வியாழன், ஜனவரி 28, 2010

வர்மம் & வர்ம மருத்துவம் (சித்த மருத்துவம் -part 8)


வர்மம்
சித்த மருத்துவத்தின் ஒரு பிரிவாக இயங்குவது வர்மமாகும். வர்மத்தை மர்மம் என்றும் கூறுவர். இது மறைவு என்னும் பொருளை உணர்த்துவதாக இருக்கிறது.
வர்மக்கலை
வர்மம், கலையின் பாற்பட்டது. இது மருத்துவத்துக்கு மட்டும் பயன்படாமல், எதிரிகளிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்புக் கலையாகவும் பயன்பட்டிருக்கிறது.
வர்மத்தின் பெயர்கள்
உயிரினங்களின் உடலில் பேசிகள், தசிரங்கள், நரம்புகள், என்புகள், பொருந்துகள், விசிகள், ஆகியன எவ்வெவ் விடத்தில் ஒன்றோடொன்று பின்னிக் கிடக்கின்றனவோ அவ்விடங்களில் பிராணன் அடங்கி நிற்கும். இதனை, ‘அமிர்த நிலைகள் என்றும், ‘மர்ம நிலைகள் என்றும் கூறப்படும். இவ்விடங்களில் தாக்கு, காயம், குத்து, வெட்டு, தட்டு, இடி, உதை படும்போது, வலி, விதனம், வீக்கம், இரத்தம் வெளிப்படுதல், மறத்துப் போதல், உறுப்புகள் செயலிழத்த லோடு மரணத்தையும் நேர்விக்கும். இதனைக் காயம் பட்டிருக்கிறது அல்லது மர்மம் கொண்டிருக்கிறது என்று கூறலாம். இத்துன்பத்தை நீக்கும் மருத்துவ முறைகள் வர்ம பரிகாரம் அல்லது வர்மானி என்று வழங்கப்படுகிறது.என்று வர்மத்துக்கு வழங்கி வரும் வேறு பெயர்கள் விளக்கப்பட்டிருக்கின்றன.
வர்ம முறைகளால் எலும்பு முறிவு, எலும்பு ஒடிவு போன்ற வற்றுக்குச் செய்யப்படும் மருத்துவம் வர்ம மருத்துவ மாகும். வர்மத்தின் துணை கொண்டு பல நோய்களைக் குணப்படுத்த முடியும். நோயாளியின் மர்மப் பகுதிகளில் அடித்தும், தட்டியும், தொட்டும், தடவியும், செய்யப்படும் மருத்துவ முறை வர்மத்தைச் சார்ந்ததாகும். இன்றைய நவீன மருத்துவ முறையில் ஒன்றாகக் கூறப்படும் நரம்பியல் முறையே பழங்காலத்தில் வர்ம முறையாக அழைக்கப்பட்டுள்ளது.என்பது வர்மத்தின் அடிப்படைத் தத்துவமாக அமைகிறது.
வர்ம நிலைகள்
வர்மத்தில் கூறப்படும் அமிர்த நிலைகளில் அடி, குத்து போன்றவை ஏற்பட்டால், உறுப்புகள் செயலிழந்து மரணத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்படுகிறது. அதே போல, மருத்துவம் செய்யக் கூடாத நாள் எனக்கூறும் குறிப்பும் காணப்படுகிறது. அது அமிர்த நிலைகள் ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு இடமாக இடம் பெயர்ந்து, முப்பத்திரண்டு இடங்களில் காணப்படும். அது நிற்கும் இடத்தில், நிற்கும் நாளில் அடிகுத்து போன்றவையால் வர்மம் எற்பட்டால் மரணம் ஏற்படும் என்பர். அவ்வாறு கூறப்படுவதனை உற்று நோக்கினால், அமிர்த நிலைகள் நகரும் தன்மை உடையதாகவும், நிலையற்ற தன்மை கொண்டதாகவும் இருக்கக் காண்கிறோம்.
ஜப்பானியரின் ஜுடோ
வர்மக்கலை ஜப்பானியரின் ஜுடோ முறைகளுடன் ஒத்துப் போகும். ஜுடோ முறை தற்காப்புக்காகவும் பிறரைத் தாக்கவும் பயன்படுகிறது. ஆனால், தமிழகத்தின் வர்மக் கலை, தாக்குதலால் காயப்பட்டு அதனால் ஏற்படுகின்ற துன்பங்களுக்கும், கேடுகளுக்கும் சிறந்த பரிகார முறைகளின் உதவி கொண்டு நிவாரணம் அளிக்கப் பயன்படுகிறது. என்பதால், ஜப்பானியக் கலைக்கும் தமிழகத்து மருத்துவக் கலைக்குமுள்ள வேறுபாடு   விளங்குகிறது.
வர்மத்தின் தேவை
நரம்பில் அடிபட்டு அதனால் நோய் உண்டானால், மருந்தினால் மட்டும் மருத்துவம் பார்த்துச் சரிசெய்துவிட முடியாது. நரம்பில் ஏற்பட்ட அடியை வர்ம முறையில் சரிசெய்த பின்பு, ஏற்பட்ட நோய்க்கான மருந்தைச் செலுத்திக் குணப்படுத்த வேண்டும்.
"" அரும்பு கோணிடில் அதுமணம் குன்றுமோ
கரும்பு கோணிடில் கட்டியும் பாகுமாம்
இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்
நரம்பு கோணிடில் நாமதற் கென்ன செய்வோம்''
என்னும் பழம்பாடல், வர்ம மருத்துவத்தின் தேவையைக் குறிப்பால் உணர்த்துகிறது. அரும்பு கோணினால் அதன் மணம் குன்றாது. கரும்பு கோணினால் பாகாவும் வெல்லமாகவும் பயன்படும் . இரும்பு கோணினால் வேல், ஈட்டி, அம்பு, அங்குசம் போன்ற ஆயுதங்களாகும். உடம்பிலுள்ள நரம்பு கோணினால், நாம் எதுவும் செய்ய முடியாது; பயனற்றுப் போக நேரிடுமே என்று கருத்துரைக்கிறது.
வர்ம நூலாசிரியர்
வர்மக் கலை மர்மக்கலை என்பது போல, வர்மக்கலை வரலாறும் மர்மம் நிறைந்ததாகவே இருக்கிறது என்பர். வர்மக்கலை நூல்கள், வர்ம பீரங்கி, வர்ம ஆணி, வர்ம சூத்திரம், வர்மக் கண்ணாடி போன்றவையாகும். அகத்தியர், போகர் போன்ற முனிவர்கள் இந்த நூல்களை இயற்றினார்கள் என்பது மரபு. பீரங்கி போன்ற பிற்காலச் சொற்கள் வழங்குவதிலிருந்து, இந்நூல்களை அகத்தியரோ, போகரோ எழுதியிருக்க முடியாது என்பர். ஆனால் சித்தர்கள் தங்கள் உள்ளொளி உணர்வினால் கண்ட உண்மைகள் வாய்மொழியாக, வழி வழியாக வழங்கி வந்து பிற்காலத்தில் ஏட்டுருவம் பெற்றிருக்க வேண்டும். இதனால்தான் சித்தர்களால் போதிக்கப்பட்டு வந்த தமிழ்மருத்துவம், சித்த மருத்துவம் என்றே வழங்கி வருகிறது.
வர்மமும் வடமொழியும்
வடமொழி நூலாகிய சரகத்திலும் சுசுருதத்திலும் வர்மத்தைப் பற்றிக் காணப்படினும் தமிழ் நூல்களிலே காணப்படும் அளவு விரிவாகவும் நுட்பமாகவும் வழக்கில் உள்ளதாக இல்லை என்று தெரியவருகிறது288” என்றதனால், ஒரு கலையைப் பற்றிக் கூறும் தகவலுக்கும், கலையைக் கற்பிக்கும் கல்விக்கும் வேறுபாடு உடையதைப் போல, வர்மத்தைப் பற்றிய தகவலைத் தருகின்ற சரகர், சுசுருதர், ஆகி யோருக்கும், வர்மக்கலையைத் தோற்றுவித்துக் கற்பிக்கும் கல்வி முறையாக உள்ள தமிழ் வர்மத்துக்கும் உள்ள வேறுபாடாக இதனைக் கொள்ளலாம். ஜப்பானிய ஜுடோவைப் பற்றிய நூல் தமிழிலும் இருக்கிறது என்பதற்காக,   ஜுடோ முறை தமிழ் நாட்டுக்கு உரியது என்று கூறினால் எவ்வாறிருக்குமோ, அவ்வாறே வடமொழிக்கும் வர்மத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுவதுமாகும். உலக நாடுகளில் மிகச் சிறந்த இலக்கியங்களெல்லாம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, அமெரிக்காவில் சேமிக்கப் படு கின்றன. அதனால் அவற்றை அமெரிக்க இலக்கியங்களாகக் கூற முடியுமா? அது போலத்தான், தமிழகம் அல்லாத பிறமொழிகளில் வர்மத்தின் தகவல்கள் காணப்படுகின்றன என்ற ஒரே காரணத்துக்காக, வர்மத்துக்கும், அம்மொழிக்கும் தொடர்பை ஏற்படுத்துவதுமாகும்.
வர்மங்களின் எண்ணிக்கை
உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரையிலுள்ள உடற்பகுதி களில் காணப்படும் வர்மங்களின் எண்ணிக்கை 108 என்று வர்ம சூத்திரமும்,ஆண்களுக்கு 108, பெண்களுக்கு 107 என்று, ஒடிவு முறிவு சாரி நிகண்டகராதியும கூறுகின்றன.
"" பாரப்பா படுவர்மம் பன்னி ரண்டும்
பாங்கான தொடுவர்மம் தொண்ணூ<ற் றாறாம்''
என்று, படுவர்மம், தொடுவர்மம் என இரண்டு வகையாகக் கருதப் படும்.
"" மங்கையர்க்கே குறைந்த வர்வம் பீனசக் காலம்
சொந்தமென்ற இந்தவர்மம் ஒன்று நீக்கி
தொகையாக ஒரு நூற்றி ஏழாம் பாரு.''
பெண்களுக்குப் பீனசக் காலமாகிய (கூஞுண்tடிண்) விரை நீங்கலாக 107 வர்மமாகும்.
வர்ம இடங்கள்
வர்மங்கள் பொதுவாக 108 என்றும், ஆண்களுக்கு 108, பெண்களுக்கு 107 என்றும் கூறப்பட்டாலும், வர்மத்தின் இடங்களைக் குறிப்பிட்டு, எந்தெந்த உறுப்புகளில் எத்தனை வர்மங்கள் ஏற்படும் என்று கூறும் போது, இந்த எண்ணிக்கை மாறுபடுகிறது.
வர்மம் நேரும் உறுப்புகள் எனக் குறிப்பிடப்படுபவை வருமாறு:
கால் இரண்டு 22 ; கை இரண்டு 22; வயிறு3; மார்பு9; முதுகு14; கழுத்தின் மேல்37; தசையில்10; எலும்பில்8; நாடியில்21; பெரு நரம்பில்9; நரம்பில்36; சந்தில்20 என 159 வர்மங்கள் கூறப்படுகின்றன.
மேலும், வர்மங்களின் எண்ணிக்கை 122 என, ‘வர்ம சிகிச்சை என்னும் நூலில் காணப்படுகிறது.
படு வர்மம்12 (varmam due to violent injury)
தொடுவர்மம் 96 (varmam due to touch injury)
தட்டுவர்மம் 8 (varmam due to blow injury)
தடவு வர்மம் 4 (varmam due to massage injury)
நக்கு வர்மம் 1 (varmam due to licking injury)
நோக்கு வர்மம் 1 (varmam due to sight injury)
122
மேற்கண்ட வர்ம சிகிச்சை என்னும் நூலின் பட்டியலில் வரைபடத்துடன் வர்மங்களின் எண்ணிக்கை 130 ஆகக் கொள்கிறது.
உடல் அளவுகளில் வர்மம்
உடலின் அளவுப்படி, தலை முதல் கழுத்துவரை, கழுத்து முதல் தொப்புள் வரை, தொப்புள் முதல் மூலம் வரை, கை, கால் என்னும் அளவின்படி வர்மங்கள் உரைக்கப்படும்.
தலை முதல் கழுத்துவரை – 25
கழுத்து முதல் தொப்புள் வரை– 45
தொப்புள் முதல் மூலம் வரை – 9
கைகளில் – 14
கால்களில்– 15
108
என்று , 108 வர்மங்களை வர்ம பீரங்கி கூறுகிறது.
வர்மத்தில் நாடிகள்
வர்மங்கள் நாடிகளின் வகையாகவும் பிரித்துக் காணப்படுகிறது. இவ்வாறு பிரித்துக் காணப்படுவதனால், வர்மத்தினால் உண்டாகும் நோய்களின் குணங்கள் அறியப்பட்டு, மருத்துவம் செய்ய வழியேற்படும்.
வாத வர்மம்64; பித்தவர்மம்24; ஐய வர்மம்6; உள் வர்மம்6; தட்டு வர்மம்8 = 108 என்னும் வகைகளாகும்.
வர்மத்தில் இயல்பு
உடம்பில் வர்மம் கொண்டால் உடனே பரிகாரம் செய்து நிவர்த்தி செய்யப்பட்டாலும், ஏற்பட்ட வர்மம், வர்மத்தின் மாத்திரை அளவை விட மிஞ்சிய அளவில் ஏற்பட்டிருக்குமே யானால், நாள் பல கடந்த பின்பும் உடலைப் பாதிக்கும் கடுமையான நோய்களை உண்டாக்கும். கண், காது போன்ற உறுப்புகள் பழுதாகி விடுவதும் உண்டு.
 கேளேநீ; வர்மமது கொண்டு தானே
கெடிதப்பி காலமது சென்று போனால்
ஆனதுவே நிறமாறி கறுத்துப் போகும்
அன்னமது சிறுத்துவிடும் குன்னிக் கொள்ளும்
நாளதிலே நீர்மலமும் பிடித்துக் கொள்ளும்
நாயகமே தாதுகெடும் தீர்க்க மாக
பாழான சயம் இளகி கொல்லும் கொல்லும்
பண்டிதத்தை அறிந்துநீ செய்யில் மீளும்''
வர்மம் கொண்டு நாள்கள் சென்ற பின்னர் அன்னம் ஏற்காமை, உடல் கூனுதல், உடல்கட்டுதல், கேடடைதல், சயம், பீனிசம், காச நோய் (ஆஸ்துமா), கண் மயக்கம், காது மந்தம், அஸ்தி சுரம், எலும்புருக்கி போன்ற நோய்கள் உண்டாக வாய்ப்பிருப்பது தெரியவரும்.
வர்ம மரணங்கள்
வர்மங்களில் ஆயுதமோ அடியோ பட்டால் மரணம் நேரும் என்பது பொதுவாக உரைக்கப்படும் கருத்தாக இருப்பினும், எந்தெந்த வர்மங்களில் அடிப்பட்டால், எத்தனை யெத்தனை நாள்களில் மரணம் வரும் என்பதை வர்ம விதி அறிவிக்கிறது.
1. உந்தி2; சங்கம்2; தயமதிபன்1; குதம்1; வத்தி1; சிருங்காடம்4; கிரிகை8; என்னும் பத்தொன்பது வர்மங்களிலும் அடியோ, ஆயுதமோ; புண்ணோ பட்டால் ஏழு நாள்களுக்குள் மரணம் நேரும்.
2. தம்பம்2; தலம்2; இருதயம்4; சந்தி2; சுரோணி5; தனம்2; வத்தி4; சிப்பிரம்4; அபலாபம்2; பிருகிருதி2; நிதம்பம்2; தனரோகி2 எனும் முப்பத்து மூன்று வர்மங்களில் அடி, ஆயுதம், புண்பட்டால் ஒரு திங்களுக்குள் மரணம் நேரிடும்.
3. உற்சேபம்1; தபனி1 ஆகிய இரண்டில் வர்மம் ஏற்பட்டால் சதை அழுகும்.
4. வர்மங்களில் அடியோ காயமோ ஏற்பட்டால் துன்பத்தை மட்டும் தந்து, உயிரைப் போக்காத வர்மங்கள் என நாற்பத்து நான்கு கூறப்படும்.
5. புற்று நோய்க்கு நிகராக கழு நீர் போலப் புண்ணாகிச் சீழ் கொண்டும், உடல் வெளுத்தும் பல வித நோய்களினால் உயிரைப் போக்கும் வர்மமாகத் தசைவர்மம் கூறப்படும்.
6. தசைகளின் தாது தண்ணீர் போல என்புகளில் ஊறி, இரத்தம் பாய்ந்து வலியை உண்டாக்குவதுடன், பதைக்க வைத்துக் கொல்லும் என்று எலும்பு வர்மம் உரைக்கப்படுகிறது.
7. மாங்கிஷத்தில் அடங்க, வெறிபட நின்று வேதனை உண்டாக்கிக் கொல்வது சிறுநரம்பு வர்மமாகும்.
8. உடலை முடக்குவித்து, மடக்கி, தாதைக் கெடுத்து, தசையில் இரத்தத்தைப் பாய்ச்சி, நடையைக் குன்றச் செய்து, அறிவை வேறொன்றாக்கிக் கொல்லும் பெரு நரம்பு வர்மம்.
9. அதிக அளவு இரத்தம் பாய்ந்து உடலை மெலியச் செய்து காசம், சலிப்பு, இளைப்பு, விக்கல் போன்றவற்றை உண்டாக்கிக் கொல்லும் என்று உறுதிப்பட உரைக்கப்படுவது நாடி வர்மம்.
10. உடலைச் சூடாக்குவதும், குளிரடையச் செய்வதும், வேதனை அடையச் செய்து உடலை வீங்கச் செய்வதும், வீக்கம் வடிந்ததும் உடலின் வடிவத்தை வேறாகக் காட்டுவதும், உடலைத் தளர்ச்சிடையச் செய்வதும் சந்து வர்மமாகும்.
மேற்கண்ட வர்மங்கள் உடலைக் கொல்வதற்கு முன் மரணத்தை விடவும் கொடுமையான நோய்களையும் துன்பங்களையும் தந்து, பின்னர் மரணத்தைத் தரும் என்று அறியப்படுகிறது. சில நோய்களையும் நோயின் கொடுமைகளையும் காணும் போதும், கேட்கும் போதும் அவை, என்றோ ஏற்பட்ட வர்மத்தினால் வந்த துன்பமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுவதுபோல் வர்மத்தின் செயல்கள் காணப்படுகின்றன.
மேற்கண்ட வர்மங்களின் தன்மையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வர்மங்களாகக் கீழே குறிப்பிடப்படவிருக்கின்றன. அவை, நோய்களை ஏற்படுத்துவதைத் தவிர்த்து விட்டு, மரணத்தை மட்டும் அதுவும் மிகவும் விரைவாக மரணத்தை உண்டாக்குபவையாகக் கூறப்படுகின்றன.
1. உச்சியின் மத்தியில் உள்ள தூண்டு நரம்பு முறிந்தால், உடனே உயிர் பிரியும்.
2. இதயத்திலிருந்து மூன்று அங்குலத்துக்கு மேலே இருக்கும் பூவலசன் நரம்பு முறிந்தால் ஐந்தாம் நாளில் மரணம்.
3. இடுப்பு சாலத்தில் உள்ள நீர்ப்பிசி நரம்பு முறிவு கொண்டால் மூன்றாம் நாளில் மரணம்.
4. பஞ்வர்ணக் குகையிலிருக்கும் குடகரி வர்மம் முறிந்தால் மூன்று நாளில் மரணம்.
5. ‘சுவாசப்பை நரம்பு முறிந்தால் மூன்று நிமிடங்களில் மரணம் உண்டாம்.
6. கருவுற்ற மங்கையர்க்குத் துறபேசி நரம்பில் வர்மங் கொண்டால், ஈனும் குழந்தை ஓராண்டில் மரணமடையும்.
என்று, வர்மத்தின் கடுமை உரைக்கப்பட்டுள்ளது. வர்மத்தால் உடனே மரணம் வரும் என்பதற்கும், கடுமையான நோய்களைத் தந்து துன்பத்துள்ளாழ்த்தி மரணமடையச் செய்யும் என்பதற்கும் மாறான குணமுடைய வர்மமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
"" நேரப்பா தாருநரம்பு அதிர்கா யங்கள்
நேராக தீருமதில் தீர்ச்சை யுற்றால்
காரப்பா நாற்பத்தி யொன்றா யிரத்தி நாள்
கடந்தே காயசுரம் போல் காயும்''
"" உறுவான தாரை நரம்பதி லெழுந்த
உற்றநோய் தீருமடா வதிர்ச்சி யுற்றால்
மாறாகும் நாள் இருபத்தி ஓராயி ரத்துள்
மறலியினால் உயிர்பிரியும் வண்மையாய்''
கடைக்கண்ணின் அருகிலுள்ள தாரு நரம்பு முறிந்தால் கண்பார்வை போகும். மருத்துவத்தால் குணமாகும். முறையான வர்மமுறை மருத்துவம் பார்க்காவிட்டால் தலையில் வலி, வீக்கம், நாக்குத் துடித்தல், மயக்கம் ஆகியவை உண்டாகும். முறையான மருத்துவம் பார்க்கப்பட்டால் 41,000 நாள் கடந்து சுரம், தலைகனம், சிரசு எரிச்சல், வாய் உளறல், தாகம், பொருமல், அதிசாரம் உண்டாகும். மருத்துவம் முறையாகச் செய்யாவிட்டால் 21,000 நாளில் மரணம் நேரும் என்று கூறப்படுகிறது.
21,000, 41,000 நாளுக்குப் பின் நிகழும் நோயையும் மரணத்தையும் தாரு நரம்பு முறிவினால் தான் நிகழ்ந்தது என்று குறிப்பிட்டிருப்பது மிகையாகத் தோன்றுகிறது. 58 ஆண்டுக்களுக்குப் பின் வரும் மரணத்தையும், 113 ஆண்டுக்குப் பின் வருகின்ற நோயையும் கணித்திருப்பதாகக் கூறினாலும், அதில் உண்மையிருப்பதாகத் தோன்றவில்லை. மனிதனின் வாழ்நாளே நோயில்லாமலிருந்தாலும் நூறு ஆண்டுதான் என்று சித்த மருத்துவம் கூறியிருக்க, நூறாண்டைக் கடக்க வேண்டுமென்றாலே கற்ப முறைகளை உண்ண வேண்டும் எனத் தெரிகிறது. கற்பம் உண்ட பின்னர், நோய் வரும் என்றால், கற்பம் முறை தவறானவை என்றாகி விடும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், வர்ம முறைகளின் மூலம் உடம்பிலுள்ள நரம்புகள் பல கண்டறியப் பட்டிருக்கின்றன. நரம்பும், நரம்பினால் உண்டாகக் கூடிய நோய்களும் விளக்கப் பட்டிருப்பதால், விஞ்ஞான வளர்ச்சிக்கு முன்னரே நரம்பியல் முறை மருத்துவமான வர்மம் தமிழகத்தில் நன்கு வளர்ச்சி யடைந்த நிலையில் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது.
நரம்பு முறிவினால் உண்டாகும் (பக்க விளைவுகள்) குறிகுணங்கள்
ஆங்கில மருந்துகளினால் பக்க விளைவுகள் ஏற்படுவதைப் போல, நரம்பில் முறிவு ஏற்பட்டால், நோயாளிக்கு உண்டாகும் குறிகுணங் களைப் பக்க விளைவுகள் எனக் குறிப்பிடலாம். அத்தகைய குறி குணங் களாவன:
நரம்பை அறிந்து, நரம்பின் செயலைக் கண்டறிந்து, நரம்பினால் உண்டாகும் விளைவு கூறப்பட்டிருப்பது, நரம்பியல் முறைகளில் ஏற்பட்டிருந்த வளர்ச்சியைக் காட்டுவதாக இருக்கிறது. மனித உடம்பின் அனைத்துச் செயல்களும் மூளை என்னும் தலைமைச் செயலகத்திலிருந்தே இயக்கப்படுகின்றன என்பதை அறிவோம். இங்கே குறிப்பிடும் நரம்பு முறிவினால், மூளையின் கட்டளை மூலங்களில் பாதிப்பை உண்டாக்கிப் பக்க விளைவுகள் தோன்றுவ தாகக் கருதலாம். நரம்புகள் ஒவ்வொன்றும் மூளையின் தலைமை நிலையத்துடன் தொடர்பு கொண்டிருப்பதை உணர்த்துகிறது. மேற்கண்ட கருத்துகள் அனைத்தும் உடலியல் துறை சார்ந்த மருத்துவ அறிவியல் கருத்து என்பதால், அத்துறை சார்ந்த வல்லுநர்கள், வர்மநூல்கள் கூறுகின்ற நரம்புகளையும், நரம்பின் தன்மைகளையும் ஒப்பாய்வு முறையில் விளக்கிக் கூறினால் பயனுடையதாக இருக்கும்.
வர்ம அடங்கல்
வர்ம இடங்களில் அடிப்பட்டு உயிர் முழுவதும் சலிக்காமல் வர்மங்களில் உள்ளடங்கி நிற்கும். அவ்வாறு வர்மங்களில் அடங்கி நிற்கின்ற இடங்கள் அடங்கல் என்று குறிப்பிடப் படுகிறது.
உயிர் உள்ளடங்கி நிற்கும் வர்ம அடங்கல் என்று 16 இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவ்வாறு சொல்லப்பட்ட போதிலும் நூல்களில் குறிப்பிடப்படாமல் கையடக்கமாகவும் கர்ண பரம் பரையாகவும் இருந்து வரும்   அடங்கல்கள் ஏராளம் எனத் தெரிகிறது.
பொதுவாக, வர்மங்களில் அடிப்பட்டு மூர்ச்சை அடைந்தவர் களுக்கு, வர்மங்கள் ஒவ்வொன்றுக்கும் உரிய தன்மைகளுக்கு ஏற்ப, மாறுபட்ட குணங்கள் தோன்றும். வர்ம நோயாளியை வர்ம மருத்துவர் சோதிக்கும் போது முதலில் கவனிக்க வேண்டியது, நோயாளியிடத்தில் அபாயக் குறி தெரிகிறதா என்பதே. வர்மத்தில் அடிப்பட்ட நோயாளிக்குக் கண் நட்டு வைத்தது போல் குத்தி நிற்கும். விந்தும் மலமும் கழிந்திருக்கக் காணலாம்.
நாடி, துரிதமான நடையில் அல்லது மிகவும் மெதுவான நடையிலும் காணப்படும். நாடித் துடிப்பில்லாமலும் இருக்கும். இவ்வாறு மூன்று வித நாடிக் குறிக்குணங்கள் அறியப்பட்டால், அந்நோயாளியைத் தொடவே கூடாது. ஒரு சிலருக்கு, ஒலிகுன்றியும், துணிகளைக் கிழிக்கும் குணமும், அசாத்தியமான அலரலும், முகம் அதிகப் பிரகாசத்துடனும், கறுத்தும் காணப்படும். அவ்வாறான வர்ம நோயாளிகள் மிக விரைவில் மரணத்தைச் சந்திப்பார்கள் என்று, வர்ம மருத்துவத்தின் பல்வேறு பரிமாணங்கள் கூறப்படுகின்றன.
வர்ம மருத்துவம்
வர்ம மருத்துவம், நூல் வழி அனுபவம் பெறும் மருத்துவமல்ல; மரபு வழியாகப் பயிற்றுவிக்கும் அரிய மருத்துவ மாகும்.
இளமைக் காலங்களில் இளைஞர்கள் மன மகிழ்ச்சிக்காக விளையாடும் போதும், போர் வீரர்கள் போர்புரியும் போதும், வர்ம நிலைகளில் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுகின்ற வர்ம அடிகள், அவர்களின் வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடக் கூடிய கொடுமை நிறைந்ததாக இருப்பதனால், அதற்குரிய வர்ம மருத்துவக் கல்வியால், அறிவால், பயிற்சியால், நுட்பமான உணர்வால் முதிர்ந்த நிலையுள்ள வராக இருக்க வேண்டும் எனத் தெரிகிறது.
ஒடிவு முறிவுக்குரிய மருத்துவம் செய்பவர் படுவர்மம் 18–ம், தொடுவர்மம் 96உம் சரநிலைகள், இடகலை, பிங்கலை, சுழுமுனை முதலியவற்றின் இயக்கங்களைக் கண்டறிவதில் நன்கு தேர்ந்தவராக இருக்க வேண்டும்.
வர்மத்தின் நிலைகளை அறிவதுடன், மயக்கம், கபம், சீதம், வியர் வை, சுவாசம் முதலிய குறிகுணங்களையும் கண்டறிய வேண்டும
என்று, வர்ம மருத்துவம் செய்யத் தொடங்குமுன், மருத்துவன் கண்டறிய வேண்டிய தேர்வுமுறை அடிப்படைகள் எடுத்துரைக்கப் படுகின்றன.
படுவர்மங்களுக்கு, வர்மம் கொண்ட நேரத்திலிருந்து எவ்வளவு நேரத்துக்குள் மருத்துவம் பார்க்க வேண்டும் என்னும், ‘அவசரச் சிகிச்சை முறை குறிப்பிட்டுக் காட்டப் பட்டுள்ளது. அக்காலத்தைக் கடந்து விட்டால் நோயாளியைக் காப்பாற்ற முடியாது எனத் தெளிவாக உரைக்கப்படுகிறது.
பருவத்தைப் பாழாக்கும் வர்மம்
வர்மங்களில் சில மரணத்தைத் தரும். சில கடுமையான நோயையும் துன்பத்தையும் தரும் என கூறப்பட்டது. ஆண்களை அலியாகவும், பெண்களை மலடியாகவும் ஆக்கக் கூடிய வர்மம் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
"" கருவூன்றி பூக்காத மங்கை யர்க்கு
மாயமாய் கொண்டாலோ பூப்பு ஏது
மாதவிடாய் ஒருநாளும் வாரா தப்பா
ஓயுமிடை காணா திருளி யாவாள்.''
இடுப்பு சாலத்தில் உள்ள நீர்ப்பிசி நரம்பு முறிந்தால், மூன்றாம் நாளில் மரணம் வரும். மதி மயக்கம் உண்டாகும். கண் ஒளி போகும். உடலில் குத்தல் உண்டாகும். சிறுநீரோடு சீழ் கலந்து போகும். இந்தக் குணங்களே ஆண்களுக்கும், பெண்களுக்கும் உண்டாகும் என்றாலும், இளம் பெண் பூப்படைய மாட்டாள். பருவடைந்தவள் மாதவிடாய் அடைய மாட்டாள். கருத்தரிப்பு உண்டாகாது. அதே போல், ஆண்களுக்கு ஆண்மை குன்றிப் போகும் என்று, உரைக்கப் பட்டுள்ளது.
எலும்பு முறிவு வகைகள்
1. சாதாரண முறிவு (Simple Fracture).
2. கலப்பு முறிவு (Compound Fracture).
3. சிக்கலான முறிவு (Complicated Fracture).
4. நொறுக்கப் பட்ட முறிவு (Comminuted Fracture).
5. முறிந்த பாகம் இன்னொரு பாகத்துடன் மாட்டிக் கொண்டு
அசையாதிருப்பது (Impacted Fracture).
6. பச்சைக் கொம்பு முறிவு (Green Stick Fracture).
7. தன்னில் தானே முறிவது (Spontancous Fracture).
8. பள்ளம் ஏற்படும் முறிவு (Depressed Fracture).
எனப்படும். இத்தகைய வர்ம முறைகளால் நரம்பு முறை மருத்துவமும், எலும்பு முறை மருத்துவமும், ஒருங்கிணைந்து தமிழ் மருத்துவத்தில் இடம் பெற்று வர்ம மருத்துவம் என்று போற்றக் கூடியதாக அமைந்திருக்கிறது.

வர்ம நோய்கள்
உடலின் உறுப்புகளில் அல்லது உடற்பகுதிகளில் குறிப்பிடப்படும் நூற்றியெட்டு வர்ம நிலைகளில் ஆயுதங்களாலோ வேறு
பொருள்களாலோ ஏற்படுகின்ற அடி, குத்து, வெட்டு, தட்டு போன்ற காரணங்களால் வர்மம் ஏற்பட்டு, அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் மரணத்தை ஏற்படுத்தும். வர்மங்கள் நாழிகை, நாள், மாதம், ஆண்டு என்னும் கணக்கில் விளைவுகளைத் தருவன. இவ்வாறான விளைவுகளே நோயாகவும் மாறி உடலைத் துன்புறுத்தும். அவை நோயாகவே கருதப்படும். வர்மப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் ஒடிவு முறிவு என்றும், ஈடு என்றும் குறிப்பிடப்படும். அவ்வாறானவை, வர்ம விளைவுகள் எனப்படும்.
1. நெஞ்சு பக்கத்தில் காணப்படும் அலகை வர்மத்தில் ஈடு கொண்டால், பற்களைக் கடிப்பதும், சத்தமும் ஏற்படும்.
2. தண்டுவடத்தில் காணப்படும் நட்டெல் வர்மத்தில் முறிவு ஏற்பட்டால், முறிவு கொண்டவன் நாய் போல் அமர்வான். அவன் நாவில் சுவை உணர்வு தோன்றினால் 90 நாளில் மரணமும், சுவை காணப்படாவிட்டால் 300 நாளில் மரணமும் உண்டாகும்.
3. பஞ்சவர்ணக் குகையாகிய நெஞ்சறையின் அருகிலுள்ள அக்கினி நரம்பில் முறிவு ஏற்பட்டால், உடல் முழுவதும் காந்தும். உடலில் எறும்பு ஊர்வது போன்று தோன்றும். 
4. பழு எலும்பில் காணப்படும் விட்டில் வர்மத்தில் ஈடு கொண்டால், உடல் தீப்போல எரியும். விட்டில் போல் உடல் துடிக்கும்.
5. நீர்ப்பையோடு இணைந்திருக்கும் நீர் நரம்பு முறிந்தால் சன்னி உண்டாகும்.
6. கண்ணின் இமை அருகில் உள்ள பகலொளி நரம்பு முறிந்தால், பார்வை போகும். 
7. தலை உச்சியின் நடுவில் உள்ள குருபோக நரம்பு முறிந்தால், போகம் கழிந்தபின் ஏற்படும் உணர்வு உண்டாகும். 
8. முதுகிலுள்ள தாரை நரம்பு முறிந்தால், சேவல் போலக் கொக்கரிக்கச் செய்யும்.
9. தேரை நரம்பு முறிந்தால், உடலில் நிறம் மாறித் தேரை நிறம் போலாகும். 
10. குண்டிச் சங்கு நரம்பு முறிந்தால் தாகத்தினால் வருந்த நேரும்.
11. மூச்சுக் குழலின் இடது பக்கத்திலுள்ள குயில் நரம்பு முறிந்தால், குயில்போல ஒலி யெழும். சன்னி உண்டாகும்.
12. பீசத்தின் மேற்புறத்தில் காணப்படும் கொட்ட காய நரம்பு முறிந்தால், வேகமாக ஓடச் செய்யும்.
13. இதயத்தின் அருகில் பதிவிருதை வர்மம் முறிந்தால், நீண்ட மூச்சு ஏற்படும். நினைவு தடுமாறும். பிறரைக் கண்டால் நாணம் உண்டாகும். மிகுந்த போக உணர்வு ஏற்படும். கண்களை உருட்டும். வண்ணத்தைக் கண்டு நாணும்.
14. பிருக்கத்துடன் இணைந்திருக்கும் குக்குட நரம்பு முறிந்தால், சேவலாகக் கொக்கரிக்கும்.
15. குய்யத்திற்கு இருவிரல் மேலே காணப்படும் பாலூன்றி நரம்பு முறிந்தால், சுரம் உண்டாகும். இரத்தம் பால் போல ஒழுகும்.
16. முதுகிலுள்ள கூச்சல் நரம்பு முறிந்தால், கருச்சிதைவு உண்டாகும். 217ஆம் நாளில் கூம்பு வர்மத்தில் நீல நிறமும், முகத்தில் மஞ்சள் நிறமும் தோன்றும்.
17. தலை உச்சியின் நடுவிலுள்ள துண்டு நரம்பு முறிந்தால், உடனே உயிர் பிரியும்.
18. நெஞ்சறையின் இடக்குய்யத்தில் மயிர்க் கூச்சல் நரம்பு முறிந்தால், உடல் வளைந்து குன்னிக் கொள்ளும், மயிர்க் கூச்சமும் இதயத் துடிப்பும் அதிகரிக்கும்.
19. முதுகின் நடுவில் புயம் அருகில் தீபார நரம்பு முறிந்தால், ஆண்குறி பாதித்து கறுப்பாகும்.
20. கண்ணின் அருகில் உள்ள மாற்றான் நரம்பு முறிந்தால், தலை இடிக்கும். உடல் பொன்னிறமாகும். கண் மஞ்சளாகும். கொக்கரித்தல் செய்யும். சுவாசித்தல் கடினமாகும்.
21. புச்ச என்பின் அருகில் பலமாக வர்மம் கொண்டால், விசை நரம்பு தளர்ந்து 90 ஆம் நாள் வாதம் வரும். விந்து வெளியேறிக் கொண்டே இருக்கும்; இரு கால்களும் செயலற்றுப் போகும்.என்று கூறப்பட்டுள்ளன.
வர்மம் என்பதை விபத்து போன்று எதிர்பாராமல் ஏற்படுகின்ற பாதிப்புகளாகக் கருதலாம். இவ்வாறான பாதிப்புகளிலிருந்து விடுபடவும், மருத்துவம் காணவும் அவசர கால நடவடிக்கை தேவைப்படும். வர்ம மருத்துவ   முறை, விபத்து மருத்துவ முறை என்றால் பொருத்தமாக இருக்கும். அவ்வாறான அவசரமான மருத்துவத்தையும் சித்த மருத்துவத்துறை விரிவு படுத்தி வளர்த்து வந்திருக்கிறது என்பதை, அதனால் ஏற்படுகின்ற விளைவுகளை எடுத்துக் கூறியிருக்கும் முறையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
நோய்நாடித் தேர்வு செய்யும் முறைகளால் நோயை அறிந்து கொள்வதில், குத்து/வெட்டு என்பவற்றினால் சுமார் 700 நோய்கள் உண்டாகுமென்று கணிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் வர்மத்தினால் ஏற்படும் விளைவுகளும் அடங்கும் எனலாம்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக