ஞாயிறு, ஜனவரி 10, 2010

மருந்து,மருந்து செய்யும் முறைகள்,மருந்து செய்யும் யந்திரங்கள்,மருந்து வழங்கும் விதி ,நஞ்சு முறிவு ,பத்தியங்கள்,




மருந்தானது பொதுவாக உள்மருந்து வெளிமருந்து என இருவகைப்படும். உள்மருந்து என்பது உள்ளுக்குச் சாப்பிடும்மருந்துகளையும், வெளிமருந்து என்பது வெளிப்பிரயோகமாக மேலுக்குப்பயன்படுத்தும் மருந்துகளையும் குறிப்பிடும். இவை ஒவ்வோன்றும் 32 வகைப்படும்.


உள்மருந்துகள்:- சுரசம், சாறு, குடிநீர், கற்கம், உக்களி, அடை, சூரணம், பிட்டு,வடகம்,வெண்ணெய் மணப்பாகு,நெய்,இரசாயணம், இளகம், எண்ணெய், மாத்திரை,கடுகு,பக்குவம், தேணூரல், தீநிர், மெழுகு குழம்பு, பதங்கம், செந்தூரம், நீறு,கட்டு, உருக்கு, களங்கு, சுண்ணம், கற்பம், சத்து, குரு குளிகை.
 

வெளிமருந்துகள்:-கட்டு, பற்று, ஒற்றடம், பூச்சு, வேது, பொட்டணம், தொக்கணம், மை, பொடிதிமிர்தல் கலிக்கம், நசியம், ஊதல், நாசிகாபாணம், களிம்பு, சீலை, நீர், வத்தி, சுட்டிகை, சலாகை, பசை, களி, பொடி முறிச்சல், கீரல்,காரம், அட்டைவிடல், அருவை, கொம்புகட்டல், உரிஞ்சல், குருதிவாங்கல், பீச்சு.


மருந்துகளின்ஆயுள் அளவு:-சாதாரணமாக சிலமருந்துகள் சிலகாலத்திற்க்குப்பிறகு கெட்டுவிடுகிறது, மற்றும் சிலமருந்துகள் பார்வைக்குநன்றாக இருப்பினும், சிலகாலத்திற்க்குப் பிறகு அவைகளின் வீரியங் குன்றியிருக்குமாதலின் அத்தகையமருந்துகளை வழங்குவதில் பயனில்லை. ஆகையாற்றான் ஒவ்வொர ுமருந்துகளுக்கும் குறிப்பிட்ட ஆயுள் அளவை ஏற்படுத்தியிருக்கின்றனர். அவற்றுள் சில முக்கியமான மருந்துகளின் ஆயுள் அளவைமட்டும் இங்கு கூறப்படும்.
 


சுரசம், சாறு, குடிநீர், கற்கம், உக்களி, அடை, இவை ஒர் ஜாமம். சூரணம், பிட்டு,வடகம் வெண்ணெய் -இவைகள் மூன்று திங்கள், மணப்பாகு, நெய், இரசாயணம், இளகம், இவைகள் ஆறு திங்கள், எண்ணெய், மாத்திரை, கடுகு, பக்குவம், தேணூரல், தீநிர் இவைகள் ஓர் ஆண்டு, பதங்கம் பத்த ுஆண்டு, செந்தூரம் எழுபத்தைந்து ஆண்டு, மெழுகு குழம்பு இவைகள் ஐந்து ஆண்டு,நீறு, கட்டு உருக்கு,களங்கு இவைகள் நானூறு ஆண்டு, சுண்ணம் ஐநூறுஆண்டு, கற்பம், சத்து, குரு குளிகை இவைகள் மிக்க ஆண்டுகள். மேற்கூறப்பட்ட கால அளவுக்குப்பின் அம்மருந்துகளை பயன்படுத்தல்
கூடாது.

 


இனி உன் மருந்துகள் ஒவ்வொன்றையும் கூறப்படும்.
சாறு:- இது ஈரப்பசையுள்ள மூலிகைப் பொருட்களை இடித்தோ வதக்கியோ, அல்லது இதர பொருள்களைச் சேர்த்தோ அதினின்று திரவம்போன்ற சத்தை எடுப்பாதம்.
 

சுரசம்:- இது முற்கூறப்பட்டபடி எடுத்த சாற்றை சிறிது சுடவைத்து எடுத்துக் கொள்வதாகும்.
 


குடிநீர்:- இது சில சரக்குகளைச் சதைத்து அத்துடன் நீர் சேர்த்து முறைப்படி காய்ச்சி வடித்துக்கொள்வதாம்.
 


கற்கம்:- இது சில சரக்குகளை நீர் விட்டு கெட்டிபதமாக அரைத்தெடுத்த விழுதாகும்.
 


உக்களி:- இது அரிசிமாவு முதலியவற்றுடன் சில மூலிகைச் சாற்றைக் கூட்டி சர்க்கரை முதலியவைகளையும் சேர்த்து களிபோல் கிண்டுவதாம்.
 

அடை:- இது அரிசிமாவுடன் சில மூலிகைகளைச் சேர்த்து அரைத்து அடைபோல் தட்டி சுட்டு எடுப்பதாம்.

 

சூரணம்:- சரக்குகளை இடித்து தூள் செய்து வஸ்திரகாயம் செய்து எடுத்த தூளுக்கே சூரணம் என்று பெயர்.

 

பிட்டு:- இது கார் அரிசி முதலியவற்றுடன் சில மூலிகைகளையும் சேர்த்து இடித்து பிட்டவியலாகச் செய்தல்.

 

வடகம்:- சூரணத்துடன் வெல்லம் சேர்த்து பிட்டவியலாகச் செய்து சூட்டிலேயே இடித்து உருண்டைகளாகச் செய்வதே வடகமாம்.

 

வெண்ணெய்:- எண்ணெய் அல்லது நெய்யுடன் சில சரக்குகளைச் சேர்த்து உருக்கி நீரிலிட்டு கடைந்து வெண்ணெய்போல் செய்தல்.
 

மணப்பாகு:- இது சில சரக்குகளை கியாழம்வைத்து அல்லது இடித்துப் பிழிந்து சாறுஎடுத்து அத்துடன் சர்க்கரை சேர்த்து தேன்பதத்திற்கு காய்சச்சி எடுப்பதாம்.

 

நெய்:- நெய்யுடன் சில சர்க்குகளின் தூளையோ, சாற்றையோ சேர்த்து நெய்பதத்திற்கு காய்ச்சி வடிப்பது.

 

இரசாயணம்:- இது சூரணத்துடன் நெய், தேன் முதலியவைகளைக் கூட்டி பிசரி வைத்துக்கொள்வது.

 

இளகம் :- சர்க்கரையை பாகு எடுத்து அத்துடன் சூரணங்களைச் சேர்த்து நெய், தேன் விட்டுப் பிசைந்து எடுப்பதாம். இதனை இலேகியம் எனவுங் கூறுவர்.

 

எண்ணெய்:- எண்ணெயுடன் சரக்குகளின் தூளையோ சாறு கற்கம் முதலியவைகளையோ சேர்த்து, நீரெல்லாம் சுண்டி எண்ணெய் பதத்தில் காய்ச்சி வடிப்பதாம். இதனைத் தைல மெனவுங் கூறுவர்.



மாத்திரை:- சரக்குகளை தூள்செய்து கல்வத்திலிட்டு ஏதேனும் திரவங்களை விட்டு அரைத்து மெழுகு பதத்தில் சிறு அளவு உருண்டைகளாகத்திரட்டி எடுப்பதே மாத்திரையாம்.

 

கடுகு:- இது சில சரக்குகளின் சூரணத்துடன் தைலப் பொருள்களைச் சேர்த்து காய்ச்சி கடுகுபோல் திரண்டுவரும் சேறு பதத்தில் எடுப்பதாகும்.

 

பக்குவம்:- கடுக்காய் போன்ற சில சரக்குகளை பழச்சாறு போன்ற சில திரவங்களில் போட்டுவைத்து பக்குவப்படுத்துதல்.

 

தேனூரல்:- இஞ்சி போன்ற சில பொருட்களை தேனில் ஊறவைத்தல்.

 

தீநீர்:- இது சில பொருட்களை வாலையிலிட்டு எரித்து திராவகம்போல் கிடைக்கும் நீரைச் சேகரிப்பதாம்.

 

மெழுகு:- சரக்குகளை தூள் செய்து தேன் முதலியன விட்டு அரைத்து மெழுகு பதத்தில் எடுப்பதே மெழுகாம்.

 

குழம்பு:- சரக்குகளை அரைத்தோ, எரித்தோ குழம்பு பதத்தில் எடுப்பது.

 

பதங்கம்:- சில சரக்குகளை ஓர் சட்டியிலிட்டு மேல்சட்டி மூடி சீலைசெய்து எரித்து ஆறினபின்பு மேற்சட்டியில் ஒட்டியுள்ள தூளை சுரண்டி எடுத்துக்கொள்வதே பதங்கமாம்.

 

செந்தூரம்:- இது சில சரக்குகளை அரைத்தோ, எரித்தோ, புடமிட்டோ சிவப்புநிறத் தூளாகச் செய்வதாம்.

 

நீறு:- இது சில சரக்குகளை அரைத்தோ, எரித்தோ, புடமிட்டோ வெண்மை நிறத் தூளாகச் செய்வதாம். இதனை பற்பமெனவுங் கூறுவர்.

 

கட்டு:- இது சில சரக்குகளை ஒட்டிலிட்டு அடுப்பிலேற்றி சில திரவங்களைக் கொண்டு சுருக்கு கொடுத்து கெட்டிப்படுத்துவதாகும்.

 

உருக்கு:- இது சில சரக்குகளை மூசையிலிட்டு ஊதி உருக்கி சாய்ப்பதாகும்.

 

களங்கு:- இது உலோகங்களுடன் பாஷாணாதி சரக்குகளை சேர்த்து முன்போல் உருக்கி எடுப்பதாகும்.

 

சுண்ணம்:- இது சில சரக்குகளை காரமுடைய தீநீர் முதலியவைகளால் அரைத்து புடமிட்டு அல்லது ஊதி சுண்ணாம்பு போல காரமுடைய மருந்தாகச் செய்தல்.

 

கற்பம்:- இது சில மூலிககைப் பொருட்களையாவது அல்லது முப்பு போன்ற சில முடிவு பெற்ற பெரும் மருந்துகளையாவது பத்திய விதிப்படி முறையே உண்டு வருதலாம். இதனை காயகற்பம் எனவுங் கூறுவர். இது உடலை நெடுநாள் அழியாமல் இருக்கசெய்யும்.



சத்து:- இது மூலிகைப் பொருள்கள், உலோகம், உபாசம் முதலியவற்றினின்று முறைப்படி அவற்றின் சத்தை எடுப்பதாம்.

 

குரு குளிகை:- இது இரசத்தை மூலிகைகள் கொண்டு அரைத்தோ, ஜெயநீர்கள் கொண்டு சுருக்கிட்டோ, முப்பு முதலியவைகளைச் சேர்த்தோ கட்டி மணியாக்கி, முறைப்படி சாரணைகளைச் செய்து நெருப்புக்கு ஓடாதபடி செய்தலாம். இது வாதம் முதல் பல சித்துகளுக்குப் பயன்படும்.


மருந்து செய்யும் விதிகள்


இதில் மருந்துகளை செய்யும்போது கவனிக்கவேண்டிய சில முக்கியமான விதிகளையும், செய் பாகங்களையும் கூறப்படும்.



மருந்துகளை செய்யும் போது சரக்குகளைக் கூடியமட்டும் தூயதாகவும், வீரியங் குன்றததாகவும் தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும். வாய்விளங்கம், திப்பிலி, வெல்லம், தனியா, தேன் முதலிய பொருட்கள் சற்று பழகினதாக இருப்பின் நன்று. ஆடாதோடை, சீந்தில், நிலவேம்பு, நன்னாரிவேர், அசுவகந்தி, நிலப்பூசனி போன்ற சரக்குகள் பச்சையாக இருப்பின் நன்று. மூலிகைகளின் அங்கத்தைக் குறிப்பிடாத விடத்தில் அதன் வேரை அல்லது சமூலத்தை சேர்ப்பதுதான் முறை ஏதேனும் கூறப்பட்ட சரக்குகள் கிடைக்கப் பெறவிடில் அதே குணத்தையுடைய வேறு சரக்கை அதற்குப் பதிலாகச் சேர்த்துக்கொள்ளலாம். சரக்குகளின் எடை கூறப்படாத விடங்களில் அவைகளைச் சமனெடையாகக்கொள்ளவும். ஒவ்வொரு சரக்கையும் மருந்துகளில் சேர்க்குமுன்பு சுத்தி செய்து சேர்க்கவேண்டும்.



சுத்தி செய்தல்:- எச்சரக்கையும் வழங்கு முன்பு முறைப்படிச் சுத்திசெய்து வழங்குவதே வைத்திய முறையாம். சுத்தி என்பது ஈண்டு கழுவுதல், துடைத்தல், தூயதாகப் பார்த்தெடுத்தல் முதலிய செய்கைகளைமட்டுங் குறிப்பிடுவதல்ல. சரக்குகளின் பண்பையும் ஒரளவு மாற்றி யமைக்குந் தன்மைவாய்ந்ததென்பதை நன்குணரவேண்டும். மருந்து முறைகளில் சரக்குகளின் சுத்தி மிக இன்றியமையாததென்பதையும், இதன் தவரால் கோரிய பலன் கிட்டாமல் போவதுடன் உயிருக்கும் தீங்கை விளைவிக்குமென்பதை அறிதல் வேண்டும்.


மருத்துவத்துறையிலே பொருட்களின் சுத்தி என்பது ஓர் சரக்கில் இதர சரக்குகளின் கலப்போ, மண் தூசு முதலிய மலினங்களோ, தோஷ அங்கங்களோ உடலுக்கு தீமையை விளைவிக்குமளவு வீரியமோ விஷக் குணங்களோ, இல்லாமல் படியும், அதே சமயத்தில் அச்சரக்குகள் செய்கை குணம் முதலியன முற்றுங்குன்றாமலும் மாறாமலும் இருப்பதுடன், அச்சரக்கின் இயற்கைப் பண்பிற்கேற்றபடி உடலில் தொழில் நடாத்தி நன்மை புரியத்தக்கதாயும் அதனைத் தூய்மைப்படுத்தி திருத்தி யமைக்கும் முறைமையாம்.



இதைப்பற்றி விபரமாகச் சுத்தி முறைகள் என்னும் தலையங்கத்தின் கீழ் கண்டுணர்க.



சாறு எடுத்தல்:- ஈரப்பசையுள்ள மூலிகைப் பொருட்களினின்று திரவம் போன்ற சத்தை எடுப்பதே சாறு எடுத்தல். துளசி போன்ற சில மூலிகைகளை இடித்துப் பிழிந்தால் சாறு கிடைக்கும். இவ்வாறு இடித்துப் பிழிந்தால் சாறு கிடைக்கப்பெறாத சரக்குகளை பிட்டவியலாக வேகவைத்தோ, அனலில் வாட்டியோ, நீர் விட்டு அரைத்தோ, வேறு சரக்குகளை உபாயமாகச் சேர்த்தோ சாறு எடுக்கவேண்டும். உதாரணமாக, ஆடாதோடையை அவித்தும், தும்மட்டிக்காயை அனலில் வெதுப்பியும், வெள்ளைப்பூண்டை அரைத்து கீலையிலூட்டி வதக்கியும், இஞ்சியை நீர்விட்டு அரைத்தும், தேங்காய், புங்கம்வேர் முதலியவைகளைத் திருகியும், கற்றாழை போன்ற குழகுழப்பான பொருட்களில் கடுக்காய் போன்ற துவர்ப்பு சூரணங்களைச் சேர்த்தும் கசக்கிப் பிழிந்து சாறு எடுக்கப்படும்.


வஸ்திரகாயம் செய்தல்:- ஓர் பாத்திரத்தின் வாய்க்கு மெல்லிய மல் துணியைக் கட்டி, அதன்மீது சூரணம் முதலிய இடித்தெடுத்த தூள்களைத் தூவி கையால் தேய்த்து அடியில் கிடைக்கும் மெல்லிய சன்னமான தூள்களை எடுத்துக்கொள்ளல். இதனை வடிகட்டல், சல்லித்தல் எனவும் கூறப்படும்.


அரைத்தல்:- மருந்துச் சரக்குகளைத் தூள்செய்து கல்வத்திலிட்டு அரைக்கும்போது மூலிகைச்சாறு முதலிய திரவங்களைத் துளி துளியாக விட்டு குழம்பு பதத்திலேயே குறிப்பிட்ட மணிநேரம் வரையில் அரைக்கவேண்டும். அவ்வாறு அரைத்து வரும் போது குழவியின் ஓரங்களிலும், கல்வத்தின் ஓரங்களிலும் படிந்துள்ள மருந்துகளை அவ்வப்போது சுரண்டியால் சுரண்டிப்போட்டு, மருந்துகள் யாவும் ஒருமிக்கக் கலந்து மைபோலாகும் வரையில் அரைக்கவும்.


சுரசுரப்பாகவும், புள்ளிகள் விழுந்தும், அதிக சூடவாகவும் இல்லாமல், மழமழப்பாகவும் கருப்புநிறக் கல்லினால் செய்யப்பட்ட கல்வமே மருந்துகள் அரைப்பதற்குச் சிறந்ததாம்.



வில்லை செய்தல்:- சரக்குகளைக் கல்வத்திலிட்டு ஏதேனும் திரவம்விட்டு அரைத்ததை மெழுகுபதத்தில் வ்ழித்தெடுத்து அகலில் அடைபோல் வில்லையாகச் செய்வதே வில்லை செய்வதாம்.

சரியான மெழுகு பதத்தில் சுரண்டி எடுக்காவிடில் வில்லை செய்யவராது. வில்லைகளில் வெடிப்பு ஏற்பட்டு உடைந்துவிடும். ஆகவே முறைக்கேற்றபடி ஓரே வில்லையாகவோ, அல்லது பல சிறு வில்லைகளாகவோ வெடிப்புகள் இல்லாதபடி செய்து நன்றாய் உலர்ந்த பின்பே புடமிடவேண்டும். இன்றெல் மருந்து கருக்கும்.



உலர்த்தல்:- ஈரம் போகச் செய்வதே உலர்த்தல் எனப்படும். மருந்து முறைகளில் உலர்த்தவேண்டியவைகள் யாவற்றையும் கூடுமானவரையில் வெய்யிலில் வைக்காமல் நிழலில் வைத்து உலர்த்தி எடுப்பதே நன்று.


கவசஞ் செய்தல்:- மூலிகைகளையோ அல்லது மற்ற சரக்குகளையோ அரைத்து கறப பதத்தில் எடுத்து, குறிப்பிட்ட சரக்கு அல்லது வில்லைக்கு மேலே நாற்புறமுஞ் சூழ்ந்திருக்கும்படி கெட்டியாக பூசி அமைக்கும் முறையே கவசஞ் செய்தல் எனப்படும். இவ்வாறு கவசஞ் செய்வதில் வெடிப்புகள் ஏற்படாவண்ணம் பார்த்தல் மிக அவசியமாகும்.


சீலைமண் செய்தல்:- நல்ல களிப்புள்ளதும், மணல் கல் முதலியன கலப்பற்றதுமான செழிப்பான களிமண்ணைக் கொண்டு வந்து சிறிது நீர் தெளித்து கெட்டி பதமாக அரைத்து, அகலின் பொருந்துவாய்க்கு சந்தில்லாமல் பூசி, பின்பு நான்கு விறற்கடை அகலமுள்ள நிகளச் சீலைத்துண்டுகளில் களிமண்ணைத் தடவி அதை பொருந்துவாய்க்கு சுற்றி கெட்டிப்படுத்துவதே சீலைமண் செய்தல் எனப்படும். சாதாரணமாக ஏழு சீலைமண், அதாவது ஏழு சுற்று செய்வது வழக்கம். நெருப்புக்குப் புகைந்து போகுஞ் சரக்குகளைச் சீலை செய்யும்போது மிகவும் வலிவாக இருக்கும் பொருட்டு உளுத்தம்மாவையோ, அல்லது சுண்ணாம்பும் வெல்லமும் சேர்ந்த கலவையையோ கெட்டியாக சீலையில் தடவி சீலை செய்வதுண்டு.


அகலிலடக்கல்:- வாய் பொருத்தமான இரண்டு மண் அகல்களைச் சேகரித்து வாய்புறத்தை நன்றாகத் தேய்த்து சந்தில்லாமல் பொருந்தும்படி பார்த்து, அதில் ஓர் அகலில் மருந்துச்சரக்கு அல்லது மருந்துவில்லையை வைத்து மற்றொரு அகலால் பொருந்த மூடுதலையே அகலிலடக்கல் எனப்படும்.


புடமிடல்:- சாதாரணமாக சீலை செய்த மருந்தை விறட்டிகளின் இடையில் வைத்து தீயிட்டு வெந்தாறியபின்பு எடுப்பதே புடமிடுதல் எனப்படும். இதில் புடம்போடவேண்டிய விறட்டிகளில் பாதி பாகத்தை தரையில் சற்றுபறவியபடியும் ஒன்றன்மீது ஒன்றாகவும் அடுக்கி அதன் நடுவில் சீலை செய்த மருந்தை வைத்து அதன்மீது மிகுதியுள்ள பாதிபாகம் விறட்டிகளையும் பிட்டு, நாற்புறமும் சூழ நெருங்க வட்டமாக அடுக்கி நாற்புறமும் தீயிடவும். புடமானது வெட்ட வெளியாகவும், காறோட்டம் அதிகமாக இல்லாததுமான இடத்தில் போடுதல் நல்லது. பூமியில் குழிதோண்டி அதில் புடமிடுவது சிறந்த முறையாகும். ஒரு விறட்டியில் புடமிடுவதை காடை புடமென்றும், மூன்று விறட்டியில் புடமிடுவதை கவுதாரி புடமென்றும், பத்து விறட்டியில் புடமிடுவதை குக்குட புடம் அல்லது கோழிபுடமென்றும், ஐம்பது விறட்டியில் புடமிடுவதை வராக புடமென்றும், ஆயிரம் விறட்டியில் அல்லது ஒரு முழ சதுரமும், ஒன்னறை முழ ஆழமும் உள்ள குழிதோண்டி அது நிறைய அடுக்கிய விறட்டியில் வைத்து புடமிடுவதை கஜபுடமென்றும் கூறப்படும்.
மற்றும் வெய்யலில் வைத்தெடுப்பதை சூரியபுடமென்றும், உமியின் இடையில் வைத்து கொளுத்தி எடுப்பதை உமிபுடமென்றும், தானியக் களஞ்சியத்தின் இடையில் வைத்தெடுப்பதை நெற்புடம் அலலது தானியப்புடமென்றும், பூமியில் புதைத்து வைத்து எடுப்பதை பூமிபுடமென்றும், மணலின் இடையில் வைத்து விறட்டியை வைத்து தீயிட்டு எடுப்பதை மணல் மறைவு புடமென்றும், பனியில் வைப்பதை பனிப்புடமென்றும் வழங்கப்படும்.
புடமானது நன்றாய் ஆறினபின்புதான் பிரித்து மருந்தை எடுக்கவேண்டும். சூட்டுடன் எடுக்கக்கூடாது. புடத்தினின்று எடுக்கப்பட்ட மருந்தின்மேல் காணும் சீலைமண் சிவந்து காணுமாயின் தீயின் அளவு சரியான அளவென்றும், சீலைமண் உதிர்ந்து காணுமாயின் தீயின் அளவு அதிகமென்றும், சீலைமண் கறுத்து காணுமாயின் தீயின் அளவு குறைவு என்றும் அறிக.
 

ஒருமுறை புடமிட்டெடுத்த மருந்து வெண்மையாகவோ அல்லது சிவப்பாகவோ இல்லாமல் கருப்பாகவும், மிருதுவாக இல்லாமல் கடினமாகவும் இருப்பின், முன் அரைத்த மூலிகைச் சாற்றிலேயே மீண்டும் அரைத்து, நல்ல நிறத்தையும், மிருதுத் தன்மையும் அடையும் வரையில் சில புடமிடவேண்டும்.
எரித்தல்:- விறகுகளைக் கொண்டு எரித்தல், தீயின் அளவைக் கொண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்படும். இரண்டு விறற்கடை கனமுள்ள ஒரு விறகைக்கொண்டு தீபத்திற்கு ஒப்பான சுடர் எழும்பும்படி எரித்தல் தீபாக்கினி என்றும், மேற்குறிப்பிட்டபடியே இரணடு விறகுகளைக் கொண்டு, தாமரைமொட்டைப்போல் தீ பறவ எரிப்பதை கமலாக்கினி யென்றும், மேற்குறிப்பிட்டபடியே மூன்று அல்லது அதிக விறகுகளைக் கொண்டு தீயானது நாற்புறமும் சூழ நன்கு எரிப்பது காடாக்கினி யென்றுங் கூறப்படும்.
ஒன்றும் கூறதவிடத்து சிறுதீயாக எரித்தலே முறையாம். சில மருந்துகளில் குறிப்பிட்ட சில விறகுகளைக்கொண்டு எரிப்பது முண்டு.
வறுத்தல்:- வறுகக்வேண்டிய மருந்துகளை சட்டியிலோ கடாயிலோயிட்டு அடுப்பிலேற்றி எரித்து கரண்டி அல்லது சில வேர்களைக்கொண்டு தேய்த்து பதமாகும் வரையில் வறுக்கவேண்டும். இவ்வாறு செய்யும்போது மருந்துகள் மேலே தெரிக்காமலும், மருந்தின் புகை மேலே தாக்காமலும் தூரமாய் இருந்து நீண்ட கரண்டி கொண்டு வறுத்துவருதல் நன்று.
 


உலையிலிட்டு ஊதல்:- இது உலோகம் முதலிய கடினமான பொருட்களை சுண்ணம் முதலியன செய்யும்பொருட்டு மூசையிலிட்டு வாய்மூடிச் சீலைசெய்து கன்னான் உலையில் வைத்து, கரிபோட்டு மூசையழுக மும்முறை ஊதி எடுப்பதுண்டு.
 


சுண்ணத்திற்கு ஒரு துருத்திக்கொண்டும் களங்கு உருக்கு முதலியவைகட்கு இரு துருத்திகொண்டும், சத்து முதலியவைகட்கு நான்கு துருத்திகொண்டும் ஊதியெடுப்பது முறை. இத்தகைய காரியங்களுக்கு வஜ்ஜிர மூசையைப் பயன்படுத்தல் நன்று.
 


வஜ்ஜிர மூசை செய்தல்:- சாம்பல், புற்று மண், இரும்புச் சிட்டம், வெள்ளைக்கல் (அண்டக்கல்) இவைகளைச் சம எடையாக எடுத்து, அத்துடன் பொடியாகக் கத்தரித்தலைமயிர் சிறிது சேர்த்து ஆட்டுப்பாலிலிட்டு வேகவைத்து உலர்த்திப் பொடித்துக் கல்வத்திலிட்டு சுண்ணநீர்விட்டு இரண்டு ஜாமம் நன்கு அறைத்து மெழுகு பதத்தில் மூசையும் மூடியும் செய்து உலர்த்தவும். இதுவே வ்ஜ்ஜிர மூசை எனப்படும். இத்தகைய மூசைகளில் இரசம், உபாசம், பாஷாணம் முதலிய சரக்குகளை வைத்து ஊத நீறும்.


உருக்குதல்:- அயம், செம்பு, வெள்ளி, தங்கம் முதலியவைகளை மூசையிலிட்டு உருக்கும்போது சிறிது வெண்காரத் துண்டை சேர்த்து உருக்க நன்றாக உருகும். நாகம், வங்கம் முதலிய எளிதில் உருகும் சரக்குகளுக்கு வெண்காரம் சேர்க்கவேண்டியதில்லை. ஆனால் நாகம் முதலிய சரக்குகளை சுத்தி செய்யும் பொருட்டு உருக்கி மூலிகைசாறு முதலியவைகளில் சாய்க்கும்போது தூரமாக இருந்து சாய்க்கவேண்டும். இன்றேல் மருந்து சீறியெழுந்து உடலில்பட்டு ஆபத்தை விளைவிக்குமென்பதை கவனத்தில் வைக்கவும்.


தொந்தித்தல்:- ஏதேனும் இரண்டு சரக்குகளை ஒன்றறக் கலக்கச் செய்வதற்கே தொந்தித்தல் என்று பெயர். இது பெரும்பாலும் இரசத்துடன் வங்கம் அல்லது நாகத்தைத் தொந்தித்தலைக்குறிக்கும். அவ்வாறு தொந்திப்பதில் முதலில் நாகம் அல்லது வங்கத்தை ஓர் இரும்பு கரண்டியிலிட்டு தீயிலிட்டு உருக்கி, திரவம் போல் ஆடுஞ்சமயத்தில் கீழிறங்கி சற்று சூடாறி உறையும் பதத்தில் ரசத்தை அதில்விட, நாகம் அல்லது வங்கம் ரசத்தை கிரகித்துக்கொண்டு வெட்டையாகும். அதிக சூடாயிருக்கும்போது இரசத்தை சேர்த்தால் இரசமானது உஷ்ணத்தினால் ஆவியாகி சிறிது வீணாகுமென்பதையும், நன்றாக உறைந்துவிட்டால் இரசத்தை கிரகிக்காதென்பதையு முணரவேண்டும்.
 


இரசத்துடன் கந்தகத்தைத் தொந்திப்பதாயின் முதலில் கந்தகத்தைக் கல்வத்திலிட்டுப் பொடித்துக்கொண்டு, பின்பு இரசத்தைச்சேர்த்து அரைக்க அவை இரண்டுஞ்சேர்ந்து கருப்பு நிறமான தூளாகும். இதில் ரசம் உருத்தெரியமல் மறைந்து(மடிந்து) இருக்கும்.




சுருக்குகொடுத்தல்:- ஒருவாய் யகலமான மண் சட்டியை யாவது , அல்லது அச்சட்டியின் நடுவே சுமார் இரண்டு அங்குலம் வட்டமுள்ள துவாரஞ் செய்து அதன் மீது பொருந்தும்படியாக ஓர் அப்பிரகத்தகட்டை வைத்து, ஓரங்களில் உளுந்து அரைத்து சந்தில்லாமல் தடவி காயவைத்ததையாவது
அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து, அப்பிரகத்தகட்டின் மேல் சுருக்குகொடுக்கவண்டிய சரக்கை வைத்து,முறைகளுக்குத்தக்கபடி மூலிகைச்சாறு ஜெயநீர் முதிலிய ஏதேனும் ஓர் திரவத்தை ஓர் சிறு
உச்சிக்கரண்டியினால் எடுத்து சரக்கின் மீது சிறிது சிறிதாக விட்டு, அது சுண்ட சுண்ட மேலும் கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப்போது விட்டுக் கொண்ட போது,மருந்தானது காந்தாமலும்,அடிபிடிக்காமலும் இருக்கும் பொருட்டு, கரண்டியினால் அவ்வப்போது புரட்டிக்கொண்டுவர வேண்டும். இவ்வாறு
குறிப்பிட்ட மணி நேரமோ அல்லது குறிப்பிட்ட அளவு சாறு முதலிவைகள் தீரும் வரையிலோ அல்லது அச்சரக்குகட்டு அல்லது மெழுகாகும் வரையிலோ செய்து எடுத்துக்கொள்வதுண்டு. இதனையே சுருக்குகொடுத்தல் என்பர். இது பெரும்பாலும் சரக்குகட்டும் அல்லது மெழுகு செய்யும்
பாகங்களில் பயன்படும்.



கியாழவிதி:- சாதாரணமாக கியாழம் போடவேண்டியசரக்குகளை பஞ்சுபோல் இடித்து ஓர் பாண்டத்தி லிட்டு சரக்குக ளுக்குத்தக்கபடி நீர் சேர்த்து எட்டிலொன்றாய்க் காய்ச்சி வடிப்பதே கியாழ முறையாம்.
எளிதில் சத்து இறங்கக்கூடிய சரக்குகளாயின் கொஞ்சமாக நீர் சேர்த்து எரிப்பதும், கடினமான சரக்குகளாயின் அதிகமாக நீர் சேர்த்து சில மணி நேரம் ஊறவைத்து காய்ச்சுவதும், வெந்நீரில் சரக்கின் சுரணத்தைப்போட்டு சில மணி நேரம் சென்ற பின்பு ஊறல் கியாழமாக எடுத்துக்கொள்வதும், காய்ச்சப்பட்ட கியாழத்தில் தேவையான அளவு எடுத்துக்கொண்டு அதில் நீரைவிட்டு அடுப்பிலேயே வைத்துருந்து அடை கியாழமாகவும் பல முறைகள் செய்வதுண்டு. எத்தகைய கியாழம் செய்யினும் மருந்தின் ஆவி போகாதபடி மூடிஎரிப்பதுடன் காய்ச்சும் முறைகட்கெல்லாம் மண்பாண்டத்தையே உபயோகிக்கவேண்டும் என்பதை ஞாபகத்தில் வைக்கவும்.


 

கியாழத்துடன் சர்க்கரை அல்லது தேன் கூட்டவேண்டுமாயின் வாததேகிக்கு நாலில் ஒரு பாகமும், பித்த தேகிக்கு எட்டிலொருபாகமும், கபதேகிக்கு பதினாறில் ஒரு பாகமும் சேர்ந்து வழங்கலாம்.

சூரண விதி:- சூரணம் செய்யவேண்டிய சரக்குகளை ஒவ்வொன்றையும் தனித்தனியே சுத்திசெய்து, இடித்து எடைபோல நிறுத்தெடுத்து பிறகு ஒன்று சேர்த்து ஒருமிக்கக் கலந்து வஸ்திர காயம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். எல்லா சரக்குகளையும் ஒன்றாக சேர்த்து இடித்தல் கூடாது. பொதுவாக எல்லா சூரணங்களையும் பாலில் பிட்டவியலாக வேகவைத்து எடுத்தல் நன்று. சூரணத்துடன் சர்க்கரை சேர்ப்பதாயின் சமன் எடை அல்லது இரண்டெடை சேர்க்கலாம். ஆனால் வேண்டிய போது அவ்வபோது சர்க்கரை சேர்த்தருந்தல் சிறந்தது. சூரண முறைகளில், மிளகு, திப்பிலி, சீரகம் போன்ற சரக்குகளை பொன்வறுவலாக வருத்தும், பெருங்காயம், வெண்காரம், போன்ற சரக்குகளைப் பொரித்தும், இஞ்சி முதலிய சரக்குகளை நெய்யில் வருத்தும், மயிலிறகு, கம்பளி, பட்டு முதலியவைகளை கருக்கியும் சேர்க்கவேண்டும்.
இலேகிய விதி:- சூரணத்தின் எடைக்கு இரண்டு பங்கு சர்க்கரையும், சர்க்கரையின் எடையில் அரைபாகம் நெய்யும், அதில் அரைபாகம் தேனும் சேர்த்து லேகியம் செய்வது முறை. சர்க்கரையுடன் நான்கு பங்கு நீர்சேர்த்து காய்ச்சவேண்டும். சில முறைகளில் நீருக்குப்பதிலாக பால் அல்லது குடிநீர்கள் சேர்ப்பதுமுண்டு.

முதலில் சர்க்கரையுடன் நீர் அல்லது பாலை நான்கு மடங்கு சேர்த்து அடுப்பிலிட்டு சிறு தீயாக காய்ச்ச பாகுபதம் வரும். அதாவது ஓர் துளி நீரில் விட அத்துளி ஜலத்தில் கரையாமல் அப்படியே நிற்கவேண்டும். அல்லது கை விரல்களில் தொட்டு எடுக்க நூல்போல் எழும். இதுவே சரியான பாகுபதமென அறிந்து கீழிறக்கி அதில் சரக்குகளின் சூரணத்தைத் தூவி நெய் சேர்த்துக் கிண்டி ஆறினபின்பு தேன் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இலேகிய முறைகளில் பருப்பு வகைகளைச் சேர்ப்பதாயின் அவைகளை நீர்விட்டு அரைத்து பால் பிழிந்து சர்க்கரையுடன் சேர்த்து காய்ச்சுவதும், கஸ்தூரி, குங்குமப்பூ முதலிய வாசனைத் திரவியங்களைச் சேர்ப்பதாயின் லேகியம் சூடாறிவருஞ் சமயத்தில் சேர்ப்பதும் முறைமையாம்.


மாத்திரை விதி:- மாத்திரை செய்யும் போது அதில் சேரும் ஒவ்வொரு சரக்கையும் தனித்தனியே பொடித்து பிறகு முறைப்படி ஒன்றன்பின் ஒன்றாய் சேர்த்து கலக்க நன்கு அரைத்து மெழுகு பதத்தில் திரட்டி எடுத்து அளவின்படி மாத்திரைகள் செய்து நிழலிலுலர்த்த வேண்டும். சரக்கானது கல்வத்திலும் குழவியிலும் ஒட்டாமல் திரண்டுவரும். இதுவே சரியான மெழுகு பதம் அல்லது மாத்திரை திரட்டும் பதமென அறிக.

ஏதேனும் ஓர் முறையில் இரசம் சேர்வதாக இருப்பின் முதலில் அதைக் கல்வத்திலிட்டு அத்துடன் அதை மடிக்கக்கூடிய கந்தி, முதலிய சரக்குகளை சேர்த்து அரைத்து மடித்துக்கொண்டு பிறகு மற்ற சரக்குகளைச் சேர்க்கவேண்டும். மற்றும் கடினமான சரக்குகளை முதலில் சேர்க்கவேண்டும். வாளம் சேர்ப்பதாயின் கடைசியில் சேர்த்து அறைக்கவும். மற்றும் கஸ்தூரி, அம்பர், பச்சைக் கற்பூரம் முதலிய வாசனைச்சரக்குகளையும் மாத்திரை பதம் வருவதற்குச் ச்ற்று முன்பாக சேர்த்தல் முறை.

மணப்பாகு விதி:- இதனை சர்பத் எனவுங்கூறுவர். இது சாதாரணமாக பழச்சாறுகல், மூலிகைப் பொருட்களின் சாறு அல்லது குடிநீர் முதலியவ்ற்றுடன் சமன் அளவு சர்க்கரை சேர்த்து காய்ச்சி ஒருவித நல்லமணத்துடன், தேன் போன்ற இளகிய பாகு பதத்தில் எடுத்துக் கொள்ளப்படும். மிக புளிப்பு, அல்லது கைப்பு பொருள்கள் சேர்வதாயின் சர்க்கரையை இரண்டு பங்காகச் சேர்த்து செய்யலாம்.

கிருத விதி:- சரக்கின் எடைக்கு இரண்டு பங்கு பசு நெய் சேர்த்து காய்ச்சி நெய்யிலுள்ள ஈரப்பசைகள் நீங்கி, நுரைகள் அடங்கி, நல்ல மணம் வீசும்பதத்தில் வேறு பாண்டத்தில் வடித்துக் கொள்ள வேண்டும்.

தைல விதி:- சாதாரணமாக தைலம் அல்லது எண்ணெய் என்பது சில சரக்குகளின் சூரணம், கற்கம், குடிநீர், மூலிகைச்சாறு முதலியவற்றுடன் பாகத்திற்கு தக்கப்படி நல்லெண்ணெய் அல்லது ஆமணக்கு நெய் சேர்த்து சிறு தீயில் காய்ச்சி, வண்டல் மெழுகு பதம் வருதல், அல்லது எண்ணெயில் ஈரப்பசையின்றி சிடுசிடுப்பு இல்லாமல் இருக்கும் பதத்தில் வடித்துக்கொள்வதாம்.

மூலிகைச்சாறுகள், மென்மையான சரக்குகளின் குடிநீர் இவைகளுடன் சமன் அளவு எண்ணெயையும், கடினமான சரக்குகளின் குடிநீர்கள், பால் முதலியவைகளுடன் அரைபாக்ம் எண்ணெயையும், சில சமயம் சில தனிச்சரக்குகளின் தூளுடன் நான்கு அல்லது எட்டு பங்கு எண்ணெயையும் சேர்த்து காய்ச்சுவது வழக்கம்.

இவ்வாறு தைலங்காய்ச்சும்போது வண்டலானது அற்ப நீருடன் சேறுபோல் இருப்பின் அதை மிருது பாகமென்றும், வண்டல் மெழுகுபோல் திரண்டு, ஆனால் கையில் ஒட்டினால் அதைசிக்கு பதமென்றும், வண்டலானது மணலைப்போல் இருப்பின் கரகரப்பும் பதமென்றும், இவை முறையே வாத பித்த கப ரோகிகட்கு சிறந்ததென்றும் நூல்களில் கூறப்பட்டுள்ளது.

அம்பர், கஸ்தூரி, குங்குமப்பூ முதலிய வாசனைப் பொருட்கள் தைலத்தில் சேர்க்க வேண்டுமாயின், சூடாறி வடிகடத்தில் வடிக்கும் போது சேர்க்கவேண்டும்.


ஒரு முறை காய்ச்சி எடுக்கப்பட்ட தைலத்துடன் மீண்டும் சரக்குகளை மட்டும் சேர்த்து காய்ச்சுவது மடக்குத் தைலமெனப்படும். இவை மிகவும் வீரியமுள்ளதாகும். சில சிறந்த தைலங்களை சில குறிப்பிட்ட விறகுகளைக் கொண்டு எரிப்பதுடன் காய்ச்சப்பட்ட தைலத்தை சில நாட்கள் நெற்குவியலில் வைத்தெடுத்து வழங்கப்படும்.


மற்றும் வெய்யிலில் வைத்தல், உருக்குதல், கொளுத்தல், புடமிடுதல் முதலியவற்றாலும் சில தைலங்கள் தயாரிப்பதுண்டு. ஆகவே தைலமானது பிறப்பின் காரணமாய் சூரியபுடதைலம், உருக்குதைலம், சுடர்தைலம், கொதித்தைலம், குழித்தைலம், மண்தைலம், நீர்தைலம், மரத்தைலம், பொறித்தைலம், தீநீர்தைலம், சிலைத்தைலம், ஆவிதைலம் என 12 வகைப்படும்.


ஆனால் இத்தகைய தைலங்கள் யாவையும் பயனைநோக்கி ஐந்து வகையாகப் பிரித்துள்ளனர். சிரசிற்கிடுவதை முடித்தைலமென்றும், உள்ளுக்கு அருந்துவதை குடித்தைலமென்றும், மேலுக்கு உடலில் தேய்த்துப் பிடிப்பதை பிடித்தைலமென்றும், நவத்துவாரங்களில் செலுத்துவதை துளைத்தைலமென்றும், விரணங்களுக்குப் பயன்படுத்துவதை சிலைத்தைலமென்றும் கூறப்படும்.


இ·தன்றி சில பொருட்களைப் பொடித்து எண்ணெயுடன் கலந்து வைத்துக்கொள்வதையும் தைலமென வழக்கில் கூறப்படுகின்றது.


பற்ப செந்தூர விதி:- பற்ப செந்தூரங்கள் நல்லபடி முடிய வேண்டுமானால், நன்கு அரைத்தல், வில்லைகளை ஈறமின்றியுலர்த்தல், பொருத்தமான அகலி லடக்கல், கவசம் செய்தல் அல்லது மண்சீலை செய்தல் முதலியவைகளை வலுவாக செய்தல், மருந்துக்கு தக்கப்படி சரியான அளவு விறட்டிகளைக்கொண்டு புலமிடல், எரித்தல், வறுத்தல் முதலிய காரியங்களில் மிக்க கவனத்தைச் செலுத்தி செய்தல் வேண்டும்.
அயம், காந்தம், மண்டூரம், அப்பிரகம் முதலியவைகளை பற்ப செந்தூரங்கள் செய்யும்போது நல்ல அரைப்பு கொடுப்பதுடன் அதிகமான விறட்டிகளைக் கொண்டு புடமிடவேண்டும். இவைகள் நல்ல பக்குவமடைய குறைந்து 10-புடங்களாவது போடவேண்டும். முடிவுபெற்ற மருந்தில் சிறிதெடுத்து ஜலத்தில் போட்டுப் பார்க்க அது நீரில் அழுந்தாமல் மிதக்கவாவது கரையவாவது வேண்டும். அத்தகைய மருந்துதான் நல்ல குணத்தை தரும். மேலும் இத்தகைய மருந்துகள் எத்தனைக் கெத்தனை புடம் போடப்படுகின்றதோ அத்தனைக் க்த்தனை நல்ல பலனைத் தரும்.

 

தங்கம்,வெள்ளி, தாம்பரம், முதலியவைகளை பற்ப செந்தூரம் செய்யும்போது நல்ல அரைப்பு கொடுப்பதுடன் மருந்தில் பளபளப்பும், கடினத்துவமும் நீங்கி நல்ல, நிறமாகவும்,மிருதுவாகவும் ஆகும் வரையில் பல புடமிடவேண்டும். இன்றேல் மருந்தின் குணம் கெடும்.

நாகம், வங்கம் முதலியவைகளை பற்ப செந்தூரங்கள் செய்த பின் அதில் சிறிதெடுத்து ஓர் கரண்டியிட்டு சிறிது எண்ணெய் சேர்த்து எரிக்க எண்ணெய் பற்றி எரிந்தபின் கரண்டியில் பார்க்க உலோகச்சத்து இருப்பின் மணிமணியாக உருகியிருக்கும். அப்படியிருந்தால் இன்னும் மடியவில்லையென்றுணர்ந்து மீண்டும் சில புடமிட்டெடுக்கவேண்டும். சரிவர முடியாத லோகச்சத்து
ள்ள மருந்துகளை உங்களுக்கு கொடுக்க தோஷங்கள் விளைவிக்கும், ஆகையால் சத்தின்றி நன்கு மடியும் வருத்தோ புடமிட்டோ பதமாக்கவேண்டும்.


சிலாசத்து,கல்நார்,மான்கொம்பு,ஆமையோடு முதலியவைகளை பற்பங்களாக செய்யும்போது முதலிலே சற்று பெரிய புடமாக போடுதல் நல்லது. இல்லாவிடில்கருத்து விட்டால் நல்ல வெண்மை நிறம் வருவதுகடினம். அப்படி கருத்தால் மீண்டும் அரைத்து சில புடமிட நிறம் மாறி வரும்.


இரச, கெந்தி, பாஷாண உபரசங்களைப் புட மிடுவதாயிருந்தாலும், எரிப்பதாயிருந்தாலும் கவசம் செய்வதையும், சீலைமண் செய்வதையும் மிக வலுவாகச் செய்வதுடன், சிறுபுடம் அல்லது சிறு தீயாக முதலில் கொடுத்தல் நன்று. இன்றேல் மருந்துகள் புகைந்து போய்விடும்.


கார சார லவண வகைகளை பற்ப சுண்ண செந்தூரங்கள் செய்வதற்கு உருகாமலும், ஊட்டங் குறையாமலும் இருக்கும் பொருட்டு சிறு புடங்களாகப் போட்டு எடுக்கவேண்டும்.


பாகக் கருவிகள்

அவி யந்திரம்

ஓர் வாயகலமான நீரையாவது, பாலையாவது, நீரும் பாலுங்கலந்ததையாவது கடத்தின் அரை பாகத்திற் குள்ளாக அடங்கும்படிவிட்டு, அக் கடத்தின் வாய்க்கு ஒர் சீலையை தளர்ச்சியாகக் கட்டி, அதன் மீது அவிக்க வேண்டிய சரக்கு அல்லது மருந்தை வைத்து, அக் கடத்தின் வாய்க்கு பொருத்தமான சட்டியை மேலே கவிழ்த்து வாய் மூடி சீலை சுற்றி, அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து, கடத்திலுள்ள திரவம் முக்கால் பாகம் சுண்டி வரும் வரையில் எரித்து எடுக்கவேண்டும். இதுவே அவியந்திரம் எனப்படும்.


துலா யந்திரம்

ஓர் மட்கடத்தில் அரைபாகத்திற்குள்ளாக அடங்கும்படி குடி நீரோ, சாறுவகைகளோ அல்லது வேறு திரவங்களோ விட்டு அக் கடத்தின் வாயின்குறுக்கே ஓர் மூங்கிற் குச்சியை வைத்து அதன் ந்டுவிலிருந்து ஓர் கயிறு கட்டித்தொங்கவிட்டு அதன் இறுதியில் மருந்துச் சரக்கை ஓர் துணியில் முடிந்து கட்டி, பாகத்திற் கேற்றபடி அம்மருந்து திரவத்தில் மூழ்கும்படியோ, மூழ்காமல் ஆவிமட்டும் படும்படியோ, அமைத்து, கடத்தின் வாய்க்கு பொருத்தமான ஓர் சட்டிகொண்டு மூடி அடுப்பிலேற்றிச் சிது தீயாக எடுத்து எரிக்கவேண்டும்.


வாலுகா யந்திரம்

ஓர் குப்பியில் மருந்துகளைப் போட்டு, வாய்க்குப்பொருத்தமான ஓர் பலப்பக் கல்லைச் செருகி, சீலைமண்செய்து குப்பி முழுவதும் மறையும்படி ஏழு சீலைமண் செய்து உலர்த்தி பிறகு ஓர் வாய் அகலமான மட்கடத்தில் நான்கு விரற்கடை மணலைக் கொட்டிப் பறப்பி, அதன்மீது குப்பியை

வைத்து, கழுத்தளவு மணல் கொட்டிப் பறப்பி, அடுப்பிலேற்றி முறைப்படி எரித்து பின்பு குப்பியிலுள்ள மருந்தை எடுத்துக்கொள்வதாம். சில முறையகளில் குப்பியின் வாயை மூடாமல் வைத்து எரிப்பது முண்டு.

மற்றும் ஓர் அடி கனத்த மட்கடத்தின் அடிபாகத்தில் குப்பி நுழையக்கூடிய ஓர் துவாரம் செய்து மருந்து செலுத்தி சீலைமண் செய்து வைத்துள்ள குப்பியை மருந்துள்ள பாகம் வரையில் சட்டியின் துவாரத்தில் நுழையும்படிச் செய்து, சந்துக்கு மண்பூசி உலர்த்தி, குப்பியின் கழுத்தளவு வரையில் மண்கொட்டிப் பரப்பி, வாயை மூடியும் மூடாமலும் எரித்தெடுப்பது முண்டு.


பதங்க யந்திரம்
வாய்அகலமாயும், பொருத்தமாயும் உள்ள இரண்டு மட்பாண்டங்களை ஒன்றில்பதங்கிக்கவேண்டிய
சரக்குகளைப் போட்டு மற்றொரு பானையில் மூடி பொருந்து வாய்க்கு சீலை மண் செய்து உலர்த்தி
அடுப்பிலேற்றி முறைப்படி எரித்து ஆறின பின்பு மேற்பானையின் உட்பாகத்தில் பதங்கமானது படிந்
திருக்கும், இதனை சுரண்டி எடுத்துக்கொள்ளவேண்டும். சில முறையகளில் மேற்பானையின் உட்புறத்
தில் மூலிகைச்சாறை மும்முறைப்பூசி உலர்த்தி சித்தப்படுத்தியதை மூடி எரித்தெடுப்பது முண்டு.இம்மா
திரி செய்வதனால் பதங்கம் வீணாகாமல் நன்கு படிந்திருக்கும்.


தீநிர் யந்திரம் 

வாய்அகலமான ஓர் பெரிய மட்கடத்தையும் அதனுள்ளே நுழையும்படியான ஓர்பீங்கான்கோப்பைக் கிண்ணத்தையும் சேகரித்துவைத்துக்கொண்டு மட்கடத்தின் உள்ளே நடுவில் ஒரு சதுரமான செங்கல் துண்டை ஆடாமல் வைத்து அதன் மீது பீங்கான் கிண்ணத்தை வைத்து கோப்பையைச்சுற்றி மருந்துகளை கிண்ணத்தின் மட்டத்திற்கு கீழாகவே உள்ளபடி போட்டு மட்கடத்தின்மீது ஒரு சிறு மட்குடத்தை நேராக வைத்து பொருத்து வாய்க்கு சீலை அல்லது மண்சீலையைச்சுற்றி அசையாமல் அடுப்பிலேற்றி,மேல்பானையில் சலம் விட்டு எரித்து ஆறின பின்பு மேல்பானையை எடுத்து விட்டு உள்ளே இருக்கும் பீங்கான் கிண்ணத்தைப் பார்க்க அதில் தீநிர் யந்திரம் இறங்கியிருக்கும். இதுவே தீநிர் யந்திரமாகும்.


வாலை யந்திரம் 

படத்தில் காட்டியதுபோல் வாலை யொன்று தயார்செய்து அதன் வாய்க்குப்பொருத்தமான வாயுள்ள ஓர் மட்குடத்தைசேகரித்து அம்மட்குடத்தில் அம்மருந்துகளைப் போட்டு வாய்க்கு வாலையைச்சொருகி பொருந்துமிடத்தில் மண்பூசி சீலை மண் வலுவாக செய்து வைத்துச்ச்க்கொள்க வாலையின் இரண்டு புறங்களிலும் இரண்டு குழைகள் காணப்படுவதில் ஒன்று வாலையின் உட்புறத்திலிருந்து தைலம், அல்லது தீநிர் வருவதற்காகவும்,மற்றொன்று மேல்புறத்திலுள்ள குளிர்ந்த நீரை வெளிப்படுத்துவதற்காகவும் உள்ளது. ஆகவே தீநிர் வரக்கூடிய குழையினின்று தீநிரை சேகரிக்கும்பொருட்டு ஓர் நீண்ட தகர
அல்லது கண்ணாடி குழாயை சொருகி அதன் இருதியில் ஓர் சீசாவை வைத்து அதில் தீநிர் வந்து விழும்படியாக அமைத்தும், வாலையின் மற்றொரு குழாயில் நீர் வெளியாகாதவண்ணம் ஓர்சடைகார்க் கை அடைத்தும் வாலையின் மேல்பாகத்திலுள்ள பாகத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி அசையாமல் அடுப்பிலேற்றி எரித்துவரவும். இவ்வாறு எரித்துவரும் போது வாலையின் மேல்பாகத்திலுள்ள பாகத்தில் குளிர்ந்த நீர் சூடானதாகத் தெரிந்தால் உடனே அதை வெளியாக்கிவிட்டு மறுபடியும் குளிர்ந்த சலத்தை ஊற்றிவைக்கவும். இப்படி எரிக்கும் போது பானையிலிட்ட மருந்தானது ஆவியாகி மேலெழும்பி குளிர்ச்சீயினால் நீராகி வாலையின் மற்றொரு குழையின் வழியாய் யிறங்கி சீசாவில் வந்து விழும்.  இவ்வாறு மருந்து கிடைக்கும் வரையில் எரித்து எடுக்கவும்.இது ஓமத்தீநிர், மைனத்தைலம் முதலியன செய்ய உதவும்.

 

சரக்குகளின் நஞ்சுக்கு முறிவு

இரசம்:- இதுசம்பந்தப்பட்ட மருந்துகள் விஷமித்தால் பல்லீறுகளில் விரணம் , வாய்நீறூறல் ,தொண்டை விழுங்க முடியாமல் நோதல் முதலிய குறிகுணங்கள் ஏற்படும்.


இதற்கு அருங்கட்டை 1-பலத்துடன் 25 மிளகு சேர்த்து முறைப்படி எட்டொன்றாய் குடிநீரிட்டு அதில் பாக்களவு வெண்ணெய் சேர்த்து காலை மலை கொடுக்கவும். அல்லது சுரை ஒட்டுக்கரியை 1/2 வராக்னெடைடுத்து புளிப்பு மோரில் கலந்து கொடுத்துவரலாம். இவ்வாறு செய்து வர இரசநஞ்சு தீரும்.


வீரம் :- இதன் நஞ்சால் மேற்கூறிய குணங்களுடன் வாந்தியும் ஏற்படும். இதற்கு கோழிமுட்டை வெண்
கருவுடன் சமன் நீர் அல்லது பால் சேர்த்து அடித்துக்கலக்கி சிறிதுசிறிதாக கொடுத்துவரலாம். அவுரி
வேர் கற்கம் பாலில் கலந்து கொடுக்கலாம்.


பூரம்:- இரச தோச குணங்களுடன் பேதிகாணும்,இதற்கு படிகார பற்பம், காசிகட்டி சூரணம் முதலிய வற்றை மோர் அல்லது பழச்சாறில் கொடுக்கலாம். பின்பு அவுரிவேர் கற்கம் அல்லது குடிநீர் தரலாம்.

துருசு:- இதன் நஞ்சால் வாந்தி காணும் ,இதற்கு பழச்சாறுடன் தேன் சேர்த்து நீரிட்டுகலந்துகொடுத்து வரலாம்.

தாளகம்:- இதன் நஞ்சால் வாந்தி பேதி முதலியன காணும். இதற்கு அவுரிவேர் மிளகு சேர்ந்த குடிநீர்
கொடுத்துவரலாம். சுண்ணாம்புத் தெளிவு நீரும் நன்மை பயக்கும்.


வெள்ளைப்பாஷாணம்:- இதன் நஞ்சால் வாந்தியும் நீர் நீராக பேதியும் இதற்கு அபினி சம்பந்தமான
பேதியை நிறுத்தும் மருந்துகளும், அவுரிவேர் மிளகு சேர்ந்த குடிநீர் நன்மை பயக்கும்.


செம்பு:- இதன் தோஷத்திற்கு பழச்சாறில் சுக்கு சூரணத்தைப்போட்டு கொடுத்துவரலாம்.

வங்கம்:- இதன் தோஷத்தால் பல்லீறுகளில் கருமை நிறமுண்டாகும். இதற்கு கருப்பு புல்லாஞ்சி
யிலைச்சாறு அல்லது கரும்புச்சாறு நல்லது.


கற்ச்சுண்ணாம்பு:- இதனால் வாய், நா முதலியன விரணப்படும் . இதற்கு தேங்காய்பால் மஞ்சள் குடிநீர் நன்று.

நேர்வாளம்:- இதன் நஞ்சால் வாந்தி பேதி வயிற்றுவலி , மயக்கம், மூர்ச்சை முதலியன ஏற்படும். இதற்கு வசம்பை சுட்டு தேனில் குழைத்து நாவில் தடவி வருதல். எலுமிசம்பழத்துடன் கியாழம் வைத்து வழங்குதல் , மோர் அருந்தல் முதலியன நன்மை பயக்கும்.

கள்ளிவகைகள்:- இவைகளினாலும் , வாந்தி, பேதி, வலி, வாய், குடல், முதலியன புண்ணாதல், மயக்கம்,மூர்ச்சை முதலியன காணும் . இதற்கு முதலில் சிற்றாமணக்கு நெய் கொடுத்துவிட்டு பிறகு பேதியை கட்டும் மருந்துகளையும், தேங்காய்பால்முதலிய விரணத்தை ஆற்றும் பொருள்க
ளையும் கொடுத்தல் நன்று.

அலரி:- இதன் நஞ்சால் வாந்தி,விக்கல் முதலியன ஏற்படும். இதற்கு கடுக்காய் குடிநீர் கொடுக்க லாம்.

எட்டி:- இதன் விஷத்தால் இசிவு ,பேதி முதலியன காணும் இதற்கு நாவல் பட்டை குடிநீர் நன்று.

ஊமத்தை:- இதன் நஞ்சால் மயக்கம் நாவறட்சி, பிரமை, கண்மணி விரிதல் முதலியன காணும் பழச்சாறு கொடுத்தல் நன்று.

சேராங்கொட்டை :- இதன் நஞ்சால்உடலில் வீக்கம் ஏற்படும் . இதன் பால்பட்டவிடத்தில் தடிப்புள்ள விரணம் ஏற்படும். இதற்கு உள்ளுக்கு புளியிலைக்குடிநீரும் , மேலுக்கு புங்கம்பாலைத் தடவி வருதலும் நன்று.

சித்திரமூலம்:- இதன் நஞ்சுக்கு நெய் முறிவாம்.

அபினி:- இதன் நஞ்சால் பிரமை, கண்மணி சுருங்கல் மயக்கம்,மூர்ச்சை முதலியன ஏற்படும். இதற்கு பழச்சாறு, வெங்காயசறு, முதலியன முறிவாம்.
சகலவிஷங்களுக்கும் பொதுவாக அவுரிவேர் கற்கம் அல்லது குடிநீர் நன்மையை பயக்கும்.


மருந்து வழங்கும் விதி 

எம்மருந்தையும் தனியாக வழங்குவதைவிட அதை ஓர் தக்க அனுபானத்துடன் வழங்குதல் நன்று. உஷ்ண வீரியமுள்ள மருந்துகளை தேனிலும், சீதவீரியமுள்ள மருந்துகளை நெய், வெண்ணெய் பால் முதலியவற்றிலும், மற்றும் தோஷங்களுக்கும் நோய்களுக்கும் தக்கபடி பல்வேறு
அனுபானங்களிலும் வழங்கப்படும். ஒன்றும் கூறாதவிடத்து எம்மருந்தையும் தேனில் கொடுப்பது தவறில்லை. அனுபானமானது மருந்தின் எடைக்கு எண்மடங்கு இருத்தல் முறைமையாம்.

சூரணம் லேகியம், மாத்திரை முதலிய மருந்துகளைஅருந்தினவுடன் சிறிது நீரை அருந்து தல் நல்லது.மருந்துகளை அருந்தினவுடன் சிலர் அம்மருந்தின் வெகுட்டல் முதலியவற்றை போக்க கண்ட பொருள்களை வாயிலிட்டு சுவைப்பதுண்டு.இப்படி செய்வதால் மருந்தின் குணம் கெடும்.
அப்படி ஏதாவது தேவையாக இருப்பின் தேன், திராட்சை, சிறுநாகப்பூ, பழைய நெற்பொறி இவகளை வாயிலிட்டு சுவைக்கலாம்.

சாதாரணமாக எல்லா மருந்துகளையும் தினம் இரு வேளை கொடுத்தல் முறை , ஆனால், சுரம், சந்தி, அதிசாரம் முதலிய நோய்களில் மூன்று அல்லது நான்கு வேளைகளும் கொடுப்பதுண்டு. வாந்தி, விக்கல், முதலியவைகளுக்கு அடிக்கடி கொடுக்கலாம். வமன மருந்தையும்,விரேன மருந்தையும், ஒரு முறைக்குமேல் கொடுக்கப்படாது.

பேதியாகும் மருந்துகளைக்காலையிலும், கர்ணநோய், நேத்திர நோய், சிரநோய்,
முதலியவைகளுக்குரிய மருந்துகளை மாலையிலும், மலத்தை இளக்கும் மருந்துகள், நித்திரையின்மைக்கு அருந்தும் மருந்துகள், முதலியவற்றை இரவு படுக்கைக்கு போகும்போது அருந்தல் நன்று. பசிதீபனத்தை உண்டாக்கும் மருந்தை உணவுக்கு முன்பாகவும், ஜீரண சக்தியை உண்டாக்கும் மருந்தை உணவுக்கு பின்பாகவும், மற்றும் வாததேதிகட்கு உணவுக்கு முன்பாகவும்,
பித்ததேதிகட்கு உணவுக்கு இடையிலும் சுபதேதிகட்கு உணவுக்கு பின்பாகவும்,வழங்குதல் நன்று.

மருந்தின் அளவானது முக்கியமாக மருந்தின் வகை ஆண், பெண் என்ற வேறுபாடோடு நோயாளியின் வயது உடற்கட்டு, வாதாகி தோஷங்களின் நிலை, நோயின் வன்மை மென்மை காலம் முதலியவற்றைப் பொருந்தியுள்ளது. ஆகவே மருந்தின் அளவை மிக்க கவனத்துடன்
வழங்க வேண்டும். எம்மருந்தை யாருக்கு வழங்கினும் முதலில் சற்று சிறு அளவாக ஆரம்பித்து, குணமில்லாவிடில் அதிகப்படுத்திக்கொள்வதில் குற்றமில்லை.

பெண்களுக்கும் முக்கியமாக கர்பஸ்தீரிகட்கும், பாலர்கட்கும் மருந்தின் அளவை மிக்க கவனத்துடன் வழங்க வேண்டும். பெண்கள் கருவுற்றிருக்கும்போது வாளம் முதலிய கொடிய விரேசன மருந்துகளையும் மூசாம்பரம்போன்ற ருதுவை வீர்த்திசெய்யும் செய்களையுடையமருந்துகளை
யும் வழங்ககூடாது. பாலர்கட்கு இரச சம்பந்தமான மருந்துகளையும், அபினி சம்பந்தமான மருந்து களையும், வழங்குதல் நன்று.

ஆமணக்கு நெய் அல்லது அது சம்பந்தமான பேதி மருந்துகளை கோடைகாலத்தில்தான் பயன்படுத்தல் வேண்டும். மழை, பனி காலங்களில் வழங்குதல் நல்லதல்ல. அப்படி குளிர்காலங்களில் விரேசனமருந்துகளை வழங்கவேண்டுமாயின் வாதம் சேர்த்த பேதி மருந்துகளை வழங்கலாம்.

 

அபினி, கஞ்சா,ஊமத்தை, ஏட்டி,சேராங்கொட்டை, நேர்வாளம், இருவி,நாபி,இரசம், வீரம் பூரம்,தாளகம், மனோசீலை, துருசு, தாம்பரம், பாஷாணம் முதலிய சரக்குகள் சேர்ந்துள்ள மருந்துகளை வழங்கும் போது அவைகளின் தோஷக்குறிகள் ஏற்படாதபடி, அளவு, வேளை, நாள், பிரமா
ணம் முதலியவற்றில் கவனத்தைச்செலுத்தி வழங்க வேண்டும். அப்படி ஏதாவது விஷக்குறிகள் தென்பட்டால், உடனே மருந்தை நிறுத்திவிட்டு அந்த நஞ்சுக்குரிய முறிவுகளை வழங்க வேண்டும்.

அதிக வீரியமுள்ள மருந்துகளை தொடர்ச்சியாக நீண்ட நாள் கொடுக்கக்கூடாது. அப்படி கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்படின் சில நாள் விட்டு வைத்து பிறகு மீண்டும் கொடுக்கலாம். இப்படி விட்டுவிட்டு சில நாள் கொடுக்கலாம்.

சாதாரண அற்பவீரியமுள்ள மருந்துகள், நீடித்து அருந்தும் மருந்துகள், உடல் பலத்துக்காக அருந்தும் மருந்துகள், முதலியவைகளை அருந்தும் போது பத்தியம் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் வீரியமுள்ள மருந்துகள், நோய்குறிய நேர்மருந்துகள், முதலியவைகளை அருநதும் போது பத்தியம் இருத்தல் நன்று. பாலுண்ணும் பாலர்கட்கு மருந்து வழங்கும் போது தாய் பத்தியமாக இருத்தல் வேண்டும்.

ஞாயிறு, செவ்வாய், வியாழன், முதலியநாட்களில் மருந்தை அருந்துதல் சிறந்ததெனக் கூறப்படுகிறது.

ஒரு வருஷத்திற்கு இரு முறை வமனமருந்தையும், மூன்று முறை விரேனமருந்தையும், நான்குமுறை நசியமருந்தையும், ஆறு முறைஅஞ்சன மருந்தையும், உபயோகித்தல் நன்று.

பத்திய விதிகள்

பத்தியத்திற்கு உதவும் பொருள்கள்:- கத்தரிப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, வாழைப்பிஞ்சு, அவரைப்பிஞ்சு, அத்திப்பிஞ்சு, சுண்டவற்றல், முளைக்கீரை, பொண்ணாங்காணி,புடலங்காய், பீர்கங்காய், அறுகீரை, நெய், பால், மோர், வெள்ளாட்டு மாமிசம், சுதும்பு முதலிய பத்திய மீன் வகைகள்.

பத்தியத்திற்கு ஆகாத பொருள்கள்:- அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, பூசணிக்காய், பாகற்க் காய், சுரைக்காய், தேங்காய், மாங்காய், எள்ளு,  கொள்ளு, கடுகு, நல்லெண்ணெய்,மாப்பண்டங்கள், உருளைக்கிழங்கு முதலிய கிழங்கு வகைகள், முட்டை, மீன், கருவாடு, மதுபானம், முதலிய லாகிரி
வஸ்த்துக்கள்,போகம்.

இச்சா பத்தியம்:- கடுகு, நல்லெண்ணெய், மீன், கருவாடு, மருந்தை முறிக்கும் பொருள்கள், லாகிரி வஸ்த்துக்கள் முதலியவற்றை நீக்கி நெய்,சீரகம், காளிப்புடன் அன்னம் அருந்துதல்.

கடும் பத்தியம்:- சிலர் இப்பத்தியத்தில் வறுத்த உப்பும், சுட்ட புளியும் சேர்த்துக்கொள்ளலாமெனவும் கூறுவர்.

மிகு கடும் பத்தியம்:- புதிய குடுவையில் சாதம் வடித்து வெந்நீர் சேர்த்து அருந்துதல், வேறு எதுவும் கூடாது என்பதாம்.  மற்றும் நோய்களுக்குத்தக்கபடியும், மருந்துகளுக்குத்தக்கபடியும், பத்தியங்கள் பலவிதமாகவும் வழங்கப்படும்.

பொருட்களின் செய்கை 

மருந்துச்சரக்குகளை உடலில் செய்யும் தொழில்களைக்கொண்டு பல வகைகளாகப் பிரிக்கப்படும். அவற்றுள் சில உதாரணங்களை இங்கு கூறப்படும்.

வாதத்தை சமனப்படுத்தும் பொருள்கள்:- சிற்றாமணக்கு, வாதநாராயணன்,மெருகு, விழுதி, மிளகு, பிரப்பங்கிழங்கு, இரசம், கந்தகம், வீரம், வெள்ளைப்பாஷாணம்.

பித்தத்தை சமனப்படுத்தும் பொருள்கள்:-அருநெல்லிபாகல், புளியிலைக்கொழுந்து, வில்வம், எலுமிச்சை, விலாமிச்சை, கொத்துமல்லி,இரசம், பூரம், கோரோசனை, சிலாச்ந்து, நவாச்சாரம்.

கபத்தை சமனப்படுத்தும் பொருள்கள்:-ஆடாதோடை.துளசி, கண்டங்கத்திரி முசுமுசுக்கை, குப்பைமேனி, அரத்தை, அதிமதூரம், தாளிசபத்திரி, வால்மிளகு,திப்பிலி, பவளம், தாளகம்,சங்கு.

முத்தோஷத்தையும் சமனப்படுத்தும் பொருள்கள்:-உருத்திராக்கம், கண்டுபோரங்கி, இரசம் கந்தகம்.

உடலுக்கு பலத்தைத்தரும் பொருள்கள்:-அமுக்கராகிழங்கு, நிலப்பனை, கற்றாழை, பூசணி, ஜாதிக்காய், தான்றிக்காய், தாளிசபத்திரி, கரிசாலை, நன்னாரி, அயம், தங்கம், வெள்ளி, முத்து.

உடலைப்போஷிக்கும் பொருள்கள்:- அரிசி, கோதுமை, சோளம், உழுந்து, பச்சைப்பயறு, துவரை கேழ்வரகு,வேர்கடலை, வாதுமைப்பருப்பு, தெங்கு, வாழை.

உடலை தேற்றும்பொருள்கள்:- அமுக்கராகிழங்கு, தேற்றாங்கொட்டை, சேறாங்கொட்டை, பறங்கிச்சக்கை, வல்லாரை, கற்றாழை,பூசணி,சீந்தில், இரசம், கந்தம், இலிங்கம், அப்பிரகம், அயம், காந்தம், சிலாசத்து.

காமத்தைப்பெருக்கும் பொருள்கள்:- பூனைத்தாலி வித்து, நிலப்பனங்கிழங்கு, பூமிசர்க்கரைக் கிழங்கு, தண்ணீர் விட்டான்கிழங்கு, சாலாமிசிரி, அக்ரோட்டுபருப்பு, முருங்கைவித்து, நெருஞ்சில், ஒரிதழ்தாமரை, மதனகாமப்பூ,தங்கம், வெள்ளி, வெள்ளைப்பாஷாணம், கஸ்தூரி.

உஷ்ணத்தையுண்டாக்கும் பொருள்கள்:-எள்ளு,மிளகாய், சாதிபத்திரி,குங்குமப்பூ, வெண்கடுகு, குங்கிலியம், சித்திரமூலம், கஸ்தூரிமஞ்சள், இலவங்கம், கஸ்தூரி, அம்பர்.

குளிர்ச்சியையுண்டாக்கும் பொருள்கள்:- அகத்தி, பொண்ணாங்கண்ணி, வெந்தயகீரை, கீழ்காய் நெல்லி, சுரை, தாமரை, செம்பருத்தி, சந்தனம், அம்மான்பச்சரிசி, வெடியுப்பு, சிலாசத்து.

உள்ளழலை யாற்றும் பொருள்கள்:-அதிமதுரம்,வெந்தயம், வெங்காயம், கசகசா, வாதுமைப்பருப்பு திராட்சை, துத்தி,பருத்தி, சிலாசத்து, தேன்.

வியர்வையையுண்டாக்கும் பொருள்கள்:-விஷ்ணுகிரந்தி, பற்படாகம், துளசி, கோஷ்டம், கோரைக் கிழங்கு, வீரம்,வெடியுப்பு, கஸ்தூரி.

சுரத்தை தணிக்கும் பொருள்கள்:- நிலவேம்பு, சீந்தில், பற்படாகம், வெட்பாலை, சுழற்சி, அதிவிடயம், எருக்கு,நொச்சி, இலிங்கம்,தாளகம்.

முறைசுரத்தை தணிக்கும் பொருள்கள்:- மிளகு, சுழற்சி, வேம்பு, சங்கன், வசம்பு,சீந்தில், கடுகு ரோகணி, சோற்றுப்பு, வெள்ளைப்பாஷாணம்.

சிறுநீரைப்பெருக்கும்பொருள்கள்:- நீர்முள்ளி, நெருஞ்சில், சுரைக்கொடி, சிறுபீளை, வாழைத்தண்டு முள்ளங்கி, வெடியுப்பு, மூக்கரட்டை, நவாச்சாரம்.

மலத்தை இளக்கும் பொருள்கள்:- ஆமணக்கு நெய், சரக்கொன்றை புளி, அகத்தி, துத்தி, வேர்கடலை, வாழைப்பழம், முடக்கற்றான், கந்தகம், தேன்.

பேதியையுண்டாக்கும் பொருள்கள்:- நேர்வாளம், சிவதை, நிலாவாரை,ரேவல்சின்னி,கடுகுரோகணி கரிய போளம், பூசம், இந்துப்பு.

ருதுவையுண்டாக்கும் பொருள்கள்:- எள்ளு, கருஞ்சீரகம், காயம், மூசாம்பரம்,குங்குமப்பூ, பப்பாய் தங்கம், வெங்காயம், கஸ்தூரி.

துவர்ப்புச் சுவையுடைய மலத்தைக்கட்டும் பொருள்கள்:- அத்தி, இத்தி, ஆல், அரசு, நாவல், ஒதியம்பட்டை, அசோகு, சாதிக்காய், மாசிக்காய், காசிக்கட்டி, தாளிசபத்திரி, மாதுளையோடு, இலிகக்ம், நாகம், பவனம், அன்னபேதி படிகாரம், ஆமையோடு.

குருதிப்போக்கை யடக்கும் பொருள்கள்:- ஒதியபட்டை, வேக்கைப்பிசின், இம்பூரல், அபின், படிகாரம், காவிக்கல், மான்கொம்பு, கற்சுண்ணம்.

கிருமிகளை கொல்லும் பொருள்கள்:- வாய்விளங்கம், பலாசுவித்து, கருஞ்சீரகம், குப்பைமேனி, வேம்பு, பூவரசு, ஆடுதீண்டாப்பாளை, சோற்றுப்பு.

இசிவை யகற்றும் பொருள்கள்:- அபினி, கஞ்சா, ஊமத்தை, ஆடாதோடை, ஓமம், இலவங்கம், கழற்சி, குங்குமப்பூ, பெருங்காயம், சடாமாஞ்சி, கஸ்தூரி, கோரோசனை.

வயிற்றிலுள்ள வாய்வை கண்டிக்கும் பொருள்கள்:-சுக்கு, மிளகு, பெருங்காயம், ஓமம், பூண்டு, ஏலம், கருஞ்சீரகம், பூரம், சங்கு, இந்துப்பு.

பசித்தீயைத் தூண்டும் பொருள்கள்:- சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம், இஞ்சி, கொத்தமல்லி, புதினா, முள்ளங்கி, சோற்றுப்பு, இந்துப்பு, பூநீறு, ஓமம்.

ஜீரண சக்தியை உண்டாக்கும் பொருள்கள்:- இஞ்சி, கடுகு, வில்வம், சோற்றுப்பு, சங்கு, பலகறை, கற்சுண்ணம்.

 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக