திங்கள், ஜனவரி 11, 2010

பாண்டு ரோக சிகிச்சைகள்

பாண்டுரோகசிகிச்சை

பாண்டுரோகத்திற்கு புணர்வாதி கியாழம் :- வெள்ளைச்சாரணைவேர், வேப்பன் ஈர்க்கு, பேய்ப்புடல், சுக்கு, கடுகுரோகணி சீந்தில்கொடி, மரமஞ்சள், கடுக்காய், இவைகள் சமஎடையாக கியாழம் விட்டு கொடுத்தால் சர்வாங்க சோபைகள் உதிரரோகம் காசநோய், சூலைரோகம், சுவாசரோகம், பாண்டுரோகம் இவைகளை நிவர்த்திசெய்யும். அல்லது பழயசிட்டம், புளி இலை இவை களை கியாழம்வைத்து கொடுத்தாலும் பாண்டு, வீக்கம், காமாலை இவைகள் நிவர்த்தியாகும்.

சாரணைவேர், வெள்ளை உப்பிலாங்கொடி இலை, சித்திரமூலம், சுக்கு, கடுக்காய், கள்ளிவேர், இவைகளை சமஎடை கோமூத்திரத்தில் போட்டு கியாழமிட்டு கொடுத்தால் வீக்கத்துடன் கலந்த பாண்டுரோகம் நிவர்த்தியாகும்.

அரசம்பட்டை, சுக்கு, பழயசிட்டம், வெள்ளை சாரணைவேர், இவைகளை சமஎடை ஆட்டுமூத்திரத்தில் கியாழம் காய்ச்சி கொடுத்தால் வீக்கத்துடன் கலந்த பாண்டு நிவர்த்தியாகும்.

கப பாண்டுரோகத்திற்கு தசமூலாதி கியாழம் :- தசமூலங்கள், சுக்கு இவைகளை கியாழம்வைத்து குடித்தால் கப பாண்டுரோகம், சுரங்கள், அதிசாரங்கள், வீக்கம், கிரஹனி, இருமல், அருசி, கண்டரோகம், இருதயரோகம், இவைகளைப் போக்கும்.

திரிபலாதி கியாழம் :- திரிபலை, சீந்தில்கொடி, ஆடாதோடை, கடுகுரோகணி, நிலவேம்பு, வேப்பன் ஈர்க்கு இவைகள் சமஎடை யாகக் கியாழம்வைத்து தேன் கலந்து குடித்தால் காமாலையுடன் கூடிய பாண்டுரோகம் நிவர்த்தியாகும்.

வாசாதி கியாழம் :- ஆடாதோடை, சீந்தில்கொடி, வேப்பன் ஈர்க்கு, நிலவேம்பு, கடுகுரோகணி, இவைகளை கியாழம்வைத்து சாப்பிட்டால் காமாலை பாண்டுரோகம் ரத்தபித்தம், கபரோகங்கள் முதலியது நிவர்த்தியாகும்.

பாண்டுமதேப சிம்மசூதம் :- பாதரசம், கெந்தி, திரிபலை, தாம் பிரபஸ்பம், சங்குபஸ்பம், நாபி, வங்கபஸ்பம், அப்பிரகபஸ்பம், காந்த செந்தூரம், எ·குச் செந்தூரம், அயச் செந்தூரம், லிங்கம், வெங்காரம் இவைகள் சமஎடை. இவைகளின் மொத்த எடையில் 3-பாகம் அதிகமாக மண்டூர செந்தூரம் சேர்த்து திரிபலை கரசனாங்
கண்ணி இஞ்சி இவைகளின் இரசத்தால் தனித்தனியாக அரைத்து வெய்யிலில் உலர்த்தி பிறகு திரிபலை சீந்திகொடி, முள்ளுசாமந்தி இவைகளின் சாற்றில் அரைத்து பிறகு வெள்ளைச்சாரணை சாற்றில்
கட்டியாகும்படி அரைத்து குன்றிஎடை மாத்திரைசெய்து அனுபானங்களின் விசேஷங்களில் கொடித்தால் பாண்டு, சுரம், தாகம், இரத்தபித்தம், குன்மம், க்ஷயங்கள், காசங்கள், சுவரபேதங்கள், அக்கினிமந்தம், மூர்ச்சை, வாதங்கள், பித்தவியாதி இவைகளை நாசப்படுத்தும்.

திரிலோக்கிய சுந்தர ரசம் :- ரசம், கெந்தி, லோகபஸ்பம்,அப்பிரகபஸ்பம், சீந்தில் சர்க்கரை, நிலபனங்கிழங்கு, திரிபலை, முருங்கைவேர்பட்டை இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு கரசனாங்கண்ணி சாற்றினால் 4 ஜாமம் அரைத்து குன்றி எடை வீதம் தினம் இரு வேளை சர்க்கரை நெய், தேன் இந்த அனுபானத்தில்
சாப்பிட்டால் பாண்டுரோகம் நிவர்த்தியாகும்.

திரிமூர்த்தி சித்தரசம் :- கெந்தி, தாம்பிரபஸ்பம்நேர்வாளம், இவைகளை சமஎடை சேர்த்து இரண்டு சாமங்கள் அரைத்து கோமூத்திரத்தில் கொடுத்தால் சகல வாயுகள், வீக்கங்கள் பாண்டுரோகம், ஜலொதரம் இவைகளை நாசஞ்செய்யும்.

திரிலோகரசம் :- சுத்திசெய்தரசம் 4 பலம், கெந்தி 5 பலம்,சீந்தில் சர்க்கரை, சுக்கு, மிளகு, திப்பிலி, நிலப்பனங்கிழங்கு, இலவம்பிசின், இவைகள் தனித்தனி 3பலம், அப்பிரகபஸ்பம் 6 பலம் லோகபஸ்பம் 8 பலம், இவைகள் யாவையும் திரிபலை கியாழத்தால் அரைத்து 64 ஜாமம் இஞ்சி சாற்றிலும், 32 ஜாமம் முருகன்பட்டை
ரசத்தாலும், 16 ஜாமம், சித்திரை மூலரசத்தாலும், 8 ஜாமம் கற்றாழை ரசத்தாலும், 8 ஜாமம் மறுபடியும் இஞ்சி ரசத்தாலும், அரைத்து உலர்த்தி சிமிழியில் வைத்து தேன் சர்க்கரை, நெய், இந்த அனுபானங்களினால் 2 குன்றி வீதம் கொடுத்து வர பாண்டுரோகம் க்ஷயரோகம், சுவாசகாசம் இவைகளை நீக்கும்.

உதயபாஸ்கரரசம் :- சுத்திசெய்த ரசம் 1 பாகம், கெந்தி2 பாகம், தாம்பிரபஸ்பம் 8 பாகம், சிலாசத்து பஸ்பம் 3 பாகம், தாளகபஸ்பம் 2 பாகம், சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு 4 பாகம் நாபி இரண்டு பாகம் இவைகள் கல்வத்திலிட்டு நொச்சியிலை, இஞ்சி, கரிசனாங்கண்ணி, முன்னையிலை இவைகளின் ரசத்தால் தனித்தனி 7 நாள் அரைத்து வெய்யிலில் உலர்த்தி, சுக்கு, மிளகுதிப்பிலி இவைகளை சூரணித்து இஞ்சி ரசத்தில்போட்டு இந்த அனுபானத்தில் குன்றி எடை மருந்தை கூட்டி கொடுத்து வரபாண்டு, காமலை, வீக்கம், அக்கினிமாந்தம், திரிதோஷசுரம், பீலிகம் மேகங்கள், பீலிகங்கள், ஜலோதரம், சங்கிரகணி, குஷ்டரோகம் தனுர்வாதம் இவைகள் நீங்கும். பத்தியம் 60 நாள் பயிரான தானியஅன்னம், மோர், வரகு, அரிசி, இவைகளை கொடுக்கவேண்டியது.

காமேஸ்வர ரசம் :- சுத்திசெய்த ரசம் 1 பலம், கெந்தி1 பலம், சித்திரமூலம் 3 பலம், கடுக்காய் தோல் 3 பலம், கோரைக்கிழங்கு ஏலக்காய், இலவங்கப்பத்திரி, இவைகள் தனித்தனி 1/2 பலம் சுக்கு திப்பிலி, மிளகு வகைக்கு 1 பலம், திப்பிலி மூலம் 1 பலம், நாபி 1 பலம் சிறு நாகப்பூ 1/2 பலம், காட்டுமிளகு 1/2 பலம் இவைகளை ஒன்றாகச்சேர்த்து அரைத்து சூரணித்து 5 பலம் பழையவெல்லத்தை பாகு பிடித்து மேற்கூறிய சூரணத்தைப்போட்டு பிறகு இஞ்சி ரசத்தினால் 1 ஜாமம் அரைத்து பசும் நெய்யினால் ஒரு ஜாமம் அரைத்து இலந்தை அளவு மாத்திரைகள்செய்து கொடுத்தால் சோபை, பாண்டு இவைகள் குணமாகும்.

பாண்டுவரீ ரசம் :- சுத்திசெய்த ரசம், சுத்திசெய்த கெந்தி,லோகபஸ்பம் இவைகளை சமஎடை கல்வத்திலிட்டு காற்றாழை சாற்றினால் 3-முறை அரைத்து மூன்று புடங்கள் போட்டால் நல்ல செந்தூரமாகும். இதை 1 அல்லது 2 குன்றி எடை பிரமாணம் கொடுத்தால்பாண்டுரோகம், காமாலை, சோபை இவைகள் நீங்கும்.

பாண்டுசூதன ரசம் :- சுத்திசெய்த ரசம், கெந்தி, தாம்பிரபஸ்பம், நேர்வாளம், குங்கிலியம் இவைகளை சமஎடையாகச் சூரணித்து நெய்விட்டு நன்கு அரைத்து குன்றிபிரமாணம் மாத்திரைச்செய்து அதில் அனுபானத்துடன் ஒவ்வொரு மாத்திரை கொடுத்தால் வீக்கம், பாண்டு, இவைகள் நாசமாகும். இதற்கு குளிர்ந்த ஜலம் புளிப்பு இவைகளை நீக்கல் வேண்டும்.

வங்கேஸ்வர ரசம் :- வங்கம், ரசம் இவைகளை சமஎடையாக யெடுத்து தொந்தித்திப் பொடித்துக் கல்வத்திலிட்டு காற்றாழை ரசத்தினால் அரைத்து மாத்திரைகள்செய்து காசிகுப்பியில் வைத்து
சீலைசெய்து எரித்து வெள்ளையாக பஸ்பமான பிற்கு எடுத்து பொடித்து 1/2-1 குன்றி எடை அனுபான விசேஷமாய்க் கொடுத்தால் பாண்டு, பிரமேகம், துர்ப்பலம், காமாலை இவைகள் நாசமாக்கும்.

பாண்டுநிக்கிரஹ ரசம் :- அப்பிரகபஸ்பம், இரசபஸ்பம், கெந்தி, லோகபஸ்பம், நிலபனங்கிழங்கு சூரணம் இவைகளை சமஎடையாக இலவன்பட்டை இரசத்தாலும் சீந்தில்கொடி கியாழத்தாலும், தனித்தனி ஒவ்வொரு நாள் அரைத்து திரிபலைகியாழம், இஞ்சிரசம், கற்றாழை ரசம், சித்திரமூல ரசம், முருங்கைப்பட்டை ரசம் இவைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நாள் அரைத்து உலர்தவும். இதை 2-குன்றி எடை நெய் அனுபானத்தினாலாவது யவதானியம், புளியம் ஓடு இவைகளின் கியாழத்திலாவது சுக்கு, சித்திரமூலம் இவைகளின் கியாழத்திலாவது கொடுத்தால், வீக்கம், பாண்டுரோகம், நிவர்த்தியாகும். புதிய அரிசி போஜனம் கடினமான போஜனம் இவைகள் கூடாது. மோர்சாதம் கொடுக்கவேண்டும்.

அநில ரசம் :- தாம்பிரபஸ்பம், இரசபஸ்பம், கெந்தி, வசநாபி இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு சித்திரமூல கியாழத்தினால் அரைத்து குப்பியிலிட்டு வாலுகாயந்திரத்தில் மந்தாக்கினியால் இரண்டு நாழிகை எரித்து ஆறியபிறகு எடுத்து ஒரு குன்றிஎடைஅனுபானத்துடன் கொடுத்தால் வீக்கம், பாண்டு இவைகள் நீங்கும்.

லோஹசுந்தர ரசம் :- இரசபற்பம் 1-பாகம், லோஹபஸ்பம் 2-பாகம், கெந்தி 3-பாகம், இவைகளை யொன்றாகச் சேர்த்து காசி குப்பியில் வைத்து சீலைமண்செய்து வாலுகாயந்திரத்தில் வைத்து
அந்தக்குப்பியில் இல்வஞ்சாறு, திரிபலைகியாழம், வெள்ளைவசம்பு சீந்தில்கொடிச்சாறு இவைகளை சேர்த்து மந்தாக்கினியில் ஒரு நாள் எரித்து ஆறிய பிறகு எடுத்து, திரிகடுகு கியாழம், இஞ்சிச்சாறு இவைகளில் பாவனை செய்து வைத்துக்கொண்டு அனுபானத்துடன்கொடுத்தால் பாண்டுரோகங்கள் நீங்கும்.

மிருத்பாண்டுரோகத்திற்கு பஞ்சகோல மண்டூரம் 
:- 12 பலம் மண்டூரத்தை 96 பலம் கோமூத்திரத்தில் காய்ச்சி 12 முறை தேய்த்து சுத்திசெய்து அதில் பஞ்சகோலம், தேவதாரு, கோரைக்கிழங்கு சுக்கு, திப்பிலி, மிளகு, திரிபலை, வாய்விளக்கம், இவைகளை அரைத்துபிறகு மறுபடியும் அரைத்து சூரணித்து இரண்டு குன்றி எடை வீதம் பசு மோரில் சாப்பிட்டு மோர் சாதம் சாப்பிட்டால் பாண்டு, மந்தாக்கினி, கிறாணி, வீக்கம், மூலரோகம், பீலிகம், உருஸ்தம்பவாதம் கிருமிரோகம், கனரோகம், இவைகள் குணமாகும்.

மஹாமண்டூரம் :- சித்திரைமூலம், வெள்ளை, உப்பிலாங்கொடி வேர், வெள்ளைச்சாரணைவேர், வெள்ளை எருக்கன் வேர், திரிபலை லோஹசிட்டம், இவைகள் தனித்தனி 10 பலம், இவைகளை 256 பலம்
எடையுள்ள கோமூத்திரத்தில் விட்டு நாலிலொன்றாகச் சுண்டக்காய்ச்சி அதில் கரிசனாங்கண்ணிசாறு 16 பலம், பெருங்குரும்பைரசம் 16 பலம், மஞ்சள் ரசம், இஞ்சி ரசம், கோமூத்திரம், இவைகளை தனித்தனி 16 பலம் சேர்த்து திரிகடுகு, வாய்விளக்கம், திரிபலை சித்திரமூலம், தேவதாறு, மஞ்சள், மரமஞ்சள், திப்பிலிமூலம்
பெருங்காயம், செவ்வியம், வசம்பு, வட்டத்திருப்பி, நாணல் சீரகம் இவைகள் தனித்தனி 1/2 பலம் சேர்த்து இவைகளை யாவும் மேற்கூறிய கோமூத்திரத்தில் கொட்டி சிறு தீயில் எரித்து பிறகு கல்வத்திலிட்டு நன்கு அரைத்து குன்றி யளவு மாத்திரைகள் செய்து வேளைக்கு 1- 2 மாத்திரை காலையில் மோரில் கொடுத்தால் பாண்டுரோகம், பஞ்சலோகம், முகரோகங்கள், மூலவியாதி, காமலை வீக்கம், உதிரரோகம் இவைகளை போக்கிவிடும்.

நாராயண மண்டூரம் :- திரிகடுகு, செவ்வியம், மோடி, பெருங் காயம், கண்டுபாரங்கி, ஆனைத்திப்பிலி, ஓமம், குரோசாணி ஓமம் கருவசம்பு, திரிபலை, மஞ்சள், கடுகுரோகணி, பிரண்டை, வெள்ளைப்பூண்டு, மிளகு, வட்டத்திருப்பி, முக்காவேளை, சாரணை, நேர்வாளம், பேய்ப்புடல், கருங்குரும்பை, நிலவேம்பு, இவைகளை சமஎடையாகச்சேர்த்து சூரணித்து இதற்கு சமஎடை சுத்திசெய்த மண்டூரத்தை, சேர்த்து கரிசனாங்கண்ணி, கொடிமாதுளம், மஞ்சள் இஞ்சி, செருப்படை யிலை, துளசி, நிலத்துளசி, மா, நெல்லிபருப்பு இவைகளின் ரசங்கள் கோமூத்திரம், இவைகளால் தனித்தனியே ஒவ்வொரு நாள் அரைத்து உலர்த்தவும். அதில் 2-3 குன்றி எடை மோரிலாவது அல்லது வெந்நீ ரிலாவது கொடுத்தால் சகல பாண்டுரோகம், காமாலை, வீக்கம்,அருசி, அக்கினிமாந்தம், குன்மம், ஹிருத்ரோகம், மலபந்தம், க்ஷயங்கள், சுவாசங்கள், காசங்கள், திரிதோஷங்கள் இவைகளை நிவர்த்திச் செய்யும்.

மது மண்டூரம் :- மண்டூரத்தூள் 64-தோலா, திரிபலை கியாழத்தில் ஒரு ஜாமம் அரைத்து புடம்வைக்க வேண்டியது. இந்தப்பிரகாரம் 21 புடமிட்டு பிறகு கோமூத்திரம், காற்றாழைச் சாறு, கரி சாலைசாறு இவைகளில் பிரத்தியேகமாக அரைத்து 21 புடமிட வேண்டியது. இந்தப்பிரகாரம் 84 புடமிட்டால் மிகவும் சிறந்த மருந்தாகி சகலமானவியாதிகளுக்கு அனுகூலமாயிருக்கும். திப்பிலி சூரணம், தேன் இந்த அனுபானத்தில் 2-குன்றிஎடை கொடுத்தால் வெகுநாளாயிருக்கும் பாண்டுரோகங்கள் நாசமாகும். தேகத்தில் ரத்தவிருத்தியை யுண்டுபண்ணும். அனுபான பேதங்களால் சகல ரோகங்களையும் நிவர்த்திக்கும்.

மண்டூர லவணம் :- இரும்பு சிட்டத்தை சிகப்பாகக் காய்ச்சி கோமூத்திரத்தில் தோய்க்கவும். இந்தப் பிரகாரம் பலதடவை செய்து பிறகு அந்த சிட்டத்திற்கு சமஎடை இந்துப்புச் சேர்த்து கோமூத்திரத்திலிட்டு அடுப்பிலேற்றி தானிக்காய் விறகுகளினால் புகையாமல் எரித்தால் பிலீதலவணம் என்று பெயர். அதை மோரிலாவது அல்லது தேனிலாவது கொடுத்தால் பாண்டுரோகம் நிவர்த்தியாகும்.

இதைவிட பாண்டுரோகத்தை நாசப்படுத்தும்படியான ஔஷதம் வேறு வொன்று உலகத்தில் கிடையாதென்று கூறப்படுகின்றது.

கிராதாதி மண்டூரம் :- நிலவேம்பு, தேவதாறு, மரமஞ்சள்,கோரைகக்கிழங்கு, சீந்திகொடி, கடுகுரோகணி, பேய்ப்புடல்,பூனைக்காஞ்சொரி, பற்பாடகம், வேப்பம்பட்டை சுக்கு, திப்பிலி, மிளகு, சித்திரமூலம், திரிபலை, வாய்விளங்கம், இவைகள் சமஎடை சூரணித்து இந்த சூரணித்திற்கு சமமாக மண்டூரச்செந்தூரத்தைக் கலந்து நெய், தேன், கூட்டி அரைத்து மாத்திரை செய்து அனுபான யுக்தமாக கொடுத்தால் பாண்டுரோகம், வீக்கம், பிரமேகம், கிராணி, சுவாசங்கள், காசங்கள், இரத்தபித்தம், மூலவியாதி, ஊருஸ்தம்பவாதம், ஆமவாதம், விரணம், குன்மங்கள்,கபம், இவைகள் நீங்கும்.

ஹம்ச மண்டூரம் :- மண்டூரத்தை மிருதுவாகச் சூரணித்துஎட்டுபங்கு அதிகமாக கோமூத்திரமிட்டு வேகவைத்து உலர்த்தி அத்துடன் அதில் திப்பிலி, திப்பிலிமூலம், செவ்வியம், சித்திர மூலம், சுக்கு, தேவதாரு, கோரைக்கிழங்கு, சுக்கு, திப்பிலி, மிளகு திரிபலை, வாய்விளக்கம், இவைகள் தனித்தனி 1 பலம் சூரணித்து
அத்துடன் கலந்து நன்கு அரைத்து 2 குன்றி எடை மாத்திரை செய்து மோரில் கலந்து உட்கொண்டால் பாண்டு வீக்கம், பீலிகம் உருஸ்தம்பவாதம், காமாலை, மூலவியாதி, இவைகள் நிவர்த்தியாகும்.

சித்தமண்டூரம் :- மண்டூரம் 8 பலம் பொடித்து 64 பலம் கோமூத்திரத்தில் வேகவைத்து உலர்த்தி அதில் வெள்ளைசாரணை சிவதை, சுக்கு, மிளகு, திப்பிலி, வாய்விளக்கம், திரிபலை சித்திரமூலம், தேவதாறு, மஞ்சள், மரமஞ்சள், புஷக்கரமூலம் நேர்வாளப்பருப்பு, செவ்வியம், கடுக்காய், தானிக்காய், நெல்லி
வற்றல், வெட்பாலைவிரை, கடுகுரோகணி, திப்பிலிமூலம்,கோரைக்கிழங்கு, அதிவிடயம் இவைகள் யாவையும் சூரணித்து இந்தசூரணத்தை மண்டூரபாக அந்தியில் சேர்த்து நன்கு அரைத்து 2 குன்றி எடை மாத்திரைகள் செய்து உபயோகித்தால் பாண்டு, உதிரம், வீக்கம்,சூலை, கிருமி, குன்மம், முதலிய ரோகங்கள் நிவர்த்தியாகும்.

* மண்டூரவடுகங்கள் :- தேவதாறு, கோரைக்கிழங்கு, மரமஞ்சள், திப்பிலி, திப்பிலிமூலம், சுக்கு, மிளகு, செவ்வியம், சித்திரமூலம், ஸ்வர்ணமாஷிகபஸ்பம், வாய்விளக்கம், திரிபலை வகைக்கு 1 பாகம், மண்டூரம் இரண்டு பாகம் இவைகளை சூரணித்துப்பசு, ஆடு, வெள்ளாடு, ஒட்டகம், எருமை, கழுதை, ஆழை, குதிரை
இவைகளின் மூத்திரத்தில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நாள் அரைத்து குன்றி எடை மாத்திரைகள் செய்து வேளைக்கு 1 2 மாத்திரை வீதம் பசுவின் மோரில் கொடுத்தால் காமாலை, பாண்டுரோகம், மேகங்கள்
மூலவியாதி, சோபை, குஷ்டரோகம், கபரோகம், ஊருஸ்தம்பவாதம் அஜீரணம், பீலிகம், இவைகளை குணமாக்கும்.

புனர்னவாதிவடுகங்கள் :- வெள்ளைசாரணை சிவதை, சுக்கு, மிளகு, திப்பிலி, வாய்விளக்கம், திரிபலை, சித்திரமூலம், தேவதாறு, கோஷ்டம், மரமஞ்சள், செவ்வியம், வெட்பாலை, கடுகுரோகணி, மோடி
கோரைக்கிழங்கு, கற்கடகசிங்கி, கருஞ்சீரகம், ஓமம், பொரித்த வெங்காயம், இவைகள் வகைக்கு 1 பலம் வீதம் சூரணித்து அத்துடன் இரண்டு பங்கு மண்டூரம் சூரணம் சேர்த்து இதற்கு 8 பங்கு அதிகமாக கோமூத்திரத்தில் போட்டு நீர் சுண்ட எரித்து கல்வத்திலிட்டு நன்கு அரைத்து மாத்திரைகள் செய்து வேளைக்கு 1 2 மாத்திரை வீதம் மோருடன் சாப்பிட்டால் பாண்டுரோகம், காமாலை, பீலிகம், சுவாசரோகம், சுரம், வீக்கம், உதரம், சூலை, க்ஷயரோகம், காசரோகம், மூலவியாதி கிராணி, கிருமி, வாதரத்தம், குஷ்டரோகம், இவைகளை சுவஸ்தப்படுத்தும்.

மண்டூர வஜ்ரவடுகங்கள் :- திப்பிலி, வாய்விளக்கம், திரிபலை,  சித்திரமூலம், தேவதாறு, மிளகு, கோரைக்கிழங்கு, இவைகள் 3 பலம் மண்டூரம் 6 பலம் இவைகளின் எடைக்கு 8 பாகம் அதிகமாக கோமூத்திரம்
வார்த்து அதை சுண்டக்காய்ச்சி 2 குன்றி எடை மாத்திரை செய்து மோரில் சாப்பிட்டு மோர்சாதம் சாப்பிடவும். பாண்டுரோகம், மந்தாக்கினி, அருசி மூலவியாதி, கிராணி, வீக்கம், ஊருஸ்தம்பவாதம், ஹலீமகம், கிருமிரோகம், பீலிகம், உதரம், கனரோகம், இவைகள் யாவும் நிவர்த்தியாகுமென்று அறியவேண்டியது.

பாண்டுரோகத்திற்கு சூரணம் :- சித்திரமூலம், கோரைக்கிழங்கு, வாய்விளக்கம், திரிகடுகு இவைகளை சமஎடையாகச் சூரணித்து இந்தச் சூரணத்திற்குச் சமமாக மண்டூரச்செந்தூரத்தைக்கலந்து இரண்டு குன்றி எடை தேன் நெய் இவைகளுடன் செர்த்து உட்கொண்டாலும் அல்லது கோமூத்திரம் இவைகளுடன் உட்கொண்டாலும் திரிதோஷங்கள் பாண்டுரோகம், குஷ்டம்,பகந்தரம், வீக்கம், குஷ்டம், மூலவியாதி, மந்தாக்கினி, அருசி, கிருமி, இவைகள் நீங்கும்.

நவாயச்சூரணம் :
- திப்பிலி, சுக்கு, மிளகு, கோரைக்கிழங்கு, வாய்விளக்கம், கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், சித்திரமூலம், இவைகளை சமஎடையாகச் சூரணித்து இந்தச் சூரணத்திற்குச் சமமாக மண்டூரச்செந்தூரத்தைக்கலந்து இரண்டு குன்றி எடை தேன் நெய் இவைகளுடன் சேர்த்து கொடுத்தால், பாண்டு, ஹிருத்திரோகம், குஷ்டம், மூலை, காமாலை, இவைகளைப் போக்கும்.

கோமூத்திரத்தில் கொடுத்தால் வாதபாண்டு, வீக்கம், ஹிருத்தி ரோகம், குஷ்டம், கிருமி, பகந்தரம், அக்கினிமாந்தம், துர்நாமம் அருசி இவைகள் நீங்கும். இஞ்சிரசத்தில் கொடுத்தல் கபம் நீங்கும்.
ஒரு குன்றி எடை முதல் 9 குன்றி எடை வரையிலும் ரோகத்தின் பலாபலத்தை யறிந்து சாப்பிடலாம்.

ஏலாதிசூரணம் :- ஏலக்காய், சடமாஞ்சி, கிராம்பு, சுக்கு திப்பிலி, கோரைக்கிழங்கு, பச்சைக்கற்ப்பூரம், கொத்தமல்லி, பேரிச்சம்பழம், லவங்கப்பத்திரி, அதிமதூரம், வெட்டிவேர், குறுவேர்,  தாமரைக்கிழங்கு, திராட்சை, சந்தனத்தூள், கோஷ்டம், நாககேசரம் தவஷீரி, சாதிக்காய், நெரிஞ்சில்வேர், வெள்ளைச்சாரணைவேர், நிலப்பனங்கிழங்கு, கருநன்னாரிவேர், அமுக்கிறாக்கிழங்கு, சீந்தில் கொடி, இவைகளை சமஎடையாக சூரணித்து இந்தச் சூரணத்திற்கு சமமாக சர்க்கரை கலந்து இதில் ஒரு வராகனெடை வீதம், எடுத்து அதனுடன் 1-2 குன்றி எடை மண்டூரச்செந்தூரம் கட்டி தினம் இரு வேளையாக பசும்நெய்யில் கொடுத்தால் பாண்டுரோகம் பல
ஹீனம், க்ஷயங்கள், பைத்தியரோகங்கள், விக்கல், காமாலை, மூத்தி ரரோகம், சோமரோகம், தாகம், உன்மாதம், இவைகள் யாவையும் நிவர்த்திக்கும்.

பாண்டுகளுக்கு திரிபலாதிலேகியம் 
:- கடுக்காய், தான்றிக்காய் நெல்லிவற்றல், சுக்கு, திப்பிலி, மிளகு, சித்திரமூலம், வாய்விளக்கம் இவைகள் தனித்தனி 1 பாகம், சிலாசத்துபற்பம், வெள்ளிபற்பம், மண்டூரச்செந்தூரம் இவைகள் தனித்தனி 5 பாகம், சுத்தமான அயச்செந்தூரம், காந்தச்செந்தூரம், இவைகள் தனித்தனி 8 பாகம்,
இவைகள் கல்வத்திலிட்டு தேன் கலந்து இரும்பு பாண்டத்தில் வைத்து ஆலம்பழ அளவு மாத்திரை செய்து தேகபலானுசாரமாக கொடுத்தால் பாண்டுரோகம், விஷம், காசங்கள், கஷயரோகங்கள் விஷமசுரங்கள், குஷ்டவியாதி, மேகங்கள், சுவாசங்கள், வீக்கங்கள் அருசி, அபஸ்மாரம், காமாலை, மூலவியாதி, இவைகளைப்போக்கும். பத்தியம் ஜீரணமாகும் அன்னத்தைக்கொடுக்கவேண்டியது.

பாண்டுகளுக்கு சின்சாதிலேகியம் :-
 புளியிலை 100 பலம், இரும்புச்சிட்டம் 50 பலம், சித்திரமூலம் 25 பலம், இஞ்சி 12 1/2 பலம் வெள்ளைச்சாரணைவேர் 6 1/2 பலம், தேவதாறு 6 1/2 பலம், செவ்வியம் 4 பலம், திப்பிலிமூலம் 1 பலம், தசமூலங்கள் தனித்தனி விராக னெடை இவைகளை ஒன்று சேர்த்து சதைத்து ஓர் பாண்டத்திலி விட்டு 512 பலம் ஜலத்தை விட்டு அதில் நாலிலொன்றாக குடிநீரிட்டு அதில் 100 பலம் பழைய வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி மாதுளம்பழரசம் 16 பலம் அதில் கலந்து அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து பாகுபதம் வரும்போது கொத்தமல்லி, இரண்டு வித ஓமங்கள் பெரிய ஏலக்காய், திரிகடுகு, திரிசாதங்கள் வாய்விளக்கம் இவைகள் வகைக்கு 1 பலம் சூரணித்து அயச்செந்தூரம் 3 பலம் மண்டூரச்செந்தூரம் 2 பலம், சேர்த்து தூவி லேகியமாகக்கிண்டி ஆறிய பிறகு 32 பலம் தேன் கலந்து வேளைக்கு 1/4 பலம் வீதம் கொடுத்தால் வீக்கம், பாண்டு, மேல்மூச்சு, சுவாசரோகம், காச ரோகம், க்ஷயரோகம், பீநசரோகம், பாரிசசூலை, பிரமேகங்கள் குன்மங்கள், ஹிருத்ரோகங்கள் இவைகளை நாசஞ்செய்யும்.

லகுசின்சாதிலேகியம் :- புளியிலை 100 பலம், இரும்புத்தூள் 50 பலம், இவைகளை 512 பலம் ஜலத்தை கொட்டிஎட்டிலொன்றாக சுண்டக்காய்ச்சி, 25 பலம் வெல்லத்தைக்கலக்கி வெள்ளைச்சாரணை
வேர்ரசம் 16 பலம் கலந்து அதில் 16 பலம் இஞ்சித்துண்டுகளை சேர்த்து அடுப்பிலேற்றிகாய்ச்சி பாகுபதத்தில் சுக்கு, திப்பிலி, மிளகு, சூரணம் இவைகள் தனித்தனி 4 பலம், லோகபஸ்பம் 4 பலம் கலந்து லேகியபதமாகக்கிண்டி, 15 நாள் தானியபுடமிட்டு 1/2 1 தோலாவீதம் கொடுத்தால் வீக்கம், பாண்டு, கிராணி, மேகம் பீலிகம் இவைகள் நீங்கும்.

பாண்டுரோகத்திற்கு பஞ்சகோல கிருதம் :- திப்பிலி, திப்பிலி மூலம், செவ்வியம், சித்திரமூலம், கோஷ்டம், சுக்கு, கண்டுபாரங்கி புஷ்கரமூலம், இவைகள் தனித்தனி ஒரு பலமாகச் சூரணித்து 300 கடுக்காயை அதன் எடைக்கு நாலு பங்கு அதிகமான ஜலத்தில் கொட்டி நாலிலொன்றாக சுண்டக்காய்ச்சி, பால், தயிர், நெய்சமஎடையாகச் சேர்த்து முன்செய்த சூரணத்தையும் சேர்த்து மந்தாக்கினியால் கிருதபக்குவமாக காய்ச்சி முறைப்படி அருந்திவர பாண்டுரோகம், பீலிகம், க்ஷயங்கள் இவை யாவும் நாசமாகும்.

சகல பாண்டுகளுக்கு வியோஷாதிக்கிருதம் :- சுக்கு, மிளகு, திப்பிலி, வில்வவேர், மஞ்சள், மரமஞ்சள், திரிபலை, வெளைச்சாரணை வேர்,சிகப்புச்சாரணைவேர், கோரைக்கிழங்கு, லோகபஸ்பம், வட்டத் திருப்பி, வாய்விளக்கம், தேவதாறு கண்டுபாரங்கி இவைகள்  சமஎடையாகச் சூரணித்து பால் நெய் இவைகளை சேர்த்து கிருத பக்குவமாக காய்ச்சி கொடுத்தால் சகல பாண்டுரோகங்களை நிவர்த்தி செய்யும்.

சந்தனாதித்தைலம் :- சந்னம், சரளதேவதாரு, மரமஞ்சள், அதிமதூரம், ஏலக்காய், வெட்டிவேர், கிச்சிலிக்கிழங்கு, நகம்சிலாசத்து, தாமரைத்தண்டு, கோரைக்கிழங்கு, நாககேசரம், கங்கோலங்கள், ஜடாமாஞ்சி, ரோஜாமொக்கு, கடுக்காய்ப்பிஞ்சி, இலவங்கப்பட்டை, காட்டுமிளகு, சீமைநிலவேம்பு, நன்னாரிவேர், கடுகு ரோகணி, கிருஷ்ணாஅகரு, நாயுருவி, குருவேர், திரா¨க்ஷ இவைகளை சமஎடையாக எடுத்து 16 பங்கு நீர்விட்டு, எட்டிலொன்றாக குடிநீர்விட்டு அதற்கு சமன் கொன்றை வேர்பட்டை கியாழமும் தயிர் தேட்டையும், நல்லெண்ணெய்யும் சேர்த்து தைலபாண்டத்திட்டு அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து பதமுறக்காய்ச்சி வடித்து வைத்துக்கொள்க. இதை தலைக்குத்தேய்த்துக் கொள்க. தேகத்திற்கு பலம், காந்தி, புஷ்டி, தேஜசு, புத்தி, ரூபம், சவுபாக்கியம் இவை களை யுண்டாக்கும். சகலபூதவசிகரமாகும்.

புநர்னவாதி தைலம் :- வெளைச்சாரணைவேர், சித்திரமூலம், ஆமணக்குவேர், திரிபலை, சிகப்புமுருக்கன்வேர், புங்கம்வேர், தவசு முருங்கைவேர், முன்னைவேர், நொச்சிவேர், குருவேர், இவையெல் லாம் தனித்தனி 100 பலம் சேர்த்து 1034 சலம்விட்டு நலிலொன் றாக சுண்டக்காய்ச்சி அதில் பால் 64 பலம் எண்ணெய் 24 பலம் போட்டு அடுப்பிலேற்றி காய்ச்சி அதில் திப்பிலி, சித்திரமூலம், ஓமம், அதிமதூரம், சரணைவேர், சதாப்புவிதை, அமுக்கிறாக் கிழங்கு, குடசப்பாலை, கருங்காலி, வசம்பு, சுக்கு, இந்துப்பு கிராம்பு, ஏலக்காய், கஸ்தூரிமஞ்சள், இவைகளை சம எடையாகச்சூரணித்து எண்ணெய் எடைக்கு ஆறில் ஒருபாகஞ் சேர்த்து தைல பக்குவமாக காய்ச்சி ஒருபக்ஷம் அப்பியங்கன ஸ்நானஞ்செய்தால், வாதபித்த பாண்டுரோகங்கள் ஆரம்பமான க்ஷயரோகங்கள்,
சோபைகள் சூரியனைக்கண்ட பனிபோல் நீங்குவிடும்.

பாண்டுரோகங்களுக்கு அமிருத்ஹரீதகீ :- தண்ணீவிட்டான் கிழங்கு, கரசனாங்கண்ணி, வெள்ளைச்சாரணை, மருதோன்றி இவை களை வகைக்கு 7-பலம் வீதம் இடித்து 112-பலம் ஜலம்விட்டு நாலில் ஒருபாகமாக கியாழமிட்டு வடிகட்டி அதில் 360 கடுக்காய்களை போட்டு 30-பலம் பால் சேர்த்து காய்ச்சி வெந்தபிற்கு கடுக்காயின் விதைகளை கத்தியால் காய்கள் உடையாமல்படி எடுத்துவிட்டு சுத்தி செய்த ரசம், கந்தகம் வகைக்கி பலம்-6 வீதம் எடுத்து கல்வத்தி லிட்டு நன்கு ஒர் அகலிலிட்டு ஒரு நிமிஷம் நெருப்பன லில் வைத்து எடுத்து அரைத்து அத்துடன் சீந்தில் சர்க்கரை 7-பலம் சேர்த்து தேன்விட்டு அரைத்து 360-மாத்திரைகளாகச்செய்து மேல்கூறிய கடுக்காய்களில் ஒவ்வொன்றில் வைத்து நூலால் கட்டி ஓர் பாண்டத்திலிட்டு மூழ்க தேன்விட்டு வைத்து தினம்
ஒரு கடுக்காய் வீதம் அருந்திவர பாண்டுரோகங்கள் குணமாகும்.

சவுபாக்கிய சுண்டி :- மேல்தோல் போக்கிய சுக்கு 50-பலம் சிறிய துண்டுகளாக்கி அவைகளை கரசனாங்கண்ணிச்சாறு, கீழா நெல்லிச்சாறு, வெள்ளைச்சாரணைச்சாறு, பிரண்டைச்சாறு, பூனை காஞ்சொரீஇலைச்சாறு, முள்ளங்கத்திரி இலைச்சாறு, இஞ்சிச்சாறுஆடாதோடை இலைச்சாறு ஆகிய இந்த திரவங்களில் ஒவ்வொன்றி லும் ஒவ்வொருநாள் இரவும் பகலும் பாவனைசெய்து அதாவது ஊறவைத்து நிழலிலுலர்த்தி சூரணித்து வைத்துகொள்க. பிறகு 100-பலம் சர்க்கரை 256-பலம் பால் இவைகளை பாகுபதமாக காய்ச்சி அதில் சுக்கு சூரணத்தையும், வாய்விளங்கம், தும்பராஷ் டம், செவ்வியம், திப்பிலி, சீரகம், காட்டுமிளகு, கிறாம்பு நாகேசரம், இந்துப்பு, ஓமம், சத்திக்ஷ¡ரம், வெண்காரம், சுகந்த சந்தனத்துண்டுகள், அகரு, கிருஷ்ணாகரு, சிலாஜித்து, கொத்தமல்லி, வசம்பு, கிச்சிலிக்கிழங்கு, மிளகு, குராசானிஓமம், கருஞ்சீரகம், மோடி, பிடாலவணம், தாளிசப்பத்திரி, கண்டுபாரங்கி, ஜாதிக்காய்,சதாப்புவிரைகள், தக்கோலம், சித்திரமூலம், ஜாபத்திரி, வாளேந்திரபோளம் இவைகள் தினுசுக்கு 1-பலம்விகிதம் சூரணித்து ஒன்றாய்க் கலந்து வஸ்திகாயம்செய்து மேற்கூறிய ஔடதத்தில் போட்டு இருபது பலம் பசும்நெய்யை சேர்த்து லேகிய பாகம்செய்து நெல்
லிக்காயளவுவீதம் காலையில் தேனுடன் கொடுத்தால் சகலரோகங்கள் காசங்கள், சுவாசங்கள், சுரங்கள், விக்கல், அருசி, இருதயவேதனை, கிரந்திரோகம், யோனிசூலை, கடிவாதம், கம்பவாதம், சந்திவாதம், கிக்ஷ¢சூலை, இருதயசூலை, வீக்கம், அங்கர்த்தவாதம், சிரோவாதம்,எட்டுவித குதிசாரோகங்கள், ஆதமாவாயு, சரீரதாமம், இரத்த சிராவம், சுக்கிலசிராவம், விஷம சந்நிபாதங்கள், எட்டுவிதசூலைகள், குன்மம், வித்திரதி, சூதிகாசுரம், அன்னதுவேஷம், நேத்திரநோய், பீனசம், தலைச்சுற்றல், சப்ததாதுகதசுரம், புராணசுரம், சீதசுரம், முகரோகம், நானாவித விரணங்கள், அஜீரணம், அதிசாரம், நஷ்டவீரியம், கருப்பசிராவம், மலபந்தம், வயிறு இறைச்சல், காமாலை, பாண்டு, க்ஷயரோகம், பிரதரரோகம், கிரந்திகள், தேகத்தின் உள்வெளியிலுள்ள சூலைகள் முதலிய வியாதிகளை நிவர்த்திக்கும். அன்றியும் தேஹாரோக்கியம் புஷ்டி இவைகளை யுண்டாக்கும்.

மஹாசவுபாக்கியசுண்டி :- 30-பலம் பசும்பாலில் 20-பலம் சர்க்கரை போட்டு கலக்கி பாகுபதமாக காய்ச்சி அதில் மோடி, மிளகு, கண்டுபாரங்கி, சாதுர்சாதங்கள், வாய்விளங்கம், சீரகம், கருஞ்சீரகம், ஆனைதிப்பிலி, கிரந்திதகரம், ஓமம், குராசானி ஓமம், கிறாம்பு, கோஷ்டம், அதிமதுரம், ஜடாமாஞ்சி, தாளிசப்பத்திரி, சந்நராஷ்டம், வாலேந்திரபோளம் இவைகள் தனித்தனி 3/8-பலம்கொத்தமல்லி, அமுக்கிறாங்கிழங்கு, சித்திரமூலம், இவைகள் தனித்தனி 1/2-பலம், அயச் செந்தூரம், கரசனாங்கண்ணி சூரணம் வகைக்கு 5/8-பலம், தோல் சீவிய சுக்கு 1 1/2-வீசை, குராசானி ஓமம் 2-பலம்,இவைகள் யாவையும் ஒன்றாய்சேர்த்து சூரணித்து கலந்து 4-பலம் பசுநெய்யும் 8-பலம் தேனுங்கலந்த லேகிய பாகமாக கிளரி வைத்துக்கொண்டு இதை காலையில் கொடுத்தால் சூதிகாவாயுவு, அனேக விதங்களான கிறாணி ரோகங்கள், அநாகரோகம், வாதபைத்திய முதலிய ரோகங்கள் சுரங்கள், தாஹங்கள், அருசி, வாந்தி, பாண்டுகுன்மம், அக்கினி மந்தம், கால்கை எரிச்சல், சகல ரோகங்கள் இவைகளை நாசமாக்கும்.

லோகாசவம் :- லோகபஸ்பம், திரிகடுகு, திரிபலை, ஓமம்,வாய்விளங்கம், சித்திரமூலம், கோரைக்கிழங்கு, இவைகள் தனித்தனி 4-பலங்கள் காட்டாத்துப்பூ 20-பலங்கள் இவைகளை சூரணித்து அதில் 64-பலம் தேன் 100-பலம் வெல்லம் 512-பலம் ஜலம் கொட்டி பழகிய பாண்டத்தில் வைத்து ஒருமாதம் சென்றபின்பு பயன்படுத்தவும்.
இதுதான் லோகாசவமென்று பெயர். இதை கொடுத்தால்தேகபுஷ்டி அக்கினி தீபனம் உண்டாக்கும். பாண்டுரோகம்,
சோபைகள், குன்மரோகம், பிலீகரோகம், அருசி, கிறாணி, இருத்ரோகம், இவைகள் நீங்கும்.

அயச்செந்தூரம் :- அயப்பொடியை காய்ச்சி காடி, நல்லெண் ணெய், கொள்ளுக் குடிநீர் முதலியவற்றில் ஒவ்வொன்றிலும் 10 முறை வீதம் முறையே தோய்த்தெடுத்து கழுவி உலர்த்தி சுத்தி செய்தது பலம் 2 1/2 , சுத்திசெய்த நெல்லிக்காய் கந்தகம் பலம்-2 1/2,இவை இரண்டையும் கல்வத்திலிட்டு பழச்சாறு விட்டு தினம் ஒன்றுக்கு இரண்டு ஜாமம் வீதம் 5-நாள் அரைத்து வில்லை செய்து உலர்த்தி ஓர் சட்டியிலிட்டு மூடி சீலைசெய்து அடுபிலேற்றி முத்தீயாக நான்கு ஜாமம் எரித்தெடுக்க செந்தூரமாகும்.

இந்த வில்லையை பொடித்து கல்வத்திலிட்டு கரிசாலைச்சாறு விட்டு தினம் ஒன்றுக்கு இரண்டு ஜாமம் வீதம் 5 நாள் அரைத்து வில்லை செய்து உலர்த்தி முன்போல் சட்டியிலிட்டு எரித்தெடுக்க நல்ல செந்தூரமாகும். அரைத்து வைத்துக்கொள்க.

இதில் வேளைக்கு குன்றி எடை வீதம் தினம் இரு வேளையாக கரி சாலை கற்க்கத்துடன் தேன் சேர்த்து கொடுத்து வர பாண்டு சோபை, காமாலை முதலியன குணமாகும். இரத்தவிரித்தி உண்டாகும்.

எ·குச்செந்தூரம் :- எ·க்குத்தூள் வராகனெடை 18, அயத்தூள் வராகனெடை 8, வீரம் வராகனெடை 4, வெள்ளைப்பா
ஷாணம் வராகனெடை 2, நெல்லிக்காய் வராகனெடை 2, ரசம் வராகனெடை 2, தாளகம் வராகனெடை 2.

வெடிப்பு பலம் 25, படிகாரம் பலம் 30, இவற்றுள் வெடிப்பையும் படிகாரத்தையும் கலந்து, முறைப்படி தீநிர்
கருவியிலிட்டு திராவகம் வாங்கி வைத்துக்கொள்க. பின்பு மற்ற சரக்குகளை யெல்லாம் சுத்திசெய்தெடுத்து முதலில் அயத்தூளை யும், எ·குத்தூளையும் ஒரு கோப்பையில் போட்டு மூழ்க திராவகம் விட்டுக் கிளரிகொடுக்கவும். திராவகம் சுண்டின பின்பு மறுபடியும் சிறிது திராவகம் விட்டு கிளறவும். இப்படி 2 3 முறை செய்வதற்
குள் திராவகம் மடிந்து குழைந்து சேறு பாலாகும். பிறகு ரசத்தையும் கந்தகத்தையும் கல்வத்திலிட்டு சிறிது அரைத்து பிறகு தாளகம் பாஷாணம், வீரம் முதலியவற்றை முறையே ஒன்றன்பின் ஒன்றாக
சேர்த்து முன்பு சுத்தப்படுத்தி வைத்துள்ள அய எ·கு குழம்பை வழித்துவிட்டு தேவையாயின் சிறிது திராவகம் விட்டு அரைத்து வில்லைசெய்து உலர்த்தவும் நாலைந்து நாட்கள் சென்ற பின்பு மீண்டும் வில்லையை கல்வத்திலிட்டு திராவகம் விட்டு அரைத்து வில்லைசெய்து உலர்த்தவும். இப்படி 2 3 முறை செய்து காசளவு வில்லைகளாக செய்துலர்த்தி அகலிலடக்கிச் சீலைமண் செய்து 10 விறட்டியில் புடமிட செந்தூரமாகும்.

இதில் வேளைக்கு 1/4 1/2 குன்றி எடை வீதம் தினம் வேளை தேன் நெய் அல்லது தக்க அனுபானங்களில் கொடுத்துவர பாண்டு சோபை காமாலை, குன்மம், சூலை, இசிவு, காசம், சுரம் முதலியன குணமாகும். இரத்தவிரித்தியும் நரம்புகளுக்கு பலமும் ஏற்படும்.

காந்தச்செந்தூரம் :- 3 பலம் காந்தத்தை பழுக்கக்காய்ச்சி கொள்ளுக் குடிநீரில் 10 முறை தேய்த்து எடுக்க நல்லசுத்தியாகும்.
 

இதைப் பொடித்துக் கலவத்திலிட்டு பழச்சாறு விட்டரைத்து வில்லை செய்து அகலிலடக்கி, சீலை செய்து 30-விரட்டியில் புடமிடவும். இப்படி மூன்று புடமிட்டு மீண்டும் கல்வத்திலிட்டு தாழம்விழுது சாறு விட்டரைத்து மூன்று புடம் முன்போல் போட்டெடுக்க நல்ல உயர்தரமான செந்தூரமாகும்.

இதில் வேளைக்கு குன்றிஎடை வீதம் தினம் 2 வேளையாக தேன் அல்லது தக்க அனுபானங்களில் அருந்திவர, பாண்டு,கோடை, காமாலை, வெப்பு, பித்தசுரம், வெண்மேகம் முதலிய பல பிணிகள் குணமாகும்.

மண்டூரச் செந்தூரம் :- 3-பலம் மண்டூரத்தை பழுக்கக்காய்ச்சி கோமூத்திரத்தில் 10-முறை தோய்த்தெடுக்க சுத்தியாகும். பிறகு இதை உரலிலிட்டு இடித்துப் பொடியாக்கிக் கல்வத்திலிட்டு கரிச்சாலைச் சாறுவிட்டு தினம் ஒன்றுக்கு இரண்டு ஜாமம் வீதம் 3 நாள் அரைத்து வில்லைசெய்து உலர்த்தி அகலிடக்கிச் சீலைமண்
செய்து 30 விரட்டியில் புடமிடவும். மீண்டும் கல்வத்திலிட்டு கரிச்சாலைச் சாறுவிட்டு அரைத்துவில்லை செய்துலர்த்தி அகலிடக்கிமுன்போல் புடமிடவும். இப்படி ஐந்து புடமிட்டெடுக்க நல்ல செந்தூரமாகும். அரைத்து பத்திரப்படுத்துக.

இதில் வேளைக்கு 1 குன்றி வீதம் தினம் 2 வேளையாக தேன் அல்லது திரிகடுகுச் சூரணம், கரிச்சாலைச் சூரணம் முதலிய அனு பானங்களுடன் அருந்திவர பாண்டு, சோபை, காமாலை முதலியன குணமாகும்.

அன்னபேதிச் செந்தூரம் :- தேவையான அளவு அன்னபேதியை பொடித்து ஓர் கோப்பை கிண்ணத்தில் போட்டு மூழ்க இஞ்சிச்சாறுவிட்டு வெய்யிலில் வைத்து சாறு சுண்டின பின்பு மூழ்க பழச்சாறுவிட்டு அதுவும் சுண்டி குழம்பு பதமாயுள்ள போது வழித்து ஓர் மண்குடுவையில் அரைபாகத்தில் அடங்கும்படி விட்டு வாய்க்கு ஓடு மூடிச் சீலைமண் செய்து புடமிடச் செந்தூரமாகும். அரைத்து வைத்துக்கொள்க.

இதில் வேளைக்கு குன்றிஎடை தினம் 2 வேளை தேன்அல்லது தக்க அனுபானங்களுடன் அருந்திவர பாண்டு, சோபை,  காமாலை, அஜீரணபேதி முதலியன குணமாகும்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக