியாதி, அருசி, ஜலுப்பு இவைகளை நிவர்த்திக்கும்.
மேனி ஆயுசுவிருத்தி, பலம் இவைகளை யுண்டாக்கும்.

ஆர்த்திரகாதி லேகியம் :- இஞ்சி 50 பலம், வெல்லம் 50 பலம், கொத்தமல்லி,ஓமம், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, ஏலக் காய், கடுகுரோகணி, சீரகம், லோஹபஸ்பம், இவைகள் வகைக்கு 1/2 பலம் வீதஞ் சூரணித்து சேர்த்து லேகிய பதமாய் கிளறி சாப்பிட்டால், காசம், மூலம், சுவாசம், பீனசம், வீக்கம், குன்மம், க்ஷயங்கள் இவைகளை நாசமாக்கும்.

வியாக்கிரிஹரீதக்யாதி லேகியம் :- கண்டங்கத்திரி சமூலம் 100 பலம், கடுக்காய் 100 பலம், 512 பலம் சலத்தில்போட்டு நாலாவது பாகம் மீறும் படி கியாழத்தை பாகுபதகாய்ச்சி பிறகு சுக்கு, இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, ஏலக்காய், சிறுநாகப்பு, இவைகள் வகைக்கு 1 பலம் சூரணம் லேகியமாய் செய்து பலத்தை அறிந்து கொடுத்தால் பித்தம், கபம், தொந்தசந்நிபாத காசம், ஷதகாசங்கள், க்ஷயரோகம் பீனசம், சுவாசரோகம், உரக்ஷதரோகம், 11 வித க்ஷயங்கள் நிவர்த்தியாகும்.

கண்டாமலக லேகியம் :- நெல்லிவற்றல் 1 1/2 சேர் 64 பலம் ஜலத்தில்போட்டு, அடுப்பிலேற்றி கியாழம்காய்ச்சி எட்டிலொன் றாக்கி வடிகட்டி அதில் கற்கண்டு 10 பலஞ் சேர்த்து பாகுபதமாக சமைத்து அதில் கர்ஜீரபழம் 2 பலம், திரா¨க்ஷ 2 பலம், சுக்கு 1-பலம், திப்பிலி 1-பலம், மிளகு 1 1/2-பலம், ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, ஓமம், சீரகம், கருஞ்சீரகம், தாளிசப்பத்திரி இவைகள் ஒவ்வொன்றும் 1 1/2-தோலா விகிதஞ் சூரணித்துப்போட்டு லேகிய பக்குவமாக சமைத்து அதில் 10-பலம் தேன்கலந்து காலை மாலை 40-நாள் சாப்பிட்டால் சகல காசங்கள், சுவாசங்கள், பித்தாதிக்கம் இவைகள் நிவர்த்தியாகும்.

காசங்களுக்கு சுண்டியாதி சூரணம் :- சுக்கு, பூனைக்காஞ்சொரி, ஆமணக்குவேர், கடுக்காய்ப்பூ, தேவதாரு இவைகளை சமஎடை யாகச் சூரணித்து வெந்நீரில் கொடுத்தாலும் அல்லது ஆமணக்கு
நெய்யிலாவது, தேனிலாவது கொடுத்தாலும் வாதகாசங்கள், சிலேஷ்ம காசங்கள் இவைகள் நிவர்த்தியாகும்.

பத்திர முஸ்தாதி சூரணம் :- கோரைக்கிழங்கு, திப்பிலி,இவைகளை சமஎடையாகச் சூரணித்து தேனுடன் சாப்பிட்டால் சிலேஷ்ம காசங்கள் நிவர்த்தியாகும்.

கடுதிரியாதி சூரணம் :- சுக்கு, திப்பிலி, மிளகு, சித்திரமூலம், தேவதாரு, சிற்றரத்தை, வாய்விளங்கம், கடுக்காய், தானிக்காய், நெல்லிப்பருப்பு, சீந்தில் சர்க்கரை இவைகளை சமஎடையாகச்சூரணித்து சூரணத்திற்கு சமம் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் காசங்கள் நிவர்த்தியாகும்.

காசச் சூரணம் :- கண்டுபாரங்கி, சுக்கு, திப்பிலி, இவைகள் சமஎடையாகச் சூரணித்து வெல்லங்கலந்து சாப்பிட்டாலும் அல்லது திரிகடுகு இவைகளை சூரணித்து அதில் தேன் நெய் கலந்துச் சாப்பிட்டாலும் காசசுவாசங்கள் நிவர்த்தியாகும்.

இலவங்காதி சூரணம் :- இலவங்கம், சாதிக்காய், திப்பிலி இவைகள் வகைக்கு 1-தோலா, தானிக்காய் 3-தோலா, மிளகு 2-தோலா, சுக்கு 4-தோலா, இவைகள் யாவையுஞ் சூரணித்து, இதற்கு சமஎடை சர்க்கரைகலந்து சாப்பிட்டால், காசசுரம், அருசி, மேகம், குன்மம், சுவாசங்கள், அக்கினிமந்தம், கிறாணி
இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

பிப்பல்யாதி சூரணம் :- சுக்கு, திப்பிலி, மோடி, தானிக்காய் இவைகளை சமஎடையாகச் சூரணித்து தேன்கலந்து சாப்பிட்டால் திரிதோஷ காசங்கள் நிவர்த்தியாகும்.

கர்ப்பூராதி சூரணம் :- பச்சைகற்பூரம், வெட்டிவேர், வாள்மிளகு, ஜாதிக்காய், ஜாபத்திரி இவைகள் சமஎடை இலவங்கம், சிறுநாகப்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு இவைகள் 1, 2, 3, 4, 5, பாகங்களாகச் சேர்த்து இவைகள் யாவையுஞ் சூரணித்து சமமாக சர்க்கரை கலந்து சாப்பிட்டால், க்ஷயம், காசம், சுவாசகாசம் வாந்தி, இவைகளை நிவர்த்திக்கும். ருசியை உண்டாக்கும்.

திரிகடுகாதி சூரணம் :- சுக்கு, திப்பிலி, மிளகு, சீரகம், சீந்தில் கொடி, சித்திரமூலம், கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், வால் மிளகு, சிற்றரத்தை இவைகள் யாவையுஞ் சமஎடையாக சூரணித்து அதற்குச் சமமாக சர்க்கரை கலந்து சாப்பிட்டால் நிவர்த்தியாகும்.

திவிக்ஷ¡ராதி சூரணம் :- சர்ஜாக்ஷ¡ரம், யவக்ஷ¡ரம், பஞ்சமூலம், பஞ்சலவணம், கிச்சிலிக்கிழங்கு, சுக்கு, குருவேர் இவைகளைச் சமஎடையாக சூரணித்து வஸ்திரகாயஞ்செய்து சாப்பிட்டால் சகல காசங்கள் நிவர்த்தியாகும்.

கணாதி குடிகைகள் :- கோரைக்கிழங்கு, சுக்கு, கடுக்காய்த்தோல் இவைகள் சமஎடையாக சூரணித்து அத்துடன் வெல்லத்தை கலந்து சுண்டையளவு மாத்திரை செய்து 3 நாள் சாப்பிட்டால் சுவாச காசங்கள் நிவர்த்தியாகும்.

ஹரீதக்யாதி குடிகைகள் :- கடுக்காய்த்தோல், திரிகடுகு இவைகள் சமஎடையாக சூரணித்து அத்துடன் வெல்லத்தைகலந்து சுண்டையளவு மாத்திரை செய்து சாப்பிட்டுவர காசங்கள் நிவர்த்தியாகும். அக்கினிதீபனம் உண்டாகும்.

திரிஜாதாதி மாத்திரைகள் :- இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, ஏலக்காய் இவைகள் வகைக்கு 1/2 தோலா, திப்பிலி 2 தோலா கற்கண்டு, திரா¨க்ஷ, அதிமதூரம், கர்ஜீரக்காய் இவைகள் வகைக்கு 4 தோலா இவைகள் யாவையும் மைபோல் சூரணித்து தேன் கலந்து மாத்திரை பதமாக்கி சிறுநெல்லிக்காய் அளவு மாத்திரை செய்து கொடுத்தால் பித்தாந்தம், இருமல், இரைப்பு, அருசி, வாந்தி, விக்கல், மூர்ச்சை, பிரமை, கஷயங்கள், தொண்டைக்கம்மல், காசம், ஆட்யவாதம் ரத்தவாந்தி, இருதயரோகம், பாரிசசூலை, தாகம், சுரம்,  இவையாவும் குணமாகும்.

மரீச்யாதி மாத்திரைகள்: - மிளகு1/4 பலம், திப்பிலி 1/2 பலம் பொரித்தவெங்காரம் 1/8 பலம், மாதுழம்பழத்தோல் 1/2 பலம் இவைகளைச் சூரணித்து அத்துடன் வெல்லம் 2 பலம் சேர்த்து 7 குன்றி எடை மாத்திரை செய்து சாப்பிட்டால் சகல காசங்கள் நிவர்த்தியாகும்.

இலவங்காதி மாத்திரைகள் :- இலவங்கம், மிளகு, தானிக்காய் தோல், பொரித்தவெங்காரம், சங்குபற்பம், இவைகளைச் சமஎடையா சேர்த்து இலவங்கக்கியாழத்தால் அரைத்து குன்றியளவு மாத்திரைகள்செய்து வேளைக்கு 1-2 மாத்திரை தேனில் சாப்பிட்டால் ஒரு ஜாமத்தில் காசரோகங்கள் நிவர்த்தியாகும்.

தனஞ்சய மாத்திரைகள் :- மருதமரப்பட்டை, இலவங்க  பட்டை, இலவங்கபத்திரி, ஏலக்காய், திப்பிலிமூலம், திரிகடுகு இவைகளை சமஎடையாகச் சூரணித்து இஞ்சிரசத்தால் மாத்திரை பக்குவமாகும் வரையிலும் சிறு சுண்டையளவு மாத்திரை கள் செய்து சாப்பிட்டால் பிரபலமான காசங்கள் நிவர்த்தியாகும்.

கதிராதி மாத்திரைகள் :- கருங்காலி மரப்பட்டை, புஷ்க்கர மூலம், கடுக்காய்ப்பூ, காயபலம், கண்டுபாரங்கிமூலம், கடுக்காய்த்தோல், இலவங்கம், திரிகடுகு அதிவிடயம், ஓமம், பூனைகாஞ்சொரி,
சீந்தில்கொடி, கண்டங்கத்திரி, முள்ளங்கத்திரி, தானிக்காய்த்தோல் இவைகள் வகைக்கு 1/2-பல்ம் விகிதம் சேர்த்து மைப்போல் சூரணித்து இதற்கு சமபாகம் கருங்காலிசக்கை சுரணத்தை கலந்து, மாதுளம்
பழத்தோல், கண்டங்கத்திரிவேர், கருங்காலிபட்டை, இஞ்சி இவைகளின் சாறுகள், கருவேலன்பட்டை இலை இவைகளின் கியாழம், ஆடாதோடை இலைரசம் இவைகளால் தனித்தனி 7-நாள் அரைத்து சுண்டையளவு மாத்திரைகள் செய்து கொடுத்தால் காசசுவாசங்கள் வெகுகாலமா யிருந்தாலும் நிவர்த்தியாகும்.

வியோஷாதி மாத்திரைகள் :- திரிகடுகு, சரக்கொன்றைப்புளி, செவ்வியம், தாளிசப்பத்திரி, சித்திரமூலம், சீரகம், புளித்தோல் இவைகள் வகைக்கு 1/4-பலம், இலவங்கபட்டை, ஏலக்காய், இலவங்கபத்திரி இவைகள் வகைக்கு 1/8-பலம் எடை, வெல்லம் 20-தோலா இவைகள் யாவையும் மாத்திரை பதமாய் அரைத்து 1/4-பலம் பிரமாண மாத்திரைகள் செய்து காலையில் சாப்பிட்டால் சகல காசங்கள், பீநசம், இரைப்பு, அருசி, தொண்டைக்கம்மல் இவைகள் நிவர்த்தியாகும்.

பிப்பல்யாதி மாத்திரைகள் :- திப்பிலி, புஷ்க்கரமூலம், கடுக் காய்த்தோல், கடுகு, கிச்சிலிக்கிழங்கு, கோரைக்கிழங்கு இவைகள் சமஎடையாகச் சூரணித்து வெல்லத்தை கலந்து சுண்டையளவு மாத்திரைகள் செய்து சாப்பிட்டால் வெகுநாளாக விருத்தியடைந்தசுவாசகாசங்கள் நிவர்த்தியாகும்.

கபாக்கினி மாத்திரைகள் :- பச்சைகர்ப்பூரம் 1/8-பலம், கஸ்தூரி 1/8-பலம், இலவங்கம் 1/2-பலம், மிளகு, திப்பிலி, தானிக்காய்த்தோல், கோரோசனம் இவைகள் வகைக்கு 1/2-பலம், மாதுளம் பழத்தோல் 1-தோலா இவைகள் யாவுக்கும் சமம் கருங்காலிவேர்ப்பட்டைச் சூரணத்தைச் சேர்த்து அரைத்து உளுந்தளவு மாத்திரை செய்து சாப்பிட்டால் காசங்கள் நிவர்த்தியாகும்.

இருமலுக்கு தசமூலாதி கிருதம் :- தசமூலகியாழம், கண்டு பாரங்கி கல்கம், 10 காடை பஷீகளின் மாமிசக்கியாழம் இவைகளுடன் நெய்யை கலந்து கிருதபக்குவமாக காய்ச்சிக் கொடுத்தால் வாதகாசங்கள் நிவர்த்தியாகும்.

வியோஷாதி கிருதம் :- திரிகடுகு, ஓமம், சித்திரமூலம், சீரகம், வசம்பு, செவ்வியம், இவைகளைச் சமஎடையாகக் கல்கஞ்செய்து ஆடதோடை ரசமும் தேனும் கலந்து நெய்வார்த்து கிருதபக்கு வமாகச் சமைத்து கொடுத்தால் கபம்சம்பந்தமான காசசுவாசங்கள்  நிவர்த்தியாகும்.

பிப்பல்யாதி கிருதம் :- திப்பிலி, வெல்லம், ஆட்டுப்பால் இவை களுடன் நெய்யை கலந்து கிருதபக்குவமாக காய்ச்சிக் கொடுத்தால் க்ஷயகாசங்கள் நீங்கும்.

நிர்குண்டீ கிருதம் :- நொச்சி இலை ரசம் 1 பங்கிற்கு 4 பாகம் அதிகமாக நெய்யை கலந்து கிருதபக்குவமாகும் வரையிலும் காய்ச்சி அதில் செவ்வியம், சித்திரமூலம், வாய்விளக்கம், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, ஏலக்காய், நாககேசரம், கடுகு ரோகணி, கோஷ்டம், இவைகள் சமஎடையாக சூரணித்து நெய் யின் எடையில் எட்டில் ஒரு பாகம் சேர்த்து கிருதபக்குவமாக காய்ச்சி வைத்துகொள்ளவும். உச்சிக்கரண்டி வீதம் கொடுத்தால் காசசுவாசங்கள் நிவர்த்தியாகும்.

வியாக்கிறாதி கிருதம் :- கண்டங்கத்திரி ரசத்தில் சிற்றரத்தை காயபலம், நெரிஞ்சல், திரிகடுகு நெய் இவைகளை கலந்து கிருதபக்கு வமாக காய்ச்சிக் கொடுத்தால் ஐந்து வித காசங்கள் நிவர்த்தியாகும்.

குடூச்யாதிகியாழம் :- சீந்தில்கொடி, ஆடாதோடை, கண்டங்கத்திரி இவைகளின் கியாழத்திலாவது அல்லது கல்கத்திலாவது நெய் கலந்து காய்ச்சிய கிருதத்தை கொடுத்தால் புராணசுரம் காசம், சுவாசம், அக்கினிமந்தம், இவைகள் நிவர்த்தியாகும்.

திரியூஷணாதி கிருதம் :- திரிகடுகு, திரிபலை, திரா¨க்ஷபூசினி, ஆடாதோடை, சுக்கு, வட்டத்திருப்பி, தேவதாரு, கோரைக்கிழங்கு, சதகுப்பை, சித்திரமூலம், கிச்சிலிக்கிழங்கு, கண்டங்கத்திரி, புங்கண், மணத்தக்காளி, தண்ணீர்விட்டன்கிழங்கு, நெரிஞ்சல் நிலப்பூசினி இவைகள் வகைக்கு 1 தோலாவிகிதஞ்சேர்த்து அரைத்து 64 தோலா பசும் நெய்யில் கலந்து நெய்க்கு நாலு பாகம்அதிகமாக பால் கலந்து கிருதபக்குவமாக காய்ச்சி கொடுத்தால் காசங்கள், சுரங்கள், குன்மங்கள், அருசி, பீலிகை, தலை, இருதயம் பக்கங்கள் இவைகளில் நோய், காமாலை, மூலம், வாய்வு, க்ஷயங்கள் இவைகள் நிவர்த்தியாகும்.

கண்டகாரீ கிருதம் 
:- கண்டங்கத்திரி சமூலமாக இடித்துபிழிஞ்சரசம் 64-பலம், நெய் 16-பலம், சிற்றாமுட்டி, திரிகடுகு, வாய்விளங்கம், கிச்சிலிக்கிழங்கு, மாதுளம்பட்டை, சவ்வர்ச்சலவ ணம், யவக்ஷ¡ரம், சுக்கு, நெல்லிக்காய்த்தோல், கோஷ்டம், சிகப்பு சாரணை, கண்டங்கத்திரி, கடுக்காய், ஓமம், சித்திரமூலம், திரா¨க்ஷ,
செவ்வியம், வெள்ளைசாரணை, பூனைகாஞ்சொரி, சரக்கொன்னைப்புளி, கடுக்காய்ப்பூ, இலவங்கபத்திரி, கண்டுபாரங்கி, சித்தரத்தை நெரிஞ்சில் இவைகளின் கியாழம் அல்லது கல்கம்சேர்த்து கிருத பக்குவமாக காய்ச்சி சாப்பிட்டால் சகல காசங்கள், சுவாசங்கள்,விக்கல், ஐந்துவித இருமல் இவைகள் நீங்கும்.

கண்டங்கத்திரி லேகியம் :- கண்டங்கத்திரி சாறு பலம்-1 1/4, துளசிச்சாறு பலம்-2 1/2, ஆடாதோடை இலைச்சாறு பலம்-3 3/4, நல்ல தேன் பலம்-7 1/2, சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், ஏலம், அதிமதுரம், இலவங்கம், இலவங்கப்பட்டை, சிற்றரத்தை, பேறரத்தை, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, தாளிச பத்திரி வகைக்கு வராகனெடை-1/2.

மேற்கூறப்பட்ட பதினைந்துவித கடைச் சரக்குகளை இடித்துச்சூரணம் செய்து வஸ்திரகாயம் செய்து வைத்துகொள்க. பிறகு இத்துடன் மூலிகைச்சாறு தேன் முதலியவைகளை ஒன்று சேர்த்து ஓர் புது சட்டியிலிட்டு அடுப்பிலேற்றிச் சிறுதீயாக எரித்து துழவிக்கொடுத்து கொண்டே வரவும், விரலழுந்தும் பாகுபதத்தில்கீழிறக்கி பதனஏ செய்க. இதில் வேளைக்கு சுண்டக்காய் பிரமாணம் தினம் மூன்று வேளை அருந்திவர இருமல், ஈளை, சுவாசம், காசம், கபக்கட்டு முதலியன குணமாகும். குழந்தைகட்கு இதில சிறிதளவு விரலால் தொட்டு அடிக்கடி நாவில் தடவிவர கக்குவாயிருமல், கபக்கட்டு முதலியன குணமாகும்.

தூதுவளைக் கிருதம் :- தூதுவளை பலம்-20, கண்டங்கத்திரி, சிறுகாஞ்சொரி, ஆடாதோடை, மிளகு, கடுக்காய், திப்பிலி வகைக்குப் பலம்-4 இவைகளை இடித்து இரு துணி நீரில் போட்டு பதினாறிலொன்றாகக்குடிநீரிட்டு, அதில் ஆவின் பால், நெய் வகைக்குப்படி-2 கூட்டி, அதில் சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்
காய், தான்றிக்காய், தாளிசப்பத்திரி, கோஷ்டம், அக்ராகாரம், வாய் விளஙகம், கருஞ்சீரகம், வாய்மிளகு, சிற்றரத்தை, பேரரத்தை ஏலம், கிராம்பு, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, வகைக்குக் கழஞ்சு-3 வீதம் இடித்துச் சூரணித்து ஆவின்பால் விட்டு அரைத்துக் கலந்துஅடுப்பிலேற்றிச் சிறுதீயாக எரித்து கிருதபதமாகக் காய்ச்சிவடித்து வைத்துக்கொண்டு வேளைக்கு 1-2 தேக்கரண்டி வீதம் தினம் இரு வேளை சிறிது சர்க்கரை சேர்த்து அரை அல்லது ஒரு மண்டலம் சாப்பிட காசம் முதலிய கபரோகங்கள் யாவும் குணமாகும்.

ஆடாதோடைக் குடிநீர் :-ஆடாதோடை, துளசி, கண்டங்கத்திரி வகைக்கு பலம்-1, இவைகளை 1/4-படி நீரிலிட்டு வீசம்படி யாகச் சுண்டகியாழமிட்டு வடிகட்டி இருவேளையாக பங்கிட்டு காலை மாலை இருவேளை ஒரு சிட்டிக்கை திப்பிலிச் சூரணம் சேர்த்துஅருந்திவர இருமல், கபக்கட்டு முதலியன குணமாகும்.

தாளிசாதிச் சூரணம் :- தாளிசப்பத்திரி பலம்-10, சுக்குபலம்- 2, திப்பிலி பலம்-2, கூகை நீறு பலம்-3, மிளகு பலம்-1 1/2, ஏலம்பலம்-1/2, இலவங்கபட்டை பலம்-1/2, சீனி பலம்-20, இவ்ற்றுள் சர்க்கரை தவிர மற்றவைகளை இடித்துச் சூரணீத்து வஸ்திகாரஞ் செய்து பிற்கு சர்க்கரையை கலந்து வைத்துகொண்டு வேளைக்கு
திரிகடிபிரமாணம் தினம் இரு வேளையாக அருந்திவர நாட்பட்ட  இருமல், ஈளை, காசம் முதலிய கபநோய்களும், பசிமந்தம், அஜீரணம் முதலியவைகளும் குணமாகும்.

பவழ பற்பம் :- சுத்திசெய்த இரண்டு பலம் நற்பவழத்தைப்பொடித்து கல்வத்திலிட்டு ஒரு முயலின் ரத்தத்தை விட்டுஅரைத்து உலர்த்தவும். பிற்கு அம்முயலின் விலா, கழுத்து, கால் எலும்புகளை மாமிசமில்லாமல் சீவி எடுத்து சுத்திசெய்து உலர்த்தி இடித்து தூள்செய்து, முன் அரைத்த பவளத்துடன் சேர்த்து கல்வத்திலிட்டு குமரிச்சாறுவிட்டு இரண்டு ஜாமம் நன்கு அரைத்து மெழுகு பதத்தில் வில்லை செய்துலர்த்தவும். பிற்கு தூதுவளை,கண்டங்கத்திரி இவ்விரண்டு இலைகளையும் அரைத்து ஒரு ஜாண் அகலமுள்ள வறட்டிகளை போல இரண்டு செய்து, இவைகளுக்கு இடையில் மருந்து வில்லையை வைத்து அழுத்தி, ஒரங்களை பொருந்தும்படிக்கவனித்து இதன் மீது 10, 15 சீலைமண் வலுவாக செய்து ஈரம் வரள சாம்பலில் புரட்டி 60-எருவில் புடமிடவும். ஆறினபின்மருந்து வில்லையை அரைத்து வைத்துகொள்க. இதில் வேளைக்கு குன்றிஎடை வீதம் தினம் இரு வேளை நெய் அல்லது தக்கஅனுபானங்களில் கொடுத்துவர இருமல், ஈளை, காசம், முதலியன தீரும்.

பாவன திப்பிலி :- ஒரு பலம் திப்பிலியை ஆடாதோடைச்சாறு, துளசிச்சாறு, கண்டங்கத்திரிச்சாறு, கரிச்சாலைசாறு, இஞ்சிச்சாறு, முசுமுசுக்கைச்சாறு, நாயுருவிச்சாறு ஆகிய இவைகள் ஒவ்வொன்றிலும் மும்மூன்று நாள் ஊறவைத்து ரவியில் வைத்துவந்து கடைசியில் இத்துடன் ஒருபலம் எலுமிச்சம் பழச்சாறும், 1/2-பலம் இந்துப்பும் சேர்த்துக்கிளறி ரவியில் வைத்து முற்றும் உலர்த்த
பின்பு எடுத்துவைத்துகொள்க. இதில் வேளைக்கு ஒரு திப்பிலி வீதம் தினம் 1-அல்லது 2-வேளை அருந்திவர இருமல், ஈளை, சுவாசகாசம் முதலியன குணமாகி பசி தீபனமும் ஏற்படும்.

கரிசாலைத் தைலம் :- கரிச்சாலைச்சாறு, நல்லெண்ணெய் வகைக்குச் சமன் எடையாக ஓர் தைல பாண்டத்திலிட்டு அடுப்பிலேற்றிச்சிறுதீயாக எரித்து பதமுறக் காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் ஒரு வேளையாக ஒரு மண்டலம் அருந்த காச நோய் தீரும்.

தாளிசபத்திரி சூரணம் :- தாளிசபத்திரி பலம்-10, சுக்கு,மிளகு, திப்பிலி வகைக்குப் பலம்-2, கூகைநீறு பலம்-3, ஏலம், இலவங்கப்பட்டை வகைக்குப் பலம்-1/2, இவைகளை இளவறுப்பாய் வறுத்திடித்துச் சூரணித்து சமன் சர்க்கரை கலந்து வைத்துக்கொண்டு வேளைக்கு 1/2 வராகனெடை வீதம் தினம் இரு வேளையாக உண்டுவர இருமல், ஈளை, காசம் முதலியன குணமாகும்.

திப்பிலிச் சூரணம் :- சுக்கு வராகனெடை-8, திப்பிலி வராக னெடை-4, மிளகு வராகனெடை-2, ஏலம் வராகனெடை-1, கிராம்பு வராகனெடை-1/2, சிறுநாகப்பூ வராகனெடை-1/4, இவைகளை பொன்மேனியாக வறுத்திடித்துச் சூரணித்து வஸ்திரகாயஞ்செய்து, இத்திடன் சமனெடை பாலில் பிட்டவியலாக வேகவைத்து உலர்த்தி இடித்து சூரணித்து வஸ்திரகாயஞ்செய்த அமுக்கிறாக்கிழங்கு சூரணம் சேர்த்து இவைகளின் மொத்த எடைக்குச் சமன் சீனி கூட்டிக் கலந்து வைத்துக்கொள்க. இதில் வேளைக்கு 1/2 வராகனெடை வீதம் தினமிரு வேளையாக தேனிலாவது, நெய்யிலாவது, பாலிலாவது அருந்திவர காசரோகங்கள் யாவும் குணமாகும்.

தாளிசாதிச் சூரணம் :- தாளிசப்பத்திரி பலம்-5, ஏலம், கிராம்பு, ஜாதிக்காய், ஜாபத்திரி, வால்மிளகு, வாய்விளங்கம், இலவங்க பட்டை, திப்பிலி, சீரகம், கொத்தமல்லி விதை, கோஷ்டம், அக்ரா
காரம், கடுக்காய், நெல்லிவற்றல், தான்றிகாய், சோம்பு, சடாமாஞ்சி, வகைக்கு பலம் 1/2 இவைகளை இளவறுப்பாய் வறுத்திடித்து வஸ்திரகாயஞ்செய்து, அத்துடன் சமன் சர்க்கரை கலந்துவைத்துக்
கொண்டு வேளைக்கு 1/2 வராகனெடை வீதம் தினமிரு வேளையாக தேன், நெய், பால் முதலிய அனுபானங்களி லேதேனுமொன்றில் அருந்திவர இருமல், சுவாசம், காசம், ஈளை, க்ஷயம், அஸ்திசுரம், தாகம், பித்தாதிக்கம், கிரஹணி முதலியன குணமாகும்.

தூதுவளைச் சூரணம் :- தூதுவளைப்பழம், சிவகரந்தைப்பழம், கண்டங்கத்திரிப்பழம் வகைக்குப் பலம்-5 இவைகளை நன்கு உலர்த்தி இடித்துச் சூரணித்து வைத்துகொள்ளவும், பிறகு இத்துடன் மிளகு, திப்பிலி, சிற்றரத்தை வகைக்குப் பலம்-1, தாளிசப்பத்திரிபலம் 3, அதிமதூரம் பலம் 3, இவைகளை பொன் மேனியாக வருத்து இடித்து சூரணித்து சேர்த்து கலந்து வைத்துக்கொண்டு இதில் வேளைக்கு திரிகடிப்பிரமாணம் தினம் இரு வேளையாக சமன் சர்க்கரை கலந்து நெய் அல்லது பாலில் அருந்திவர கபரோகங்கள் யாவும்
குணமாகும்.

அமுர்தாதி லேகியம் :- ஆறு படி ஆவின் பாலில் அரைவீசை சீனாகற்கண்டை பொடித்து போட்டு கரைத்து அடுப்பிலேற்றிக்காய்ச்சி பாகுபதம் வரும்போது அதில் சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், அதிமதூரம், ஏலம், கோஷ்டம், இலவங்கம், சீரகம், சிறுநாகப்பூ, சிறுதேக்கு, நன்னாரிவேர்ப்
பட்டை, தூதுவாழை, சடாமாஞ்சி, சாதிக்காய், சாதிப்பத்திரி, தாளிசப்பத்திரி வகைக்கு கழஞ்சு 5, இவைகளை இடித்து வஸ்திரகாயஞ் செய்து சூரணித்து சீந்தில் சர்க்கரை பலம் 10 சேர்த்துக்கலந்து தூவி நெய் படி 1 கூட்டி கிளறி லேகிய பதமாய் செய்து கீழிறக்கி ஆறின பின்பு தேன் உழக்கு சேர்ந்து வைத்துக்கொள்க. அதில் வேளைக்கு நெல்லிக்காய் அளவு வீதம் தினம் வேளையாகதனியாகவாவது அல்லது இத்துடன் பவளபற்கம், முத்துச்சிப்பி பற்பம், தாளகபற்பம், வெள்ளிபற்பம், பூரணசந்திரோதயம், அய காந்தச்செந்தூரம் போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை கூட்டியாவது அருந்திவர கபநோய்கள் யாவும் குணமாகும்.

நெல்லிக்காய் லேகியம் :- நெல்லிவற்றல் பலம் 100, இதை இடித்து தூணி நீரிட்டு எட்டொன்றாக சுண்டக்காய்ச்சி வடிகட்டி அதில் சர்க்கரை வெல்லம் பலம் 10 கரைத்து வடிகட்டி  கடாயிலிட்டு அடுப்பிலேற்றி எரித்து பாகுபதத்தில் சுக்கு, மிளகு திப்பிலி, ஏலம், ஓமம், அதிமதூரம், கிறாம்பு, சித்திரமூலம், குங்கிலியம், கூகைநீர் வகைக்கு பலம்1 பொடித்து தூவி நெய்படி 1/2 பாக்களவு வீதம் தினம் இருவேளையாக ஒரு மண்டலம் அருந்திவர
கபரோகங்கள் நீங்கும்.

அரத்தையாதி லேகியம் :- சிற்றரத்தை, திப்பிலி, தாளிசபத்திரி, அக்ராகாரம் வகைக்கு 2, கண்டங்கத்திரி வேர் பலம் 8, இவைகளை இளவருப்பாய் வருத்திடித்து சூரணித்து வைத்துக்கொள்க. பிறகு உழக்கு பசும்பாலில் 15 பலம் சர்க்கரையைக்கரைத்து ஓர் கடாயிலிட்டு அடுப்பிலேற்றி எரித்து பாகுபதம் வரும் போது நெய் ஆழாக்கு விட்டு லேகிய பதமாய் கிண்டி ஆறின பின்பு
தேன் உழக்கு விட்டு பிசைந்து வைத்துக்கொள்க. இதில் வேளைக்கு பாக்களவு வீதம் தினம் இருவேளையாக அருந்திவர ஈளை,இருமல் காசம், முதலிய கபரோகங்கள் நீங்கும்.

திப்பிலியாதி ரசாயனம் :- திப்பிலி பலம்-10, சுக்கு பலம்-10, மிளகு பலம்-5, சீரகம், சோம்பு, குரோசோணியோமம், சிற்றரத்தை, பேரரத்தை, தாளிசபத்திரி, இலவங்கம், இலவங்க பட்டை, ஏலம், இலவங்கபத்திரி, கடுக்காய், நெல்லிகாய், தான்றிக்காய், சித்திரமூலவேர்ப்பட்டை வகைக்கு பலம்-2 இவைகளை இளவறுப்பாய் வறுத்திடித்துச் சூரணித்து வஸ்திகாரஞ்செய்து சமன் சர்க்கரை சேர்த்து தேன்விட்டு பிசைந்து மெழுகுபதத்திற்குச் செய்து ஜாடியில் பத்திரப்படுத்தவும். இதில் வேளைக்கு சிறுகொட்டைப்பாக்களவு தினம் இரு வேளையாய் அரை முதல் ஒரு மண்டலம் அருந்திவர சிலேஷ்மரோகங்கள் யாவும் குணமாகும். நாட்பட்டை இருமல், சுவாசகாசம் இவைகட்கு மிக்க பயனைத்தரும்.

தூதுவளைக் கிருதம் :- தூதுவளை சமூலம் பலம்-10, கண்டங்கத்திரிச் சமூலம், கறிமுள்ளிசமூலம் வகைக்கு பலம்-50, இவை சதைத்து ஓர் பாண்டத்திலிட்டு, 80-படி ஜலம் விட்டு அடுப்பி லேற்றி எரித்து எட்டிலொன்றாய்ச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதில் பசும்நெய், பசும்பால் வகைக்கு படி-5, இஞ்சிச்சாறு படி-1 1/4, சேர்த்து கலக்கி சிறுநாகப்பூ, நன்னாரிவேர், சித்திரமூலவேர், சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிகாய், தான்றிக்காய்,
கோஷ்டம், தாளிசப்பத்திரி வகைக்கு வராகனெடை-5 செவ்வல்லிக்கொடி, சடாமாஞ்சில், சிறுகாஞ்சொரிவேர், ஆடாதோடைவேர், அதிமதுரம், சீரகம், தேற்றாங்கொட்டை வகைக்கு பலம்-1 1/4, கண்டங்கத்திரி வேர், முசுமுசுக்கைவேர் வகைக்கு பலம்-2 1/2, இவைகளைச் சூரணித்து பால்விட்டரைத்து கலக்கி தைலபாண்டத்தி லிட்டு, அடுப்பிலேற்றிச் சிறுதீயாக எரித்து வண்டல் மெழுகுபதம் வருஞ்சமயத்தில் கிருதபக்குவம் பார்த்து கீழிறக்கி வடித்து ஆறின பின்பு அதில் நல்ல தேன் படி-1/2, கற்கண்டுத்தூள் பலம்-5, சேர்த்துக் கலந்து வைத்துக்கொள்ளவும்.

இதில் வேளைக்கு 1-2 தேக்கரண்டி வீதம் தினம் இருவேளை யாய் அருந்திவர இருமல், ஈளை, சுவாசம், காசம் முதலிய கபரோக கங்கள் குணமாகும்.

வேறு முறை :- ஆவின்நெய், ஆவின்பால் வகைக்கு படி-1,தூதுளம்பழச்சாறு, ஈரிள்ளிச்சாறு வகைக்கு படி-1/2, இவைகளை ஓர் பாண்டத்திலிட்டு அதில் தூதுவளை இலை, தூதுவளை வேர், கண்டங்கத்திரிவேர், கண்டங்கத்திரி இலை, முடக்கத்தானிலை, முசுமுசுக்கையிலை, சிறுவழுதுனைவேர், ஆவாரைவேர்ப்பட்டை வகைக்கு ஒரு எலுமிச்சங்காய் பிரமாணம், மிளகு, திப்பிலி, சீரகம், அதிமது ரம், கோஷ்டம், கஸ்தூரிமஞ்சள், வாய்விளங்கம், கொத்தமல்லி விதை, ஏலம், தாளிசப்பத்திரி வகைக்கு வராகனெடை-5, சிற்றரத்தை வராகனெடை-8, இலவங்கபட்டை பலம்-1, சாதிக்காய், கிராம்பு வகைகு வராகனெடை 3, சாதிபத்திரி வராகனெடை-2, சீனி
பலம் 3, இவைகள் யாவும் இடித்துச் சூரணித்து பால்விட்டரைத்து கலக்கி காய்ச்சி கிருதபக்குவமாய் வடித்து வைத்துக்கொள்ளவும். இதில் வேளைக்கு 1,2 வீதம் தினம் இருவேளையாக அருந்திவர க்ஷயம், காசம், முதலிய சிலேத்தும ரோகங்கள் தீரும். புளி நீக்கி இச்சாபத்தியமாக இருத்தல் நன்று.

வேறு முறை :- தூதுவளை, கண்டங்கத்திரி, ஆடாதோடை முசுமுசுக்கை, இம்பூரல் வகைக்குப் பலம் 25, மிளகு, திப்பிலி சிற்றரத்தை, அதிமதூரம், தாளிசபத்திரி, கடுக்காய்த்தோல் வகைக்குப்பலம் 1 இவைகளை சதைத்து 16 படி நீரிலிட்டு, இரண்டு படி அளவிற்கு சுண்டக்காய்ச்சி அத்துடன் ஆவின்பால் 2 படி, ஆவின்நெய் 2 படி, கூட்டி, திரிகடுகு, திரிபலை, தாளிசபத்திரி, கோஷ்டம்
அக்ராகாரம், வாய்விளக்கம், சீரகம், ஓமம், சிற்றரத்தை, பேரரத்தை வால்மிளகு, ஏலம், கிறாம்பு, சாதிக்காய், சாதிப்பத்திரி, வகைக்கு கழஞ்சு 3, ஆவின்பாலாலறைத்து போட்டு காய்ச்சி, கிருதபதத் தில் வடித்து வைத்துக்கொளக. வேளைக்கு 1 கரண்டி வீதம் தினம் இரு வேளையாக அருந்திவர காசநோய் குணமாகும்.

செம்முள்ளித்தைலம் :- செம்முள்ளிச்சலம் பலம் 10 இதைச்சதைத்து ஓர் பாண்டத்திலிட்டு, 4 மரக்கால் ஜலம் விட்டு அடுப்பிலேற்றி எரித்து எட்டிலொன்றாய் சுண்டக்காய்ச்சி வடிகட்டி அதில் எண்ணெய் படி 1/2 விட்டு கருஞ்சீரகம், கோஷ்டம் கற்றாழை வேர், தக்கோலம் வகைக்கு பலம் 1 வீதம், அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து தைலபதமாய் காய்ச்சி வடிக்கவும். இதை முடித்தைலமாக உபயோகித்து வர சுவாச காசம், காசம் முதலிய கபம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

காசத் தைலம் :- நல்லெண்ணெய் பசும்பால் வகைகுப்படி 1, இதில் மிளகு சீரகம், அதிமதூரம் வகைக்குப் பலம்1,
சண்பகமொட்டு பலம் 1/2 இவைகளை பால்விட்டரைத்து சேர்த்து தைலபாண்டத்திலிட்டு தைலபதமாய் காய்ச்சி வடித்துவைத்துக்கொண்டு அப்பியங்கன ஸ்கானஞ்செய்து வர ஈளை,இருமல் காசம், முதலியன குணமாகும்.

காகமாசித்தைலம் :- சிகப்பு மணத்தக்காளி இலைச்சாறு, நல் லெண்ணெய் வகைகுப் பலம் 1/4 , இதில் மிளகு, சுக்கு, திப்பிலி வகைகுப் பலம் 1/4 வீதம் சூரணித்து சேர்த்து வேளைக்கு 1,2 விதம் தினம் இரு வேளையாக ஒரு மண்டலம் அருந்தி வர சுவாச காசம், காசம் முதலியயன குணமாகும்.

தாளக பற்பம் :- வெடியுப்பு, கோதுகொட்டை நீக்கிய பழம்
புளி இவையிரண்டும் வகைக்குப் பலம்-10 வீதம் எடுத்து கல்லுரலிலிட்டு இடிக்க மெழுகுபோலாகும். இதைச் சிறு வில்லைகளாய்த் தட்டி வெய்யலில் நன்குலர்த்தி, ஓர் இரும்பு கடாயை அடுப்பிலேற்றிஎரித்து நன்கு சூடானபின்பு மேற்படி வில்லைகளை ஒவ்வொன்றாய்க்கொளுத்தி கடாயில் போடவும். வில்லைகள் எல்லாம் மத்தாப்பு
போல் நன்குப் பற்றி எரிந்து கரியாகும். (அப்போது அதினின்று எழும்பும் புகை முகத்தில் தாக்காமல் சற்று தூரமாயிருந்து செய்ய வேண்டும்.) பிறகு எல்லாம் எரிந்து கரியானதை சிலமணி நேரம் வருத்துவர சாம்பல்போல் வெளுத்துவரும். பிறகு இத்துடன் நாலில் ஒரு பங்கு நாட்டு நவச்சாரம் தூள்செய்து பிசறி பீங்கான்
தட்டிலிட்டு பனியில் வைக்க ஜெயநீர் கிடைக்கும். இதற்கு வெடியுப்பு ஜெயநீர் என்று பெயர். இப்படி தினந்தோறும் பனியில் வைத்து கிடைக்கும் ஜெயநீரை சேகரப்படுத்தவும்.

பிறகு சுண்ணாம்புகற்களின் இடையில் வைத்து பனங்கள்
விட்டு மூன்றுமுறை தாளித்து சுத்திசெய்து எடுத்த ஒரு பலம் தாளகக் கட்டியை ஓர் மண்ணோட்டில் வைத்து அடுப்பிலேற்றிச்சிறு தீயில் எரித்து முன் முடித்து வைத்துள்ள வெடியுப்பு ஜெய நீரில் பாதி பாகத்தை சிறிதுசிறிதாக சுருக்கு கொடுத்தி எடுக்க தாளகமாந்து சிவந்த நிறத்துடன் ஒருவகையான கட்டாகும்.
பிறகு இதைக் கல்வத்திலிட்டுப் பொடித்து மிகுதியுள்ள வெடி யுப்பு ஜெயநீரில் சிறிதுவிட்டு அரைத்து ஒரே வில்லையாகச் செய்து நன்கு உலர்த்தி ஓர் மண்ணோட்டில் கற்சுண்ணாம்பைக் கொட்டி
அழுத்தி அதன்மீது தாளக வில்லையை வைத்து மேலும் கற்சுண்ணாம்பைக் கொட்டி நன்கு அழுத்தி மேலகல் மூடி வலுவாய்ச்சீலைமண்செய்து 5-முதல் 10-வறட்டிக்குள் சிறுபுடமாய்ப் போடவும். ஆறினபின்பு பிரித்து வில்லையைப் பார்க்க மஞ்சள்நிறம் சிறிது மாறி வெளுத்து வருவதுபோல தோன்றும். பிறகு இதை மீண்டும் கல்வத்திலிட்டு முன்போல் வெடியுப்பு ஜெயநீர் விட்டு அரைத்து வில்லைசெய்து உலர்த்தி கற்சுண்ணத்தினிடையில் வைத்து வலுவாய் சீலைசெய்து முன்போல் 10-15 விறட்டியில் புடமிடவும். இப்படி வெளுக்கும் வரையில் அதாவது இரண்டு
மூன்று புடத்திற்குள் அவசியம் வெளுத்து நல்ல பற்பமாகும். அரைத்து வைத்துகொளக. இதில் வேளைக்கு 2-3 அரிசிப் பிரமாணம் தினம் இருவேளையாக தக்க அனுபானங்களில் கொடுத்து வர க்ஷயம், ஈளை, காசம், சுவாசம், கபசுரம் முதலிய கபரோகங்கள் குணமாகும்.

காசங்களுக்கு பத்தியங்கள் :- அரிசிமாவு, கோதுமை,உளுந்து, பச்சைபயறு, கொள்ளு, ஆட்டுநெய், பால், கோவைப்பழம், கத்திரிக்காய், இளமுள்ளங்கி, பேயாவரை இலை, பாலைக்கீரை சிறு கீரை மாதுழம் பழம், திரா¨க்ஷ, வெங்காயம், நெல்ப்பொரி சுக்கு, மிளகு, திப்பிலி, வெந்நீர், தேன் இவைகள் காசரோகத்திற்குப் பத்தியங்கள்.

காசங்களுக்கு அபத்தியங்கள் :- மாதரின் புணர்ச்சி, கடினபதார்த்தங்கள், மதுரபதார்த்தங்கள், பகலில் தூக்கம், பால், தயிர் பழைய அன்னம், பாயாசம் முதலியவைகள், தூபம் இவைகள் காசரோகத்திற்கு ஆகாது.

 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக