வெள்ளி, ஜனவரி 15, 2010

விஷ சிகிச்சைகள் ( பாம்பு கடி விஷத்திற்கு தீர்வுகள் )

விஷ சிகிச்சை
(சர்வ சர்ப்ப விஷங்களுக்கும் சிகிச்சை)


விஷாமுர்தம் :- இரசம், கந்தகம், தாளகம், மனோசிலை, நவாச்சாரம், நாபி, நிர்விஷம், கருஞ்சீரகம், பெருங்காயம், இந்துப்பு இவைகள் சுத்திசெய்யப்பட்டது. வகைக்கு பலம்-1/4, சுத்திசெய்த நேர்வாள பருப்பு பலம்-2 1/2, இவைகளைப் பொடித்து கல்வத்தி லிட்டு முறைப்படிச் சேர்த்தரைத்து, உத்தாமணி இலைச்சாறுவிட்டு இரண்டு ஜாமம் அரைத்து உலர்ந்தபின் அப்பட்டமான தேங்காய்ப்பால் விட்டு நெய் கக்காத பதத்திற்குஅரைத்து மெழுகு பதத்தில்வாயகண்ட சீசாவில் பத்திரப்படுத்துக.

இதில் வேளைக்கு சிறுமிளகு பிரமாணம் பனைவெல்லத்தில் தினம் ஒரு வேளையாக காலையில் மூன்றுநாள் கொடுக்க, பாம்புகடி, நாய்கடி, எலிகடி முதலிய சகல ஜீவ ஜந்துக்களின் கடிவிஷமும் குணமாகும். பாம்பு கடியால் விஷம் தலைக்கேறி ஸ்மரணை தப்பிஇருக்கும் ஆபத்தான காலங்களில் உச்சியில் சிறிது கீறி இம்மெழுகில் கடுகளவு தேய்த்தும், கடிவாயிலும் சிறிது தேய்த்தும் வரலாம்.

நீலகண்டக் குளிகை :- சுத்திசெய்த ரசம், கந்தகம்,வீரம், பூரம், காரம், சாரம் வகைக்கு பலம்-1/4, சுத்திசெய்த துருசு,வாளம் வகைக்கு பலம்-1, இவைகளைப் பொடித்து கல்வத்தி லிட்டு வெற்றிலைச்சாறுவிட்டு நான்கு ஜாமம் நன்கு அரைத்து மெழுகுபதத்தில் உளுந்தளவு மாத்திரைசெய்துலர்த்தி வேளைக்கு 1-2 மாத்திரை தேகதிடத்திற்கும், நோயின் வன்மைக்கு தக்கப்படிவெல்லத்தில் வைத்து உள்ளுக்கு கொடுத்து மேலுக்கும் வைத்துக்கட்ட சர்வ சர்ப்ப விஷமும் தணியும்.

பாக்ஷ¡ண மாத்திரை :- சுத்திசெய்த வெள்ளைப்பாக்ஷ¡ணம்மூன்று குன்றி எடை மிளகுச் சூரணம் 1 வராகனெடை இவைகளைக்கலந்து கல்வதிலிட்டு மிளகு குடிநீரிட்டு ஒரு ஜாமம் அரைத்து மெழுகுபதத்தில் சுமார் 90 மாத்திரைகளாகச் செய்து நிழலிலுலர்த்தி வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தினம் இரு வேளையாக கொடுத்து வர பாம்புகடி விஷம் குணமாகும்.

அர்க்காதி வடகம் :- எருக்கம் பருப்பு இலையில் ஒரு பிடி, கோடக சாலையில் ஒரு பிடி, மிளகு பலம் 1/2, இவைகளை உரலிலிட்டு இடித்து கல்வத்திலிட்டு மிளகு குடிநீரிட்டு அரைத்து மெழுகுபதத்தில் வைத்துக்கொள்க. இதில் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் பொடித்துவாயிலிட்டு நீர் சேர்த்து அருந்தவும். இப்படி இரண்டு மணி
நேரத்திற்கு ஒரு முறை வீதம் இரண்டு மூன்று முறை கொடுப்பத்தற்குள் நல்லபாம்பு முதல் சர்வ பாம்புகளின் விஷங்களும் குணமாகும்.

கடிவாயில் அட்ட மாத்திரை :- இரசம், நேர்வாளப்பருப்புகெளரிபாக்ஷ¡ணம் , நாவி, நெய்கான்கொட்டான் பழம், வெங்காரம் இவைகளை ஒர் நிறையாகத் தூக்கி பொடித்து கல்வத்திலிட்டு  எலுமிச்சம்பழச்சாறு விட்டு 4 ஜாமம் அரைத்து மெழுகுபதத்தில் குன்றியளவு மத்திரைகளாகச்செய்து வைத்துக்கொண்டு சர்ப்பம்
தீண்டிய கடிவாயில் இம்மாத்திரையை வைத்துக்கட்ட விஷத்தை மேலே ஏறோட்டமாக தடுத்து குறைத்து வரும்.

நசியங்கள் :- இஞ்சியை மேல் தோல் நீக்கி 1/4 பலமெடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி ஒர் தட்டிலிட்டு மூழ்க வெள்ளெருக்கம் பாலிலிட்டு நிழலிலுலர்த்தி அத்துடன் துருக மஞ்சள் வகைக்கு 1/8 பலம் கூட்டிப்பொடித்து பேய்ச்சுரை குடுக்கையில் அடைத்துக்கொண்டு 1/2 குன்றியளவு நாசியாலுத சகலவிஷமும் தீரும்.

வேறு :- குப்பைமேனி இலை, வெற்றிலை, நவாச்சரம், இவைகளை சிறு நீர் விட்டரைத்து வடிகட்டி நாசியில் இரண்டொரு துளிகள் நசியமிட விஷம் தீரும், அல்லது எருக்கிலைப் பழுப்பு, மிளகு சாரம் இவைகளை அரைத்து நாசியிலும் காதிலும் நசியமிடலாம்.


விரியன் விஷத்திற்கு சிகிச்சை :- ஆழாக்கு மிதிபாகலிலைச்சாற்றில் 1/4-பலம் மிளகைப் பொடித்துப் போட்டுக் கொடுக்கச் சகல விரியன்களின் விஷமும் தீரும். அவுரிவேரை அரைத்து ஆவின்பாலில் கொடுக்க சகல விரியன் விஷமும் திரும்.

கருவழலை முதலிய மற்ற பாம்புகளின் விஷத்துக்கு சிகிச்சை :- சிற்றாமணக்கு வேர், பழம்புளி, நிலபனங்கிழங்கு, குன்றி வேர் இவைகளை ஓர் நிறையாக அரைத்து சிறுநீரில் அரைத்துக்கொடுக்கத் தீரும்.

பெருங்காயம், சிறு சின்னியிலை, வசம்பு இவைகளை ஓர் நிறையாயரைத்து கழற்சிக்காயளவு உள்ளுக்கு கொடுத்து, மேலுக்கும் தடவி, இதையே சிறிது நசியமுமிடலாம்.

எருக்கம்பால் 5-துளி வெல்லத்தில் வைத்து தினம் ஒரு வேளையாக ஒன்றைவிட்டு ஒருநாளாக மூன்றுமுறை கொடுக்க குணமாகும்.

நன்னாரிவேர், சிறியாநங்கை வேர் இவைகளை சமஎடையாக அரைத்து கழற்சியளவு ஆவின்பாலில் கொடுக்க விஷமும் தீரும்.

சிவனாரமுர்தம் என்ற மருந்தில் 1-2 குன்றிஎடை உள்ளுக்குகொடுத்து 1/4-குன்றிஎடை நாசியிலும் ஊத சகல விஷங்களும் தீரும்.

இரத்த மண்டலி கடித்தால் கடிவாயிலும் மயிர்க்கால்களிலும் இரத்தம் சொறியும்.

இதற்கு சிறு செருப்படை, கொல்லங்கோவை, ஆனைநெருஞ்சி இவைகளில் ஏதேனும் ஒன்றை இடித்துப் பிழிந்தசாற்றில் அரை ஆழாக்கு வீதம் தினம் ஒரு வேளையாக காலையில் மூன்று நாட்கள்
கொடுத்து, உடம்பிலும் அச்சாற்றையே பூசிவரக் குணமாகும். சீத மண்டலி கடித்தால் உடல் குளிரும், நடுக்கமும், வியர்வையும் சீதளமும் உண்டாகும்.

இதற்கு முத்தெருக்கஞ் செவி அல்லது வேப்பம்பட்டையை காடி விட்டு அரைத்து அரை ஆழாக்களவு உள்ளுக்கு கொடுத்து அதைக் காடியில் வேகவைத்து ஆவிபிடிக்க குணமாகும். மற்றுஞ்சில மண்டலிகள் கடித்தால் வீக்கமும், சொறியும் உண்டாகும். இதற்கு நன்னாரி வேர்ப்பட்டையை ஆவின் பால் விட்டரைத்து சிறு சுழற்ச்சியளவு உள்ளுக்கு கொடுத்து சொரி, நமை இருப்பின் வெள்வேலம்பட்டையை காடி விட்டரைத்து பூசியும், வீக்கம் இருப்பின் அமுக்கிறா வேரை நீர் விட்டரைத்துப் பூசியும் வர குணமாகும்.

கொடி வேலி வேர்ப்பட்டையை பால் விட்டரைத்து சிறிது கொட்டைப்பாக்களவு ஆவின் பால் கலந்து கொடுத்து வர மேற்படி விஷங்கள் யாவும் குணமாகும்.

ஆடுதீண்டாப்பளை, கெளதும்பைவேர், வெள்ளெருக்கம் வேர் மருக்கரைவேர், இவைகளை ஒரு எடையாய் அரைத்து உடலில் பூச மேற்படி விஷங்கள் யாவும் குணமாகும்.

பூரான் கடித்தால் கடிவாயில் கடுப்பும், ஊறாலும் சிறிது வீக்கமும் உண்டாகும். வளர்பிறையில் தேகத்தில் தடிப்பு உண்டாகும்.

இதற்கு அவுரி இலையுடன் மிளகு சமன் சேர்த்தரைத்து சிறுபாக்களவு மூன்று நாள் கொடுத்து உப்பு புளி நீக்கிபத்தியமாக  இருக்க குணமாகும்.

ஆகாச கருடன் கிழங்கை நீர்விட்டரைத்து பாக்களவு தினம் 2 வேளை மூன்று நாள் கொடுத்து பத்தியத்துடன் அருந்த குணமாகும்.

மேனிச்சாற்றில் சிறிது கற்சுண்ணாமு சேர்த்து குழைத்து  மேலுக்கு கடிவாயிலும், வீக்கமுள்ள இடங்களிலும் தடவிவரலாம்.

அரணை கடித்தால் நடுக்கம், மயக்கம், வியர்வை காணும் வாயில் வெண்நுரை தள்ளும், நா, தடிக்கும்.

இதற்கு சுக்கும், வசம்பும் சுட்ட சாம்பலும் சமன் எடையாக கூட்டிக்கலந்து வேளைக்கு திரிகடிப்பிரமாணம் தினம் இருவேளையாக மூன்று நாள் உள்ளுக்குள் கொடுத்து வெண்சாரணைவேரை அரைத்து மேலுக்கு பூசக்குணமாகும்.

சிலந்திப்பூச்சி கடித்தால் இரண்டொரு நாடகள் கடிவாயில் சிறிது கருப்புடன் சிவந்து அற்பவீக்கத்துடன் காணும்.

இதற்கு அவிரிவேர், ஆடுதீண்டப்பளை வேரை நீர்விட்டரைத்து பாக்களவு உள்ளுக்குள் கொடுக்கலாம், அல்லதுஏலரிசியை பால் விட்டரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து பாலில் கலந்து உள்ளுக்குள் கொடுக்களாம். பூங்காவியை நீர்விட்டுக் குழைந்து மேலுக்கு பூசவும்.

வண்டுகள் கடித்தால் உடலில் தினவுடன் கண்டு கண்டாக வீங்கும். இதற்கு வண்டுகொல்லிப் பட்டையை அரைத்து பாக்களவு வீதம் எட்டு நாள்கள் உள்ளுக்குக் கொடுத்து மேலுக்கும் பூசகுணமாகும்.

சிறியாநங்கை, வெண்காக்கட்டான் இவைகளின் சமூகங்கலை சமனெனடையாக எடுத்து இடித்துச் சூரணித்து திரிகடிபிரமாணம் தினம் இருவேளையாக கொடுத்துவர சர்வ வண்டுகடி விஷங்களும் தீரும்.

காணாக்கடிக்கு கருஞ்சிவதை வேரை அரைத்து பாக்களவு உள்ளுக்குக் கொடுத்து பெருஞ்சின்னியிலையை அரைத்து மேலுக்குப்பூசிவர சகல காணாக்கடி விஷங்களும் தீரும்.

தேள், நண்டுவாய்க்காலி இவைகள் கொட்டினால் விருவிருபபாய் விஷம் ஏறி நெறிகட்டும். கொட்டுவாய் வியர்க்கும். சில சமயம் மயக்கம் மூர்ச்சை, மாரடைப்பு முதலியவைகளும் காணும்.

இதற்கு எட்டி விதையை முலைப்பாலி லுரைத்து சிறிதளவு உள்ளுக்கும் கொடுத்து சிறிது மேலுக்கும் கடிவாயில் தடவகுணமாகும்.

பனைவெல்லத்தை வெற்றிலையில் வைத்து மடித்து தின்னும் படிக்குக் கொடுத்து, மேலுக்கு கடிவாயில் சிறு நிம்வாமணக்கு இலையைக் கசக்கித் தேய்க்கலாம்.

கொல்லங் கோவைக் கிழங்கு சூரணம் அல்லது ஆடுதீண்டாப்பாளை வேர்ச் சூரணம் 1-2 சிட்டிக்கை பிரமாணம் வெற்றிலையில் வைத்து மடித்து மென்று தின்னச்செய்து, கடிவாயில் நேர்வாளவ பருப்பை நீர்விட்டிழைத்து கடுக்களவு தடவி அனல் காட்ட விஷம் தீரும்.

சிவனாரமுர்த்தத்தில் குன்றிஎடை உள்ளுக்கு கொடுத்து, கடி வாயில் மைன தைலத்தை தேய்த்துவர குணமாகும். மூர்ச்சை மயக்கம் முதலியன இருப்பின் சிவனாரமுர்த்தத்தில் 1/4-குன்றிஎடை நாசியில் ஊத தெளியும். அல்லது சுண்ணாம்பும் நவாச்சாரமும் சேர்ந்த கலவையை சிலையிலூட்டி மூக்கில் முகரச் செய்ய மயக்கம் நீங்கும். விஷமும் சற்று தணியும்.

ஒரு அவுன்சு சுத்தமான சலத்தில் 5-குன்றிஎடை படிகாரம் அல்லது சோற்றுப்பைக் கரைத்து வடிக்கட்டி இதில் இரண்டொரு துளிகள் காதிலும், கண்களிலும்விட விஷம் குறையும்.

எலி, பெருச்சாலி கடித்தால் கடிவாயில் விரணமாவதுடன் சிலசமயம் சுரம், இருமல், இரைப்பு, உடல் ஊதல், முதலியன காணும். சில சமயங்களில் இவ்விடம் நீடித்திருக்க விட்டுவிட்டு அடிக்கடி சுரம் வருதல், கீல்களில்வலி, இருமல் இரைப்பு முதலிய காசநோயின் குறிகுணங்களைக் காட்டும். இதற்கு கடிவாயில் மேனிச்சாற்றுடன் கற்சுண்ணம் சேர்த் தும் பூசிவரலாம். அவுரிவேரை அரைத்த கற்கம் பாக்களவு பசும் பாலில் தினம் ஒரு வேளையாக காலைதோறும் 7-நாட்கள் அருந்தகுணமாகும்.

உடல் பூரித்து இளைப்புகண்டால் கோரைக்கிழங்கை இடித்துச்சூரணித்து திரிகடிப்பிரமாணம் தேனில் தினம் இரு வேளையாக  உண்டுவரக் குணமாகும்.

இருமல் இருப்பின் நாயுருவி சமூலத்தை அரைத்து பாக்களவு பாலில்கலந்து குடித்துவர குணமாகும். இரைப்பு இருப்பின் சங்கம் வேர், வெண்காக்கட்டான் வேர் இவைகளை சமஎடையாக அரைத்து பாக்களவு பாலில் கொள்ளவும். அல்லது தூதுவளை காயுடன் சீனி சேர்த்தரைத்து கொடுக்கலாம். அல்லது வெள்ளருக்கம் பூவுடன் சமன் மிளகு சேர்த்தரைத்து மிளகளவு வீதம் கொடுத்துவரலாம். சுரம் இருப்பின் இலிங்கச் செந்தூரத்தை இஞ்சிச் சாற்றில் கொடுத்துவரவும்.

தேகத்தில் கொப்புளங் கண்டால் பெருமரப்பட்டை, இலை வேர் இவைகளைச் சமஎடையாக இடித்து சூரணித்து திரிகடிப் பிரமாணம் ஆவின் வெண்ணெயில் மத்தித்து கால் மண்டலங்கொள்ளத் தீரும்.

அப்பிரக பற்பத்தை துளசி சுரசம், கற்பூரவல்லி, இலைச்சாறு முதலியவைகளில் அனிபானம் செய்துக்கொடுத்துவரலாம்.

சிவனாரமிர்தம், பட்டுக் கருப்பு முதலியவைகளைத் தேனில் வழங்கி வரலாம்.

வீழிவேரை அரைத்து கொட்டைப் பாக்களவு வெந்நீரில் மூன்றுநாள் அல்லது பேய்ப்பீர்க்கிலைசாறு 1-2 சங்களவு வீதம் மூன்றுநாள் உப்பில்லா பத்தியத்துடன் கொடுத்துவர சகல எலிகள் விஷங்களும் தீரும். நாய், நரி, குரங்கு, பூனை முதலிய மிருகங்களின் கடிவிஷங்களுக்கு அவுரிவேரை அரைத்து பாக்களவு பாலில் கலக்கி மூன்று நாட்கள் அருந்தி அதையே மேலுக்கும் கடிவாயில் தேய்த்துவர குணமாகும். முன்மாதிரியே கொல்லங்கோவைக்கிழங்கையும் வழங்கலாம்.

வீழியிலைச்சாறு அல்லது மணத்தக்காளிச்சாறு 1-2 சங்களவு வீதம் 3-நாள் கொடுக்க குணமாகும்.

ஆடாதோடை, நிலவேம்பு, பேய்ப்புடல் இலை இவைகள் வகைக்கு 1-பலம் விகிதம் இடித்து 24-பலம் சலத்தில்போட்டு நாளில் ஒருபாகமாகக் கியாழம் காய்ச்சி, அதற்கு சமமாக பசும் நெய்யும், நெய்யிற்கு சமஎடையாக கடுக்காய் கியாழமுங் கலந்து பதமுறக் காய்ச்சி முறைப்படி சாப்பிட்டால் விஷதோஷம் நிவர்த்தியாகும்.

ஆலம், மஞ்சள், கோஷ்டம், கருதூபம், சிறுகுறிஞ்சான் வேர் இவைகளை சமஎடையாக எடுத்து 1/4 பலம் நெய்யில் கலந்து சாப்பிட்டால் விஷதோஷம் நிவர்த்தியாகும்.

நாய்கடிக்கு சிகிச்சை :- வெல்லம், எண்ணெய், எறுக்கன் பால் இவைகள் யாவையும் ஒன்றாக கலந்து லேனபஞ் செய்தாலும் 1/8-தோலா நாயுருவிவேரை அரைட்து தேனில் கலந்து சாப்பிட்ட லும் அல்லது கடித்த இடத்தில் கோழிமலத்தை லேனபஞ் செய்தாலும், பைத்தியம் பிடித்தநாய், நரி இவைகளின் விஷங்கள் குணமாகும்.

வேப்பன்விரை, வெட்பாலைவிரை, சந்தனம், தாமரை இதழ், இவைகளை பாலில் அரைத்து குடித்தாலும் நாய்க்கடி, பூனைக்கடி, இவைகள் குணமாகும்.

நாய், நரி இவைகள் கடித்த ஒருவருஷம் வரையிலும், உப்பில் லாத அன்னத்தை சாப்பிடுவதுடன், கடுகு, மாங்காய், மாதர் புணர்ச்சி இவைகளை நிவர்த்தி செய்யவேண்டியது.

மூஷிகவிஷ சிகிச்சை :-
 சுத்திசெய்த சிலாசத்து சுத்திசெய்த தாளகம், கோஷ்டம், மிளகு இவைகளை நொச்சி இலை ரசத்தினால் அரைத்து பாவனைசெய்து குன்றியளவு இஞ்சிச் சாற்றில் அருந்த எலிக்கடி நிவர்த்தியாகும்.

மயிரை கயிறைப்போல் முருக்கி முடிப்போட்டு எறுக்கன் பாலில் 7-தகுதி நனைத்து, சிறிய எலிக்கடித்த இடத்தில் சுட்டு அதன்மீது எறுக்கன் சக்கை பொடியை அமுக்கினால் சுண்டெலி கடி நிவர்த்தியாகும்.

சுக்கை ஜலம்விட்டு அரைத்து நசியஞ்செய்வித்தாலும், அல்லது சுத்திசெய்த நாபி, இந்துப்பு இவைகளை அரைத்து அளவாக குடித்தாலும் அல்லது எருக்கன், ஊமத்தை இவைகளின் வேரை சலத்தில் அரைத்து அளவாக குடித்தாலும் விஷம் நிவர்த்தியாகும்.

விருக்ஷ¢கவிஷ சிகிச்சை :- உத்தாமணிவேரை காடியில் அரைத்து குடித்தாலும் அல்லது அதின் கல்கத்தை கடித்த இடத்தில் போட்டாலும் தேள் விஷம் நிவர்த்தியாகும். ஆவாரஞ் செடிநுனிகளை அரைத்து ரசத்தை குடித்தால், தேள் கடியினால் உண்டான ரத்தவாந்தி நிவர்த்தியாகும்.

பிரபாவதி வடுகங்கள் :- மரமஞ்சள், வேப்பன் இலை, திப்பிலி, மிளகு, வாய்விளங்கம், முத்தக்காசு, சீரகம், சுக்கு, சித்திரமூலம், இந்துப்பு, கோஷ்டம், அதிவிடயம், வட்டத் திருப்பி, கடுக்காய், இவைகள் யாவையும் சமஎடையாக கல்வத்திலிட்டு ஆட்டுமூத்திரத் தினால் அரைத்து கடலை அளவு மாத்திரைகள் செய்து நிழலிலுலர்த்தி அந்த மாத்திரையில் ஒன்றை வெந்நீரில் கொடுத்தால், பேதியும், கோமூத்திரத்தில் அரைத்து அந்த இடத்தில் தடவினால், துஷ்ட ஐந்து தீண்டுவதினால் உண்டான விஸ்போடக விரணங்களும், எட்டு
மாத்திரைகளை மோரில் குடித்தால் பாம்பு கடியும், எறுக்கன்பாலில் அரைத்து தடவினால் தேள் முதலியவைகளின் விஷங்களும் அவுரி இலைரசத்தில் கொடுத்தால் சர்வாங்கத்திலிருந்து ரத்தம் வடிதலும், சகல விஷங்களும், வெல்லத்துடன் சாப்பிட்டால் வாதரோகங்களும்போம். இந்த பிரபாவதி வடுகங்கள் தேள், பாம்பு, விஷங்களை போக்குவதில் புகழ்பெற்றது.

புத்திரசீவி யோகம் :- புத்திரசீவி காய்களில் இருக்கும் கண்டச்சதையை குளிர்ந்த ஜலம்விட்டு அரைத்து தடவினாலும், நேத்திரங்களுக்கு அஞ்சனமிட்டாலும் அல்லது குடித்தாலும் அல்லது நசியஞ்செய்தாலும், சகலமான துஷ்ட சர்ப்பங்களின் விஷங்கள் நிவர்த்தியாகும். பாவல்வேரை அரைத்து லேபனஞ் செய்தால் சகல சர்ப்ப விஷங்கள் நிவர்த்தியாகும்.

பேய்ச்சுரைவிரை, புங்கன்விரை, பேய்ப்பீர்க்கன்விரை, காட்டு வாழை விரை இவைகளை சமஎடையாக கோமூத்திரத்திம்விட்டு அரைத்து குடுத்தால் சகல பாம்பு விஷங்கள் சுவஸ்தமாகும்.

வெள்ளை எறுக்கன்வேர், வெட்பாலை, பேய்ப்பீர்க்கன்விரை, பெருங்காயம், வசம்பு, திரிகடுகு, இவைகள் சமஎடையாக ஆட்டு மூத்திரம்விட்டு அரைத்து குடித்தால் காலகீடாதி சகல விஷங்கள் நிவர்த்தியாகும்.
சிறு அளவாக 300-கடுக்காய் வரையில் சாப்பிட்டால் சகல
மான பாம்பு விஷங்கள் நிவர்த்தியாகும்.

சிறுபாம்பு கடிக்கு சிகிச்சை :
- சீந்தில்கொடிவேர், நாகமல்லி வேர், அழிஞ்சில்வேர், அவுரிவேர், மிளகு இவைகள் சமஎடை யாக எடுத்து நீர்விட்டரைத்து பொன்னாங்கொட்டை யளவு மாத்திரைகள் செய்து நிழலிலுலர்த்தவும். இதில் வேளைக்கு ஒரு மாத்திரைவீதம் தினம் இருவேளையாக காலை மாலை அருந்திவர சிறு பாம்புகடி விஷம் குணமாகும்.

பாம்புகடித்த விடத்திற்கு காணும் வீக்கத்திற்கு சிகிச்சை :-
எருக்கன் இலையையாவது அல்லது வில்வ இலையயாவது அரைத்து அன்னக்காடியில் வேகவைத்து கடிவாயில் வைத்து மூன்று கட்டுகள்கட்டவும். பின்பு காட்டுவாழையிலை எருக்கிலை இவைகளின் சாற்றில் மிளகு சூரணத்தை அரைத்து லேபனம் செய்யவும். இதனால் பாம்பு கடியினால் உண்டான வீக்கம் நீங்கும்.

சகல விஷத்திற்கும் சிகிச்சை :- நிலாவிரை சூரணத்தை எலுமிச்சம்பழச்சாறுவிட்டரைத்து பத்தியத்துடன் கொடுத்து வரலாம். அவுரிவேர் கற்கத்தை பாலில் கரைத்து பத்தியத்துடன் மூன்று நாள் கொடுத்து வரலாம்.

அப்பிரகபற்பத்தை தேன் அல்லது தக்க அனுபானங்களில்தினம் இருவேளையாக கொடுத்து வரலாம்.

முட்சங்கன்வேர்ப்பட்டை, மிளகு வகைக்குக் கழஞ்சி-2,வீதம் எடுத்து நீர்விட்டரைத்து கற்கமாக்கி நெய் சர்க்கரை சேர்த்துக் கலந்து தினம் ஒருவேளையாக காலையில் அருந்திவரவும். இப்படி 18-நாள் அருந்த குணமாகும்.

கருங்காக்கட்டான் வேரை நீர்விட்டரைத்து கற்கமாக்கி 1-2சுண்டையளவு வீதம் தினம் ஒருவேளையாக காலையில் அருந்த வேண்டும். இப்படு 5-நாள் உப்பில்லா பத்தியத்துடன் அருந்தகுணமாகும்.

வெள்ளெருக்கன்வேர், சிறியாநங்கைவேர், வெள்ளைக்காக்கட் டான்வேர் வகைக்கு கழஞ்சு-1 இவைகளை அரைத்து இத்துடன் 3-கழஞ்சு வெல்லம் சேர்த்தரைத்து 6-மாத்திரைகளாகச் செய்து
தினம் இருவேளையாக மூன்று நாள்கள் உப்பில்லா பத்தியத்துடன் கொடுத்துவர சகல விஷங்களும் தணியும்.

சீந்தில்கொடி, வில்வவேர், நெரிஞ்சில்வேர், அவுருவேர், காட்டு வாழைவேர், வெள்ளெருக்கன்வேர், சங்கன்வேர், சிறியாநங்கை வேர், மிளகு இவைகளை சமஎடையாக எடுத்து நீர்விட்டரைத்து  சுண்டையளவு மாத்திரைகளாகச் செய்து நிழலிலுலர்த்தி கொடுத்து வர சகல விஷமும் குணமாகும்.

சிவனாரமுர்தம் :- இரசம், கந்தகம், மனோசிலை, இருவி, நாபி, வெங்காரம், சுக்கு, திப்பிலி வகைக்கு பலம்-1, மிளகு பலம்-8 இவற்றுள் இரசம், கந்தகம், மனோசிலை, இருவி, நாபி, வெங்காரம் இவைகளை முறைப்படி நன்கு சுத்துசெய்து முறையே கல்வத்திலிட்டு நன்கு அரைத்து பிறகு இத்துடன் சுக்கு, திப்பிலி, மிளகு இவை
களைச் சூரணித்துச் சேர்த்து எட்டுநாட்கள் நன்கு அரைத்து சீசாவில் பத்திரப்படுத்துக. இது கருப்பாக இருக்கும்.

இதில் வேளைக்கு 1-2 குன்றிஎடை வீதம் தேன் அல்லது தக்க அனுபானங்களில் கொடுத்துவர சுரம், சன்னி, தோஷம், தேள், பாம்பு, சிறுபாம்பு, முதலியவைகளின் கடிவிஷங்கள் மற்றும் இதர விஷக்கடிகள் முதலியன குணமாகும். தேள், பாம்பு முதலிய கடிவிஷங்களில் இதனை நசியமுஞ் செய்யநல்ல குணத்தைத் தரும்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக