வியாழன், ஜனவரி 28, 2010

சித்த மருத்துவம் -part 5


வர்ம நோய்கள்
உடலின் உறுப்புகளில் அல்லது உடற்பகுதிகளில் குறிப்பிடப்படும் நூற்றியெட்டு வர்ம நிலைகளில் ஆயுதங்களாலோ வேறு
பொருள்களாலோ ஏற்படுகின்ற அடி, குத்து, வெட்டு, தட்டு போன்ற காரணங்களால் வர்மம் ஏற்பட்டு, அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் மரணத்தை ஏற்படுத்தும். வர்மங்கள் நாழிகை, நாள், மாதம், ஆண்டு என்னும் கணக்கில் விளைவுகளைத் தருவன. இவ்வாறான விளைவுகளே நோயாகவும் மாறி உடலைத் துன்புறுத்தும். அவை நோயாகவே கருதப்படும். வர்மப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் ஒடிவு முறிவு என்றும், ஈடு என்றும் குறிப்பிடப்படும். அவ்வாறானவை, வர்ம விளைவுகள் எனப்படும்.
1. நெஞ்சு பக்கத்தில் காணப்படும் அலகை வர்மத்தில் ஈடு கொண்டால், பற்களைக் கடிப்பதும், சத்தமும் ஏற்படும்.
2. தண்டுவடத்தில் காணப்படும் நட்டெல் வர்மத்தில் முறிவு ஏற்பட்டால், முறிவு கொண்டவன் நாய் போல் அமர்வான். அவன் நாவில் சுவை உணர்வு தோன்றினால் 90 நாளில் மரணமும், சுவை காணப்படாவிட்டால் 300 நாளில் மரணமும் உண்டாகும்.
3. பஞ்சவர்ணக் குகையாகிய நெஞ்சறையின் அருகிலுள்ள அக்கினி நரம்பில் முறிவு ஏற்பட்டால், உடல் முழுவதும் காந்தும். உடலில் எறும்பு ஊர்வது போன்று தோன்றும். 
4. பழு எலும்பில் காணப்படும் விட்டில் வர்மத்தில் ஈடு கொண்டால், உடல் தீப்போல எரியும். விட்டில் போல் உடல் துடிக்கும்.
5. நீர்ப்பையோடு இணைந்திருக்கும் நீர் நரம்பு முறிந்தால் சன்னி உண்டாகும்.
6. கண்ணின் இமை அருகில் உள்ள பகலொளி நரம்பு முறிந்தால், பார்வை போகும். 
7. தலை உச்சியின் நடுவில் உள்ள குருபோக நரம்பு முறிந்தால், போகம் கழிந்தபின் ஏற்படும் உணர்வு உண்டாகும். 
8. முதுகிலுள்ள தாரை நரம்பு முறிந்தால், சேவல் போலக் கொக்கரிக்கச் செய்யும்.
9. தேரை நரம்பு முறிந்தால், உடலில் நிறம் மாறித் தேரை நிறம் போலாகும். 
10. குண்டிச் சங்கு நரம்பு முறிந்தால் தாகத்தினால் வருந்த நேரும்.
11. மூச்சுக் குழலின் இடது பக்கத்திலுள்ள குயில் நரம்பு முறிந்தால், குயில்போல ஒலி யெழும். சன்னி உண்டாகும்.
12. பீசத்தின் மேற்புறத்தில் காணப்படும் கொட்ட காய நரம்பு முறிந்தால், வேகமாக ஓடச் செய்யும்.
13. இதயத்தின் அருகில் பதிவிருதை வர்மம் முறிந்தால், நீண்ட மூச்சு ஏற்படும். நினைவு தடுமாறும். பிறரைக் கண்டால் நாணம் உண்டாகும். மிகுந்த போக உணர்வு ஏற்படும். கண்களை உருட்டும். வண்ணத்தைக் கண்டு நாணும்.
14. பிருக்கத்துடன் இணைந்திருக்கும் குக்குட நரம்பு முறிந்தால், சேவலாகக் கொக்கரிக்கும்.
15. குய்யத்திற்கு இருவிரல் மேலே காணப்படும் பாலூன்றி நரம்பு முறிந்தால், சுரம் உண்டாகும். இரத்தம் பால் போல ஒழுகும்.
16. முதுகிலுள்ள கூச்சல் நரம்பு முறிந்தால், கருச்சிதைவு உண்டாகும். 217ஆம் நாளில் கூம்பு வர்மத்தில் நீல நிறமும், முகத்தில் மஞ்சள் நிறமும் தோன்றும்.
17. தலை உச்சியின் நடுவிலுள்ள துண்டு நரம்பு முறிந்தால், உடனே உயிர் பிரியும்.
18. நெஞ்சறையின் இடக்குய்யத்தில் மயிர்க் கூச்சல் நரம்பு முறிந்தால், உடல் வளைந்து குன்னிக் கொள்ளும், மயிர்க் கூச்சமும் இதயத் துடிப்பும் அதிகரிக்கும்.
19. முதுகின் நடுவில் புயம் அருகில் தீபார நரம்பு முறிந்தால், ஆண்குறி பாதித்து கறுப்பாகும்.
20. கண்ணின் அருகில் உள்ள மாற்றான் நரம்பு முறிந்தால், தலை இடிக்கும். உடல் பொன்னிறமாகும். கண் மஞ்சளாகும். கொக்கரித்தல் செய்யும். சுவாசித்தல் கடினமாகும்.
21. புச்ச என்பின் அருகில் பலமாக வர்மம் கொண்டால், விசை நரம்பு தளர்ந்து 90 ஆம் நாள் வாதம் வரும். விந்து வெளியேறிக் கொண்டே இருக்கும்; இரு கால்களும் செயலற்றுப் போகும்.என்று கூறப்பட்டுள்ளன.
வர்மம் என்பதை விபத்து போன்று எதிர்பாராமல் ஏற்படுகின்ற பாதிப்புகளாகக் கருதலாம். இவ்வாறான பாதிப்புகளிலிருந்து விடுபடவும், மருத்துவம் காணவும் அவசர கால நடவடிக்கை தேவைப்படும். வர்ம மருத்துவ   முறை, விபத்து மருத்துவ முறை என்றால் பொருத்தமாக இருக்கும். அவ்வாறான அவசரமான மருத்துவத்தையும் சித்த மருத்துவத்துறை விரிவு படுத்தி வளர்த்து வந்திருக்கிறது என்பதை, அதனால் ஏற்படுகின்ற விளைவுகளை எடுத்துக் கூறியிருக்கும் முறையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
நோய்நாடித் தேர்வு செய்யும் முறைகளால் நோயை அறிந்து கொள்வதில், குத்து/வெட்டு என்பவற்றினால் சுமார் 700 நோய்கள் உண்டாகுமென்று கணிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் வர்மத்தினால் ஏற்படும் விளைவுகளும் அடங்கும் எனலாம்.
உடலின் இயல்பு தரும் நோய்கள் :
கரு உருவாகும் போதே உடலின் இயல்புகளும் உடலோடு இணைந்தே உருவாகின்றன. உடலில் உயிர் இருக்கும் வரை, உடல் இயல்புகள் இருக்கும். உடலை நன்னிலைப் படுத்த உடலியல்புகள் கருவிகளாக அமைகின்றன. அவ்வாறான உடலியல்புகளை மருத்துவ நூலார் வேகம் என்னும் குறியீட்டினால் குறிப்பிடுவர். அவை அபான வாயு, தும்மல், சிறுநீர், மலம், கொட்டாவி, பசி, தாகம், இருமல், இளைப்பு, தூக்கம், வாந்தி, கண்ணீர், விந்து, மூச்சு, என்னும் பதினான்கு ஆகும்.
மேற்கண்ட இவை, தடுக்கப்பட்டாலும், தடைப்பட்டாலும் அவற்றின் எதிர்விளைவுகளாக நோய்களை உண்டாக்கும் என்று கணிக்கப்படுகிறது.
1. அபானவாயு: இது கீழ்வாய்வளி அல்லது கீழ் நோக்குங்கால் அல்லது கீழ்க்கால் எனப்படும். இது தடுக்கப்பட்டால் அல்லது தடைப்பட்டால், மார்பு நோய், வாயு, குன்மம், குடல்வாதம், உடல் குத்தல், குடைச்சல், வல்லை, மலத்தடை, பசி, மந்தம் ஆகியவை உண்டாகும். ஈரல், மார்பு இவற்றிலுள்ள ஈரம் வற்றும்; வயிற்றில் எரிச்சல் உண்டாகும்; உளைச்சல், தலை கனத்தல், நோதல், மயக்கம், புளிப்பு, வாந்தி, குடல்வலி ஏற்படும்; உணவு உண்ணாமை, செறியாமை போன்றவை
தோன்றும்.
2. தும்மல்: இது தடுக்கப் பட்டால் தலைவலி, முகம், இழுப்பு, இடுப்பு வலி, அரைமேல் வலி, வயிற்றுப் பொறுமல், விந்து நீத்தல், கால் கை கடுகடுத்தல், சிறுநீர்க் கடுப்பு முதலியன உருவாகும்.
3. சிறுநீர்: நீரடைப்பு, நீர்வரும்வழியில் புண், ஆண்குறி சோர்வு, குறியில் சீழ் குருதி சேர்தல், குறியில் எரிச்சல் தோன்றும்.
4. மலம் : சலதோசம், முழங்காலின் கீழ், பல நோய், தலைவலி, உடல்வலிமை குறைவு போன்றவை ஏற்படும்.
5. கொட்டாவி: இதனால் முகம் வதங்கும், இளைப்பு, செறியாமை, நீர் நோய், வெள்ளைநோய், அறிவு மயக்கம், வயிற்று நோய் உண்டாகும்.
6. பசி
7. தாகம் அடக்கினால், உடலும் உடற்கருவிகளும் இயங்கா; சூலை, பிரமை, இளைப்பு, வாட்டம், சந்துநோவு ஆகியவை தோன்றும்.
8. இருமல்
9. இளைப்பு (ஆயாசம்)கொடிய இருமல், மூச்சில் துர்மணம், நீர்மேகம், குன்மம், இதய நோய் உருவாகும்.
10. தூக்கம்தலைக்கனம், கண் சிவத்தல், செவிடு, அரைப்பேச்சு போன்றவை வரும்.
11. வாந்திநமச்சல், பாண்டு, கண்நோய், பித்தம், இரைப்பு, காய்ச்சல், இருமல், தடுப்புக் குட்டம் ஆகியவை தோன்றும்.
12. கண்நீர்தமரக வாயு, பீனிசங்கள், கண்நோய், தலையில் புண், குன்மம் வரும்.
13. விந்துசுரம், நீர்க்கட்டு, கை கால்கள் கீல் நோய், விந்து கசிவு, மாரடைப்பு, மார்பு துடிப்பு, வெள்ளை போன்றவை வரும்.
14. மூச்சுதடைப்பட்டால் இருமல், வயிற்றுப் பொறுமல், சுவையின்மை, குலைநோய், காய்ச்சல், வெட்டை ஆகியவை ஏற்படும் என்றுரைக்கப்படுகிறது.
இவற்றினால் நோய் என்பது இயல்புக்கு மாறானது என்பதும், மருத்துவம் என்பது இயல்புக்கு மாறான செயலை மீண்டும் இயல்பு நிலைக்கே மீளச் செய்வது என்பதும் பெறப்படுகிறது.
நிலமும் நோயும்
பண்டைய இலக்கிய மரபின்படி நிலம் நான்கு வகையாகப் பிரித்தறியப்பட்டது. அந்தந்த நிலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலை, ஒழுக்கம் என்றுரைக்கப்பட்டது. அவ்வாறு பிரித்தறியப்பட்ட நிலங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பன. அந்நிலங்களில் குறிஞ்சியும், முல்லையும் பருவத்தினால் மாற்றமடையும்போது அந்நிலம் பாலை எனப்படும். இந்த ஐந்து நிலத்தையும் ஐந்திணை என்னும் பெயரால் அழைக்கப்பட்டது.
குறிஞ்சியில் ஐயமும், முல்லையில் பித்தமும், நெய்தலில் வாதமும் அதிகரிக்கும். பாலையில் வாத, பித்த, ஐயம் மூன்றும் வளர்ச்சியடையும். மருதத்தில் அம்மூன்றும் கட்டுப் பட்டுச் சமநிலை பெற்றிருக்கும் என்பதிலிருந்து, வாழ்வதற்கு மருதநிலம் ஏற்றது என்று கருதப்படுகிறது. குறிஞ்சி, இரத்தத்தை உறிஞ்சுகின்ற சுரமும், வயிற்றில் ஆமைக் கட்டியும் உண்டாக்கும்; ஐயம் ஓங்கும். முல்லை, வல்லை நோயும் வாத நோயும் உண்டாகும். பித்தம் ஓங்கும். நெய்தல், மெலிந்த உடலைப் பெருக்கச் செய்யும். ஈரலைப் பெருக்கும். குடல் வாயு உண்டாகும். வாத நோய் வளரும். பாலை, வாதம், பித்தம், ஐயம் ஆகிய நோய் அனைத்தும் தோன்றும். மருதம்வாதம், பித்தம், ஐயம் ஆகிய நோய் அனைத்தும் குணமாகும். வாழத் தகுந்த நிலம் மருத மாகும் என்று நிலத்தின் பண்பினால் உடல்வளம் அறியப்பட்டது. மேலும், நிலப் பாகுபாட்டையும், தட்ப வெப்ப நிலையையும், நில வளத்தையும் அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டதனால், அந்தந்த நிலத்திற்குரிய வெப்பமும் நிலத்தின் வளத்திற்கு ஏற்ப விளைகின்ற உணவுப் பொருள்களை உண்பதினால் உடற்குற்றங்கள் ஏற்படுவதாகக் கொள்ளலாம்.
சுவையும் குணமும்
நிலத்திற்கு நிலம் மண்ணில் வேறுபாடுகள் தோன்றுவது போல், மண்ணின் கனிமங்களும் வேறுபடுகின்றன. அதற்கு ஏற்றவாறு மண்ணின் சுவை அமைந்து, அந்தந்தச் சுவைக்கு ஏற்ப நலன்கள் அமைகின்றன என்பது பண்டைய கால வழக்கு.
"" உவர்ப்பில் கலக்கமாம் கைப்பின் வருங்கேடு
துவர்ப்பிற் பயமாஞ் சுவைகள் அவற்றில்
புளிநோய் பசி காழ்ப்புப் பூங்கொடியே தித்திப்பு
அளிபெருகும் மாத வர்க்கு''
என்று, சிலப்பதிகார காலத்தில் தோன்றிய பரத சேனாதிபதியம் உரைக்கின்றது. உவர்ப்பு கலக்கத்தையும், கைப்பு கேட்டையும், துவர்ப்பு அச்சத்தையும், புளிப்பு நோயையும், கார்ப்பு பசியையும், இனிப்பு நன்மையையும் மனிதர்க்குத் தருவதாக இதன் பொருளமையக் காணலாம்.
அதனால்தான் புள்ளிருக்கு வேளூரைச் சார்ந்த மருத்துவர் வைத்திய நாத ஈசுவரர், நோய் என்று வருகின்றவர்களுக்கு மருந்தாக மண்ணையே வழங்கி வந்தாராம். அந்த மண்ணும் நோயைப் போக்கி மகிழ்ச்சியைத் தந்தது. எவ்வாறென்றால், அம்மருத்துவர் தந்த மண்ணுக்கு உரிய நிலம் மருத நிலம்இனிப்புச் சுவையைக் கொண்டது என்பது பெறப்படுகிறது.
"" மண்டலத்தில் நாளும் வயித்தியராகத் தாமிருந்தும்
கண்டவினை தீர்க்கின்றார், காணீரோ? தொண்டர்
விருந்தைப் பார்த் துண்டருளும் வேளூர்என் னாதர்
மருந்தைப் பார்த் தால்சுத்த மண்.''
என்று காளமேகப்புலவர் உரைக்கக் காணலாம்.
உப்பும் புளியும்
உணவின் சுவையைக் கூட்டுவதற்காக உப்பும், புளியும் உணவின் பாகமாக அமையும். அவை உணவில் பாகமாகக் கொள்ளப் பட்டாலும் இனிப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகள் இணைந்து உப்பு, புளிக்குரிய இயல்பான குணத்தை மாற்றிவிடுகின்றன. அவ்வாறிருந்தாலும் உப்பும், புளியும் உடலைப் பாதிக்கக் கூடியதாகவே அமைகின்றன. இவ்விரண்டும் நெஞ்சடைப்பு, கோழை, ஈளை ஆகியவற்றை ஆதியாகக் கொண்டு உருவாகும் நோய்களுக்கு மூலமாக அமை கின்றன. அதன் பொருட்டே மருந்துண்ணும் வேளையில் நோயாளி உப்பையும், புளியையும் விலக்கிட வேண்டுமென்பர். நோய் வாராதிருக்கவும் இவை தள்ளப்பட வேண்டிய தென்று உணர்த்துவதை உணரலாம்.
உணவும் நோயும்
உணவும், உணவுப் பொருளும் உடலைப் பாதுகாக்கும் என்பது பொதுவான கருத்து. எந்த உணவு, எந்த உணவுப் பொருளோடு சேரலாம் என்றும், சேரக் கூடாது என்றும் தெரிவிப்பதும், உடல் நலனைப் பேணுகின்ற மருத்துவத்தின் கருத்தாகும்.
உணவு வகைகள் எதனை எதனோடு சேர்த்து உண்டால், உணவு நஞ்சு (ஊணிணிஞீ ணீணிடிண்டிணிண) உருவாகும் என்பதைத் தெளிவு படுத்துகிறது சித்த மருத்துவம். உணவு முறைக்காக வகுக்கப்பட்டிருக்கும் விதிகளைக் கடைப்பிடித்து விலக்க வேண்டியவற்றை விலக்கி வந்தாலே பெரும்பகுதி நோயிலிருந்து விடுபடுவதுடன் நோயற்ற வாழ்வும் வாழலாம்.
நஞ்சாகும் உணவு
1. வெண்கலப் பாத்திரத்தில் நெய்விட்டு சமைத்தல், பித்தளை, செம்பொன் ஆகிய பாத்திரங்களில் தயிர், மோர் வைத்திருந்து உண்ணல்.
2. கோழிக்கறி, பழைய மாமிசம் ஆகியவற்றுடன் தயிர் சேர்த்து உண்ணல்.
3. தேனுடன் தயிர், மாமிசம், கொழுப்பு, எண்ணெய் ஆகியவற்றை உண்ணல்.
4. அழுகிய கனிகள், திரிந்தபால், ஊசிப்போன பதார்த்தம், நாறும் உணவு, நுரைத்த உணவு, நூல்விட்ட உணவு ஆகியவற்றை உண்டால், கொடிய நோயை உண்டாக்கி உடல் இளைக்கச் செய்து, மரணத்தைத் தரும் நஞ்சாகும்.
5. ஆட்டு, மாட்டிறைச்சியுடன் உளுத்தம் பருப்பு, முள்ளங்கி, பால், தேன், துவரம் பருப்பு, முளை கட்டிய பருப்பு வகைகளில் ஏதேனும் ஒன்றோபலவோ கலந்து சமைத்தாலும், வெல்லம் சேர்த்து உண்டாலும் உணவு நஞ்சாகும்.
6. மீன்கறி, கீரைக்கறி, முள்ளங்கி சேர்ந்த துணைஊண் (கூட்டு, சாம்பார்) ஆகியவையும், அதிக புளிப்புச் சுவையுடைய பழமும், கம்பு, வரகு, கொள், காட்டுப் பயறு (நரிப்பயறு, பாசிப்பயறு) ஆகியவை தனித்தோ சேர்ந்தோ உண்ட உடன், பால் அருந்தினால் நஞ்சாகும்.
7. பன்றி இறைச்சியுடன் முள்ளம் பன்றி இறைச்சியும், மான் இறைச்சியுடன் நாட்டுக் கோழி இறைச்சியும் தனியாகவோ, கலந்தோ தயிர் கூட்டி உண்டால் நஞ்சு.
8. உளுந்தும் முள்ளங்கியும் சேர்ந்தாலும், குசும்பாக் கீரையுடன் செம்மறியாட்டின் இறைச்சி சேர்ந்தாலும் நஞ்சு.
9. கிச்சிலிப் பழத்துடன் பால், நெய், உளுந்து, வெல்லம் இவற்றில் ஒன்றிரண்டு கலந்தாலும் நஞ்சு.
10. மீன் சமைத்த சட்டியில் மணத்தக்காளிக் கீரை சமைத்தல், மீன் பொரித்த நொய்யில் திப்பிலியைப் பொரித்தல், பன்றிக் கொழுப்பில் நாரை இறைச்சி சமைத்தல், நஞ்சாகும்.
11. தேன், பசுவின் பால், நிணம், தண்ணீர் இவை நான்கும் சம அளவாக எடுத்துக் கலக்கி உண்டால் நஞ்சு.
12. சிட்டுக்குருவி, தித்திரிப்புள், காடை, மயில், உடும்பு இவற்றின் இறைச்சியைஆமணக்கு விறகு, எண்ணெயில் சமைத்தால் உடனே உடலை எமன் எடுத்துச் செல்வான்.
13. மஞ்சளைக் கடுகெண்ணெயில் வறுத்தல், நாரை இறைச்சியுடன் கள் குடித்தல், காராமணியுடன் நாரை சமைத்தல், தாமரை விதையுடன் தேனுண்ணல், தயிர் மோருடன் வாழைப்பழம் உண்ணல், பனம்பழத்துடன் வாழைப்பழம் உண்ணல், மணத்தக்காளிக் கீரையை இரவில் சமைத்துக் காலையில் உண்ணல் அனைத்தும் கடும் நோயைத்தரும் குற்ற உணவுகளாகும் என்றும், உணவு நஞ்சாகி நோயைத் தருவதுடன் உடல் நலனைப் பாதிப்படையச் செய்து மரணத்தை ஏற்படுத்தும் என்றும், விரிவாக உரைக்கப் பட்டுள்ளது. இவற்றில், வெண்கலம், பித்தளை, தயிர், மோர், பால், முள்ளங்கி, பருப்பு வகைகள், உளுந்து, பழங்கள், இறைச்சி,குசும்பாக்கீரை, மணத்தக்காளிக் கீரை, ஆமணக்கு, வாழைப்பழம் போன்ற உணவுகள் பிற உணவு வகைகளோடு சேர்ந்து உணவாகும் போது, அவ்வுணவு நஞ்சாகும் என்று உரைக்கப் பட்டிருக்கிறது. இவ்வகை உணவுப் பொருள்களும், பாத்திரங்களும் புளிப்புச் சுவையுடையவை எனத் தெரிய வருகிறது. புளிப்புச் சுவை அதிக அளவு அல்லது மிதமான அளவு உணவில் கலக்கும் போது அவை நஞ்சாக மாறுகின்றன எனத் தெரிகிறது. அல்லது புளிப்புச் சுவையைத் தருகின்ற நச்சுப் பொருள் வேறு ஏதேனும் அவ்வாறான உணவில் கலந்தோ அல்லது கலப்பதினால் வேதியல் முறையால் புதியதாக உருவாகின்றதா என்பதும் தெரியவில்லை. இதனை, ஆய்வுக் கூட ஆய்வின் மூலம் சுவையால் ஏற்படுகின்ற உடல் நலனையும் பாதிப்பையும் கண்டறிய முனைய வேண்டும்.
உண்கலமும் உடல்நலமும்
உணவு உண்ணும் போது, ஒவ்வொரு வகையான உண்கலங்கள் பயன்படுகின்றன. உண்கலங்கள் அவரவர் நிலைக்கும், வசதிக்கும் ஏற்றவாறு மாறுபடும்.
பெரும்பாலான விருந்துகளில் வாழையிலை பயன்படுத்தப் படுகிறது. அரசு, அரச விருந்துகளில் உலோக உண்கலங்கள் பயன் படுத்தப்படுகின்றன. ஆனால், அவற்றால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்றறிந்து செய்யப்படுவதில்லை. மதிப்பிற்காகவும், செல்வச் செழிப்பைக் காட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
இலை
உணவு உண்பதற்கு இலை சிறந்த உண்கலமாகக் கருதப்படுகிறது. இலைகளில் வாழை இலையும், வேங்கை இலையும் உடலுக்குச் சுகமான பலனைத் தருபவை. வாழையிலையில் உணவு உண்பதால், அக்கினி மாந்தம், அபலம், வாய்வு, இளைப்பு, பித்த நோய் ஆகியவை போவதுடன், உடல் அழகடையும், சுகபோகம் உண்டாக்கும்  என்று உரைக்கப்பட்டுள்ளது.
உலோகம்
உலோகவகை உண்கலங்களில் தங்கம், பித்தம், சோபப் பிணியை நீக்கித் தாது, பசி, வலிமை, பூரிப்பை உண்டாக்கும். வெள்ளி, கபம், பித்தம் போக்கும்; காந்தி, களிப்பு, வாதம் உண்டாக்கும். செம்பு, இரத்த தோஷத்தைப் போக்கும்; உடல் ஆரோக்கியம், காந்தி, கண்ணொளி உண்டாக்கும். வெண்கலம், சோபம், இரத்தப் பித்தம் போக்கும்.’’ என்கிறது. உலோக உண்கலங்களிலேயே தங்கம் சிறந்த உலோக உண்கலமாகக் கருதப்படுகிறது.
வெந்நீரும் வியாதியும்
தண்ணீரின் தேவை உலக வாழ்வில் முதன்மையானது என்பது அறியப்பட்ட செய்தி. நீரின்றி அமையாது உலகு என்பது பழந்தமிழர் நெறி. நீரைக் காய்ச்சிக் குடித்தால் உடலுக்கு நன்மை தரும் என்பது சுகாதாரம் விரும்புவோர் கூறும் பொதுக் கருத்து. ஆனால், நீரைக் காய்ச்சி, எந்தெந்த முறையில் அருந்தினால் என்னென்ன பயன்களைத் தரும் என்று சித்த மருத்துவ நெறியாக உரைக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.
காய்ச்சிய நீர் சூடாகப் பருகினால், நெஞ்செரிச்சல், நெற்றிவலி, புளிச்ச ஏப்பம், வயிற்று நோய், இருமல் போகும். காய்ச்சி ஆறிய நீர் அருந்தினால், உழலை, விக்கல், அதிசாரம், பித்தம், மூர்ச்சை, விஷ வாந்தி, மயக்கம், மேகம், உலர்ச்சி, கண்ணோய், திரிதோஷம், செவிநோய், சூலை, குன்மம், சுரம், ஐயம், வாத கோபம் போகும்.’’ என்று தண்ணீர் வெந்நீரானால் உண்டாகக் கூடிய பயனை விளக்கு கிறது.
வெந்நீரும் பாத்திரமும்
தண்ணீரைக் காய்ச்சவும், காய்ச்சிய நீரைச் சேமிக்கவும் மட்கலங்களிலிருந்து மாறி உலோகப் பாத்திரங்களுக்கு நாகரிக வாழ்க்கை வளர்ச்சியடைந்திருக்கிறது. அவ்வாறு வளர்ச்சியடைந்த தன் பயன் என்னவென்பதை   உரைப்பதாக, மருத்துவச் செய்தி அமைகிறது. வெந்நீர் எந்தெந்த உலோகங்களுடன் சேர்ந்திருந்தால் என்ன பலன் என்பதைக் கீழ்க்கண்டவாறு கூறுவர்.
1. பொற்கெண்டி : வாயு, கபம், அருசி, மெய்யழல், வெப்பு போகும். விந்து, நற்புத்தி, அறிவு உண்டாகும்.
2. வெள்ளிக் கெண்டி : வெப்பு, தாகம், குன்மம், பித்தம், ஐயம், காய்ச்சல் போகும். உடல் செழிக்கும். பலம் உண்டாகும்
3. தாமிர பாத்திரம் : இரத்த பித்தம், கண்புகைச்சல் போகும்.
4. பஞ்சலோகம் : முக்குற்றங்கள் நீங்கும்.
5. வெங்கலப் பாத்திரம்: தாது உண்டாகும்.
6. கெண்டி : நோய், சிரங்கு, வாய்க்குடைச்சல் போகும்.
7. பன்னீர்ச் செம்பு : சுவாசம், விக்கல், பிரமை, பித்த, ஐயவாயு, தாள் வலி போகும்.
8. இரும்பு பாண்டு நோய் போகும்; தாது உண்டாகும்; நரம்பு கெண்டி உரமாகும்; உடல் குளிர்ச்சி அடையும்
என்று, உலோகத்தினால் உண்டாகும் பயன் வெந்நீர் அருந்தும் போது கிடைப்பது உரைக்கப்பட்டுள்ளது.
வெந்நீர் மருந்து
தண்ணீர் எந்தெந்த வகையில் பயன்படுகிறது என்பதை உணர்த்தும் மடை நூலைப் போல, தண்ணீர் வெந்நீரினால் என்னென்ன பயன் உடலுக்குக் கிடைக்கிறது என்பது மேலே குறிப்பிடப் பட்டுள்ளது. தண்ணீர் வெந்நீராகக் காய்ச்சப்படும்போது எந்த அளவு காய்ச்சினால் என்ன பலன் என்பதை,
"" கால் கூறு காய்ந்த வெந்நீர் பித்தத்தைப் போக்கும்
அரைக் கூறு காய்ந்த வெந்நீர் வாதம், பித்தம் ஆகிய போக்கும்
முக்காற்கூறு காய்ந்த வெந்நீர் வாதம், குளிர், நடுக்கல்,
பித்தசுரம், வெக்கை, வாதபித்த ஐயம் போகும்.''
என்று பதார்த்த குண சிந்தாமணி விளக்குகிறது.
வாத, பித்த, ஐயம் என்பதே அனைத்து நோய்களும் என்பதால், அனைத்து நோயிலிருந்தும் விடுபட வெந்நீர் மருந்தாக அமைகிற தென்பதை அறியலாம். மேலும், நீரைக் கால், அரை, முக்கால் என்கிற முறையில் காய்ச்சுவதைப் போல, நீரை மருந்தாகவே மாற்றிட எட்டுப்பாகத்தில் ஒரு பாகமாகக் காய்ச்ச வேண்டும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. எண்சாண் உடம்பு, எறும்பும் தன்கையால் எட்டு என்று உலக உயிர்கள் எட்டுப் பாகமாகத் தோன்றியுள்ளதைத் தெரிவிக் கிறது. எட்டுக்கு ஒன்றாகத் தண்ணீரைக் காய்ச்ச வேண்டும்
என்றுரைப்பதும் உலகத்தின் உயிரினத் தோற்றத்துடன் தொடர்புடையதாக அமைவது போல் இருப்பதை அறியலாம்.
"" இயம்பிட வெளிதே வெந்நீர் இயம்புவன் சிறிது கேண்மின்
நயம்பெறத் தெளிந்த நீரை நன்றாக வடித்தெ டுத்துச்
சயம்பெற எட்டொன் றாக்கித் தான் குடித் திடுவீ ராகில்
வயம்பெறு பித்த வாத சேப்பனம் மாறும் மெய்யாய்''
என்றும்,
"" சொல்லிய நாழி கொண்டு தூணியில் எட்டொன் றாக்கி''
என்றும்,
"" நன்னீர் விட்டே யெட்டொன்றாய் நாடிக் காய்ச்சிக் கொள்வீரே''
எனவும், காய்ச்சும் முறை உரைக்கப்பட்டுள்ளது. இம்முறை மருந்து தயாரிக்கும் போதும், தைலம் தயாரிக்கவும் பயன்படும் என்பது அறியப்படுகிறது. இவ்வாறு காய்ச்சுவதனால் பெருக்கத்து வேண்டும் சுருக்கம் என்பது போல பெருக்கம் என வளர்த்த பொருளைச் சுருக்கம் என மூலப் பொருளாக மாற்றினால் அது மருந்தாக அமையும் எனத் தெரிகிறது.
ஆடைகளும் உடல் நலமும்
ஆடைகள் பலவகை. அவை கொண்டிருக்கும் வண்ணங்களும் பல என, ஆடைகள் வளர்ந்து வந்துள்ளன. பெரும்பாலும் ஆடை என்பது உடலை மறைக்கவும், மதிப்பு மரியாதைக்காகவுமே என்று கருதப்பட்டு வருகிறது. ஆடையில்லாதவன் அரை மனிதன் என்பது பழமொழி யாகவும் இருந்து வருகிறது. ஆடை இருந்தால் தான் மனிதன் மதிக்கப்படுகிறான் என்பது அறியப் பட்டாலும், ஆடை உடல் நலனைப் பாதிப்படையச் செய்பவையாக இருக்கிறதென்கிறது, சித்த மருத்துவம்.
ஆடைவகைகள்:
சாலுவை : சலதோஷம், தலைவலி, வாத நோய், வயிற்றுவலி, குளிர்பனி போகும்.
பட்டாடை : பித்தம், கபம் போகும். மகிழ்ச்சி, உத்தி, வியர்வை, காந்தி உண்டாகும்.
வெண்பட்டு : சுரம், சீதம், வாதம் போகும். காந்தி, அழகு உண்டாகும்.
நாருமடி : சளி, நீர் ஏற்றம், வாய்வு, சந்தி போகும். உடல் சுத்தி உண்டாகும்.
வெள்ளாடை : முக்குற்றம், வியர்வை போகும். ஆயுசு, அழகு, களிப்பு, போதம், வெற்றி உண்டாகும்.
சிவப்பாடை : பித்தம், வெப்பம், சுரம், வாந்தி, அருசி, கபம், மந்தம் உண்டாகும்.
பச்சை ஆடை : உடல்வெப்பம், ஐயம் போகும், கண்குளிர்ச்சி, உடல்பூரிப்பு, உண்டாகும்.
கறுப்பாடை : காசம், வெப்பு, விஷம், மந்தாக்கினி, பித்தம் போகும்.
மஞ்சளாடை : நீர்க்கடுப்பு, காசம், விஷ சுரம், நமைச்சல், வெப்பு, மலம் போகும்.
கம்பளம் : பெரும்பாடு, அசீரணம், கிராணி, சூலை, பேதி, சீழ் போகும்.
அழுக்குத்துணி : அழகு, அறிவு, போகும்; நோய், குளிர், துக்கம், தினவு, வெட்கம் உண்டாகும்.
என்று குறிப்பிடுகிறது. ஆடை வகைகள் எல்லாம் ஒவ்வொரு குணத்தை உடையவையாக இருக்கக் காணலாம். இவற்றில் சிவப்பு ஆடையும், அழுக்குத் துணியும் உடலுக்குப் பயன் தராதவைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்னும் பழமொழி, அழுக்குத் துணியினால் வரக் கூடிய கெடுதல்களைக் கருதி உரைக்கப்பட்டதாகக் கொள்ளவும் இடமுண்டு. ஆக, ஆடை வகைகள் உடல் நலன் கருதியே பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிகிறோம்.
நீராடலும் உடல் நலமும் (நோயணுகா நெறி)
நீராடுதல் என்பது தினமும் நீரில் குளிப்பதை உரைப்பதன்று. அது புறத்தே உள்ள அழுக்கை நீக்குவது. அதனால் தான் புறந்தூய்மை நீரான் அமையும் என்றும் குறிப்பிடப்படுகிறது. நீராடுதல் என்பது சனிநீராடு எனக்   குறிப்பிடும் நீராடலையாகும். நீராடுதல் வாரம் ஒன்றுக்கு இருமுறை நீராட வேண்டுமென்று, ‘வாரம் இரண்டு என்று குறிப்பிடக் காணலாம். அவ்வகை நீராடலால் ஏற்படும் பயனைப் போகர் குறிப்பிடக் காணலாம். நெல்லி, கடுக்காய், மிளகு, மஞ்சள், வேம்பின் வித்து ஆகிய ஐந்துடன் கையான் தகரைச் சாறும் கூட்டி அரைத்து தலைக்குத் தேய்த்து வாரம் இருமுறை நீராடி வந்தால் கண் குளிர்ச்சியாகும் கண் எரிச்சல் நீங்கும், தலைவலி போகும், மண்டைக் குத்து தீரும். உடல் கல்தூண்போலாகும் என்று, நோயிலிருந்து பாதுக்காத்துக் கொள்வதுடன் உடலைப் பேணவும் வழி உரைக்கப் பட்டது. இம்முறையைக் காயாதி கற்பம் என்பர்.
நோயின் வாயில்கள்
நோய் என்பது, துயரம் துன்பம் குற்றம் என்னும் பொருள்களைத் தருவதாக அமையும். நோய்க்கு உரிய செயல்களைச் செய்தல் குற்றம். அக்குற்றம் செய்வதனால் வருகின்ற பயனே துன்பமும், துயரமும். இன்பமும், துன்பமும் பிறர் தர வாரா என்பது ஆன்றோர் வாக்கு. துன்பமும், துயரமும் தருகின்ற நோய் பிறரால் தரப்படுவதில்லை. நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதென்றோதருவித்துக் கொள்வதென்றோ கொள்ளலாம்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்னும் பழமொழி, அளவுடன் இருப்பதே அமிருதம் எனப் பொருள் தருகிறது. அமிருதம் என்பது நோயற்றிருத்தல் என்றாகும்.
நாம் உண்ணுகின்ற உணவும், செய்கின்ற செயலும், எண்ணுகின்ற எண்ணமும் அளவுக்கு மிஞ்சியும் இயற்கையின் தன்மைக்கு மாறாகவும் இருக்குமேயானால், அவையே நோயின் மூலங்களாகி நோய்களை வருவிக்கும் வழிகளை ஏற்படுத்துகின்றன.
நாம் செய்யும் செயல்களில் எவையெல்லாம் நோயைத் தரும் செயல்கள் என்பதை அறிவுறுத்தி, அதன்வழி நடக்கச் செய்வதே மருத்துவ நீதியாகும். நீதிக்குப் புறம்பாக நடப்பது எவ்வாறு நாட்டில் குற்றமாகக் கருதப்படுகின்றதோ, அதைப்போலவே மருத்துவ நீதிக்குப் புறம்பாக நடப்பது உடலுக்குக் குற்றமாகும். இவ்விரண்டு நீதிகளுக்கும் புறம்பாக நடந்தால் தண்டனை உண்டு. ஒன்று, நீதிதரும் தண்டனை சிறை. இரண்டாவது உடல்தரும் தண்டனை நோய்.
வாத நோய்க்குரிய குற்றங்கள்
வாத நோய்கள் 84 ஆகும். மலச்சிக்கல், பெருந்தீனி, வாழைரசம், பலாப்பழம், மலைவாழை, மொந்தன் வாழை, கல்வாழை, வத்தக்காய், நந்திக்காய், பரங்கிக் காய், வாழைத்தண்டு, எருமைமோர், தயிர், வெண்ணெய், உணவு உண்டவுடன் போகம், புளி மிகுதி, கொள்ளுடன் பயறு, உளுந்து, தென்னைபனங்கள், போகம் செய்யும் போது பால்பழம் உண்ணல், முள்ளங்கி, கடலை, மொச்சை, முற்றிய அவரை, முற்றிய முருங்கை, முக்கனி, பால், சோறு, வெள்ளரிக் காய், செம்மறியும் உடும்பும் சேர்த்துண்ணல் ஆகியவை வாத நோயை வருவிக்கும் வழிகளாகக் கூறப்படுகின்றன.
மேற்கண்ட உணவும், உணவின் கலப்பும் வாத நோயை வருவிக்கும் என்றதனால், அவை உணவுப் பொருள் என்பதையும், முற்றிலும் விலக்குதற்கு உரிய பொருள்களல்ல என்பதையும் கருத வேண்டும். இவ்வகை உணவுகள் புளிப்புச் சுவைக்குரிய உணவுகள் எனத் தெரிவதால், அவை அளவாகவும் புளிச்சுவையை மாற்றக் கூடிய உணவுகளை உண்டால் அது சமநிலையடைந்து நோயை உருவாக்காமல் இருக்கு மெனலாம்.
பித்த நோய்க்குரிய குற்றங்கள்
பித்த நோய்கள் 48 ஆகும். அவை, மனம், செயல், உணவு என்னும் வழிகளால் நோய் வரும் எனப்படுகிறது. அவை காதல், காமம், கோபம், பழி, மன உளைச்சல், வருத்தம், துயரச் செய்தி, மரணச் செய்தி, வஞ்சகம், பகை, பயம், என்னும் மனம் சார்ந்த உணர்ச்சிகளும், உறக்கமின்மை, பட்டினி, செய்வினை, நடை, அலைச்சல், கடற்பயணம், நீண்ட உறக்கம். மருந்தீடு, அபின், கஞ்சா, நீர், மலம் அடக்கல் என்னும் செயல்களும்,மிளகாய், பெருங்காயம், கஞ்சி, உப்பு, வெள்ளுள்ளி, காரம், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், ஏறண்ட எண்ணெய், தேங்காய் எண்ணெய், மிளகு, வற்றல், திப்பிலி, கடுக்காய், மஞ்சள், போன்றவை  பித்தத்தை உண்டாக்கும் பொருள்களாகக் கூறப்படுகின்றன. பித்தம் உடலைக் காக்கும் செயலைச் செய்வது என்று கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட பொருள், செயல் ஆகியவை பித்தத்தை உருவாக்கக் கூடியவையாக இருப்பதனால், அதனால் உடலுக்கு நன்மைதானே என்றால் நன்மைதான், எந்த அளவு என்றால், வாதம் ஒன்று, பித்தம் அரை, ஐயம் கால் என்னும் அளவில்தான் இருக்க வேண்டும். அந்த அளவை மீறினால் தான் நோய் வரும் வழிகள் திறக்கப்படும் என்று அறியலாம்.
ஐய நோய்க்குரிய குற்றங்கள்
ஐய நோயின் எண்ணிக்கை 96 எனப்படுகிறது. ஐயம் நீர்த்தன்மையுடையதாக இருப்பதனால் குளிர், குளிர்ந்த பொருள், குளிர்ச்சி என்று ஐயம் வரும் வழியைக் குறிப்பர். அவை, பனி, பலவகை நீர், காலையில் குளிக்காதது, காமம், மருந்தீடு, மணம், சயம், மருவல், சுத்தி செய்யாத மருந்து, பழித்த தோசம், தோசபானம், மழையில் நனைதல், தூக்கம், விஷம், போகம் மிகுதி, அலைச்சல், மந்தம் போன்றவை ஐய நோய்க்குரிய குற்றங்கள் என்பர்.
ஐயம் அழிக்கும் தொழிலுக்குரியதாகையால், வாதத்தின் அளவில் கால் அளவே ஐயம் இருக்க வேண்டும் என்கிறது நாடி நூல். எனவே கெடுதல்/அழிதல் குறைவாக இருந்தால், தானே பாதுகாத்துக் கொள்ளவும் உயிர்வாழவும் முடியும்? அதனால் தான் உடலில் சேரும் பொருளும் கெடுதலைத் தரக் கூடிய பொருள்களாக இருக்கக் கூடாது என்று கருதினர். மேற்கண்ட பொருள்களில், சுத்தி செய்யாத அவிழ்தம், பழித்த தோசம், தோச பானம் ஆகியவை ஒவ்வாமையைக் குறிப்பதாகும். ஒவ்வாமை உடலுக்குக் கேட்டினை விளைவிக்கும் என்பதனை அறிந்தே, தமிழ் மருத்துவம் சுத்தி என்னும் தனிப் பிரிவையே மருந்துத் தயாரிப்பில் வைத்துள்ளது. சுத்தியில்லையேல் சித்தியில்லை என்பது குறிப்பிடத் தக்கது. சுத்தம் என்னும் பழக்கமும் ஐயத்திலிருந்து விடுபடச் செய்யும். ஒவ்வாமை எல்லாம் ஒவ்வாது என்பதும் ஒவ்வாதது. சிறிய அளவு இருந்தால் தான், அது இன்பம். அதனால் அது சிற்றின்பம். அளவு மிகுந்தால் சேரும் துன்பம் எனக் கூறுவதாகக் கருத வேண்டும்.
நோயும் நோயின் வகையும்
வாதம், பித்தம், ஐயம், தொந்தம் என்னும் பிரிவுகளினால் உருவாகும் நோய்கள் சுமார் 4448 என்று தொகையாக உரைக்கப் படுகிறது. அவை பல்வேறு குழுக்களாகக் கூறப்படுகின்றன. ஒவ் வொரு நோய்க் குழுவிலும் எத்தனை எத்தனை நோய்கள் இருக்கின்றன என்பது கூறப்பட்டுள்ளன. உதாரணமாக, கண்ணோய் என்பது 96 எனக் கூறப்படுகிறது. அதற்கு மேல் கண்ணில் நோய் கிடையாதா என்றால் இருக்கலாம். அல்லது இல்லாமலும் போகலாம். சித்த மருத்துவம் தோன்றிய நாளில் எத்தனை நோய்கள் கண்டறியப்பட்டு மருத்துவம் காணப்பட்டதோ, அவை மட்டுமே நோயின் குழுத் தொகையாகக் கூறப் பட்டுள்ளன எனக் கொள்வது சிறப்பாக இருக்கும். அவ்வாறு கூறப்பட்டுள்ள நோய்களின் குழுத்தொகை வருமாறு:
நோய்களின் பெயர்கள்
1. வாத நோய் – 84 2. பித்த நோய் – 48
3. ஐய நோய் – 96 4. தனுர் வாயு – 300
5. காச நோய் – 7 6. பெருவயிறு – 8
7. சூலை நோய் – 200 8. பாண்டு நோய் – 10
9. கண்நோய் – 96 10. சிலந்தி – 60
11. குன்மம் – 8 12. சந்தி – 76
13. எழுவை, கழலை – 95 14. சுரம் – 85
15. மகோதரம் – 7 16. தலையில் வீக்கம் – 5
17. உடம்பில் வீக்கம் – 16 18. பிளவை – 10
19. படுவன் – 11 20. கொப்புள் நோய் – 7
21. பீலி நோய் – 8 22. உறுவசியம் நோய் – 5
23. கரப்பான் – 90 24. கெண்டை – 10 25. குட்டம் – 20 26. கதிர் வீச்சு நோய் – 4
27. திட்டை (பல்லீறு நோய்) – 6 28. சோபை – 16
29. இசிவு – 6 30. மூர்ச்சை நோய் – 7
31. படு (குலை நோய்) – 46 32. மூல நோய் – 9 33. அழல் நோய் – 10 34. பீனிசம் 35. கடிவிஷம் – 76 36. நாக்கு, பல்நோய் – 76 37. கிராணி – 25 38. மாலைக் கண் – 20 39. அதிசாரம் – 25 40. கட்டி – 12 41. கிருமி – 6 42. மூட்டு(கீல்) நோய் – 30 43. முதிர்வு நோய் – 20 44. சத்தி (வாந்தி) – 545. கல்லடைப்பு – 80 46. வாயு நோய் – 90 47. திமிர் நோய் – 10 48. விப்புருதி நோய் – 18 49. மேகநீர் – 20 50. நீர்ரோகம் – 5 51. விஷ பாகம் – 16 52. காது நோய் – 10 53. விக்கல் – 10 54. அரோசியம் – 5 55. மூக்கு நோய் – 10 56. கடி தோஷம் – 500 57. காயம், குத்துவெட்டு – 700 58. கிரந்தி – 48 59. பொறி (பறவை) விஷம் – 800 60. புறநீர்க் கோவை – 200 61. துடி (உதடு) நோய் – 100 62. பிள்ளை நோய் – 100
என்னும் எண்ணிக்கையில் நோய்களின் குழுக்கள் குறிப்பிடப் படுகின்றன. இவற்றின் கூட்டுத்தொகை 4482 என வரும். ஆனால், நோய்களின் தொகை எண்ணிக்கை எனக் கூறும் 4448ஐ விடவும் 34 அதிகமாக இருக்கிறது. என்றாலும் நோய் எனக் கொள்வதில் இவ்வளவு தான் நோய் என்று மருத்துவத்துறை வரையறை செய்திட இயலாது. நோய்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பவை. 4448 என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் கூறப்பட்ட எண்ணிக்கையாக இருக்கலாம். பின்னர் அவை வளர்ந்திருக்கலாம். அதற்கு உதாரணமாக, பதினெண் சித்தர் என்பதையே காட்டாகக் கூறலாம். ஒரு காலத்தில் சித்தர்கள் எண்ணிக்கை பதினெட்டு ஆக இருந்தது. பின்னர் அந்த எண்ணிக் கையில் மாற்றங்கள் நேர்ந்தன. சித்தர்கள் பலர் பின்னாளில் உருவானதே அதற்குக் காரணம். அதே போல நோய்களின் தொகை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும். மேலும், குத்துவெட்டு என்னும் தொகை 700 என்கிறது. இவை நோயல்ல, இத்தனை காயமும் குத்து வெட்டும் இப்போது நிகழுமா? என்று வினா எழலாம். நிகழலாம்; நிகழாமலும் போகலாம். அதுபோல், பறவை விஷம் 800 என்று இருக்கிறது. இதுவும் விளங்கவில்லை. பறவைகளினால் உண்டாகக்கூடிய தோஷங்கள் என்னென்ன என்பதை விளக்கும் நூல்கள் கிடைத்தில. அதுபோல், கடிதோஷம் என்பதும் புறநீர்க் கோவை என்பதற்கும் நூல் விபரங்கள் இல்லாததால் அறிவது கடினமாக இருக்கிறது. என்றாலும், நோயின் தொகை மருத்துவம் பார்க்கப் பயன் படாது. நோயின் குறி, குணங்களைக் கொண்டே மருத்துவம் பார்க்க முனைவர் என்றாலும், மருத்துவ நூல் கூறியவற்றை ஈண்டு தொகுத்துக் காட்டவே எடுத்துக் காட்டப்பட்டது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக